சிறுவர் இல்லங்களில் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் சிறுவர்களின் உரிமைகள்
இலங்கை சிறந்த விழுமிய நடைமுறைகள் மற்றும் ஒழுக்கம் நிறைந்த நாடாகும். எனினும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கள் மற்றும் பிற காரணிகளின் தாக்கத்தால் ஏற்படும் கலாச்சார சீரழிவானது சிறுவர்களின் நல்வாழ்வுக்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சிறுவர் துஷ்பிரயோகம் ஒரு அச்சுறுத்தலாக மட்டுமல்லாமல் இப்போது அது ஒரு சமூக நிகழ்வாகவும் வெளிப்பட்டுள்ளது. மிகச் சமீபத்திய நிகழ்வுகளாக பொறுப்பான அதிகாரிகள் மற்றும் வார்டன்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் அனுராதபுரத்தில் உள்ள அவந்தி சிறுவர்கள் இல்லத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் குறித்து ஒரு சமூக விழிப்புணர்வை உருவாக்குவது ஒரு முக்கிய விடயமாக உள்ளது.
2021.01.17 ஞாயிறு திவயின பத்திரிகை
அனுராதபுரத்தில் உள்ள அவந்தி பெண் சிறுவர்கள் இல்லத்தில் சிறார்களை கொடுமைப்படுத்துதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அனாதை இல்லத்திற்கு பொறுப்பான வார்டன்கள் மற்றும் நன்னடத்தை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் சுமார் 20 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிய வந்துள்ளது. அவர்களில் 12 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன. பாலியல் துஷ்பிரயோகம், கொடுமைப்படுத்தல், அனாதை இல்லத்திற்குள் வெளிநபர்கள் நுழைவது மற்றும் மதுபானம் பகிரப்படும் விருந்துகளை அனுமதிப்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பொறுப்பிலுள்ள அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், காவல்துறை, சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை தனித்தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. சிறுவர்கள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவர் இல்லங்களைத் தினசரி அடிப்படையில் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
2021.01.22 அருண பத்திரிகை
சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நீண்டகால முயற்சிகளின் பின்னணியில் கூட இத்தகைய துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடப்பது கவலைக்குரியது. இலங்கையில் சிறுவர் துன்புறுத்தல், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் என்பவற்றிற்கு எதிராக சட்டங்கள் 1980 ஆம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்தன. மேலும், 1990 களின் முற்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் ஒரு கடுமையான குற்றமாக சட்டத்தில் கொண்டு வரப்பட்டது. அக்கால கட்டத்தில் சிறுவர் உரிமைளை மீறும் குறுகிய மற்றும் நீண்ட கால சிறுவர் வன்முறைகள் மற்றும் கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டது. இலங்கை, 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவியது. இதன் நோக்கம் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பது, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், சிறுவர் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதற்கான கொள்கை நடவடிக்கைகளை வகுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் என்பவையாகும். சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து “1929” என்ற ஹாட்லைன் இலக்கத்தினைத் தொடர்பு கொண்டு 24 மணிநேரமும் புகாரளிக்கும் வசதியும் செய்யப்பட்டது.
2021.01.22 அருண பத்திரிகை
இதுபோன்ற பல சட்ட நடைமுறைகள் இருந்தபோதிலும் அவந்தி அனாதை இல்லத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் எவ்வாறு நடந்தது? சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக பாதுகாப்பில் நம் நாடு இருப்பது எங்கே? அனுராதபுரத்தில் உள்ள அவந்தி அனாதை இல்லத்தில் பொறுப்பான அதிகாரிகளின் தவறான நடத்தை காரணமாக சிறுவர்களின் உரிமைகளை மீறும் நாடுகளில் நமது நாடு முன்னணியில் உள்ளதா என்ற சந்தேகமும் இதனால் எழுகிறது. முன்னெப்போதையும் விட அதிகமான சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்குகள் குறித்த செய்திகள் ஊடகங்கள் ஊடாக வருகின்றன. அதே நேரத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்படும் சம்பவங்கள், சட்டத்தில் எங்காவது ஒரு ஓட்டை உள்ளதைக் காட்டுகின்றன. அவந்தி அனாதை இல்லத்தில் துஷ்பிரயோகம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர்களுக்கும் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
2021.01.22 அருண பத்திரிகை
இதுபோன்ற சம்பவங்களால் சாட்சிகள் சாட்சி வழங்குவதில் பாதிப்புக்கு உள்ளாகலாம். அநுராதபுரத்தில் உள்ள அவந்தி சிறுவர்கள் இல்ல வழக்கு சமூக உரிமைகள் குறித்து பேச சமூகத்திற்கு வாய்ப்பளித்துள்ளது. ஆனால் அந்தக் கதை இன்னும் சில நாட்களில் மறக்கப்பட்டு விடும். உலக சிறுவர்கள் தினத்தன்று மட்டுமே சிறுவர் உரிமைகளை மீண்டும் மீண்டும் நினைவு கூறுவதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வேண்டி வரலாற்றில் முன்னெப்போதையும் விட வலுவான சட்ட மற்றும் நிர்வாக அமைப்பு கட்டமைக்கப்பட வேண்டிய மிக முக்கியமாக தருணம் இதுவாகும்.