கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சித்திரவதைகளை ஒழிப்பது என்பது ஒரு கூட்டு பாதுகாப்பு பொறிமுறையாகும் (பாகம் இரண்டு)

மனித உரிமைகள் ஆணையச் சட்டத்தின் கீழ், சித்திரவதை நிகழ்ந்த அல்லது நிகழ்வதற்கான உடனடி சூழ்நிலையை விசாரித்து வழக்குத் தொடர அதிகாரம் உள்ளது. பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் பிற தடுப்பு மையங்களை ஆய்வு செய்வதற்கும், இது தொடர்பாக பரிந்துரைகளை வழங்குவதற்கும் உரிய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க ஆணைய சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விதிகள் மூலம் கைதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளை ஒழிக்கச் சட்டத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

கல்விச் சுற்றறிக்கைகள் மூலம் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டக் கட்டமைப்பு நடைமுறையில் உள்ள போதிலும், 2017 ஆம் ஆண்டில் மட்டும் காவல்துறைக்கு எதிராக 1,000 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக தரவுகள் உள்ளன.

இலங்கையில் சித்திரவதை என்பது பல்வேறு வழிகளில் நடைபெறுவதுடன், அதனை மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களை அடையாளம் காணும் வகையில் வகைப்படுத்துவது முக்கியமானதாகும். பெரும்பாலான மக்கள் காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் சித்திரவதை செய்யப்படுவதை நாங்கள் காண்கிறோம். இது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளதுடன் அதில் முக்கியமான ஒரு வழக்குத் தீர்ப்பான மாத்துகம சப் – இன்ஸ்பெக்டர் சிறீபால ஏ. விஜேசிங்க மற்றும் இந்தமல்கொட காவல் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீயானி டி சில்வா எதிரிசிங்க ஆகியோர் தொடர்பான தீர்ப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். அது போன்றே காவல் நிலையத்திற்கு வெளியேயும் இடர் பெற்ற சித்திரவதை தொடர்பாக பசுமை அதிகாரசபையின் வழக்குத் தீர்ப்பினைக் குறிப்பிடலாம். இது உடல் ரீதியான சித்திரவதை மட்டுமன்றி உள ரீதியான சித்திரவதையினையும் உள்ளடக்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

சிறைக் கைதிகள் தண்டனை விதிக்கப்பட்டாலும் அல்லது சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் தராதரத்தினைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது உண்மையாகும். சிறைச்சாலை “நெரிசல்” என்பது சிறைச்சாலை அமைப்பில் இயல்பானது, ஆனால் சிறைச்சாலை கட்டமைப்பின் முறையற்ற நிர்வாகத்தின் அடக்குமுறை விளைவுகளை அனுபவிக்க வேண்டியவர்கள் கைதிகளாகவே உள்ளனர். இது சிறைகளில் சித்திரவதை மற்றும் கீழ்தரமான நடத்தைகளை அதிகரிக்க வழிவகுக்கிறது.

 

இத்தகைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளைப் போன்றே மற்றைய தரப்பினரினாலும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதை நாம் புறக்கணித்து விட முடியாது. மேலும் அதிகமான பெண்கள், குழந்தைகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள சிறுபான்மையினர், திருநங்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்போரும் அதிகமாக சித்திரவதைகளுக்கு உட்படுகின்றனர். அவர்கள் எளிதில் துன்புறுத்தப்படும் குழுக்களில் இருப்பது அவர்கள் எவ்வாறு சித்திரவதை செய்யப்படுவார்கள் என்பதை அடையாளம் காண எமக்கு உதவுகிறது. 

இந்த அதிகாரத்துவத்துடன் தொடர்புடைய சித்திரவதைகளுக்கு மேலதிகமாக, வீட்டு வன்முறைகளைத் தடுக்க 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க வீட்டு வன்முறை தடுப்புச் சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அது போன்றே கல்வி நிறுவனங்களில் ஏற்படும் வன்முறையிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கவும் ஏற்பாடுகள் உள்ளது. பெரும்பாலும் மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகள் நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்படும் போது அது குறித்து நாம் அறிய முடிகிறது. இருப்பினும் பதிவு செய்யப்படாத புகார்கள் குறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என்பது புதிராகவே உள்ளது.

இவை அனைத்தையும் கடந்து, இந்த சித்திரவதையை நியாயப்படுத்தும் முறையில் பொது மக்கள் தங்கள் சொந்த சித்தாந்தங்களை முன்வைப்பது மிகவும் கடுமையான சவாலாக உள்ளது. அதாவது, ஒரு தமிழர், ஒரு முஸ்லீம், ஒரு பாலியல் தொழிலாளி, ஒரு திருநங்கை, ஒரு ஓரினச்சேர்க்கையாளர், அல்லது ஒரு குற்றத்தின் சந்தேக நபர் அல்லது ஒரு குற்றத்தில் குற்றவாளி ஆக ஒருவர் இருப்பது அவருக்கு எதிரான சித்திரவதையை நியாயப்படுத்துவதாக பொது மக்களாகிய நாமே நியாயப்படுத்தியுள்ளோம்.

பொது மக்களாகிய நாம் நினைவில் கொள்ள வேண்டியது, சட்டம் என்பது யாருக்கும் சிறப்பு சலுகைகளை வழங்கும் ஒன்றல்ல, ஆனால் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு அமைப்பு என்பதாகும். அதன்படி, ஒருவருக்கு எதிரான எந்தவொரு துன்புறுத்தல் நடவடிக்கையும் அல்லது பாதுகாப்பு உரிமையை மீறும் எந்தவொரு செயலும் அவரின் உரிமைகளுக்கு மட்டுமல்ல, உங்களதும் என்னுடையதும் உரிமைகளுக்கான ஒரு கடுமையான தாக்குதல் என்பதை நாம் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts