சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சிங்கள பௌத்த தேசியவாதம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆபிரிக்காவின் முன்னுதாரணம்

அசங்க அபேரத்ன

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை விரும்புவோருக்கு மார்ச் மாதத்தில் வரும் இரண்டு சர்வதேச தினங்கள் முக்கியமானவை. மார்ச் 14ஆம் திகதி வரும் இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் முதலாவது. மற்றும் மார்ச்  24ஆம் திகதி வரும் சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோரின் கண்ணியம் சார்ந்த தினம் இரண்டாவது. துரதிஷ்டவசமாக குறித்த இரண்டு தினங்களையும் இலங்கை அரசாங்கம் புறக்கணித்துள்ளது.

உண்மையை மதிக்கும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் ஒரு நாடாக தன்னை நிலைநிறுத்துவதற்கு இலங்கை மீண்டும் தவறிவிட்டது. உண்மையை கண்டறியும் முயற்சிகளை இலங்கை நிறுத்தியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை குறிப்பிட்டுள்ளது. சமாதானம் மற்றும் நல்லிணக்கம் குறித்த கலந்துரையாடலுக்கு பங்களிப்பதற்காக, இலங்கையின் இனப் பிரச்சினையின் வரலாற்றுச் சூழல்களை மறுபரிசீலனை செய்யும் தொடரின் முதலாவது கட்டுரை இதுவாகும். 

நிறவெறிச் சட்டங்களுக்கு எதிராக 1960ஆம் ஆண்டு ஷார்ப்வில்லி என்ற இடத்தில் நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் தென்னாபிரிக்க பொலிஸார் 69 போராட்டக்காரர்களை சுட்டுக்கொன்றனர். இதனை நினைவுகூரும் வகையில் 1966ஆம் ஆண்டில் இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் பெயரிடப்பட்டது. அனைத்து வகையான இன பாகுபாடுகளையும் ஒழிப்பதற்காக சகல நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஐ.நா. பொதுச்சபை அழைப்பு விடுத்தது. தென்னாபிரிக்காவின் சமத்துவம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக போராடிய மனிதநேயவாதிகளை நினைவுகூரும் வகையில், மனித உரிமைகள் குறித்த தென்னாபிரிக்காவின் தேசிய தினமாக மார்ச் 21ஆம் திகதி பெயரிடப்பட்டது.  இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் நம்பிக்கையுடன் ஷர்ப்வில்லி படுகொலையை தென்னாபிரிக்க மக்கள் இன்றும் நினைவுகூருகின்றனர். 

நல்லிணக்கம் தொடர்பான தென்னாபிரிக்காவின் முன்னுதாரணம்

நிறவெறிக்கு எதிரான மற்றும் சமாதானம், நல்லிணக்கத்திற்கான தென்னாபிரிக்காவின் போராட்டத் தலைவராக நெல்சன் மண்டேலா செயற்பட்டார். தென்னாபிரிக்கா நீண்டகாலமாக ஒரு ஆங்கில காலனித்துவ நாடாக காணப்பட்டது. அக்காலகட்டத்தில், அந்நாட்டின் உண்மையான பிரஜைகளான கறுப்பின மக்களை இழிபுபடுத்தும் வகையில், நாட்டின் சகல துறைகளிலும் வெள்ளையின தென்னாபிரிக்கர்கள் ஆதிக்கம் செலுத்தினர். நிறவெறி, அடக்குமுறை மற்றும் அநீதிக்கு எதிரான போராட்டத்திற்கு நெல்சன் மண்டேலா தலைமை தாங்கிய நிலையில், அதற்காக அவர் கைதுசெய்யப்பட்டார்.

மண்டேலா சிறைத்தண்டனை அனுபவித்த 27 ஆண்டு காலப்பகுதியில்கூட கறுப்பின சமூகத்தின் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் அடையாளமாக விளங்கினார். உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் ஆதரவைப் பெற்ற போராட்டத்தின் காரணமாக, மண்டேலாவை விடுவிக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டனர். இதனையடுத்து,  தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸ் சார்பில், முதலாவது ஜனநாயக ஜனாதிபதியாக 1994ஆம் ஆண்டு அவர் தெரிவுசெய்யப்பட்டார். 

உண்மை ஆணைக்குழு

மண்டேலா ஜனாதிபதியாக செயற்பட்ட ஐந்து வருட காலத்தில், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒரு விரிவான செயற்திட்டத்தை முன்னெடுத்தார். கறுப்பின சமூகத்தை அடிமைப்படுத்தி நீண்டகாலமாக நாட்டை ஆண்ட வெள்ளையினத்தவர்கள் மீது காட்டிய இரக்கம், இந்த திட்டத்தின் விசேட அம்சமாகும். உண்மை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டவர்கள், சுயவிளக்கத்தை வழங்கி மன்னிப்புக் கோரினர். நிறவெறியுடன் காணப்பட்ட தென்னாபிரிக்கா, நல்லிணக்கத்துடன் கூடிய நாடாக மாற்றப்பட்டது. மன்னிப்பு வழங்குவதே நல்லிணக்கத்திற்கான ஒரே வழியென மண்டேலா நம்பினார். 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி மண்டேலா காலமானார். அவரது பெயரும் சிறந்த செயற்பாடுகளும் உலகெங்கும் பாராட்டுகளைப் பெற்றன. கறுப்பின மக்களது விடுதலையின் தலைவராகவும் நிறவெறிக்கு எதிரான, தென்னாபிரிக்க அடையாளமாகவும் மண்டேலா வரலாற்றில் இடம்பிடித்தார்.

சமாதானம், நல்லிணக்கம் மற்றும் இலங்கை

1948ஆம் ஆண்டு முதல் காலனித்துவத்திற்கு பிந்தைய நாடாக மாறிய இலங்கை, 1980 களின் ஆரம்பத்திலிருந்து உள்நாட்டுப் போருக்கு முகங்கொடுத்தது. 2009ஆம் ஆண்டின் பின், போருக்கு பிந்தைய நாடாக இலங்கை காணப்படுகின்றது. ஆனால், இனவெறி அரசியல் மற்றும் இராணுவ மயமாக்கல் காரணமாக இன்று சமாதானம் மற்றும் நல்லிணக்கம் குறித்த கலந்துரையாடல் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

போரின் முடிவானது சமாதானம் என அர்த்தப்படாது.  போர் நிறைவுற்றதன் பின்னர் பல்லின சமூகங்களிடையே பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. சிங்கள பௌத்த இனவாதம் பிரச்சினைகளை தீவிரப்படுத்தி, சமூகங்களுக்கு இடையிலான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் ஆபத்தை விளைவித்துள்ளது. எனவே, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளை மறுபரிசீலனை செய்வதற்கான நேரம் இதுவாகும். நாட்டை ஆட்கொண்டுள்ள வரலாற்று ரீதியான குழப்ப நிலையை தீர்க்க இது வழிவகுக்கும். 

සිංහල බෞද්ධ ජාතිවාදය සහ සංහිඳියාවේ අප්‍රිකානු මොඩලය

Sinhala Buddhist Nationalism And The African Model For Reconciliation

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts