கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த முனையும் அரசின் முன்னுதாரணங்கள் வெளிப்படுத்தும் சமிக்ஞைகள்

ஆர்.ராம்

இலங்கையின் தேசிய பாதுகாப்பையும் சிறந்த சமூக கட்டமைப்பையும் வழிநடத்தி செல்லும் பொருட்டு போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உரிமையாளர்கள் அற்ற சமூக ஊடகங்களை முடக்குவதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும்  அமைச்சரவையின் அனுமதி கோரி அமைச்சரவைப் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த அமைச்சரவை பத்திரத்தினை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும், நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் கூட்டாக இணைந்து தாக்கல் செய்துள்ளதாக இருவரும் பொதுவெளியில் கூறியுள்ளார்கள். 

“இலங்கையில் பயன்பாட்டில் உள்ள மொத்த முகநூல் கணக்குகளில் உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் கணக்குகளை இடை நிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. இவ்வாறான கணக்குகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதற்காக அரச நிறுவனங்களினூடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார். அத்துடன் “தற்போது பயன்பாட்டில் உள்ள சட்டத்திற்கமைய புதிய வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. உரிமையாளர்கள் இல்லாத முகநூல் கணக்குகளின் மூலம் பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இளம் சந்ததியினரை வழிகெடுக்கும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளை தூண்டுவதற்கும் இது வாய்ப்புக்களை உருவாக்கின்றது” என்றும் அமைச்சர் கெஹலிய கூறியுள்ளார்.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பதவிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டபோது

இதேநேரம், “சமூக ஊடகங்கள் ஊடாக இந்த நாடு தொடர்பில் எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுகின்றனர். இந்த நாட்டில் வாழமுடியாது என்று குறிப்பிடுகின்றனர். இதன்மூலம் மக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பிற்போக்கு மனோநிலையை ஏற்படுத்துகின்றனர். இதனால் எவ்விதமான பயன்களும் நாட்டுக்கு ஏற்படப்போவதில்லை. இந்த நிலைமைகளை மாற்றி அமைக்க வேண்டும். அதற்காக சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது. அதுபற்றி பரந்துபட்ட அளவில் கலந்துரையாடி வருகின்றோம்” என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டார். 

அத்துடன், “சிங்கப்பூரில், மலேசியாவில், இந்தியாவில் அமுலாக்கப்பட்டுள்ள ‘The Protection from Online Falsehoods and Manipulation Act’ சட்டம் தொடர்பில் நாமும் ஆராய்ந்து வருகின்றோம். இலங்கையில் போலிச் செய்திகளைப் பரப்புவதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இலங்கையில் தற்போது செயற்பாட்டில் உள்ள சமூக வலைத்தளக் கணக்குகளில் 17 சதவீதமானவை போலியானவையாக உள்ளன. இந்த சதவீதத்தினரால் நாட்டில் பொய்கள் பரப்படுகின்றன. குழப்பங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் இத்தரப்பினர் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடியாதுள்ளது” என்றும் சுட்டிக்காட்டினார். 

மேலும், “உங்களின் சுதந்திரமானது அடுத்தவரின் மூக்கின் நுனி வரையிலேயே. அடுத்தவரின் மூக்கில் குத்திவிட முடியாது. அவ்வாறு செயற்படுவதானது சுதந்திரத்தினையும், உரிமையையும் மீறும் செயற்பாடாகும். அது சட்டத்திற்கு புறம்பானதும் கூட என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன்” என்றும் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிடுகின்றார். 

நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி

இலங்கையில் இந்த ஆண்டின் ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட தரவுப் பதிவுகளின் பிரகாரம் 7.9 பில்லியன் சமூக ஊடகப் பயனர்கள் உள்ளனர். அதாவது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 36.8 சதவீதத்தினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றார்கள். சமூக ஊடங்களை பயன்படுத்தும் இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.5 மில்லியனால் அதாவது 23 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று நடந்த வெகுஜன ஊடகங்கள் சம்பந்தமான அமைச்சின் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில், ‘சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்துதல்” குறித்து உரையாற்றிய வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, “சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முறையான தேசிய வழிமுறை தேவையாகவுள்ளது. அடுத்த சில வாரங்களில் அதற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்” என்று கூறினார். 

“ஊடகங்கள் மூலம் செய்யப்படும் அவமானப்படுத்தல்களை ஓரளவிற்கேனும் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு இவ்விதமான தணிக்கை அவசியம். 2010 ஆம் ஆண்டிலேயே நான் அவ்விதமான முயற்சியொன்றை எடுத்திருந்தேன் ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை” என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

அவருடைய கூற்றினை அடுத்து அமைச்சின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த அரசாங்கத்தின் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும், அத்தகைய ஒழுங்குபடுத்தலின் அவசியத்தை வலியுறுத்தி ஆலோசனை தெரிவித்தனர்.

குறிப்பாக, பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத், “சமூக வலைத்தளங்களுக்கு அப்பால் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களுக்கும் இந்த வகையான கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வலைத் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை தணிக்கை செய்ய, சிங்கப்பூரில் சமீபத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை எடுத்துக் காட்டிய கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் சட்டங்கள் ஆய்வு செய்து, இந்த புதிய வழிமுறை அமைக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அதேநேரம், பொதுஜன பெரமுனவின் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி.சுரேன் ராகவன், சமூக ஊடகங்களில் “இனவெறி பரவுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் அவசியமாகவுள்ளன” என்று கூறியுள்ளார்.

இதேவேளை, தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் போலி செய்திகள் மற்றும் அதனால் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு குறித்த முதன்மை சிந்தனைக் குழுவால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பிரதம சொற்பொழிவாளராக கலந்துகொண்ட அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, “பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட தகவல்கள் ஆட்சி மாற்றங்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆகவே இலங்கை போன்று நாட்டில் போலிச் செய்திகளுக்கு எதிராக உள்ளுர் கட்டமைப்பில் தகவல்களை ஒழுங்குபடுத்தும் பொறிமுறை அவசியமாகின்றது” என்று குறிப்பிட்டிருக்கின்றார். 

ஆகவே தற்போது ஆட்சியில் உள்ள ஆளும் தரப்பினர் ‘சமூக ஊடகங்கள் தொடர்பிலான ஒழுங்குபடுத்தலை மேற்கொள்வதில் முழுமையான முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள்’ என்பது இங்கு தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது. 

அவ்வாறிருக்கையில், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் விடயத்தில் அமெரிக்கா, பிரித்தானியா அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகளே ஒட்டுமொத்த உலகத்திற்கும் முன்னுதாரணங்களாக இருக்கின்றன. இந்த நாடுகளின் ஒழுங்குபடுத்தல் சட்டங்களை அடியொற்றியே ஏனைய நாடுகளின் அரசாங்கங்கள் தமது உள்நாட்டில் காணப்படும் நிலைமைகளை மையப்படுத்திய சட்டங்களை வரைந்து வருகின்றன. 

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும், நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் சிங்கப்பூர், இந்தியாவில் உள்ள சட்டங்களை மையப்படுத்தியே இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய ஒழுங்கமைப்பு சட்டம் பற்றிய பிரதிபலிப்புக்களை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். ஆகவே சிங்கப்பூரிலும், இந்தியாவிலும் நடைமுறையில் உள்ள சமூக ஊடகங்கள் தொடர்பான சட்டங்கள் குறித்து கவனம் செலுத்துவது இன்றி அமையாததாகின்றது.  

அந்த வகையில், சிங்கப்பூரில் “இன்ஃபோகொம் ஊடக மேம்பாட்டு சட்டம் – 2016″ (Info-comm Media Development Authority Act – 2016) மற்றும் “இணைய பொய்மைபடுத்தல் மற்றும் திரிபுபடுத்தலுக்கு எதிரான சட்டம் – 2018″ (Protection from Online Falsehoods and Manipulation Act-2018) ஆகியன நடைமுறையில் உள்ளன. 

இந்த சட்டங்கள் மூலம், வலைத் தளங்களில் குறிப்பிடப்படும் விடயங்களை “உடனடியாக மாற்றி சரி செய்யுமாறு” எதேச்சதிகாரமாக உத்தரவிடுவதற்கு சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அதிகாரம் கிடைப்பதுடன், தேவைப்பட்டால் குற்றவாளிகள் மீது 700,000 அமெரிக்க டொலர் வரை அபராதம் விதிப்பதற்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் பூரணமான அதிகாரம் அளிக்கப்படுகிறது.

இவ்விதமான ஏற்பாடுகளுடன் சிங்கப்பூரில் பொலிஸ் ஆட்சியின் கீழ் அமுலில் உள்ள இந்தச் சட்டங்கள் ஊடங்களையும், ஊடகவியலாளர்களையும், தனிமனித கருத்துச் சுதந்திரத்தினையும் அடக்குமுறைக்கு உட்படுத்துபவையாக உள்ளன என்று சர்வதேச அளவில் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுவினர் பரவலான விமர்சனத்தினை முன்வைத்துள்ளனர். 

குறிப்பாக, சிங்கப்பூரின் இந்தச் சட்டங்கள் தொடர்பில் உலகளாவிய ரீதியில்  வெளியுலக வெகுஜனத் தொடர்புகள் அதியுச்சமாக காணப்படாத நாடுகளில் முதல்நிலையில் இருக்கும் சீனாவில் இருந்து வெளிவரும் சௌத்சைனா மோர்னிங், சமூக ஊடக ஒழுங்குவிதிகளை அமுலாக்கியுள்ள அமெரிக்காவினைத் தளமாக கொண்டு செயற்படும் புளும்பேர்க், ஊடகங்கள் மிகக் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளன. 

அவ்வாறாயின், சிங்கப்பூரில் அமுலாக்கப்பட்டுள்ள சட்டங்களின் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு கொண்டிருக்கும் சட்ட உட்பிரிவுகளின் ‘ஆழத்தினை’ உணர்ந்துகொள்ள முடிகின்றது. அதனை முன்னுதராணமாக எடுத்துக்கொள்ள இலங்கை அரசாங்கத் தரப்பினர் முனைவதானது அவர்களின் நோக்கத்தினுடைய அடிநாதத்தினை வெளிப்படுத்தி நிற்கின்றது. 

இதேவேளை, அயல் நாடாகவும், தெற்காசிய பிராந்தியத்தில் ‘தலைமை’ நாடாகவும் இருக்கும் இந்தியா, 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி சமூக ஊடகங்கள் தொடர்பில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வெளியிட்டது.

அதன்படி, “இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும்” பாதிக்கும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் உள்ளடக்கங்களை தடைசெய்யும் விதிமுறைகளைக் கொண்ட Guidelines for Intermediaries and Digital Media Ethics Code 2021 என்ற வழிகாட்டுதலில் இந்திய மத்திய அரசு அறிவித்திருந்தது. 

இந்த விதிகளுக்கு உடன்படுவதாக மே 25 ஆம் திகதிக்குள் சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவற்றுக்கு இந்தி ஆட்புல எல்லைக்குள் சட்ட பாதுகாப்பு கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக கடந்த மே 26 ஆம் திகதி முதல் புதிய விதிமுறைகள் அமுலாக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். 

இந்தியாவில் 53 கோடி பேர் வட்ஸ்-அப்பையும் கூகுளின் யூ டியூப்பை 44.8 கோடி பேரும், முகநூலை 41 கோடி பேரும் இன்ஸ்டாகிராமை 21 கோடி பேரும் டுவிட்டரை 1.75 கோடி பேரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமுலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிமுறைகளால், மேற்படி நிறுவனங்களில் வெளியிடப்படும் விடயங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கின்றபோது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற அதியுச்ச ஏற்பாடு உள்ளமை குறிப்பிடத்தக்கதாகின்றது.

ஆகவே, இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்தியாவின் விதிமுறைகளை முன்னுதாரணமாகக் கொண்டு சட்ட ஏற்பாடுகளை வரையும் போது, ஏற்கனவே பயங்கரவாத தடைச்சட்டமும் அமுலில் இருப்பதால் நிலைமைகள் மேலும் மோசமடைவதற்கே வழிவகுப்பதாக அமைந்துவிடும் சூழல் காணப்படுகின்றது. 

இவ்விதமான பின்னணியில் தான், “தேசிய பாதுகாப்பு, தவறான செய்திகளைப் பரப்புதல், வெறுக்கத்தக்க பேச்சைத் தடுப்பது போன்ற காரணங்களுக்காக கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அரசாங்கம் கட்டுப்படுத்தலாம். எனினும் இவை அனைத்தும் சட்டத்தின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும், மேலும் அரசியலமைப்பின் 14 வது பிரிவினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட, பல்வேறு தீர்ப்புகளால் நிறுவப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அனுபவிப்பதற்கான மக்களின் உரிமையை மீறுவதாக அவை இருக்கக்கூடாது” என்று சமூக ஊடகங்களில் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை கண்மூடித்தனமான முறையில் தடைசெய்யும் அரசாங்கத்தின் போக்கு குறித்து சுதந்திர ஊடக இயக்கம் கடும் கவலையை வெளிப்படுத்தி வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

அதேபோன்று, இலங்கை பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம், இலங்கை பத்திரிகையாசிரியர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், இலங்கை முஸ்லிம் மீடியா போரம், ஊடக ஊழியர்கள் தொழிற்சங்க சம்மேளனம், தெற்காசிய சுதந்திர ஊடக சங்கம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் வெகுஜன ஊடக அமைச்சருக்கும் கெஹலிய ரம்புக்வெலவுக்கும் இடையில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி கலந்துரையாடலொன்று நடைபெற்றிருந்தது.

சமூகப் பொறுப்பு மற்றும் கருத்துச் சுதந்திரத்தினை அடிப்படையாகக் கொண்ட அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களையும் உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட இலங்கை ஊடக அதிகாரசபை சுய ஒழுங்குபடுத்தல் கொள்கைகள் தொடர்பான விடயங்களை அமைச்சரிடத்தில் ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கையளித்தனர். 

அதில், தற்போது தொழில்துறை ஊடக பிரதிநிதி, ஊடகங்களின் அரச பிரதிநிதித்துவம் மற்றும் நிதி, சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நவீன ஊடகங்களைச் சேர்ந்த நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட குழு முன்மொழியப்பட்ட அதிகாரசபையில் காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், ஓழுக்க நெறிக் கோவையினை பின்பற்றுவதை உறுதி செய்தல், சொந்த அவதானிப்பு மற்றும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரணை செய்தல், ஒளிபரப்பு மற்றும் உள்ளடக்க உரிமங்களை வழங்கல், ஊடகங்களை பதிவு செய்தல், தொடர்புடைய கட்டணங்களை விதித்தல், உரிமகாலத்தை விதித்தல், உள்ளடக்க உரிமங்களுக்கு இணங்குவதை உறுதி செய்தல், விசாரணையின் அடிப்படையில் அபராதங்களை விதித்தல் போன்ற விடயங்களில் அதிகாரசபை மத்தியஸ்தம் மற்றும் நடுவர் செயல்முறை மூலம் கையாளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுவர் செயல்முறை 1995 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நடுவர் சட்டத்தின்படி, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த செயல்முறைகளில் இருந்து அடுத்தகட்டமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த முன்மொழிவுகள் தொடர்பில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய எவ்விதமான உத்தரவாதங்களையும் வழங்கியிருக்கவில்லை. மாறாக, “ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொருத்தமான தீர்வுக்காக அனைவரையும் இணைத்து செயற்படுவேன்” என்று மட்டுமே கூறியுள்ளதாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் குறித்த சந்திப்பு தொடர்பான ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் உறுப்பு அமைப்புக்களும் அதனுடன் இணைந்த அமைப்புக்களும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவைச் சந்தித்தபோது

“டிஜிட்டல் ஊடக தளங்களால், பாரம்பரிய ஊடகங்களை விட, தகவல்களை சிதைக்கவும் வெறுப்பை உண்டுபண்ணும் கதைகளை பிரச்சாரம் செய்யவும் முடியும்” என்று கூறும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி. ஹரனி அமரசூரிய, “மாற்று மற்றும் விமர்சனக் கருத்துக்களை அனுமதிப்பதில், சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தை அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

இவ்விதமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கூறுவதைப்போன்றும். அமைச்சரவையில் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைப் போன்றும் சட்டமொன்று இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமானால் அது, கருத்துச் சுதந்திரத்தினை சிதைத்து நாட்டை முழுமையான சர்வாதிகாரத்திற்குள் கொண்டு செல்லும் செயற்பாடாகவே அமையும். 

Precedents Exhibit Signals From The Government’s Effort To Regulate Social Media

පූර්වාදර්ශවලින් සන් කරන්නේ සමාජ මාධ්‍ය නියාමනයට රජයේ උත්සාහයයි.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts