சதுப்புநில பசுமை மண்டலங்களை மேம்படுத்தும் இலங்கை கடற்படை
ரேகா தரங்கனி பொன்சேகா
நாட்டின் கடலோர பகுதிகளில் கண்டல் தாவரங்களை நட்டு சதுப்பு நிலங்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு, இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள சுற்றுச்சூழல் நட்பான முன்னோடி திட்டத்தை அறிந்துகொள்வதற்கு, அண்மையில் எனக்கு காங்கேசன்துறை, காரைநகர், புத்தளம் போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. நாடெங்கிலும் கடலரிப்பை எதிர்த்து போராடுவதற்கான ஒரு நிலையான செயற்பாடாக, சதுப்புநில பசுமை மண்டலங்களை விரிவுபடுத்தும் இந்த மூலோபாய முயற்சியை கடற்படை முன்னெடுத்துள்ளது.
நிலமும் நீரும் சந்திக்கும் முகத்துவாரங்களுக்கும் கலப்புகளுக்கும் அருகிலுள்ள அலை மண்டல பகுதிகளில் செழித்து வளரும் தாவரமாக கண்டல் தாவரங்கள் காணப்படுவதோடு, இவை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உகந்த தாவர இனமாகும். இது பல்வேறு விலங்கினங்களுக்கு அவசியமான வாழ்விடத்தையும் தங்குமிடத்தையும் வழங்குவதன் ஊடாக, அவற்றை சுற்றுச்சூழல் கட்டமைப்பின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக்குகின்றது.
புதர்கள் முதல் உயரமான மரங்கள் வரை பலவிதமான அளவுகளில் கண்டல் தாவரங்கள் வளர்வதோடு, சவால்கள் நிறைந்த கடலோர சூழலில் செழித்து வளரக்கூடிய தனித்துவத்தை கொண்டுள்ளன. குறிப்பாக, உப்புநீரில் இருந்து தமக்கு தேவையான நீரை பிரித்தெடுக்கும் ஆற்றலை இவை கொண்டுள்ளதோடு, அவற்றின் இலைகளில் உப்பினை சேமித்து, பின்னர் அந்த இலைகளை உதிர்க்கும் வல்லமையை கொண்டுள்ளன.
நீரிலிருந்து உப்பினை பிரித்தெடுக்கும் சிறப்பான சுரப்பிகளை கொண்டிருப்பதும், கண்டல் தாவர திசுக்களுக்குள் நீரினை சேமித்து வைக்கும் திறனை கொண்டிருப்பதும் இந்த தாவரங்களின் தனித்துவமான விடயங்களாக கருதப்படுகின்றது. இந்த தனித்தன்மைகள், சுவாசத்தின்போது நீரின் இழப்பினைக் குறைப்பதற்கும், தாம் வாழும் பகுதியில் காணப்படும் அதிகமான உப்புத்தன்மையை சமாளிக்கவும் உதவுகின்றன.
கண்டல் தாவரங்களைக் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புகள், வெப்பமண்டல நாடுகளிலும், ஜப்பான், நியூசிலாந்து, அர்ஜென்டினா போன்ற நாடுகளின் கடலோரப் பகுதிகள் மற்றும் அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையின் வடக்குப் பகுதிகளிலும் பரவலாக காணப்படுகின்றன.
உலகெங்கும் கண்டல் தாவரங்கள் ஏறத்தாழ 15.9 ஹெக்டேயர்கள் காணப்படுவதாக உலகளவில் உள்ள சுற்றுச்சூழல் வல்லுநர்களின் தகவல்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஏறத்தாழ பன்னிரண்டாயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றன.
இலங்கையில் 17 வகையான தனித்துவமான கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றன. அவற்றுள், மகா கண்டல் (Rhizophro mucronta/Rhizophro apiculata), பூ கண்டல் (Bruguera gymnorhiza), சிவப்பு கண்டல் (Ceriops tagal), மண்டா (Avicennia marina), பரியா (Lumnitzera recemosa), தேலா (Excoecarias agallocha), ஹீன் கண்டல் (Aegiceras cornicul), கட்டு இகிலியா (Acanthus ilicifolius), மற்றும் கின்பொல் (Nypa fruticans) என்பன உள்ளடங்குகின்றன.
குளங்களில் வாழும் விலங்கினங்களுக்கு உதவுவதன் ஊடாக, கடலோர சுற்றுச்சூழல் கட்டமைப்பின் உயிர் பல்வகைமைத் தன்மையை பாதுகாப்பதில் கண்டல் தாவரங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அலைகள் காரணமாக குளங்களில் வாழும் உயிரினங்கள், ஒரு சந்தர்ப்பத்தில் நீரில் மூழ்கியவாறும் இன்னொரு சந்தர்ப்பத்தில் வளிமண்டலத்தில் வெளிப்படும் சூழலுக்கு ஏற்பவும் வாழவேண்டிய நிலையில், கண்டல் தாவரங்கள் அவற்றிற்கு பெறுமதிமிக்க வாழ்விடத்தையும் அடைக்கலத்தையும் வழங்குகின்றன.
சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பில் பல்வேறு விலங்கினங்களின் வாழ்விடம் காணப்படுவதானது, மீன்பிடித் தொழிலுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது. மேலும் ஏராளமான விலங்கினங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கும் அவை தங்குவதற்கும் வசதியளிக்கின்றது.
சதுப்புநிலங்களில் வாழும் பல்வேறு இனங்களில், மண் நண்டுகள், ஒற்றை பிஞ்சர் நண்டுகள், கடல் நண்டுகள், பால் இறால்கள், சதுப்புநில மட்டி, டெலஸ்கோபியம் சிப்பிகள், செரிதிடியா சிப்பிகள் (ஊரி), லிட்டோரேரியா சிப்பிகள் (சதுப்புநில சிப்பிகள்), கடல் அர்ச்சின்கள், நீர் கெக்கோஸ், சதுப்புநில கொக்குகள், அல்பினோ கொக்குகள், கடற்பாசிகள் மற்றும் பொதுவான சாண்ட்பைப்பர் என சில உதாரணங்களாகும்.
கடற்படையின் 71ஆவது வருட பூர்த்தியை கொண்டாடும் நிகழ்வின் ஒரு பகுதியாக, 100,000 சதுப்புநில மரக்கன்றுகளை நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென கடற்படை தெரிவித்தது. குறிப்பாக, வனாத்தவில்லு, எழுவன்குளம், கங்கேவாடிய, சிலாபம் கலப்பு ஆகிய பகுதிகளில் இந்த மரக்கன்றுகள் நாட்டப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம், காரைநகர், காங்கேசன்துறை, புங்குடுதீவு, மண்டைதீவு, மூதூர், திருகோணமலை, முல்லைத்தீவு, புத்தளம், பள்ளியேவத்தை, முள்ளிக்குளம், பானம, அம்பாறை, உப்புவெளி உட்பட 68 பிரதேசங்களில், 420,279 கண்டல் செடிகளை வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
காரைநகர் கடற்பகுதியில் செழித்து வளரும் 8,000 கண்டல் தாவரங்களை சில மீனவர்களிடமிருந்து பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க சவால் காணப்படுவதாக, சதுப்புநிலங்களை அமைக்கும் திட்டத்திற்கு பொறுப்பான கடற்படை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். கண்டல் தாவரங்கள் இருப்பதால் மீன்கள் குறைவாக காணப்படுவதாக மீனவர்கள் தவறாக புரிந்துகொள்வதால், ஆரோக்கியமான கண்டல் தாவரங்களை வெட்டுகின்றனர்.
கரையோர அரிப்பினை தடுக்கும் இச்செடியை நாடு முழுவதும் உள்ள கடற்கரைகள் மற்றும் கலப்புகளில் நடுவதற்கான எதிர்கால திட்டங்கள் குறித்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் யு.வி.எம்.பி. பெரேரா விளக்கினார்.
நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு போன்ற பல்வேறு பிராந்தியங்களில் கண்டல் தாவரங்களை நாட்டும் முயற்சிகள் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகின்றது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். காங்கேசன்துறையில் இத்திட்டம் சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளதால், வடக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான தீவுகளில் சதுப்புநில மரக்கன்றுகள் வெற்றிகரமாக நடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.