சட்டத்திலிருந்து நழுவி சுதந்திரமாக வாழும் குச்சவெளி காணி அபகரிப்பாளர்கள்
லக்மால் கே. பதுகே
திருகோணமலையில் போருக்குப் பின்னரான காணி அபகரிப்பானது அவற்றின் சட்டபூர்வமான உரிமையாளர்களுக்கு தீமையையும் மன உளைச்சல்களையும் தருவதன் மூலம் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த செயற்பாட்டில் அரச அதிகாரிகளுக்கு இருப்பதாக கூறப்படும் தொடர்பானது, ஒரு திட்டமிட்ட நடவடிக்கையை காட்டுவதோடு இந்த நிலை சமகால சட்டங்களையும் ஒழுங்குகளையும் சரியான முறையில் செயற்படுத்துவதில் உள்ள குறைபாடு காரணமாக மோசமடைந்து வருகின்றது.
துரதிஷ்டவசமாக திருகோணமலை மாவட்டம் பாரம்பரியமாக உரிமையாளர்கள் உள்ள காணிகளுக்கு போலி உறுதிகள் தயாரிப்பது உட்பட மோசடி செயற்பாடுகளை கண்டுள்ளது. இத்தகைய தீய செயற்பாடுகள் தனியார் மற்றும் அரச காணிகள் சட்டபூர்வமற்ற முறையில் அபகரிக்கப்பட காரணமாக அமைந்துள்ளது. குச்சவெளி, நகர், கடவட் மற்றும் மூதூர் போன்ற பிரதேச செயலர் பிரிவுகள் குறிப்பாக இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. சில உயர் அதிகாரிகள் இந்த அநீதிகளை கண்டும் வாய்மூடி மௌனிகளாக இருப்பது மனச்சோர்வை தருகின்றது.
போருக்குப் பின்னர் திரும்பி வந்து தமது காணிக்கு உரிமை கோரிய அதுல ஜெயந்தனி போன்ற நபர்கள் சந்தித்த நிலை, மிகுந்த துயரத்தை தருகின்றது. அதுலவின் விடயத்தில் குச்சவெளியின் அந்நாளைய பிரதேச செயலர் அவர் உரிமை கோரிய ஒரு ஏக்கர் காணிக்கு மட்டக்களப்பில் உரிமையாளர் இருப்பதாக கூறி அவருக்கு மீள்குடியேற்ற உதவிகளை வழங்கவேண்டாமென கிராம அலுவலரை அறிவுறுத்தியதாக கூறப்படுகின்றது. ஆயினும் வேறு யாரும் அந்த காணியை உரிமை கோர வராத நிலையில் அதுல மீள்குடியேற்ற உதவியை பெற்றுக்கொள்ள முடியாத நிச்சயமற்ற நிலைக்கு உள்ளானார்.
அத்தோடு மத குருமாரும் ஏனைய தரப்பினரும் மரபு ரீதியான உரிமையாளர்கள் உள்ள நிலையிலும் காணிகளை அபகரிப்பதாக கூறப்படுகின்றது. காணி உரிமையாளரான கே. பி. அனந்த தனது காணிக்கு முன்னர் உரிமம் வழங்கப்பட்டிருந்ததாக கூறுகின்றார். அவர் தனக்கு குச்சவெளி சல்பையாறு பகுதியில் இருந்த இரண்டு ஏக்கர் காணியை மதகுரு ஒருவர் அபகரித்துக் கொண்டு அதனை வழிபாட்டு தலமாக மாற்றிக்கொண்டதாகவும் அந்த காணியில் ஒரு ஏக்கருக்கு உரிமம் தயாரித்துக் கொண்டதாகவும் குற்றம்சாட்டுகிறார். அவரது காணிக்கு எவ்வாறு புதிய உரிமம் உருவாக்கப்பட முடியும் என்று ஆனந்த கேள்வியெழுப்பியும் அதற்கு திருப்தியான பதில்களை அரச அதிகாரிகள் வழங்கவில்லை.
அநுராதபுரத்தில் உள்ள ஒரு பிக்கு குச்சவெளி சுற்றுலா பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளதாக மகேஷ் குமார லியனகே குற்றம் சாட்டுகிறார். தான் அந்த காணியை அபிவிருத்தி செய்ய முதலீடு செய்து அதனை நீண்ட கால குத்தகைக்கு பெற்றதாகவும் கூறுகின்றார். அத்தோடு போரினால் துன்பங்களை அனுபவித்த மக்கள் தமது காணிகளை இழந்து வருவதாகவும் அவர் கூறுகின்றார். வரி முறைமையின் மூலமாக தனது காணியை சட்டரீதியாக பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் உள்ள அவர், பிரதேச செயலக அதிகாரிகள் சிலருடைய ஆதரவுடன் அந்த காணியை பிக்கு ஒருவர் பெற்றுக்கொண்டதன் சட்டபூர்வ தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றார். இது அரச அதிகாரிகளின் ஆதரவுடன் இடம்பெற்றிருக்கக்கூடிய சட்டத்திற்கு புறம்பான காணி கைமாற்றல் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றது.
கோமரங்கடவல மற்றும் குச்சவெளி பிரதேச சபைகளுக்கிடையிலான எல்லை சிக்கல்களை தீர்க்கவென இந்த குழு மாகாண காணி ஆணையாளரின் தலைமையில் 2022ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. இந்த பகுதியில் மோசடியான காணி உரிமங்கள் மூலம் காணி கையகப்படுத்தப்பட்டமை விசாரணைகளின் போது தெரியவந்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையின்படி, மொத்தமாக 20 ஏக்கர் காணிக்காக வழங்கப்பட்டுள்ள ஆறு உரிமங்களின் நம்பகத்தன்மையை கண்டறிய முடியாதுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இந்த உரிமைகளுக்கான ஆவணங்கள் மற்றும் கள ஆய்வு என மோசடியானவை என தகவல் தேடலின்போது தீர்மானிக்கப்பட்டதாக அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. குறிப்பாக இந்த உரிமங்களின் அசல் காணக்கிடைக்காததோடு அலுவலக பிரதிகளாக போட்டோ பிரதிகளே காணப்பட்டதோடு அலுவலக அறிக்கைகளில் பேரேட்டு பிரதிகளையும் காணமுடியவில்லை.
குழுவின் அறிக்கையின்படி இல. P/L 1058 கொண்ட கண்ணுஅப்பு மொஹமட் ஸுபைர் என்பவருக்கு வழங்கப்பட்ட நான்கு ஏக்கருக்கான அனுமதி ஒரு போட்டோ பிரதி என்பதோடு அதன் பேரேட்டு பிரதியையும் அலுவலக அறிக்கைகளில் காணவில்லை. இந்த அனுமதியுடன் தொடர்புடைய காணிக்குரிய 1663A P/L என்ற உரிமத்தில் முரண்பாடுகள் காணப்பட்டன. இந்த அறிக்கையானது இரு உரிமங்களிலும் எல்லைகளை குறிப்பிடுவதிலும் எல்லைகளின் பெயர்களிலும் உரிமம் வழங்கப்பட்ட திகதிகளிலும் தவறு நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றது.
ஏப்ரல் 18, 2023 திகதியிட்டு புல்மோட்டை பிரதி பொலிஸ் அத்தியட்சகருக்கு முகவரியிடப்பட்டு திருகோணமலை மாவட்ட செயலருக்கு பிரதிசெய்யப்பட்ட கடிதமொன்றில் குச்சவெளி பிரதேச செயலர் கே. குணானந்தன் காணி கையகப்படுத்தல் பற்றி குறிப்பிடுகின்றார். இந்த கடிதத்தில் (இல. DS/KU/LND/LNCLR/3/2023) மீரா சாய்பு சுலைஹா உம்மா மற்றும் மீரா சாய்பு சம்சுதீன் தமது காணி உரிமத்திற்கான செல்லுபடி நிலையின் அடிப்படையில் காணியை சுத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட நான்கு ஏக்கரை தாண்டி காட்டு நிலத்தையும் துப்புரவு செய்திருப்பதாக குணானந்தன் கூறுகின்றார். அத்தோடு சனுபா என்பவரும் மூன்று ஏக்கர் வனப்பகுதி காணியை சட்டவிரோதமாக துப்புரவு செய்து சொந்தமாக்கிக் கொண்டுள்ளார்.
குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பில், குச்சவெளி பிரதேச செயலர் மாகாண காணி ஆணையாளரின் தலைமையிலான குழுவுடன் இணைந்து சுட்டிக்காட்டுகின்றார். அத்தோடு இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க வேலியமைத்தல்களும் போதியளவில் இல்லை என்றும், சட்டவிரோத காணி அபகரிப்புக்கு ஆதரவு தருவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.