சடலங்களின் தகனம் குறித்த விவாதத்தை மீண்டும் வெளிக்கொண்டுவருதல்
சம்பத் தேசபிரிய
கோவிட் 19 ல் இறந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்த சமூக பிரச்சாரம் மீண்டும் ஒரு புதிய சுற்று சமூக உரையாடலைத் தூண்டியுள்ளது. சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதற்கு பதிலாக தகனம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கை விவாதத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பா.உ ஏ.எஸ்.எம்.மரிக்கார் நாடாளுமன்றத்தில், இந்த வைரஸ் நீர் ஆதாரங்கள் மூலம் பரவவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளதால் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியுமா என்று பிரதமரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த பிரதமர், அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று கூறினார். பிரதமர் தனது பதிலில் கோவிட் இறப்புகளைக் குறிப்பிடவில்லை என்றாலும் அது கோவிட் பற்றிய மரிக்காரின் கேள்வி என்பதால், பிரதமர் அளித்த பதில் பொருத்தமானது என்று தெரிகிறது.
பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட பிரதமரின் பதிலின் அடிப்படையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரகங்களுடன் இணைந்து தனது ஆதரவை வெளிப்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டார். இதற்கிடையில், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து, முஸ்லிம் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து தங்கள் கட்சியின் நான்கு உறுப்பினர்கள் அரசாங்கத்தின் 20 வது திருத்தத்தை ஆதரித்ததாகக் கூறினர்.
அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு குறித்து ஊடகங்கள் கோவிட் கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சரிடம் விசாரித்தபோது, இதுபோன்ற சுகாதார விடயங்களில் சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு முடிவுகளை எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அவர்களின் பரிந்துரையின் பேரில் தொடர்புடைய முடிவு எடுக்கப்படும். கோவிட்டினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் உடல்களை தகனம் செய்ய அனுமதிக்கப்படும் என்ற பிரதமரின் அறிக்கை சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்கவில்லை என்பது இங்குள்ள அடிப்படை தர்க்கரீதியான பிரச்சினையாகும். எனவே, கோவிட்டினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் தகனம் சுகாதாரக் குழுவின் பரிந்துரையின் பேரில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது அரசாங்கத்தின் அரசியல் முடிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அனைத்து கோவிட் மரணங்களுக்கும் அடக்கம் செய்ய அனுமதிப்பதற்கு பிரதமருடன் அரசியல் ரீதியாக எட்டப்பட்ட உடன்படிக்கைக்கு ஏற்ப அரசாங்கத்தின் அரசியல் முடிவை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தது. இந்த முடிவோடு ஒரு அரசியல் தொடர்பும், ஒரு இன மற்றும் அரசியல் பரிமாணமும் இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.
இலங்கை சிங்கள பெண்களை சித்திரவதை செய்ததாக ஒரு முஸ்லீம் மருத்துவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டபோது விஞ்ஞான விசாரணைகள் மற்றும் அவதானிப்புகள் அதிக மதிப்புடையவையாக இருக்கவில்லை என்பதுடன் கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருத்தடை உள்ளாடைகளை சிங்கள பெண்களுக்கு முஸ்லிம் சமூகத்தில் உள்ளவர்களால் விநியோகிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இந்த வழக்கை விசாரிக்க பெண்நோயியல் மருத்துவ பேராசிரியரை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், பல் மருத்துவரின் வழிகாட்டுதலிலும் ஆலோசனையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விடயத்தில் கூட, அடக்கம் செய்வதன் மூலம் வைரஸ் பரவக்கூடும் என்ற கருத்து வைரஸ் குறித்த நிபுணர்களால் அல்லாது பிரதான ஊடகங்கள் மூலமாகவே சமூகமயமாக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை சமூக மருத்துவர்கள், குடும்பத்தினர் சுகாதார பரிந்துரைகளின்படி செயற்பட அனுமதிக்க வேண்டும் என்றனர். வைரஸ் குறித்த நிபுணர் பேராசிரியர் மாலிக் பீரிஸ் மற்றும் நிபுணர் நிலிகா மலாவிஜ் ஆகியோரும் இந்த வைரஸ் 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நான்கு நாட்கள் நீரில் தங்கியிருப்பதாகவும், இலங்கை போன்ற ஒரு நாட்டில் இந்த செயன்முறை மேலும் துரிதப்படுத்தப்படும் என்றும் கூறினர். வைரஸ் ஒரு சடலத்தில் எஞ்சியிருக்கும் நேரம் இன்னும் விவாதத்திற்குரியது என்பதால் உடலை ஒரு கிருமி நாசினி திரவத்தில் இட்டு புதைக்குமாறு வெளிநாட்டு நிபுணர்களும் பரிந்துரைத்துள்ளனர்.
தற்போதைய வற்புறுத்தல் கொள்கைக்கு பதிலாக, சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுடன் முரண்படாத மாற்று அணுகுமுறைகளை பரிசீலிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை நிராகரிப்பதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சர் தெரிவித்திருந்தார். இறந்த உடல்களிலிருந்து வைரஸ் பரவுவதை உலக சுகாதார அமைப்போ அல்லது வேறு எந்த உள்ளூர் அல்லது சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமைப்போ இதுவரை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இத்தகைய அறிவியல் உறுதிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டால், அதை யாரும் எதிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், அரசியல்வாதிகள் மக்களின் முக்கியமான பிரச்சினையை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தி தங்களது வழக்கமான அரசியல் விளையாட்டை விளையாடுகிறார்கள்.