சகவாழ்வு: கலப்புப் பாடசாலைகளை உருவாக்கவேண்டும்!
உபுல் தம்மிதா
தற்போதைய நிலையில் நாட்டின் எல்லா பிரதான நகரங்களிலும் இன நல்லிணக்க செய்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பலன்களானது மிகவும் சொற்ப மானவையாவுள்ளன. அதிகமான கிராமத்தவர்கள் நகரத்தில் இருந்து தூரமாக்கப்பட்டவர்களாக வாழ்கின்றனர். நகரங்களுக்கு அப்பால் வசிக்கின்ற பல்லினங்களையும் பல மதத்தவர்களையும் இலக்காகக் கொண்டு இன நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை தோற்கடிப்பதற்கான ஒரே அயுதமாக தேசிய ஒருமைப்பாடு இருந்து வருவதோடு அதனை புரிந்து கொண்டு அதற்காக பாடுபட வேண்டியது தேசிய ரீதியாக ஒவ்வொருவரதும் பொறுப்பாகும் என்று முஹம்மத் சக்காப் முஹம்மத் பவுசி தெரிவிக்கின்றார். அதுவே இலங்கையின் சமூக அரசியல் தொடர்பு செயற்பாட்டின் பிரதான இணைப்புமாகும் என்கிறார். த கட்டுமரனுக்காக அவருடன் நடத்திய நேர்காணலின் போதே அவர் இந்தக் கருத்துக்களைக் கூறினார்.
பேருவளை தர்கா நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் வியாபாரியும் வர்த்தகருமான அநுராதபுரத்தில் வசிக்கின்ற அவரது தந்iயுடன் இணைந்து வியாபாரத்திற்கு உதவி செய்து வருகின்றார். சிங்கள மொழி மூலம் சிங்கள பாடசாலையில் கல்வி கற்ற அவர் பாடசாலை கல்வியின் பின்னர் அரசியல் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டியதால் முழு நேர இடதுசாரி அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள ஒருவராவார். கடந்த 25 வருடங்களாக தொடர்ச்சியாக அவர் அநுராதபுரம் ஜூம்ஆ பள்ளிவாயலின் நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவராக இருந்து வருவதோடு இப்போது அந்த பதவியில் இருந்து ஓய்வு எடுத்துள்ளார். இப்போது அவருக்கு 68 வயதாகின்றது. முஹம்மத் சக்காப் முஹம்மது பவுசி தற்போது அநுராதபுரத்தில் மிகவும் பிபல்யம் வாய்ந்த ஒரு வர்த்தகராக இருந்து வருவதோடு பல சமூக சேவை மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் அங்கத்தவராகவும் பணியாற்றுகின்றார். அவருடனான நேர்காணல் வருமாறு:
த கட்டுமரன் : உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக உங்கள் அவதானம் என்ன?
இதுவரையில் மீள முடியாத அளவிற்கு முஸ்லிம்கள் அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்த தாக்குதலுக்கு எந்தவிதத்திலும் சம்பந்தப் பட்டவர்கள் அல்ல. இந்த சம்பவத்தின் ஆரம்பம் எங்கே என்பதில் சந்தேகம் இருந்து வருகின்றது. நீண்ட கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளும் மீளமைப்புக்கான செயற்பாடுகளும் தேவைப்படுகின்றது. இந்நாட்டில் வாழுகின்ற ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமுமே பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களாவர். அப்படி இருந்தும் இன்று முஸ்லிம் சமுதாயம் முழுவதுமாக பலவிதமான துயரங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர். அதே நேரம் சில சந்தர்ப்பங்களில் சிங்கள பௌத்த கலாச்சாரத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளாமையும் அவர்களது மதத்தை புரிந்து கொள்ளாமையிலும் குறைபாடுகள் காணப்படுகின்றது. இத்தகைய பிரச்சினையில் பிரதானமாக பங்களிப்பு செய்வது ஆங்காங்கே சிதறியவர்களாகவும் தனி இனமாகவும் வாழ்கின்ற முறையும் ஒரு காரணமாக இருக்கின்றது. உதாரணமாக காத்தான்குடி முழுமையாக முஸ்லிம்களைக் கொண்ட பிரதேசமாகவும் யாழ்ப்பாணம் மொத்தமாக தமிழர்களைக் கொண்ட தனித்துவ பிரதேசமாகவும் இருந்து வருவதைக் கூறலாம்.
பல்லினங்கள் கலந்த நிலையில் வாழ்வதும் கலப்புத் திருமணங்களும் இவ்வாறான நிலைமைகளுக்கு முடிவு கட்டலாம். நான் பள்ளிவாயல் தலைவராக இருந்த போது எல்லா மதத்தவர்களும் இனங்களும் வந்து பார்க்கவும் தரிசிக்கவும் ஏற்ற வகையில் பள்ளிவாயலை திறந்து விட்டேன். பல சமூகக் குழுக்கள் வந்து பார்வையிட்டார்கள். அவ்வாறே எமது சமூகத்தவர்களும் ஏனைய மத விடயங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளனர். அதனால் அநுராதபுர முஸ்லிம்களால் ஏனைய மதங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்திருக்கின்றது. அல்குர் ஆன் ஆனது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. அது முழு உலக மனித சமுதா யத்திற்குமே உரியதாகும். யாரும் அல் குர்ஆனை படிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியும். அதற்கான எந்தவிதமான தடைகளும் இல்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களது மதத்தை பின்பற்றி நடக்கவும் கடைபிடிக்கவும் நீண்ட காலமாகவே இந்நாட்டில் உரிமை வழங்கப் பட்டிருக்கின்றது. அவ்வாறே ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்கவும் அவர்களது மத நடவடிக்கைகளுக்கு கௌரவமளிக்க வேண்டும் என்பது இஸ்லாமிய போதனையாகும். அநுராதபுரத்தில் தௌஹீத் ஜமாத்தால் பள்ளிவாயல் ஒன்று கட்டப்பட்ட போது நான் அதனை கடுமையாக எதிர்த்தேன். எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படலாம் என்பதாலே எதிர்த்தேன்.
த கட்டுமரன் : ‘முகம் மூடுதல்’ இன்று முஸ்லிம் பெண்களுக்கு சிக்கலைக்கொடுத்துள்ளது. இதனை எவ்வாறு நோக்கலாம்?
அவர்களது முகம் மூடுவதானது ஒருவிதமான அலங்காரமாகும். அண்மைக் காலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று வந்துள்ள பெண்கள் வெவ்வேறு விதமான ஆடைகளை அணிகின்றனர். குறிப்பாக அபாயாவும் அதில் ஒருவிதமாகும். எங்களது தாய்மார்கள் சிறந்த பண்பாடுடைய முஸ்லிம்களாக இருந்ததோடு அவர்களது உடையானது இந்திரா காந்தியைப் போன்று மிகவும் எளிமையானதாகவும் அமைந்திருந்தது. சாரி அமைப்பில் உடை அணிந்து அதில் ஒரு பகுதியால் தலையையும் மறைத்தார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் அவர்கள் ஆடை அணிவது கடுமையான உஷ்ணத்தில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காகவும் பாலைவனம் மற்றும் ஒட்டகங்கள் கடந்து செல்லும் போது மேலெழும் தூசு மற்றும் மணல் காற்றில் இருந்து உடம்பை பாதுகாப்பதற்காகவும் முழு உடலையும் மறைக்கின்றார்கள். இங்கே ஓட்டகம் இருக்கின்றதா? நாம் பின்பற்றும் கலாச்சாரம் உரிய நாட்டிற்கு பொருத்தமானதாக அமைய வேண்டும்.
த கட்டுமரன் : எல்லா இனங்கள் மத்தியிலும் இன நல்லுறவு சகவாழ்வு பலமடைய நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன?
நாங்கள் சுதந்திரமடைந்து 70 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாம் எதனை அடைந்துள்ளோம்? இப்போது இந்தியாவை பாருங்கள். மஹாத்மா காந்தி, நேருஜி, முஹம்மத் அலி ஜின்னா போனற்வர்களது கடுமையான பங்களிப்பின் ஊடாக இந்தியா சுதந்திரம் அடைந்தது. எங்களுடைய நாட்டில் அவ்வாறு இல்லை. கடந்த 70 வருடங்களாக இந்நாட்டிற்கு அரசியல் வாதிகளால் சகவாழ்வுக்கு சேவைகள் செய்யப்படவில்லை. கலப்பு பாடசாலைகள் அவசியமானதாகும். இன நல்லுறவுக்கு பிரதான ஆயதமாக அமையக்கூடிய சிங்கள மொழியை தமிழர்களும் முஸ்லிம்களும் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் இந்த ஆயுதங்களை எம்மிடம் கொண்டிருந்தால் நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினை இருக்காது.
தற்போதைய நிலையில் நாட்டின் எல்லா பிரதான நகரங்களிலும் இன நல்லிணக்க செய்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பலன்களானது மிகவும் சொற்ப மானவையாவுள்ளன. அதிகமான கிராமத்தவர்கள் நகரத்தில் இருந்து தூரமாக்கப்பட்டவர்களாக வாழ்கின்றனர். நகரங்களுக்கு அப்பால் வசிக்கின்ற பல்லினங்களையும் பல மதத்தவர்களையும் இலக்காகக் கொண்டு இன நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் போன்று எதிர்காலத்திலும் அவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் புலனாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நீண்ட காலமாக நட்புறவுடன் வாழ்ந்து வருகின்ற இனங்களாக சிங்களவர்களும் முஸ்லிம்களும் உள்ளனர். ஒரு சில தீவிவரவாத நடவடிக்கைகளால் நீண்ட காலமாக பலமடைந்ததாக இருந்து வருகின்ற இந்த நட்புறவை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது. அதனை பாதுகாத்து பலப்படுத்தவதற்கான தலைமைத்துவத்தை வழங்க வேண்டியது தலைவர்களது பொறுப்பாகும். இதுதான் உண்மையான சுதந்திரம் என்று கூறலாம். தேசிய ஒருமைப்பாட்டின் மூலமே தீவிவரவாதத்தை முற்றாக தோற்கடிக்கலாம்.
This article was originally published on the catamaran.com
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.