அரசியல்

சகல இனங்களுடனான சகவாழ்வுக்கு… ‘முஸ்லீம்களிடத்தில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்பட வேண்டும்?’

எ.எம்.பாயிஸ்

அண்மையில்கூட 51 நாள் ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் ஒரு பக்கம் சாய்ந்து இருந்தால் ஆட்சிமாற்றம் இடம்பெற்றிருக்கும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் சார்ந்திருந்த அரசுக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியதனால் ஆட்சி கலைக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது….

“அரசியல் மற்றும் மார்க்க அறிஞர்களும் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் சில விடயங்களை சாதித்துக் கொள்வதற்கும் இலங்கையர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் வாய்ப்பாக அமையும்.” என்று கூறுகின்றார் பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசீத். கட்டுமரனுடனான அவரது செவ்வி:

கட்டுமரன்: பொத்துவில் பிரதேச சபை மூவின மக்கள் வாழ்கின்ற பிரதேசமாகும். கிட்டத்தட்ட 80 வீதம் முஸ்லிம் மக்களும் 19.5 வீதம் தமிழ் மக்களும் 0.5 வீதம் சிங்கள மக்களும் வாழ்கின்றனர் என கூறப்படுகிறது. இந்த மக்களின் பிரதான தொழில் என்ன?

பதில்: ஆம், சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சனத்தொகையையும் கொண்டதாக இக்கிராமம் காணப்படுகின்றது. விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு குறிப்பாக சுற்றுலாத்துறையும் இப்பிரதேச மக்களின் ஜீவனோபாயமாக காணப்படுகின்றது.

கட்டுமரன்: உயிர்த்த ஞயிறு தாக்குதலின் பின் சுற்றுலாத்துறை எவ்வாறான நிலையில் உள்ளது?

பதில்: பொத்துவில் பிரதேசத்தில் அறுகம்பை உலகளாவிய ரீதியில் நீர்ச் சறுக்கல் போட்டிக்கு பெயர் போன இடமாக கருதப்படுகின்றது. வருடாந்தம் இப்பிரதேசத்தில் சர்வதேச ரீதியான நீர்ச் சறுக்கல் போட்டி நடைபெறுவது வழக்கம். ஜூலை மாதம் இப்போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இருந்தபோதிலும் இத் தாக்குதலின் காரணமாக அதை செய்துகொள்ள முடியாமல் செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு மாற்றியிருக்கிறோம். அறுகம்பை பிரதேசத்தில் 200க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் காணப்படுகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாக அறுகம்பை பிரதேசத்தில் எந்தவொரு வருமானமும் இல்லாத நிலைதான் காணப்பட்டது. ஹோட்டல்கள், ஹோம் ஸ்டே, முச்சக்கர வண்டிகள், பிரதேச சபைக்கான வருமானம் என அனைத்திலும் 100 விதமான தாக்கங்கள் இதனால் ஏற்பட்டிருந்தன. கடந்த இரண்டு வாரங்களாக எமது பிரதேசத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. தற்போது சுற்றுலாத் துறையோடு சார்ந்து தொழில் புரிகின்ற முயற்சியாளர்கள் பொருளாதார பிரச்சினையிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்கள். நாட்டில் சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா துறையினரின் வருகை மேலும் அதிகரிக்கும் அதனூடாக நாட்டுக்கு அன்னியச் செலாவணி வருமானம் உயர்ச்சியடையும் என்று நம்புகிறோம். ஆனாலும் அடிப்படைப்பிரச்சினைகள் பல உள்ளன. அவைதான் தொழில்துறைகளைப்பாதிக்கின்றன.

பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசீத்.

கட்டுமரன்: என்னமாதிரியான அடிப்படைப்பிரச்சினைகள்?

பதில்: இலங்கையில் ஏனைய பாகங்களில் நீர் வழங்குவது போன்று பொத்துவிலுக்கு நீர் வழங்கப்படுவதில்லை. சுமார் 30 நிமிடங்களுக்கு மாத்திரம்தான் நீர் வழங்கப்படுகின்றது. இதனால் உல்லாசத்துறை, விவசாயம் போன்ற பல விடயங்களில் பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பொத்துவில் பிரதேசத்தை கல்வி வீழ்ச்சியிலிருந்து மேம்படுத்துவதற்கு வலயக் கல்வி அலுவலகம் நிறுவப்பட வேண்டும். அத்தோடு இங்குள்ள வைத்தியசாலை நோயாளிகளை அக்கரைப்பற்று, அம்பாறை போன்ற வைத்தியசாலைகளுக்கு பரிமாற்றும் பரிமாற்ற நிலையமாகவே செயற்படுகின்றது. அதைவிடுத்து இங்குள்ள வைத்தியசாலையை மக்களின் தேவை கருதி வசதியுடன் கூடிய ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும். சுமார் 2300 ஏக்கர் காணிப் பிரச்சினைகள் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றது. இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

கட்டுமரன்: இந்தப்பிரச்சினைகளை பிரதேச சபை கையாண்டு எவ்வளவு தூரத்திற்கு தீர்கமுடியும் என எண்ணுகிறீர்கள்?

பதில் : இங்கு ஒரு மாகாண சபை அங்கத்தவர் அதிகாரம் கூட இல்லை. பிரதேச சபை அதிகாரத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு எமது மக்களின் பிரச்சினைகளெல்லாம் தீர்க்க முடியாதுள்ளது. இப்பிரச்சினைகள் எல்லாம் வெளிக்கொணரபடாமல் தீர்க்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. எனவே எமது பிரதேசத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து தீர்ப்பதற்கு பாராளுமன்ற உறுப்புரிமை அதிகாரம் வழங்கப்பட வேண்டும். எதிர்வரும் காலங்களில் ஏதாவது ஒரு தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள இருக்கின்றோம். எமது அபிலாசைகள் நிறைவேற்றப்படாது போனால் சாய்ந்தமருது மக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் போல் நாங்களும் செயற்படுவதற்கு தள்ளப்படுவோம் என்பதை எமது கட்சிக்கும் ஏனைய அரசியல் மட்டங்களுக்கும் நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

கட்டுமரன்: பொத்துவில் பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் – முஸ்லிம் காங்கிரஸிக்கும் இடையில் எவ்வாறான உறவு காணப்படுகின்றது?

பதில்: கடந்த ஆண்டு புதிய முறையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் முஸ்லீம்களுக்கு 6 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தாலும் புரிந்துணர்வினுடனான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உதவித் தவிசாளரையும் முஸ்லிம் காங்கிரஸிக்கு தவிசாளரையும் பெற்றிருக்கின்றோம். குறிப்பாக என்னைத் தெரிவு செய்த மக்களுள் தமிழ் மக்களும் கணிசமானளவு உள்ளனர். தமிழ் மக்களினுடைய தேவைகளை பரிபூரணமாக பூர்த்தி செய்வதில் தவிசாளர் என்ற அடிப்படையில் நான் முன்னுதாரணமாகத் திகழ்கின்றேன். தமிழ் மக்களுக்கு அபிவிருத்திகளையும், சேவைகளையும் வழங்குவதில் சரியான சமமான வாய்ப்புகள் இந்த சபையினால் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது என்பதை உறுதிப்படக் கூறுகின்றேன். இதுவரை எமது பிரதேசத்தில் அவர்களுக்கும் எங்களுக்கும் கட்சி அரசியலில் எந்தவிதமான முரண்பாடுகளும் ஏற்படவில்லை.

கட்டுமரன்: இந்தப் பிரதேசத்தில் நல்லிணக்கத்தைப்பேணுவதற்கு உங்கள் பிரதேச சபையினால் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன?

பதில்: எனக்குத் தெரிந்த அளவில் கடந்த 1990 ஆம் ஆண்டு யுத்த காலத்திலும், 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்திலும், ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் சம்பவம் போன்ற பிரச்சினைகளின் போதும் பொத்துவிலிலுள்ள மூவின மக்களும் சௌஜன்யத்தோடும் ஒற்றுமையோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமக்கு அரசியல் அதிகாரமாக ஒரு பிரதேச சபை மாத்திரம் இருந்தபோதிலும் அண்மையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் போதும் பாதுகாப்பு தரப்பின் பல்வேறு மட்டங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட நல்லுறவின் அடிப்படையில் எங்களது பிரதேசத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.

இங்குள்ள மூவின மக்களும் நாட்டின் நிலைமைகளை புரிந்துகொண்டு ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில் வெளியிலிருந்து வருகின்ற சிலரினால் குழப்பங்கள் ஏற்படுத்த முயற்சிக்கப் பட்டாலும் பாதுகாப்பு படையினர் இந்தப் பிரதேசத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தமையினால் பிரச்சினைகள் எழாமல் தவிர்க்கப்பட்டது. நாங்கள் தொடர்ந்தும் அரச அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர், மும்மதத் தலைவர்கள் என எல்லோரையும் சபையில் அழைத்து கலந்துரையாடல்களை செய்து எமது பிரதேசத்தில் சகவாழ்வை கட்டியெழுப்புகிறோம்.

கட்டுமரன்: இந்நாட்டில் அனைத்து இன மக்களும் சக வாழ்வோடு வாழ்வதாக இருந்தால் முஸ்லிம்களிடத்தில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என கருதுகின்றீர்கள்?

பதில்: பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு இலங்கைத் தேசம். இந்நாட்டில் 9 வீதமாக முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் 90 வீதத்துக்கு மேற்பட்டோர் ஏனைய மாற்று மத சகோதரர்கள் வாழ்கின்றனர். இலங்கை முஸ்லிம்கள் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒற்றுமையோடு பயணிக்க வேண்டும். அதேபோன்று ஏனைய இன மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களுக்கிருக்கின்ற சந்தேகங்களைப் போக்கி சகவாழ்வைப் பேணி வாழ வேண்டும். அண்மையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்தது நாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. அரசியல் மற்றும் மார்க்க அறிஞர்களும் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் சில விடயங்களை சாதித்துக் கொள்வதற்கும் இலங்கையர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் வாய்ப்பாக அமையும்.
முன்னைய காலத்தில் முஸ்லிம்கள் அரசர்களுக்கு விசுவாசமாக செயற்பட்டதன் காரணமாக பாதுகாக்கப்பட்டார்கள் என்பது வரலாறு கூறும் உண்மையாகும். அண்மையில்கூட 51 நாள் ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் ஒரு பக்கம் சாய்ந்து இருந்தால் ஆட்சிமாற்றம் இடம்பெற்றிருக்கும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் சார்ந்திருந்த அரசுக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியதனால் ஆட்சி கலைக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது. அதனால் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக வந்தார். முஸ்லிம்கள் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் இந்த நாட்டில் அவர்கள் அங்கீகரிக்கப் படுவார்கள், பாதுகாக்கப்படுவார்கள் என்பதுதான் எனது கருத்தாகும்.

This article was originally published on the catamaran.com

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts