சமூகம்

கோஷங்கள் மாத்திரமே மரணங்களைத் தடுக்குமா?மலையக சிறுமியின் மரணத்தை முன்னிறுத்தி…

ஜீவா சதாசிவம்

ஹட்டன் – டயகமவைச் சேர்ந்த ஹிசாலினியின் சம்பவம் 15/07/2021 முதல் பரபரப்பான சம்பவமாகவும் அதிகம் பேசு பொருளாகியுள்ளதாகவும் இருக்கின்றது. பல்வேறு கருத்துக்கள், கருத்தாடல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. காத்திரமான நியாயமான கருத்துக்களை பதிவு செய்கின்றவர்களாக சிலரும் உள்மனதில் உள்ள உணர்ச்சியை கொட்டுபவர்களாக சிலரும் இருப்பதை அவர்களது கருத்துக்கள் மூலம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. சமூக வலைத்தளங்கள் உட்பட இன்றைய ஊடகங்களில் அதிகளவு பேசப்படும் விடயமாக ஹிஷாலினி வலம் வருகின்றார்.

சம்பவத்தையடுத்து, தொடர் போராட்டங்கள், சமூக வலைத்தளங்களின் ஊடாக நேரடியாக பல போராட்டங்கள், கருத்துப்பகிர்வுகள் என பலவகையில், வழிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இது சமூகப்பிரச்சினைக்கான போராட்டமா? அல்லது ரிஷாத் பதியூதீன் என்ற அரசியல்வாதியின் வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றதனால் இவ்வாறானதொரு எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளதா? என சிந்திக்க வேண்டியுள்ளதுடன்  சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பான ஆறு (6) வழக்குகள் இதுவரை  பதிவாகியுள்ளன அதன் படி,

1.         15 வயது சிறுமி இணைய வழியில் விற்பனை செய்யப்பட்டமை (இதற்கு தாயும் உடந்தை என சொல்லப்படுகிறது)

2. 14, 12 வயது சொந்த மகள்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய 36 வயது தந்தை.

3. 13 வயது நாவலப்பிட்டியைச் சேர்ந்த சிறுமி அவளது 7 வயதில் இருந்து சொந்தத் தகப்பன் உட்பட பலரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுள்ளமை.

4. கம்பஹாவில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக ஒரு விகாரையின் தலைமை துறவி உட்பட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை 

5. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் 63 சிறுவர்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  

கடந்த ஆறு மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் 4,740 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

யார் இந்த கிஷாலினி ஜுட்குமார்

2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி கிராண்ட்பாஸிலுள்ள நியூ பஸார் மகப்பேற்று மருத்துவ நிலையத்தில் பிறந்தார். ஜெயராஜ் ஜுட்குமார் ரஞ்சனி தம்பதிகளுக்கு மூன்றாவதாக பிறந்தவர் ஹிஷாலினி. அவிசாவளை புவக்பிட்டி சி/சி/ தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம்- 7 வரையே கற்றுள்ளார். இதன் பின்னர் பாடசாலைக் கல்வியில் இருந்து இடைவிலகியுள்ளார். சகோதரர் ஒருவரும் நான்கு சகோதரிகளும் உள்ளனர். நான்கு வருடங்களுக்கு முன்னரே குடும்பத்துடன் நுவரெலியா மாட்டத்திலுள்ள டயகம 3ஆம் பிரிவுக்கு வந்து குடியமர்ந்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி

பொன்னையா என்கின்ற 64 வயதுடைய தரகர் ஊடாகவே முன்னாள் அமைச்சர் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின்  கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள அவரது வீட்டில் வீட்டு வேலைக்கு 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமளவில் அமர்த்தப்பட்டார். இச்சிறுமி 2021, ஜுலை மாதம் 3ஆம் திகதி அன்று அவரது உடலில் பலத்த தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 73ஆவது சிகிச்சை அறையில் அமைந்துள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு – 2 இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்   சிகிச்சை பலனின்றி 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறான சம்பவத்தில் சிக்கியவர் முதலாமவர் கிஷாலினி மட்டுமா?

மலையகத்தின் 200 வருட கால வரலாற்றில் தலைநகர் பகுதியில்  சிறுவர் தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சத்தையும்  கடந்திருக்கும். ஏனெனில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பதான ஆய்வறிக்கையொன்றில் 103,000 சிறுவர் தொழிலாளர்கள் இலங்கையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அதில் சுமார் 40 சதவீதமானவர்கள் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களின் வருகை, வளர்ச்சியின் பின்னரே இவ்வாறான சம்பவங்கள் அம்பலத்துக்கு வருகின்றது. திரைமறைவில் இடம்பெற்று முடிந்த இவ்வாறான சம்பவங்கள் எத்தனையோ?

கிஷாலினிக்கு முன்பதாக மலையகத்தில் இருந்து வீட்டுத் தொழிலுக்காக தலைநகருக்கு சென்றவர்களில் அர்ச்சுனன், லிங்கேஸ்வரன், கிருஸ்ணவேனி, சுமதி, ஜீவராணி, நந்தினி, குமுதினி போன்றவர்கள் சடலங்களாக வீடு திரும்பியமையும் நினைவுகூறத்தக்கது.

குறிப்பாக ஒரு சம்பவம் இடம்பெறும் போதே நாம் அதைப்பற்றி ஆழமாக பேசுவதும் , உணர்ச்சிவசப்படுவதும், உடனடி தீர்வுகளை நாடுவதும் வழமையாகிவிட்ட நிலையில், இவ்வாறான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் தீர்வுகள் இன்னும் கிடப்பில் உள்ளதையும் அவதானிக்க மறந்து விடுகின்றோம். 

தரகர்கள்…

மலையக சமூகத்திற்கு ‘தரகர்’ என்ற பதம் புதியதொன்றல்ல. தலைநகருக்கு ஒருவரை வேலைக்கு அமர்த்தினால் குறிப்பிட்ட தொகை தரப்படும் என்ற பேரம் பேசலுக்கு அமைவாகவே வீட்டு வேலைகளுக்காக இவ்வாறு சிறுவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது காலங்காலமாகவே இடம்பெறுகின்றது.

மாணவர் சாதாரண தரம் முடித்தப்பின்னரோ அல்லது பாடசாலையில் இருந்து இடைவிலகிய பின்னரோ இவ்வாறான தரகர் கண்களில் சிக்கி ஆசைவார்த்தைகளுக்கு மயங்கி எதிர்காலத்தையே சூனியமாக்கிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியே இவ்வாறான நிலைமைகளுக்கு காரணம்.  (இந்த நிலைமை இக்காலக்கட்டத்தில் குறைவடைந்துள்ளமையையும் சுட்டிக்காட்ட வேண்டும்.)

இவ்வாறு செல்ல காரணம் என்ன?

பெருந்தோட்டப்பகுதியில் தேயிலைத் தொழிற்துறையை பிரதானமாகக் கொண்ட தொழிலாளர்களின் பிள்ளைகளே தலைநகரில் மாத்திரம் அல்ல நாடளாவிய ரீதியில் உள்ள பல பிரதேசங்களில் சிறுவர் தொழிலாளர்களாக  வீடுகளிலும் , கடைகளிலும், வேலைக்காரர்களாக அமர்த்தப்படுகின்றார்கள்.  ஏன் குறித்த சிறுவர்கள் வசிக்கும் ஊரில் உள்ள அல்லது அயல் ஊர்கள் மற்றும் நகர்ப்பகுதிகளில் உள்ள செல்வந்தர்களின் வீடுகளில் கூலிகளாக அமர்த்தப்படுகின்றனர். போதிய பொருளாதார வசதியின்மை மற்றும் வறுமை நிலை காரணமாகவே இவ்வாறு வீட்டுவேலைக்கு செல்லும் நிலை ஏற்படுகின்றது. 

மலையக தொழில் நிலைமை

மலையகத்தில் உள்ள பலர் இன்று இலங்கையின் அரச உயர் மட்டத்தில் இருந்து பல்துறைகளில் உயர்மட்டங்களில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பெருந்தோட்டத் தொழிற்துறையை பிரதானமாகக் கொண்ட பெற்றோர்களின் பிள்ளைகள் தான்.

யாருக்கும் அடிபணியாத தேயிலைத் தொழிற்துறையை பிரதான தொழிலாகக் கொண்டு உடல் உழைப்பில் உழைத்து வாழும் மலையக சமூகத்தில் இன்று இந்த தொழிலையே தரம் குறைவாக எண்ணி தலைநகருக்கு படையெடுப்பதனாலும் தற்காலிக சொகுசு வாழ்க்கைக்கும் ஈர்க்கப்படுவதனாலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு இலகுவான வழியாக இருக்கின்றது.

தேயிலைத் தோட்டத்தில், கொடுக்கும் வேலை நாட்களை சரியாக செய்து மரக்கறி தோட்டங்களை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்தி சிக்கனமாக வாழப் பழகிக் கொண்டால் மலையகத்தில் உள்ள எவரும் இன்னொரு வீட்டுக்கு வேலைக்காரராக  போக வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை என்பதுடன்; மலையகத்தவர்கள் அடிமையாக செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் எச்சரிக்கை…

கொழும்பிலுள்ள சில செல்வந்தர்களின் வீடுகளில் பணியாளர்களாக சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும்  இவ்வாறான வீடுகளை சோதனைக்கு உட்படுத்தி உரிமையாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த வித்தான பத்திரண தெரிவிக்கின்றார்.

மேற்படி சபை 1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்கு பின்னரான சுமார் 2 தசாப்த காலப்பகுதியில் இவ்வாறான ஆயிரக்கணக்கான சம்பவங்கள இடம்பெற்றுள்ளன. இருந்தபோதிலும்இச்சபை இதுவரை நிரந்தரமாக என் தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளது என்ற கேள்வியும் எழாமல் இல்லை..

ஊடகங்கள்

தேசிய ஊடகங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் கடந்த 15ஆம் திகதி முதல் இக்கட்டுரை எழுதும் வரை ஹிஷாலினி பற்றிய செய்திகளும் கட்டுரைகளும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நிறைந்த புகைப்படங்கள் என வித விதமாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றது.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது ஊடகங்கள் பொறுப்பு வாய்ந்ததாகவும் இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற நுவாiஉள என சொல்லப்படுகின்ற ஒழுக்கக் கோவைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால், சில ஊடகங்கள் இச்சம்பவத்தை பலவாறு திரிபு படுத்தி எல்லை மீறிய ஒழுக்கத்துடன் செயற்பட்டுவதையும் அவதானிக்கலாம்.

தீர்வு தான் என்ன?

16 வரை பிள்ளைகளுக்கான கல்விகட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளதுடன், அதுதொடர்பாக பிரதேச அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளான, சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்று பலர் குடும்பங்களில் பின் தொடர்தலை மேற்கொண்டு பாடசாலைக்கல்வியில் இருந்து விலகிச் செல்லும் மாணவர்களை பாடசாலையில் இணைப்பதற்கு பாடசாலை சமூகத்துடன் பணியாற்ற வேண்டும்

மலையகத்தில் மாத்திரம் அல்லாது நாடளாவிய ரீதியில் இவ்வாறான சம்பவங்கள் கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது. இவ்வாறான சம்பவத்தில் அரசாங்கத்தின் வகிபாகம் அதி உச்சமாக இருக்க வேண்டும். அதியுச்ச  சட்டமும் இலங்கையில் அமுல்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையின் சிறுவர் பாதுப்பு சட்டம் வெறும் ஏட்டளவில் இல்லாமல் பயனுள்ளதான பலமான சட்டமாக இருக்க வேண்டும்.

கடுமையான தண்டனைக்குறிய சட்டங்களை உருவாக்கி நீதித்துறை சார்ந்த கட்டமைப்பில் சிறுவர்கள் சார்ந்து கையாளப்படும் வழக்குகளை காலதாமதமில்லாமல் விரைவாக விசாரணைகளை மேற்கொண்டு தண்டனைகளை வழங்கக் கூடிய செயல்முறைகளைக் கொண்டு வரவேண்டும்.

வீட்டு வேலைக்கு பிள்ளைகள் ஏன் அமர்த்தப்பட வேண்டும் என்று தோட்ட வாரியாக குறித்த பகுதிக்கு பொறுப்பான சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகம், மாவட்ட செயலக அதிகாரிகள் இணைந்து ஆராய வேண்டும். இவ்வாறு அமர்த்தப்பட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்த விழிப்புனர்வையும் வழங்க வேண்டும்.

இதன்போது கிடைக்கப்பெற்ற பதில்களுக்கு அமைவாக அதற்கான தீர்வுகளை ஏனைய உயர் மட்டங்களுடன் கலந்துரையாடி உரிய தீர்வினைப்பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். இவ்வாறான தீர்வு நீண்டகாலம் பயன் தரக்கூடியதாக அமைந்தால் இவ்வாறான சம்பவங்களையும் தவிர்க்க முடியும்.

மலையக அரசியல் பிரதிநிதிகள் வெறுமனே ஆர்ப்பாட்டத்தில், கோசமிடுவதை மாத்திரம் கையிலெடுக்காத மக்களுக்கான மற்றும் வேலை இல்லாத இளம் தலைமுறையினருக்கான அதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.

ඉෂාලිනීගේ සිරුර සමඟ වැලළිය නොහැකි කඳුකර දමිළ වහල් සේවයේ ඛේදවාචකය

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts