‘கொவிட்19’ ஆல் முதல் மரணம்: சமூக ஊடகங்களில் பொய்யான பெயர் பரவியது ஏன்?!
முர்சித் முகம்மது
உண்மையில் கொரோனாவால் இறந்தது ஒரு இஸ்லாமியரும் அல்ல சாய்ந்த மருது என்ற இடத்தைச் சேர்ந்தவரும் அல்ல. ஒருவர் செய்த தவறு எங்களுக்குகிடையில் உரையாடல் நிகழும்போது அது கொரோனாவைவிட வேகமாக பரவிவிட்டிருந்தது. கடைசியில் நான் என் நண்பனுக்கு அனுப்பிய ஸ்க்ரீன்ஷொட்தான்….
உலகெங்கும் கண்ணுக்கு தெரியாத எதிரியுடனான யுத்தத்தில் மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாடும் இன்று நோய் தொற்றுக்குள்ளானோர் இறந்தோர் தொகை உயிர்பிழைத்தோர் தொகை என எண்ணிக்கையிட்டுக்கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் கொரோனாவினால் முதல் மரணம் முகம்மது ருபினாஸ் எனும் நபர் என்று பல செய்தித் தளங்களில் வெளிவந்தது. மக்களினதும் ஊடகங்களினதும் கவனம் குறித்த நபர் மீது குவிந்தது. மிககுறைந்த நிமிடங்களில் பெருமளவிலான மக்கள் அந்தச் செய்தியை சமூக ஊடகங்களில் பரப்பினர். குறித் அந்த நபர் உயிருடன் இருந்து தனக்கான அஞ்சலிக்குறிப்பை வாசித்துக்கொண்டிருந்தார்.
கட்டுமரனிற்காக அவரைத் தொடர்பு கொண்டோம்.
த கட்டுமரன்: உங்களைப்பற்றிய உண்மைக்குப் புறம்பான செய்தியை எப்படி அறிந்து கொண்டீர்கள்?
நான் சாய்ந்தமருதூரைச் சேர்ந்த முகம்மது ருபினாஸ்(31). சம்பவம் நடந்த தினம் இரவு 11 மணி இருக்கும். எனக்கு மிகவும் நெருங்கிய நண்பன் ஒருவன்தான் சொன்னான், ‘இலங்கையில கொரோனாவால் முதன் முதல் இறந்தவருக்கு உனது பெயர்தான்.’ என்று. நான்தான் அப்படி இருக்க வாய்ப்பில்லையே என்றேன். அந்த செய்திக்கான செய்திமூலம் எது என கேட்டேன்.
அப்போதுதான் நண்பன் அந்த மெசேஜை எனக்கு அனுப்பினான். அதைப் பார்த்ததுமே எனக்கு ஓரளவு விளங்கிவிட்டது. எனக்கும் எனது இன்னொரு நண்பன் ஒருவருக்கும் இடையில் நடந்த முகநூல் உரையாடலே அதற்கு காரணமாகியதை உய்த்து உணர முடிந்தது. அந்த உரையாடலை ஸ்க்ரீன்ஷொட் செய்து நண்பனுக்கு அனுப்பினேன். “இதை அப்படியே கொப்பி பண்ணியிருக்கு”. “அப்படின்னா, அது உன்னோட பெயர்தானா, அப்போ நீ உலகம் முழுக்க பிரபல்யம் ஆகிட்டிருக்க” என்று கிண்டலடித்தான். உண்மையில் கொரோனாவால் இறந்தது ஒரு இஸ்லாமியரும் அல்ல சாய்ந்த மருது என்ற இடத்தைச் சேர்ந்தவரும் அல்ல. ஒருவர் செய்த தவறு எங்களுக்குகிடையில் உரையாடல் நிகழும்போது அது கொரோனாவைவிட வேகமாக பரவிவிட்டிருந்தது. கடைசியில் நான் என் நண்பனுக்கு அனுப்பிய ஸ்க்ரீன்ஷொட்தான் ரிவர்ஸில் பகிரப்பட்டு, ஏற்கனவே பகிரப்பட்டது பொய்யான செய்தி என்பதை சொல்ல ஆரம்பித்தது.
த கட்டுமரன்: உங்களை பற்றிய போலிச் செய்தி (fake news) வெளியான அன்றைய நாள் அனுபவம்?
காலையில் 9 மணிக்கு எழும்பியதாக ஞாபகம். பேஸ்புக் இன்பொக்ஸில், அறிமுகமே இல்லாத ஒரு டாக்டரின் மெசேஜ் கிடக்கின்றது. ‘இந்த நம்பருக்கு கோல் பண்ணுங்கோ, உங்ககூட பேசனும்’ என்று. பேஸ்புக் போனால், என்னை இணைத்து இவரது பெயர்தான் பிழையாக பரப்பபட்டிருக்கின்றது என்ற முதலாவது செய்தியைப் படிக்கின்றேன். உடனடியாக என்ன நடந்திருக்கின்றது என்ற எனது பதிவை பேஸ்புக்கில் பதிவு செய்கின்றேன். இந்த நேரங்களில், எனது பெயர் பாவிக்கப்பட்டு என்ன, என்ன மாதிரியான செய்திகளெல்லாம் பரவியிருக்கின்றன என பார்க்கமுடிந்தது. எனக்கு அவையெல்லாம் ஏனோ தெரியவில்லை, கவலையளிக்கவில்லை. மாறாக நகைச்சுவையாகத்தான் தெரிந்தது. ஆனாலும் இது பாரதூரமானது. இந்த செய்தியைக் கேள்விப்படும் உறவுகளின் பதைபதைப்பு உயிரச்சம் நிறைந்தது. எனக்கு நண்பர்கள் அதிகம். நிறையக் கோல்கள் வந்தன. சிங்கள நண்பர்கள் கூட கோல் பண்ணியிருந்தார்கள். அனேகமான கோல்கள் என்னைக் கிண்டலடிக்க எடுக்கப்பட்டவைதான். ஏனெனில் அனேகருக்கு அது நான் இல்லை என்ற தெரிந்திருக்கிறது. ஆனாலும் அழைப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். உண்மையாகச் சொன்னால், அந்த நாள், காலை 10 மணியிலிருந்து, இரவு 11 மணிக்கு நான் தொலைபேசியை கையில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது.
த கட்டுமரன்: குறித்த போலிச் செய்தியை உங்களுடைய குடும்பத்தினர் எப்படி எதிர்கொண்டார்கள்?
குடும்பத்தில் எல்லோரிடமும் வாட்ஸ் அப் (whatsApp) உண்டு. நானாக சொல்ல முதலே அவர்கள் வந்து கேட்டார்கள். சொல்லப் போனால், என்னுடைய ஜனாசா தொழுகையை முதலாவதாக நான் பார்த்தது எனது மச்சானின் போனில்.
உம்மாவிடம் மட்டும் சொல்லவில்லை. புலம்பத் தொடங்கிவிடுவார், பேஸ்புக்கே வேண்டாம் என்று சொல்லிவிடுவார் என்ற பயம் இருந்தது.
அப்புறம், அடுத்த நாளாகும்போது அவரும் அரசல் புரசலாக, அயலவர்களிடமிருந்து கேள்விப்பட்டிருக்கின்றார் என்று தெரிந்தது. நேரடியாக அவர் பார்க்கவில்லை. ஒருவேளை, வீடியோவெல்லாம் பார்த்து, எழுதப்பட்டதெல்லாம் வாசித்திருந்தால் கற்பனையில் நினைத்தே பயந்திருப்பார் என்று நினைக்கின்றேன்.
த கட்டுமரன்: நண்பர்கள் அல்லாத பொது சமூகத்தின் அணுகுமுறை அல்லது செயலாற்றுகை எப்படி இருந்தது?
தனிப்பட இன்பொக்ஸில், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோபப்பட்டவர்களும் இருக்கின்றார்கள். அவர்களது கோபம் நியாயமானது. நடந்தது எப்படியும் முட்டாள்தனமான விடயமே. எனக்கு இது நகைச்சுவையாக இருந்தது. ஆனாலும், ஒருவர் தவறுவிட்டுவிட ஏனையோர் அப்படியே கொப்பி செய்வதும் பகிர்வதுமாக எந்த ஆராய்வும் இல்லாது செயலாற்றுகிறார்களே என்ற தார்மீக கோபம் பலருக்கு இருந்ததை அவதானிக்கமுடிந்தது. பகிர்ந்த பல பேர் தனிப்பட்ட ரீதியில் மன்னிப்பு கேட்டார்கள், பகிர்ந்ததற்காக வருந்தினார்கள். சிறிது நேரத்திற்குள் நிறையப்பேர் உண்மை நிலை எது என்பதை பதிவு செய்ய ஆரம்பித்தார்கள். நான் இதை நேர்மறையாக அணுகியதையும், நகைச்சுவையாக கையாண்டதையும் சிலர் ரசிக்க ஆரம்பித்திருந்தார்கள். பொதுவாக நோக்கினால், நம் சமூகம் நல்லது. அன்பானது. ஆனால், சில விடயங்களில் கவனயீனமாக இருக்கின்றது.
த கட்டுமரன்: ஊடகவியலாளர்களுக்கு மிகப்பெரிய சமூகப்பொறுப்புள்ளது. ஆனால் சமூக ஊடகங்களைப்பாவிக்கும் மக்கள் எப்படி இதைக் கையாள்கிறார்கள் என எண்ணுகிறீர்கள்?
சமூக வலைத்தளம் நம் எல்லொருக்கும் கருத்து தெரிவிப்பதற்கான வாய்ப்பைத் தந்திருக்கின்றது. யார் வேணும்னாலும் எது வேணும்னாலும் சொல்லலாம். இந்த சமூகவலைத் தளத்தை நான் ஒரு டீக்கடை பெஞ்ச் போலத்தான் பார்க்கின்றேன். என்ன வேணும்னாலும் பேசலாம்.
அதேபோல், நமக்கு ஒரு நோய் இருக்கின்றது. தகவலை யார் முதலில் சொல்வது என்பதுதான் அந்த நோய். நமக்கு ஒரு தகவல் வருமென்றால், அதை 40 பேருக்கு அனுப்பிவிட்டுத்தான் வாசிக்கவே தொடங்குவது. சிலநேரங்களில் வாசிக்காவிட்டாலும் பரவாயில்லை, முதலில் அனுப்பி விடுவோம் என்று அனுப்புவது. செய்தியை அறிவிப்பதில் ஒரு பெருமை, அவசரம். அதுவே, என்ன எது என்று ஆராயாமல் செய்திகள் பரப்பப்பட காரணமாகின்றது. உண்மையைச் சொன்னால், மரணித்த நபர் இன்னார்தான் என்று முதன்முதலாக எனது பெயரைப் பதிந்த நபர், ரொம்பப் பெருமையாகத்தான் உணர்ந்திருப்பார் அந்தத் தருணத்தை. தான் தான் முதலில் அதை பதிவிடுகிறேன் என்ற பெருமை அவருக்கு இருந்திருக்கும்.
எமக்கு செய்திகளை அறிவிக்க, அதற்கான தளங்கள் இருக்கின்றன. எங்களுடன் இருப்பவர்களுக்கும் அந்தத் தளங்களிலிருந்து செய்திகளைப் பெற்றுக் கொள்ள பழக்கலாம். மக்கள் தாம் நேரடியாக பெறாத செய்தியை தவறான இடத்தில் இருந்து பெற்று அதைபரவவிடுவதை தவிர்க்கவேண்டும்.
த கட்டுமரன்: உண்மையில் இந்த சம்பவத்தை உங்களால் எளிதில் கடந்து செல்ல முடிந்ததா?
கடந்து வந்திருக்கின்றேன் என்று நினைக்கின்றேன்.
ஆனால், அதன் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. நிறைய நட்பு அழைப்புக்கள் வருகின்றன. எல்லோரையும் இணைத்திருக்கின்றேன். என்னை நிறையப் பேர் கவனிக்கின்றார்கள். கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்று தோன்றுகின்றது.
நான் கடந்துவந்தாலும், இன்னும் சில இடங்களில் இது இன்னும் பகிரப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. நேற்று கூட ஒருத்தர் ஒரு பதிவை இட்டிருந்தார்.
இதைத் தவிர, இப்போதும், சொர்க்கத்துல wifi இருக்கா, உங்களுக்கு கால் இருக்கா, ஹருல் ஈன்கள சந்திச்சீங்களா, கேள்வி கணக்கு எப்படி இருந்திச்சு என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றேன்.
த கட்டுமரன்: உங்கள் அனுபவத்தில் சாதாரண மக்கள் தமது சமூக ஊடகப்பாவனையை எப்படி கையாளலாம் என எண்ணுகிறீர்கள்?
எனது அனுபவத்தில் இதுவும் கொரோனா போலத்தான். ஒருத்தர்தான் ஆரம்பப் புள்ளி. ஆனால், விளைவுகள் நிறைய. எனது சம்பவத்தில் நடந்தது போலியான செய்தியல்ல. அது ஒரு கொப்பி செய்தலின் தவறு. நீங்கள் ஒரு பேஸ்புக் கமெண்டை கொப்பி செய்தால் அது பதிலளிக்கப்பட்ட நபரின் பெயருடந்தான் கொப்பி ஆகிறது. ஆந்த அடிப்படைகூட தெரியாமல் அல்லது கவனிக்காமல் பதிவிடுவது அபத்தம். சாதாரணமாக கொரோனாவுக்கான நிரூபிக்கப்பட்ட மருந்தை நித்தியானந்தா அறிவித்திருக்கின்றார் என்று எழுதினால் கூட அதை பகிர்வதற்கு பலரும் தயாராகதான் உள்ளனர். பொதுவான அறிகை பற்றி மக்கள் கவனமெடுத்தல்வேண்டும். நமக்கு அறிவில்லாத ஒன்றைப் பேசாதீர்கள், பகிராதீர்கள். அது எங்காவது ஒருத்தரைப் பாதிக்கும். அந்த தவற்றை செய்யாதீர்கள்.
This article was originally published on the catamaran.com