கொவிட்-19 : விரைவாக அனைவருக்கும் விழிப்புணர்வு! ஓவியமே சிறந்த வழி!
அஹ்சன் ஆப்தார்
இந்த வைரசின் வருகையை தடுப்பதற்காக எலும்புக்கூடு ஒன்று கையேந்தி பிரார்திக்கின்றது. இந்த இடத்தில் ஏன் எலும்புக்கூடு வரைந்தேன் என்றால்…..
இன்றைய உலகின் முலை முடுக்குகளில் எல்லாம் கொரோனா எனும் கொள்ளை நோய் தொடர்பான அச்சம்தான் பேசுபொருளாக உள்ளது. உலகளவில் இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதாயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா எனும் இராட்சதன் ஆசியாவின் மிகச்சிறிய புள்ளியான இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. தற்போது இலங்கையில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 175ற்கும் மேற்பட்டவர்கள்(04.04.2020) கொவிட்-19 தொற்று நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
இன்று நாடு முழுவதும் இன மத பேதம் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிக்கும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு துறையில் உள்ளவர்களும் குறித்த கிருமிக்கு எதிராக போராடத் தேவையான தமது பங்கினை சரிவர செய்து வருகின்றார்கள். இன்னும் பலர் தமது தேவைகளை குறைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே நோய் பரவுவதை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
மொஹமட் முபீஸ்
அந்தவகையில் கந்தளாய் சிறாஜ் நகரை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் முபீஸ் தனது சித்திரம் வரையும் திறமையின் மூலம் கொவிட்-19 தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். இவர் நிவ்ஸ் பெர்ஸ்ட் நடத்திய ஓவியப்போட்டி ஒன்றில் கொவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு ஓவியம் ஒன்றை சமர்பித்ததைத் தொடர்ந்து அந்த ஓவியம் சிறந்த முதல் பத்து ஓவியங்களுக்குள் இடம்பிடித்துள்ளது. முழு நேர ஓவியராக இருக்கும் இவர் பல்வேறு இனத்தவர்களுடன் இணைந்து நாட்டை அழகுபடுத்தும் சுவரோவியத் திட்டத்திலும் பங்காற்றி வருகின்றார். தொடர்ந்தும் கொவிட்-19 தொடர்பான ஓவியங்களை வரைந்து வரும் அவர் த கட்டுமரனுக்கு வழங்கிய செவ்வி.
தி கட்டுமரன் – கொவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்கள் மூலம் எப்படி செய்துவருகிறீர்கள்?
சமூகப்பிரச்சினைகள் ஏற்படும்போது அவை தொடர்பாக ஓவியங்கள் மூலம் மக்களுடன் பேசுவது எனக்கும் ரொம்ப பிடிக்கும். திரைப்படம் கட்டுரை என்பவற்றை போல ஒரு விடயத்தை தெளிவுபடுத்த ஓவியத்துக்கு அதிக நேரம் எடுக்காது. பெரியதொரு விடயத்தை ஓவியத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஓவியத்தின் மொழியை புரிந்துகொள்ள யாராலும் முடியும். பாமரர்கள் சிறுவர்கள் கூட ஓவியத்தைப் பார்த்து கொரோனா ஒரு கொடிய நோய் இதன் பாதிப்புகள் இவ்வாறு இருக்கிறது ,எனவே இதிலிருந்து இவ்வாறான முறையில் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்வார்கள். இன்று இந்த பெரு ஆபத்தை மக்களுக்கு உடன் தெரிவிக்க வேண்டும். அனைவரும் உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு ஓவியம்தான் துணைகொடுக்கும். இவ்வாறான விடயங்களால் கொவிட்-19 தொடர்பான ஓவியங்கள் கட்டாயம் வரையப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
என்னுடைய ஓவியத்தில் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை காட்டுகின்றேன். உதாரணமாக கை கழுவுதல் சுயதனிமையில் இருத்தல், முப்படைக்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற விடயங்களை ஓவியங்கள் மூலம் சித்தரித்திருக்கின்றேன். மேலும் கொரோனவால் ஏற்பட்ட பாதிப்புக்களை சித்தரித்திருக்கிறேன். கொரோனாவுடன் போராடும் வைத்தியர்கள் தாதிமார்கள் முப்படையினர் உட்பட சுயதனிமையில் இருந்து தம்மையும் சமூகத்தையும் பாதுகாக்கும் பொதுமக்களையும் இணைத்துள்ளேன். பொதுமக்கள் என்று வரும்போது நான்கு இனைத்தை சேர்ந்த மக்களையும் இதில் உள்வாங்குகின்றேன்.
தி கட்டுமரன் – அண்மையில் நீங்கள் வரைந்து அங்கீகாரம் கிடைத்த அந்த கொவிட்-19 தொடர்பான ஓவியத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.?
இந்த ஓவியத்தை நன்றாக பார்க்கும்போது அதன் பின்னணியில் பெரியதொரு கதை இருக்கின்றது. உலக நாடுகளையே அச்சுறுத்தி மனித உயிர்களைக் காவு கொள்ளும் ஒரு கொடிய நோயாக கொவிட் 19 கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனை வெளிப்படுத்தும் வகையில் ‘மக்கள் சக்தி எழுக தாய்நாடு” எனும் தொனிப் பொருளின் கீழ் எனது ஓவியத்தினை இரண்டு பகுதிகளை உட்புகுத்தி ஒரு பேசும் சித்திரமாக வடிவமைப்பு செய்திருக்கிறேன்.
அந்த வகையில் இச் சித்திரத்தின் மூலம் நான் சொல்ல முனையும் கருத்தானது. இந்த வைரசின் வருகையை தடுப்பதற்காக எலும்புக்கூடு ஒன்று கையேந்தி பிரார்திக்கின்றது. இந்த இடத்தில் ஏன் எலும்புக்கூடு வரைந்தேன் என்றால் இன, மத, நிற வேறுபாடு களைந்து அதற்கு அப்பால் மனிதம் என்ற கருத்தியலை இந்த எலும்புக்கூடானது வெளிப்படுத்தி நிற்கின்றது என்பதற்காகும். அதுமட்டுமின்றி இந்த வைரசின் கொடிய தன்மை எப்பேர்ப்பட்டது என்றால் புன்னகை கூட மாறாத குழந்தையினையும் தனது மயானப் பசிக்கு அது இலக்கு வைத்து விட்டது என்பதும் ஓவியத்தில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.
இதன் இரண்டாவது பகுதியாக ஓவியத்தில் காட்சியாக்கப்படுவது மக்கள் சக்தியாகும் அதாவது பல அச்சுறுத்தல்களையும் மயான சவாலினையும் விடுக்கும் இந்த வைரஸை கட்டுப்படுத்தி அதை தடுத்து வளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்முறையாகும். இதனை வெளிக்காட்டவே படை வீரர்களின் உன்னத சேவையை இராப்பகல் சேவையும் வைத்தியர்கள் மற்றும் தாதிகளின் உயரிய பொறுப்புடைமை, சேவை நலன், தொண்டு போன்றனவும் இவ்வோவியத்தில் காட்சியாக்கப் பட்டிருக்கிறது.
அதனை அடுத்து எழுக தாய்நாடு என்பதினை வலியுறுத்தவே இன, மத வேறுபாடு களைந்து படை வீரர்களுடன் ஒத்துழைத்து சிறந்த பிரஜைகளாய் நாளைய எம் தேசத்தை ஒன்றிணைந்த மக்கள் சக்தியுடன் வளம் நிறைந்ததாகவும், வசதி நிறைந்ததாகவும், ஆரோக்கியம் மிக்கதாவும் கட்டியெழுப்ப சுதந்திரமான முறையில் ஒன்றுபடுவோம் என்பதினையையே எனது இந்த ஓவியம் வெளிப்படுத்தி நிற்கின்றது.
தி கட்டுமரன் – கொவிட்-19 தொடர்பான ஓவியங்களில் நல்லிணக்கம் எந்தளவில் சாத்தியப்படுகின்றது?
கொவிட்-19 என்பது இன்று எல்லா இனத்தவருக்கும் பொதுவான ஒரு எதிரியாகும். எனவே எல்லோரும் இன மத பேதம் இல்லாமல் சம அளவில் இந்தப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இன்று நாட்டை பாதுகாக்கும் வைத்தியர்களைப் பற்றியும் தாதிமார்களை பற்றியும் நாம் பேசுகின்றோம். உண்மையில் அவர்களை நாங்கள் பொதுவாக வைத்தியர் என்றோ தாதி என்றோதான் சொல்கின்றோம். அவர்கள் பின்பற்றும் மதங்களைப் பற்றி யாரும் துளியளவும் சிந்திக்கவில்லை. அவர்கள் மத ரீதியாக வேறுபட்டாலும் வைத்திய அதிகாரிகள் என்பதன் அடிப்படையில் ஒன்றுபடுகின்றார்கள்.
அதேபோலதான் இந்த காலகட்டத்தில் சேவையை வழங்குகின்ற முப்படை வீரர்கள் ஊடகவியலாளர்கள் தோட்டத்தொழிலாளர்கள் மின்சார இணைப்பாளர்கள் மற்றும் வீட்டிலிருந்தே அரசாங்க வேலைகளை செய்யும் அரச உத்தியோகத்தர்கள் என எமக்கு சேவையை வழங்குபவர்கள் எந்த மதத்தை சேரந்தவர் என்பதை பார்ப்பது கிடையாது. இந்த விடயங்களை சித்தரிக்கும்போது நல்லிணக்கம் என்ற ஒன்று விரும்பியோ விரும்பாமலோ இணைந்து விடுகின்றது.
தி கட்டுமரன் – உங்களுடைய இந்தப்பயணத்தில் கலாசார ரீதியாக நீங்கள் எதிர்கொள்ளும் நல்ல இனிப்பான மற்றும் கசப்பான விடயங்கள் பற்றி?
நான் அதிகமாக உருவப்படங்களை வரைகின்றேன். நான் பின்பற்றும் சமயத்தில் உருவப்படங்கள் வரைவது தடை (ஹராம்) என்பதால் ஒரு சிலர் வரைய வேண்டாம் என சொல்லியிருக்கின்றார்கள். இன்னும் இன்னொரு தொழில் கிடைக்கும்வரை இதை செய்வது பாவமான ஒன்றல்ல என்று தெரிவித்திருக்கிறார்கள். இப்படி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் என்னால் முடிந்த பங்கை நான் செய்கின்றேன். நான் உருவம் வரைவதை தொழில் ரீதியாக முன்னெடுத்தாலும் முற்றுமுழுதான நான் பணத்தை நோக்கமாக கொள்ளவில்லை. நிறைய பேருக்கு இலவசமாக வரைந்து கொடுத்திருக்கிறேன். தமிழ் சிங்கள இளைஞர்கள் பலர் இணைய வழியுடாக தொடர்பு கொண்டு என்னிடம் ஓவியத்தை கேட்டு வாங்குகிறார்கள். நான் இதைச்செய்யும் எனக்கு சந்தோம் இருப்பதைப்போல ஓவியத்தைப் பெற்றுக்கொள்பவர்களும் திருப்தியடைகின்றார்கள். இதில் தவறு என்று நான் எண்ணவில்லை.
வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் இணையவழியில் அவரது உருவத்தை வரைந்து கேட்டார். நானும் வரைந்து அனுப்பினேன். சாதாரண கட்டணம் 1500 ரூபாய்தான். ஆனால் அவர் 5000 ரூபாய் பணம் அனுப்பியிருந்தார். இதுபோல புதிதாக திருமணம் முடித்தவர்கள், இளம் காதல் ஜோடிகள் என எல்லோரும் அவர்களது படத்தை வரைந்து கேட்டு அதில் திருப்தி அடைந்தால் பாராட்டையும் பணத்தையும் தருவார்கள். அதிகமாக சிங்கள, தமிழ் நன்பர்கள் எனக்கு துணையாக நிற்கிறார்கள். இப்போது கொவிட்-19 தொடர்பான ஓவியங்களை வரையும்போதும் இப்படித்தான். கூட்டாக சேர்ந்து நாட்டை அழகுபடுத்தும் சுவரோவியங்களை வரையும்போது அதிகமான மாற்றுமத நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களும் ஓவியங்கள் மூலம் பணமீட்ட ஏதோ ஒருவகையில் உதவி வருகின்றார்கள்.
அந்த நண்பர்களுடன் இணைந்து பல ஓவியப்போட்டிகளில் பங்குபற்றினேன். அந்தத் தருணங்களில் அவர்களோடு கழிந்த பொழுதுகள் மிகவும் இனிமையானது. அது மாத்திரமில்லாமல் அவர்களுடைய கலாசாரத்துக்கு என்று இருக்கின்ற ஓவியக்கலைகளையும் அவர்களிடம் இருந்து கற்றேன். ஒருமுறை அம்பலாங்கொடை முகமூடி ஒன்று மாஜாஜால கலைஞரான எனது சாச்சா (சித்தப்பா) ஒருவருக்கு தேவைப்பட்டது. அதன்போது நான் சிங்கள நண்பர்களிம் இருந்து கற்ற சிங்கள மரபு ஓவியக் கலைகளை வைத்தே அந்த முகமூடியை எனது சாச்சாவுக்கு செய்து கொடுத்தேன். கொவிட்-19 பற்றிய ஓவியங்களில் மனித உருவங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகும். எனவே அதை செய்துதான் ஆக வேண்டும்.
The article was originally published on the catamaran.com.
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.