கொவிட்-19 தடுப்பின்போது மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது
ஜூட் ஆர். முத்துக்குடா
கொவிட்-19 தடுப்பின்போது இங்கு பொதுவான எதிரியாக கொரோனா வைரஸ் காணப்படுகின்றதே தவிர, நோயாளி அல்ல. எனினும், இலங்கை சமூகம் இதனை புரிந்துகொள்ள தவறிவிட்டது. இதன் விளைவாக பிரஜைகளின் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. நோயாளிகள் அடையாளம் காணப்படும்போது அவர்கள் சமூகத்திற்கு வெளிக்காட்டப்படுகின்றனர். அத்தோடு, நோயாளிகள் மீது வேற்றுமை காட்டப்படுகின்றது. எனவே, தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு முன்வருவதில் தயக்கம் காட்டுகின்றனர். இதன் விளைவாக சமூகத்தில் வைரஸ் பரவுகிறது.
கொவிட்-19 நோயாளிகளை சமூகம் குற்றவாளிகளைப் போல கண்டிக்கின்றது. கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளைப் போன்று, தனிமைப்படுத்தலுக்காக நோயாளிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தொற்றுநோயை தடுக்க சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறைகள் அவசியமான நடவடிக்கைகளை எடுக்கின்றன. எனினும், தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகளின் போது மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம்.
மரணத்தின் பின்னர் உடல்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை எவ்வாறு? – நவம்பர் 15, 2020 அன்று வெளியான அருண சிங்கள வார இதழின் செய்தி.
கொவிட்-19 நோயாளிகளையும் அவர்களது குடும்பங்களையும் ஓரங்கட்டும் வகையில் மேற்கொள்ளப்படும் தற்போதைய செயற்பாடானது இலங்கை அரசியலமைப்பின் 12 (1) மற்றும் 12 (2) பிரிவுகளால் நாட்டு மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சமத்துவத்திற்கு எதிரான செயற்பாடாகும். மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் மற்றும் சட்டத்தின் சம பாதுகாப்புக்கு தகுதியுடையவர்கள் என்று இந்த பிரிவுகள் அனைத்தும் உத்தரவாதம் அளிக்கின்றன. “எந்தவொரு குடிமகனும் இனம், மதம், மொழி, ஜாதி, பால்நிலை, அரசியல் சிந்தனை, பிறந்த இடம் அல்லது அத்தகைய காரணங்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக்கூடாது” என்று அரசியலமைப்பு விளக்குகிறது.
எந்தவொரு நபரும் அவரது விருப்பத்தின் பேரில் கொவிட்-19ஐ தொற்றிக்கொள்ளவில்லை. வேண்டுமென்றே நோயை தொற்றிக்கொள்ளும் எண்ணம் யாருக்கும் இல்லை. அவ்வாறிருக்கையில், தற்செயலாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் ஒருவர் குற்றவாளியா? குற்றவியல் சட்டத்தின் பிரகாரம், குற்றத்திற்கான நோக்கம் முக்கியமானது. கொரோனா வைரஸால் பீடிக்கப்படுவோருக்கு, அதனை தொற்றிக்கொள்ளும் நோக்கம் இருக்கவில்லை. அவ்வாறான நோக்கம் இல்லாத சந்தர்ப்பத்தில், அவர்களை குற்றவாளிகளாக கருத முடியாது. ஆனால் சில ஊடகங்களும் சமூக ஊடக பயனர்களும், நோயை பரப்பும் குற்றவாளிகளாக நோயாளர்களை சித்தரிக்கும் வகையில் சம்பவங்களை அறிக்கையிடுகின்றனர். சிலரின் பெயர்களைக்கூட குறிப்பிட்டு, அவர்கள் வைரஸை பரப்பியதாக குறிப்பிடுகின்றனர். எனினும், வேறொரு நபரிடமிருந்து இவ்வாறு தொற்றுக்குள்ளாகுவதோடு, நோய்த்தொற்று பற்றி அறியாத நிலையிலேயே ஏனையோருக்கு பரப்புகின்றார். அத்தகைய பின்னணியில், கொவிட்-19 நோயாளிகளை குற்றவாளியாக்குவது பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாகும். சமூகத்தால் ஏற்படுத்தப்படும் களங்கத்தால், நோயாளர்களை மீண்டும் பரிசோதனை செய்துகொள்ள கட்டாயப்படுத்துகின்றது. நோய் காரணமாக பாகுபாடு காட்டப்படுவோம் என அவர்கள் அஞ்சுகின்றனர். இந்த சூழ்நிலைகள், நோய் பரவுவதையும் அதனால் ஏற்படும் மரணங்களையும் அதிகரிக்கின்றன. நோயாளர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதால் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.
ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி ஹொரணையை சூழ்ந்துகொண்டது – நவம்பர் 15, 2020 அருண சிங்கள வார இதழின் செய்தி
இலங்கை சட்டத்தின் பிரகாரம், பொதுநலனுடன் தொடர்புடைய விடயமாக இருந்தால் மாத்திரமே ஒரு நபரின் புகைப்படத்தை வெளியிட முடியும். தனியுரிமையை பாதுகாக்கும் சட்டங்கள் இலங்கையில் இல்லை. எனினும், சுகாதார வழிகாட்டுதல்களின்படி, ஒரு நோயாளியின் அடையாளத்தை அம்பலப்படுத்துவது ஒழுக்க நெறிமுறையற்றது. இவ்வாறான பின்னணியில், ஒரு கொவிட்-19 நோயாளியின் அடையாள விபரங்களையும் புகைப்படங்களையும் பொது நலனை மறந்து வெளியிடுவது நியாயமானதா? கொவிட்-19 நோயாளர்களின் முகவரிகள், பணியிடங்கள் மற்றும் குடியிருப்புகளின் புகைப்படங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை அறிக்கையிடுவதில் எவ்வாறான பொதுநலன் காணப்படுகின்றதென நாம் கேள்வி எழுப்பலாம். பிரண்டிக்ஸ் கொத்தணியின் முதலாவது கொவிட்-19 நோயாளியின் தனிப்பட்ட தகவல்களை சமூக ஊடகங்கள் அம்பலப்படுத்தியதால், அப்பெண்ணின் மகளான மாணவியை அது சங்கடப்படுத்தியது. அந்த பாதிப்பை ஒரு சாதாரண மன்னிப்பை கூறுவதன் மூலம் நீக்கிவிட முடியாது. சட்ட வரையறைகள் காணப்படாவிட்டாலும், இதுபோன்ற சம்பவங்களை அறிக்கையிடும்போது ஊடகங்கள் சுய ஒழுக்க நெறிமுறையுடன் செயற்பட வேண்டும். பாதிப்புற்றோருக்கு சட்ட உதவிகள் அவசியம். கொவிட்-19 நோயாளிகளின் தனியுரிமையை வெளிப்படுத்தியமை மற்றும் அதனுடன் ஏற்படுத்தப்பட்ட களங்கம் என்பன தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு காரணிகளாக அமைந்துள்ளதா என்ற சந்தேகம் காணப்படுகின்றது. வெலிசறை கடற்படை முகாமின் கடற்படை அதிகாரிகள், மினுவாங்கொட பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பேலியகொடையிலுள்ள மீன் சந்தையுடன் தொடர்புடைய நபர்கள் கடுமையான முறையில் பாகுபாடு காட்டப்பட்டு ஓரங்கட்டப்பட்டனர். தமது அடையாளத்தை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்துவார்கள் என்று மக்கள் பயந்து அறிகுறிகளை மறைக்க முயற்சித்தனர். சமூகத்தில் ஏற்படும் களங்கம் மற்றும் அவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு பயந்தனர்.
கொழும்பு தோட்டப்பகுதிகளில் மீற்றர் இடைவெளி தூரம் சாத்தியமா? – நவம்பர் 15, 2020 அருண சிங்கள வார இதழின் செய்தி
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை புறக்கணித்து, நோயின் சிக்கல்கள் குறித்து பயங்கரமான கதைகளை பரப்புவதன் மூலம் சில இலத்திரனியல் ஊடகங்கள் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. சமூக ஊடகங்களில் நம்பமுடியாத அளவிற்கு இந்த போக்கு காணப்படுகின்றது. இச்செயல்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. இத்தகைய ஒழுக்கமற்ற நடைமுறைகளின் விளைவுகளையே இன்று நாம் அனுபவித்து வருகின்றோம்.
நோய் தொடர்பான ஆதாரமற்ற பயம் சில நேரங்களில் பேரழிவுகளுக்கு வழிவகுக்கின்றது. களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையின் ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் சாரதியொருவர் தற்கொலை செய்துகொண்டார். பயணி ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தானும் கொவிட்-19 தொற்றில் பாதிக்கப்படுவோம் என்ற பயத்தில் குறித்த சாரதி தற்கொலை செய்துகொண்டார். மருத்துவ தகவல்களை மக்களிடையே பரப்புவதன் மூலம் மக்களுக்கு ஊடகங்கள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது. அதற்கு மாறாக, நோயைத் தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி மக்களுக்கு ஊடகங்கள் அறிவுறுத்த வேண்டும்.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் சில குறைபாடுகள் மற்றும் கொவிட்-19ஐ தடுப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் என்பன பொதுமக்களை பாதிக்கின்றன. ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் வயது குறைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களை கவனித்துக்கொள்ளும் செயற்பாட்டில் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு சம்பவத்தில், தனது பராமரிப்பாளரான தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் புறக்கணிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டார். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு பராமரிப்பு சேவைகளை வழங்கும் நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்போது, உதவியற்றவர்களாக மாறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு பராமரிப்பு சேவை அவசியம். ஒரு சமூகமாக, தொற்றுநோய்களின் போதுகூட மனித உரிமைகள், தனியுரிமை மற்றும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.