கொரோனா அழுத்தங்கள்! “குடிக்க பணம் இருக்கு, வீட்டு செலவுக்கு ஏன் பணம் இல்லை?”
விவேக் (மு.விவேகானந்தன்)
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையில் வீடுகளில் இடம்பெறும் குடும்ப முரண்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட 150 இற்கும் மேற்பட்டவர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
இது இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் பெரும் பிரச்சினையாகவும் உள்ளது. பொதுவாகவே வீட்டு வன்முறைகளி;ல் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. சாதாரணமாக மூன்றில் ஒருவர் தமக்கு நெருங்கியவரால் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறார் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டது. இந்த கொரோனா தொற்றின் பின்னர் அது அபரிதமாக கூடியுள்ளதாக கூறப்படுகிறது. பொலீசாருக்கும் சுகாதார துறைக்கும் கிடைத்த தகவல்களை வைத்து பார்க்கும்போது இந்த அதிகரிப்பை அறிய முடிந்தததாக கூறப்படுகிறது.
இலங்கை தற்போது கொரோனா தொற்றின் மூன்றாம் அலைக்குள் சிக்கித் தவிக்கின்றது. அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு பயணத்தடை, வீட்டில் இருத்தல், போன்ற கட்டுப்பாடுகளுக்கு மக்கள் முகம்கொடுத்தே ஆக வேண்டும். எனினும் நீண்டதொரு காலகட்டத்திற்கு இந்த கட்டுப்பாடுகள் தொடருமானால் குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றக்கூடும். கொரோனாவின் பக்கவிளைவாக இந்த பாதிப்புகள் அமையும்.
வீட்டில் நோயாளர்கள் இருக்கலாம். குழந்தைகளை முழுநேரம் வீட்டில் வைத்து கவனித்தல், பொருளாதார நிலைமைகள் ஏற்ற இறக்கம், முற்றிலும் ஒரு புதிய சூழலை எதிர்கொள்ளல், பரீட்சயமற்ற விடயங்களுக்கு முகம்கொடுத்து மீளல்,தொற்றுநோய் என்பன மனநல சேவைகளுக்கான தேவையை அதிகரித்து வருகிறது. இறப்பு, தனிமைப்படுத்தல், வருமான இழப்பு மற்றும் பயம் ஆகியவை மனநல நிலைமைகளைத் தூண்டுகின்றன அல்லது ஏற்கனவே உள்ளவற்றை அதிகரிக்கின்றன. பலர் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு, தூக்கமின்மை மற்றும் பதட்டம் ஆகியவற்றை எதிர்கொண்டவர்களாக இருக்கலாம்.
மேலுள்ள செய்தியில் குடும்ப வன்முறைகள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 150 பேரில் 112 பேர் ஆண்கள் என்பது ஒரு கவனத்தை ஈர்க்கும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது. அதில் 42 பேர் பெண்கள். குடும்பத் தகராறு காரணமாக ஆண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்திருந்தன. இவ்வாறு சில சந்தர்ப்பங்களில் பெண்களைவிட பாதிப்புக்குள்ளாகின்றவர்கள் ஆண்களாகவும் உள்ளனர்.
இதற்கு ‘தன் மனைவியுடன் சண்டையிடும் கணவன் அவளைத்தாக்க முற்படும்போது வளர்ந்த பிள்ளைகள், தமது அம்மாவை காற்பாற்ற அப்பாவை தாக்குகின்றனர். என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.’ எவ்வாறக இருந்தாலும் குடும்பத்தினுள் பிணக்கு அதிகரித்து செல்வது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
கொரோனா நிலைமை, பொருளாதார பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நாளாந்தம் உழைத்து வாழ்பவர்கள், குடிக்கு அடிமையானோர், தமது நாளாந்த செயற்பாடுகள் குழப்பமுறும்போது அமைதி இழக்கின்றனர். அதனூடக வீட்டில் ஏற்படும் சிறிய வாக்குவாதம் பெரும் சண்டையாக மாறுகிறது.
கிளிநொச்சியில் நீண்ட காலமாக சுயதொழிலில் ஈடுபட்டு வந்த ஒருவர் இந்த கொரோனா காலத்தில் தொழில் பாதிப்பிற்கு உள்ளகியிருந்தார். குறைந்தளவான வருமானத்தில் கிடைக்கின்ற பணத்தை அவரது மகன் வீண்செலவு செய்த காரணத்தினால் தந்தை மகன் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. இதில் மகன் தந்தையை கடுமையாக தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார். குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளால் பெண்களும் தமது குழுந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் பல பதிவாகியுள்ளன.
முன்னைய காலகட்டங்களில் சில பிறழ்வான நடவடிக்கைகள் காரணமாகவும் கணவன், மனைவிக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. ஆனால், இந்த கொரோனா பரவல் காலத்தில் உள நெருக்கீடு பிரதான பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. உள நெருக்கீட்டுக்கு பொருளாதாரம் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதனால் அதிகமான முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அவை வன்முறையாகவும் மாறுகின்றன. இதனால் ஆண்கள் பெருமளவு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கலாம்.
அத்துடன் இன்றுள்ள சூழலில் “குடிப்பதற்கு பணம் இருக்கின்றது. வீட்டுச் செலவிற்கு ஏன் பணம் தரமுடியாது?” என்று வீட்டிலுள்ள பெண்கள் தங்கள் கணவன்மாரை கேள்வி கேட்கிறார்கள். தொழில் இன்மை, நினைத்தவுடன் வெளியில் செல்ல முடியாமை என்பன காரணமாக தாங்கள் மன அழுத்தத்தில் உள்ளதாக ஆண்கள் உணர்கின்றனர். அதனை சரிசெய்ய அவர்கள் போதையை நாடுவதாக சில ஆண்கள் கூறுகின்றனர். இவை ஆராயப்பட வேண்டிய விடயங்களே.
கொரோனா கட்டுப்பாட்டு காலத்தில் தற்போது நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், குறிப்பாக வன்னிப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் கசிப்பு என்றழைக்கப்படும் மதுபானம் பரவலாக, இரகசியமாக விற்பனையாகின்றது. அதனையும் விட பல பிரதேசங்களில் கஞ்சா போதைப்பொருள் தாராளமாக விற்பனையாகின்றது. இவற்றை உரிய தரப்பினருக்கு பொதுமக்கள் தெரியப்படுத்தினால் யார் தெரியப்படுத்தியது என்ற தகவல் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு கிடைத்து விடுகின்றது. குற்றச்செயலை தடுப்பதற்காக தகவல் கொடுப்பவர் போதைப்பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்களால் குறிவைக்கப்படுகின்றனர். இதனால் அச்சம் காரணமாக இந்த சட்டவிரோத செயற்பாடுகளை பொதுமக்கள் கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றனர்.
வறுமை, மதுப்பழக்கம், கல்வியறிவின்மை என அன்றாடம் உழைத்து உண்ணும் பலர் வாழும் பின்தங்கிய பிரதேசங்களில் கொவிட்19 குடும்பங்களில் தனிமனிதர்களில் பல இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது என்று மட்டும் எண்ணுகிறோம். ஆனால் கொரோனாவினால் ஏற்பட்ட வாழ்;க்கை மாற்றதத்தினால் அமெரிக்காவிலும் வீட்டுவன்முறைகள் அதிகரித்திருந்ததை மதிப்பீட்டுஆய்வுகள் தெரிவித்துள்ளன.
(https://cdn.ymaws.com/counciloncj.org/resource/resmgr/covid_commission/Domestic_Violence_During_COV.pdf)
இதற்கு தொழில் இழப்பு, வருமான பாதிப்பு, நண்பர்கள் உறவினர்களை சந்திக்கமுடியாமை போன்றவற்றால் ஏற்பட்ட மன அழுத்தம், போதைப் பழக்கம் என்பவற்றையே காரணங்களாகவும் காட்டியுள்ளனர். இங்கே முக்கியமாக இந்த வாழ்க்கை மாற்றம் ஏற்படுத்திய மனஅழுத்தம் பற்றி அதிக கவனம் எடுக்கவேண்டியுள்ளது.
அச்சம், பதகளிப்பு, சோர்வு, கவலை என்பனவற்றை இந்த சூழல் ஏற்படுத்தியுள்ளது. இவை பொதுவான உளநிலைகளாக இருக்கின்றன…. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீடுகளில் முடங்கிப்போய் இருக்கின்ற பொழுது அவர்களது வழமை குழம்பிப்போய் ஆரம்பத்தில் இருந்த தற்காலிக மனமகிழ்வு குறைந்து பழைய மற்றும் புதிய பிரச்சினைகள் மேலெழப்பார்க்கின்றன. பின்னர் அவை ஆட்களுக்கிடையேயான உறவுப் பிரச்சினைகளாகவும், குடும்ப வன்முறைகளாகவும் வெளிப்படுகின்றன. என தனது ‘கொவிட் தொற்றுநோய் பரவலினால் ஏற்பட்ட வாழ்க்கை மாற்றம்” என்ற கட்டுரையில் உள மருத்துவ நிபுணர் டாக்டர் சிவயோகநாதன் குறிப்பிட்டுள்ளார். (http://slcpsych.lk/wp-content/uploads/2020/04/Ahanokku-1-10-Uthayan.pdf)
கொரோனா காலத்தின் பக்கவிளைவாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுடன் இவ்வாறான பிரச்சினைகளையும் ஆராய்ந்து அதற்கு பரிகாரம் காண்பதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. வேறு பல நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் தொழில்துறையினருக்கு மானியங்கள் வழங்கும் நடைமுறைகள் உள்ளன. இலங்கையில் அவ்வாறான நடைமுறை இல்லை. வறியவர்களுக்கான ரூபா 5000 கொடுப்பனவுக்காக 30பில்லியன் ஒதுக்கியுள்ளதாக அரசு கூறியுள்ளது. (https://www.virakesari.lk/article/106844)
சமூர்த்தி பயன் பெறும் குடும்பங்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், முதியோருக்கான கொடுப்பனவு பெறும் குடும்பங்கள், அங்கவீனமாவர்களுக்கான கொடுப்பனவு பெறும் குடும்பங்கள், சிறுநீரக நோய்க்காக கொடுப்பனவு பெறும் குடும்பங்கள் உள்ளிட்ட ஏழு பிரிவினருக்கே இந்தக்கொடுப்பனவு வழங்கப்படுகிறது. குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்து இவை போதுமானதாக இல்லை எனவும் மக்கள் அங்கலாய்கிறார்கள்.
கொரோனா கலப்பகுதி என்பது குறித்த காலப்பகுதிக்குள் முடிவடையும் ஒரு விடயமும் அல்ல. வருடக்கணக்காக தொடர்கிறது. அல்லது தொடரப்போகிறது. இந்த மாற்றமுற்ற வாழ்க்கையை எவ்வாறு கையாள்வது என்பதில் மக்களுக்கு வழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும்.
இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். கொரோனா காலகட்ட கல்வி நடைமுறைகளும் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியிலும் மனஅழுத்தங்களை தோற்றுவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் தற்போது, பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையவழி (ஒன்லைன்) கல்வி முறை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் முறையான நெறிப்படுத்தல் இல்லாத காரணத்தினால் மாணவர்களும், ஆசரியர்களும் மன அழுத்துங்களுக்கு உள்ளாகி வருவதாகவும், இது தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓய்வு நேரம் வழங்காமல் நாள் முழுதும் வகுப்புக்களை நடத்துவது இதன் பிரதான பிரச்சினையாக உள்ளது. சில வேளைகளில் காலை முதல் நள்ளிரவு வரை வகுப்புகளை நடத்துவதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் இணையவழி (ஒன்லைன்) மூலமான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது பாடசாலை சீருடைகளை அணிய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாகவும், ஆசிரியைகளின் உடைகள் தொடர்பாகவும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் இந்த முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்விக்கான நடைமுறைகளை ஒழுங்கு படுத்தப்படுவது அத்தியாவசியமானது. ஆனால், அதற்கான வழிகாட்டல்கள் சீரானதாக அமைய வேண்டும். நேர ஒழுங்குகள் முக்ககியமானவை.
கொரோனா பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே போன்று கொரோனா காலத்து பக்கவிளைவான மன அழுத்தங்களிலிருந்தும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
“நல்ல மன ஆரோக்கியம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் முற்றிலும் அடிப்படை” என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். ‘கொவிட்19 உலகெங்கிலும் மனநல சேவைகளை அத்தியாவசியமாக்கியுள்ளது. தொற்றுநோய்களின் போதும் அதற்கு அப்பாலும் உயிர் காக்கும் மனநல திட்டங்களில் அதிக முதலீடு செய்ய உலகத் தலைவர்கள் வேகமாகவும் தீர்க்கமாகவும் செயற்பட வேண்டும்’ எனவும் அவர் தெரிவிக்கிறார்.
“බොන්න සල්ලි තිබුණට, ගෙදර වියදමට සල්ලි නැද්ද?”
“Have Money To Drink, But Not For Household Expenses?”