கிழக்கில் அமைதியைத் தீர்மானிக்கும் காரணியொன்றாகிய நில உரிமை (பகுதி இரண்டு)
நெவில் உதித வீரசிங்க
கிழக்கு பிரதேசத்திற்கேயுரிய நிலப் பிரச்சினை கிழக்கில் உள்ள இனக்குழுக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அடையாளம் காணப்படுகிறது.
நாட்டில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் நிலத்தில் 43% கிழக்கு மாகாணத்திற்கு சொந்தமானதாகும். இங்கு நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் ¼ பங்கு மேற்கொள்ளப்படுகிறது. 2012ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிழக்கு மக்கள் தொகை சுமார் 40% ஆனோர் தமிழர்கள், 37% ஆனோர் முஸ்லிம்கள் மற்றும் 23% ஆனோர் சிங்களவர்கள் ஆவர். மாவட்ட அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக தமிழர்களுக்கு சுமார் 17%, முஸ்லிம்களுக்கு 44% மற்றும் சிங்களவர்களுக்கு 39% எனும் தொடர்புடைய விகிதங்கள் காணப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் 72%, முஸ்லிம்கள் 25% மற்றும் சிங்களவர்கள் 1%, திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் 31%, முஸ்லிம்கள் 40% மற்றும் சிங்களவர்கள் 27% என உள்ளனர்.
கிழக்கில் உள்ள சமூகங்களுக்கிடையில் நிலத்தை பிரித்துக்கொடுப்பது ஒரு “உண்மையான விளையாட்டு” என்று முஸ்லிம் புத்திஜீவி அமீர் அலி விளக்குகிறார். இந்த விநியோகத்தில் முஸ்லிம்கள் மிகப்பெரிய நட்டவாளிகளாக மாறிவிட்டனர். கிழக்கில் 1/3 மக்கள் தொகையாகிய முஸ்லிம் சமூகம் கிழக்கில் 3% நிலத்தை மட்டுமே கொண்டுள்ளது. சுதந்திரத்தை அண்மித்த போது கண்டிய விவசாயிகளிடையே நிலத்திற்கான பசி இருந்ததைப் போலவே, இப்போது கிழக்கில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே நில பஞ்சம் நிலவுகிறது. சிங்கள-பௌத்த தேசியவாதிகள் கோபப்படுவார்கள் என்ற அச்சத்தில், சமூகங்கள் இரண்டிற்கிடையில் நிலத்தைப் (crownland) பிரிப்பதற்கு அரசாங்கம் மறுப்பதுடன், சிறுபான்மையினர், தங்கள் அரசியல் தலைவர்களின் தூண்டுதலின் பேரில், ஒருவருக்கொருவர் நிலங்களை ஆக்கிரமிக்கும் பரஸ்பர அழிவுகரமான விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நிலப்பிரச்சினை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவைப் பாதிக்கும் ஒரு மையப் பிரச்சினை என்றும் அதை தீர்க்கும் திறன் அல்லது இயலாமை கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் பலவற்றைத் தீர்மானிக்கும் என்றும் அமீர் அலி மேலும் கூறினார்.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2007 ஆம் ஆண்டின் திருகோணமலை மாவட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, திருகோணமலை மக்கள் தொகை 45.4%, தமிழர்கள் 28.6%, சிங்கள 26.4% மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் 0.6% ஆகும். திருகோணமலை மாவட்ட செயலகத்தின் 2016 அறிக்கையின்படி, திருகோணமலைப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் 189,243 பேர், இந்துக்கள் 117,576 பேர், பௌத்தர்கள் 84,766 பேர், ரோமன் கத்தோலிக்கர்கள் 16,119 பேர் மற்றும் பிற கிறிஸ்தவர்கள் 3,014 பேர் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டம் கிழக்கு மாகாணத்தில் மிக உயர்வான இனப்பல்வகைமையைக் கொண்டுள்ளது.
வருடம் | மொத்த சனத்தொகை | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | ஏனையோர் | |||||
1963 | 138,553 | 39,925 | 28.8% | 51081 | 36.9% | 3,371 | 2.4% | 40,775 | 29.4% | 3401 | 2.5% |
1971 | 188,245 | 54,744 | 29.1% | 66,688 | 35.4% | 5061 | 2.7% | 59,924 | 31.8% | 1823 | 1.0% |
1981 | 255,948 | 85,503 | 33.4% | 87,760 | 34.3% | 5,372 | 2.1% | 75,039 | 29.3% | 2274 | 0.9% |
2007 | 334,363 | 84,766 | 25.4% | 95,652 | 28.6% | 490 | 0.1% | 151,692 | 45.4% | 1763 | 0.5% |
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால்; 2007 ஆம் ஆண்டில் திருகோணமலை மாவட்டம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையின்படி 1963 முதல் 2007 ஆம் ஆண்டு வரை திருகோணமலை மாவட்டத்தில் இனப்பிரிவின் படி மக்கள்தொகை பரம்பலை இந்த அட்டவணை காட்டுகிறது.
மேலேயுள்ள அட்டவணையின்படி, திருகோணமலை பகுதியில் முஸ்லிம் மக்களின் வளர்ச்சியை 1963 முதல் 2007 வரையிலான மக்கள் தொகை வளர்ச்சியின் சதவீதத்திற்கு ஏற்ப நாம் அடையாளம் காண முடியும். எழுத்தாளரின் அவதானிப்பின்படி, திருகோணமலையில் உள்ள பெரும்பாலான வணிகங்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. திருகோணமலை மாவட்டத்தில் யுத்தத்திற்குப் பின்னர் வளர்ந்துவரும் சுற்றுலாத் துறையின் மூலம் திருகோணமலை பகுதியில் இன உள்ளடக்கத்திற்கு இணையாக வளர்ந்து வரும் இனவாதம் மற்றும் இனப் பதற்றங்களின் வெளிப்பாட்டை நாம் தெளிவாகக் காணலாம்.
திருகோணமலையில் உள்ள அலஸ் தோட்டம் என்பது சுற்றுலாத்துறை மூலம் வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் பகுதிகளில் ஒன்றாகும். இப்பிரதேசத்தில் பல தசாப்தங்களாக வசிக்கும் சொந்த முயற்சியில் முன்னேறியுள்ள தமிழ்ப் பெண்ணொருவர் (அவளுடைய பெயரை இங்கே குறிப்பிட மாட்டேன்) “நான் மிகவும் கஷ்டப்பட்டே இந்தக் கட்டடங்களைக் கட்டினேன். ஒரு கட்டடத்தை நான் ஒரு சிங்களவருக்கு சுற்றுலா விடுதி நடாத்துவதற்கு வாடகைக்குக் கொடுத்துள்ளேன். மற்றொரு கட்டடத்தை ஒரு முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு உணவகத்தை நடாத்துவதற்கு வாடகைக்குக் கொடுத்துள்ளேன்;. நான் எனது கட்டடங்களை முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் வியாபாரம் செய்வதற்காக வாடகைக்குக் கொடுத்ததனால் கிராமத்தில் பலர் எனக்கு எதிராக உள்ளனர்”.
மேலே ஒட்டுமொத்தமாக கலந்துரையாடப்பட்ட கிழக்கு பிரதேசத்திற்கேயுரிய தனித்துவமான இன வேறுபாடு மற்றும் பதற்றங்களைத் தணிப்பதற்குக் கிழக்கு மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை உருவாக்குவது கட்டாயமானதாகும்.