Transparency தகவலறியும் உரிமை

கழிவகற்ற இத்தனை கோடிகளா!?

க.பிரசன்னா

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் செயற்பாடு கடந்த காலங்களில் பாரிய சர்ச்சையினை தோற்றுவித்திருந்தது. கொழும்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை சேமிப்பதற்கு உரிய இடம் இன்மையால் பல நாட்களாக கழிவுகள் வீதிகளில் நிரம்பி கிடந்தன. தற்போது கழிவுகள் மூலம் மின் உற்பத்தி இடம்பெறுவதால் உரிய முறையில் கழிவுகள் அகற்றப்படுகின்றன. ஆனால் தற்போதைய கொவிட் நிலைமையின் காரணமாக ஏற்பட்டுள்ள பயணத்தடையில் கழிவகற்றல் செயற்பாடுகள் மந்தமாகவே இடம்பெற்று வருகின்றன.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தினசரி 550 மெட்ரிக் தொன் கழிவுகள் சேமிக்கப்படுவதுடன் வருடாந்தம் கழிவகற்றல் செயற்பாடுகளுக்காக (2019 ஒப்பந்ததாரர்களுக்கான கொடுப்பனவு) மாவட்டம் 1, மாவட்டம் 2ஏ மற்றும் மாவட்டம் 5 ஆகியவற்றுக்கு 112 கோடியே 19 இலட்சத்து 77ஆயிரத்து 327ரூபா 67சதம்,(1,121,977,327.67) (வரி உள்ளடங்கலாக) செலவு செய்யப்படுவதாக கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது. இவற்றில் கொழும்பு மாநகர சபைக்கு செலவாகும் தொகை உள்ளடக்கப்படவில்லை. கொழும்பு மாநகரசபையில் கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பெற்றப்பட்ட தகவல்களிலேயே (ME/SWM/RTI/01/2021) இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியானது, மாவட்டம் 1, மாவட்டம் 2ஏ, மாவட்டம் 2பி, மாவட்டம் 3, மாவட்டம் 4 மற்றும் மாவட்டம் 5 என பிரிக்கப்பட்ட 47 பகுதிகளை கொண்டதாகும். 

மாவட்டம் 1 – மட்டக்குளி முதல் கொட்டஹேன மேற்பகுதி வரையும் (8 பிரதேசங்கள்) மாவட்டம் 2ஏ – கொச்சிக்கடை வடக்கு முதல் கொச்சிக்கடை தெற்கு வரை (11 பிரதேசங்கள்), 

மாவட்டம் 2பி –  கோட்டை முதல் தெமட்டகொட வரையான பகுதி (10 பிரதேசங்கள்), மாவட்டம் 3 – வனாத்த முல்ல தொடக்கம் சினமன்கார்டன் வரையான பகுதி (7 பிரதேசங்கள்), மாவட்டம் 4 – கொள்ளுப்பிட்டி முதல் ஹெவலொக் டவுன் வரையான பகுதி (6 பிரதேசங்கள்), 

மாவட்டம் 5 – வெள்ளவத்தை வடக்கு முதல் வெள்ளவத்தை தெற்கு வரையான (5 பிரதேசங்கள்) பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்றுவதற்காக கிளின்டெக் பிரைவட் லிமிடெட் மற்றும் கிரேக்கிளின் பிரைவட் லிமிடெட் ஆகிய தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக கொழும்பு மாநகர சபையினாலும் கழிவுகள் அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2020 ஆம் ஆண்டில் கிளின்டெக் பிரைவட் லிமிடெட் நிறுவனத்துக்கு ஒப்பந்த தொகையாக 

மாவட்டம் 2ஏ (கோட்டை மற்றும் புறக்கோட்டை) – 37கோடியே32இலட்சத்து 68ஆயிரத்து908 ரூபா30 சதமும் (373,268,908.30) (வரி உள்ளடங்கலாக) 

மாவட்டம் 2ஏ (கோட்டை மற்றும் புறக்கோட்டை தவிர்ந்த ஏனைய) – 44கோடியே 97இலட்சத்து43ஆயிர்து545ருபா40சதமும் (449,743,545.40) (வரி உள்ளடங்கலாக) 

மாவட்டம்5-33கோடியே5இலட்சத்து77ஆயிரத்து275ரூபா80சதமும் (330,577,275.80) (வரி உள்ளடங்கலாக) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கிரேக்கிளின் பிரைவட் லிமிடெட் நிறுவனத்துக்கு 

மாவட்டம்1- 44கோடியே84இலட்சத்து89ஆயிரத்து509ரூபா10சதம் (448,489,509.10) ஒப்பந்த தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்றுவதற்காக 512 ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.  கிரேக்கிளின் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தினால் மாவட்டம் 1 இல் 71 ஊழியர்களும் கிளின்டெக் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தினால் மாவட்டம் 2ஏ இல் (கோட்டை – புறக்கோட்டை) 78 ஊழியர்களும் மாவட்டம் 2ஏ இல் (ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்டை – புறக்கோட்டை) 72 ஊழியர்களும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாநகர சபையினால் நிரந்தர ஊழியர்களாக மாவட்டம் 2பி இல் 81 ஊழியர்களும் மாவட்டம் 3 இல் 96 ஊழியர்களும் மாவட்டம் 4 இல் 66 ஊழியர்களும் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதுடன் மாவட்டம் 5 இல் கிளின்டெக் நிறுவனத்தினால் 48 ஊழியர்களும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் கொழும்பு மாநகரசபையின் கழிவகற்றல் ஊழியர்களின் கொடுப்பனவுகளுக்காக வருடாந்தம் 25கோடியே 2இலட்சத்து 40ஆயிரத்து 149 ரூபா 02சதம் (250,240,149.02) செலவு செய்யப்படுகின்றது. (ஒப்பந்த நிறுவனங்களின் ஊழியர் செலவுகள் உள்ளடக்கப்படவில்லை) அதேவேளை கழிவுகளை அகற்றுவதற்காக 162 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. (மேலதிக தகவல்களை அட்டவணையில் பெற்றுக்கொள்ளலாம். கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தற்போது அகற்றப்படும் கழிவுகள் இலங்கை காணி மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் கெரவலப்பிட்டி கழிவு பூங்காவிலும் 2021 ஜனவரி 11 ஆம் திகதி முதல் கெரவலப்பிட்டி கழிவு மின் உற்பத்தி நிலையத்திலும் சேகரிக்கப்படுகின்றன.

கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் 550 மெட்ரிக் தொன் கழிவுகள் சேமிக்கப்படுகின்றன. அவற்றை அகற்றுதல் மற்றும் சேகரித்தல் என்பது பாரிய பிரச்சினையையும் செலவுகளையும் ஏற்படுத்துகின்றது. எனவே அதிகமான குப்பைகள் சூழலுக்கு வெளியிடுவதை தவிர்ப்பது செலவுகளை குறைக்கலாம். அத்துடன் கழிவுகளை பொலித்தீன், கடதாசி, உணவுக்கழிவு மற்றும் கண்ணாடி என பிரித்து வழங்குவதன் மூலம் இலகுவாக கழிவுகளை அகற்ற முடிவதுடன் தூய்மையான கொழும்பு மாநகரத்தையும் உருவாக்க முடியும்.

The Billions Behind Garbage Disposal In Colombo

අපද්‍රව්‍ය ඉවත් කිරීමට යන කෝටි ගණනක මුදල්. අවම කරගත හැකි මග

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts