கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் பற்றிய 2019 – 2020 காலப்பகுதிக்கான மீளாய்வு சுருக்கம்
தனுஷ்க சில்வா
இலங்கையில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் போக்குகள் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எவ்வாறாக இருந்தது என்பது பற்றி Freedom house என்ற நிறுவனம் கள ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது. ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் பின்பற்றப்படுகின்ற ஊடக செயற்பாடுகள் போக்குகளை அடிப்படையாக வைத்து வருடாந்தம் “பிரீடம் ஹவுஸ்” இந்த அறிக்கையை வெளியிட்டு வருவதோடு ஜனநாயகத்தின் போக்குகள் தொடர்பாக அடிப்படை கள ஆய்வுகளை பிரதானமாகக் கொண்டு இவ்வாறான அறிக்கையை வெளியிடுவது குறிப்பிடத்தக்கதாகும். அரச தலையீடு மூலம் ஒன்லைன் மற்றும் சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளின் போக்குகளில் 2018 ஆம் ஆண்டிற்கு நிகராக இந்த வருடமும் முன்னேற்றம் காணப்படுவதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்படுகின்றது. அவ்வாறே இலங்கையிலும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பயன்படுத்தவதிலான சாதகமான போக்குகளை அவதானிக்க முடியவில்லை என்பது அந்த அறிக்கையின் வெளிப்பாடாகும்.
பொதுவாக கருத்து வெளிப்பாடு சுதந்திரமானது ஏனைய உரிமைகளைப் போன்றே முக்கியமான உரிமையாக கருதப்படுகின்றது. கருத்து வெளியிடும் சுதந்திரமானது சரியான முறையில் உறுதிப்படுத்தப்பட்டு சுதந்திரமான செயற்பாட்டிற்கு அனுமதிக்கப்படாவிட்டால் அதனால் ஏனைய உரிமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. அந்த வகையில் இந்த அறிக்கையை அவதானிக்கும் போது இலங்கையில் ஜனநாயகத்தின் போக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் போய்விட்டது என்பதை அந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கின்றது.
ஒருவருட காலப்பகுதிக்குள் இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை சரியான முறையில் பிரயோகிப்பதற்கு இரண்டு விதமான தடைகள் காணப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கின்றது. அதில் முதலாவது விடயம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் ஆகும். அக்காலப் பகுதியில் ஊடகவியலாளர்கள், தகவல் புலனாய்வாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட இந்த துறையில் செயற்பட்டவர்கள் மீது மிக மோசமான முறையிலான அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகள் மற்றும் சுய தணிக்கை போன்ற செயற்பாடுகளை குறிப்பிடலாம். இரண்டாவது விடயமாக அமைவது கொரொனா வைரஸ் தாக்கம் பரவும் சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி பிரதானமான ஒன்லைன் தகவல் பரிமாற்ற செயற்பாடுகள், தகவல் பரிமாற்ற வலைப்பின்னல்கள் போன்ற செயற்பாடுகள் மீது இராணுவ தலையீடுகளை மேற்கொண்டு சுய தணிக்கைக்கு நிர்ப்பந்தித்த நிலையாகும். அதன்படி கடந்த வருடத்தில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக ஏற்பட்ட இரண்டு சவால்களாக ஜனாதிபதித் தேர்தல் ஊடாக ஏற்பட்ட கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கான இடையூறுகள் மற்றும் கொரொனா பரவலை காரணமாக காட்டி சிவில் செயற்பாட்டு துறைகளில் இராணுவ தலையீடு மற்றும் புலனாய்வு துறையின் தலையீடுகள் நுழைக்கப்பட்டமையை சுட்டிக்காட்ட முடிகின்றது என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
குறிப்பாக 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட அவசரகால சட்டத்தின் அடிப்படையில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையிலான அரச உத்தரவுகள் மூலம் பிரசைகளின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஏப்ரல் 22 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகால சட்டத்தின் அடிப்படையிலான கட்டளைகளின் பிரகாரம் ஒரு பத்திரிகையில் பிரசுரமாகும் கட்டுரையின் உள்ளடக்கத்தை பரிசீலனை செய்வதற்காக “பொறுப்பான அதிகாரி” ஒருவர் நியமிக்கப்பட்டார். ஏதாவதொரு பத்திரிகை வெளியிடப்போகின்ற தகவல் அல்லது கட்டுரை மூலம் “நாட்டில் கலவரங்களை ஏற்படுத்துதல், அதற்காக ஊக்கமளித்தல், தூண்டுதல் அளித்தல்” போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அல்லது பத்திரிகை முயற்சி செய்வதாக குறித்த பரிசீலனை அதிகாரிக்கு தெரிய வந்தால் உடனடியாக குறித்த பத்திரிகை பிரசுரத்தை தடை செய்தல், விற்பனையை தடை செய்தல் அல்லது குறிப்பிட்ட பத்திரிகை அச்சு மற்றும் வெளியீட்டகத்தை அரசாங்க உடைமையாக்குதல் போன்றவற்றிற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.
தணிக்கைக்கு பொறுப்பான அதிகாரி ஜனாதிபதிக்கு சார்பானவராக அல்லது அவரின் கைப்பொம்மையாக இயங்கக்கூடியவராக இருந்தால் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள், கருத்துக்களை அவசரகால சட்டத்தை காரணமாக வைத்து வெட்டி தணிக்கை செய்ய முடியும். பிரதான ஊடகங்களை விட மாற்று கருத்துடைய ஊடகங்கள் இவ்வாறான நடவடிக்கையால் பாதிக்கப்படலாம். அதுமட்டுமல்லாமல் வர்த்தமானி அறிவித்தலில் “பத்திரிகை” என்ற சொல்லுக்கு பரந்த அடிப்படையிலான விளக்கம் முன்வைக்கப்பட்டிருப்பதால் சஞ்சிகைகள் மற்றும் பருவகால வெளியீடுகள் என்ற அடிப்படையில் பத்திரிகைகளுக்கு அப்பால் சென்று கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் நிலை விரிவடையலாம். அதனால் இந்த அரசாங்க வர்த்தமானி அறிவித்தலானது இந்த வருடத்தில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாக “பிரீடம் ஹவுஸ்” அறிக்கை கூறுகின்றது.
மேலும் இலங்கையானது ஊடக சுதந்திரம் மீது தடைகளை ஏற்படுத்தும் ஆட்சியாக படிப்படியாக நகர்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அரச தலையீட்டின் ஊடகவே பிரசைகளின் சுதந்திரத்தில் தலையீடு செய்யும் வகையில் 2019 ஆம் ஆண்டு நல்லாட்சியின் இறுதி கட்டத்தில் ஆரம்பமானதோடு நவம்பர் மாதமளவில் அந்த போக்கு பலமடைந்து கொவிட் வைரஸ் தொற்று பரவல் சூழலில் மேலும் ஸ்தீரமடையும் நிலைமைக்கு சென்றிருக்கின்றது.
கடந்த வருட காலப்பகுதிக்குள் இலங்கை ஒரு தலையீட்டிற்கு உள்ளான தேசமாக மாற்றம் அடைந்ததோடு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அரசியல் மயப்படுத்தலுக்கு உட்பட்டமையும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பாதிக்கும் விதமாக இயங்குவதாக “பிரீடம் ஹவுஸ் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இந்த தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவானது இலங்கை பிரஜைகளது தொலைத் தொடர்புகள் செயற்பாட்டை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை பெற்றுள்ள சுயாதீன ஆணைக் குழுவாகும். அவ்வாறாயின் மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை தொழில்நுட்ப மற்றும் சேவைகள் ஊடாக முறையாக முகாமைத்துவம் செய்யும் பொறுப்பை சுமந்துள்ள நிறுவனம் என்று கூறலாம். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா அவரது உறவினரான அரசியல் உறவினரான சீ.ஆர்.எஸ்.பீ. ஜயதிலகவை அதன் தலைவராக நியமித்தார். அந்த முன்மாதிரியை பின்பற்றியே 2019 டிசம்பர் மாதம் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவும் அதே பதவிக்கு மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை நியமித்தார். அவ்வாறே 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இ.தொ.தொ.ஆ. குழு ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அரசியல் நியமனம் செய்யப்பட்டமை, ஜனாதிபதியின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழான பிரிவுகளுக்குள் ஒன்றாக இ.தொ.தொ.ஆ. குழுவை கொண்டுவந்துள்ள இலங்கையை ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்யும் ஒரு தேசம் என்ற நிலைக்கு தள்ளுவதாக அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகின்றது.
கடந்த வருடத்திற்குள் 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற சந்தர்ப்பம் இலங்கை கருத்து வெளியிடும் சுதந்திரத்தில் கை வைத்த இரண்டாவது சந்தர்ப்பத்தில் பிரவேசித்தது. தேர்தல் காலப்பகுதிக்குள் 78 ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டமை, சுய தணிக்கைக்கு உள்ளாக்கியமை என்ற நிலைமைகளுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. முன்னைய அறிக்கை 2019 ஆம் ஆண்டில் ஒக்ஸ்போர்ட் இணையத்தள நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து அரச நிறுவனங்கள், அரசியல்வாதிகள், பிரதான அரசியல் கட்சிகள் என்பன “சைபர் குரூப்” என்ற சில குழுக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
ஒக்ஸ்போர்ட் இணையத்தள நிறுவன அறிக்கையின்படி அந்த குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பிரதான பணியாக அமைந்தவை பேஸ்புக், டுவிட்டர், மற்றும்; யூ டியூப் உட்பட சமூக ஊடகங்களுக்கு அரசியல் விளக்கம் முன்வைப்பதாகும் அவ்வாறு செய்யும் போது வாக்காளர்களின் அசைவுகள், அரசியல் விருப்பு வெறுப்புக்கள், எதிர்பார்ப்பு போன்ற தனிப்பட்ட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட நடத்தைகளை மிகவும் துல்லியமான முறையில் கண்காணிப்பதாக அந்த அறிக்கை கருதுகின்றது.
இதன் மூன்றாவது கட்டம் கொவிட் வைரஸ் தொற்று காலப்பகுதிக்குள் வெளிப்படுவதாக அமைகின்றது. குறிப்பாக அரச புலனாய்வுத்துறையும் இராணுவமும் இந்த வைரஸ் தொற்று பரவல் சூழ்நிலை காரணமாக வைத்து பிரஜைகளின் தனிப்பட்ட சுதந்திரமாக கருதப்படுகின்ற தகவல் அறியும் சுதந்திரத்தை முடக்குதல், தனிப்பட்ட நடத்தையை கட்டுப்படுத்துதல், கண்காணித்தல், மிகவும் உன்னிப்பாக முறையில் மக்களின் நடமாட்டங்களை அவதானிப்பு செய்தல் என்ற அடிப்படையில் தலையீடு செய்யும் அரசாங்கமாக புதிய தோற்றத்தை வெளிப்படுத்தி இருக்கின்றது.
ஓட்டுமொத்தமாக 2015 ஆம் ஆண்டு காலப்பகுதி அரசாங்கம் இந்நாட்டின் ஜனநாயக செயற்பாடு பலவீனமடைய காரணமாக அமைந்ததாக பிரீடம் ஹவுஸ் அறிக்கை கருதுகின்றது. பிரயோகமாக அரசியல் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பை முன்வைப்பதற்கு முன்னைய ஆட்சியில் முடியாமல் போனமை, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நியாய பூர்வமான அடிப்படையில் மக்கள் நலனில் கவனம் செலுத்தாமை, 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அரசியல் நெருக்கடி என்பன ஜனநாயக செயற்பாட்டிலான முன்னேற்றங்களுக்கும் புணரமைப்புக்கும் கிடைத்த சந்தர்ப்பங்களை கைநழுவிப் போகச் செய்தமை இந்த நாடு முகம் கொடுத்த பின்னடைவுகளில் செல்வாக்கும் தாக்கமும் செலுத்திய காரணிகளாக குறிப்பிடலாம்.