சி.ஜே.அமரதுங்கா

ஒரு நாடு, ஒரு சட்டம் என்பது சமீபத்தில் பிரபலமான ஒரு கோஷமாகும். இதன் பொருள் நாட்டை ஒன்றாக பேணவேண்டுமென்றால், அனைவரும் ஒரே சட்டத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். மேலும் குறிப்பாக, இந்த வாதத்தின்படி, வெவ்வேறு இனக்குழுக்கள் மற்றும் மாகாணங்களுக்கு தனித்துவமான சட்டங்கள் இருக்க முடியாது.

இந்த கோஷத்தின் உடனடியான இலக்கு இலங்கையின் முஸ்லிம்கள், குறிப்பாக முஸ்லிம் திருமணச் சட்டமாகும். சில சிங்கள கடும்போக்காளர் குழுக்கள் ஒரு முஸ்லீம் ஆணுக்கு பல பெண்களை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்பை விமர்சித்தன. பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கான குறைந்தபட்ச வயதையும் அவர்கள் விமர்சித்தனர்.

இந்த கோஷத்தை உருவாக்கியவர்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதில் உறுதியாக இருந்த சில சிங்கள கடும்போக்கு குழுக்கள் என்பதுடன், அவர்கள் இந்த கோஷம் உட்பட அவர்களின் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

இருப்பினும், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் நிறைவேற்றப்படுவது அந்த சித்தாந்தத்திற்கு கடுமையான அடியாகும். இது ஒரு குறிப்பிட்ட சட்டத்தால் நிர்வகிக்கப்படும் நாட்டின் ஒரு பகுதிக்கென இயற்றப்பட்ட ஒரு தனிச் சட்டமாகும். அதன்படி, அது “ஒரு நாடு, ஒரே சட்டம்” என்ற கோஷத்தை முற்றிலும் நிராகரிப்பதாக கருதலாம்.

கொழும்பு துறைமுக நகரத்திற்கு ஒரு தனி சட்டம் இருந்தாலும், அது ஒரு சட்டத்திற்கு, நாட்டின் அடிப்படை சட்டமான அரசியலமைப்புக்கு உட்பட்டது. அங்கு, நாட்டில் ஒரே ஒரு சட்டம் மட்டுமே உள்ளது. அரசியலமைபால் வகுக்கப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு இந்த அடிப்படை சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஏனைய அனைத்து வெவ்வேறு சட்டங்களும் உள்ளன.

சிங்கள கடும்போக்காளர்களால் குறிவைக்கப்பட்ட முஸ்லீம் சட்டங்களைப் பொறுத்தவரை இந்த சட்டங்கள் சில காலம் கடந்தவை என்பதை முஸ்லிம்கள் கூட ஒப்புக்கொள்கிறார்கள். மறுபுறம், அந்த விதிகளில் சில இப்போது சட்ட புத்தகங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதுடன் அரிதாகவே நடைமுறையில் உள்ளன. இருப்பினும், சில சர்ச்சைக்குரிய சட்டங்கள் அவர்களிடையே ​இன்னமும் நடைமுறையில் உள்ளன. இது மற்றொரு குழுவையோ அல்லது சமூகத்தையோ புண்படுத்தாவிட்டால் அதை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.

சிறுபராய திருமணம் போன்ற பிரச்சினைகளைக் கருதும்போது, ​​இந்த நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களிடையேயும் நிலவும் ஒரு தீவிரமான பிரச்சினை இதுவாகும். சமூகவியலாளர்கள், வயதெல்லை தொடர்பாக சட்டம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அந்த பிரச்சினைகள் குறிப்பாக கிராமப்புற ஏழை மக்களிடையே, எந்த இன அல்லது மத வேறுபாடும் இல்லாமல் இன்னமும் உள்ளன என சுட்டிக்காட்டுகின்றனர். அவை சமூக தீர்வுகள் தேவைப்படும் சமூக பிரச்சினைகளாகும். சட்டத்தின் எல்லைக்குள் அவை நிகழாமையால் அவற்றிற்கு ஒரு சட்டம் பொருத்தமற்றதாகும்.

மறுபுறம், பல சர்ச்சைக்குரிய மரபுகள் நவீன சமூகங்களில் இன்னமும் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில மதத்துடன் தொடர்புடையவை என்பதால் அவர்கள் கேள்வியெழுப்புவதனை கடினமாக்குகிறது. நாட்டின் பிரதானமான சட்ட முறைமைக்கு வெளியே உள்ள பௌத்த மத ஸ்தாபன சொத்துக் கட்டளைச்சட்டம் இதற்கு ஒரு உதாரணமாகும். இதுபோன்ற மற்றொரு உதாரணம், இளம் குழந்தைகளை புதிய பௌத்த தேரர்களாக நியமிப்பதாகும், இது தர்மத்தைப் புரிந்துகொள்வது அல்லாமல், குழந்தைகள் சார்பாக பெரியவர்கள் எடுக்கும் முடிவாகும். குழந்தைகளிடமிருந்து குழந்தைப் பருவத்தைத் களவாடும் பெரியவர்களின் கூற்றுப்படி, இது நல்வாழ்வை நோக்கிய ஒரு படியாகும். அங்கு, சிறுவர்களின் உரிமைகள் பற்றிய பேச்சு பௌத்த மத எதிர்ப்பு எதிரான கொள்கையாகும்.

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது, பிற சமூகங்களுக்கும் விசேட சட்டங்கள் உள்ளன. யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள தேசவழமைச் சட்டம் அத்தகைய ஒரு சட்டமாகும். நிலத்தை விற்கும்போது அது அப்பகுதி மக்களுக்கு முன்னுரிமை வகிக்கிறது. சில காலத்திற்கு முன்பு, சில கடும்போக்காளர்கள் தேசவழமைச் சட்டத்தையும் எதிர்த்தனர்.

இந்த நாட்டில் நடைமுறையில் உள்ள மற்றொரு தனிப்பட்ட சட்டம் உள்ளூர் கண்டிய மக்களுக்கு கண்டிய திருமண சட்டமாகும். இருப்பினும், பெருமைமிக்க கண்டியர்கள் கூட இப்போது அந்தச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. அத்தகைய திருமணங்களில், மணமகனும், மணமகளும் தங்கள் கண்டிய பெருமையை வெளிப்படுத்துவதற்காக அசல் ஆடை உட்பட தம்மை கண்டியர்களாக அலங்கரிக்கின்றனர். இருப்பினும், அந்த திருமணம் சாதாரண திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றது. இவ்வாறு தான் சமூக ஏற்றுக்கொள்ளல் மாற்றமடைகின்றது.

இந்த கண்டிய சட்டத்தின் கீழ் இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரை திருமணங்கள் நடைபெற்றன. பாரம்பரிய ஏற்பாடுகளின் கீழ் ஒன்றாக வாழ்ந்த திருமணமாகாத தம்பதிகளின் திருமணங்களை பதிவு செய்ய அந்த நேரத்தில் இது பயன்படுத்தப்பட்டது. குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் உள்ள பிழைகளை சரிசெய்ய அல்லது சொத்து பிரச்சினைகளை தீர்க்க அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். எழுத்தாளருக்குத் தெரிந்தவரை, ரஜரட்டை பகுதியில் உள்ள அத்தகைய குடும்பங்கள் கண்டிய சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விரும்பின. எனவே, இவை இந்த சட்டம் இன்னும் பயன்பாட்டில் உள்ள நிகழ்வுகளாக இருக்கலாம்.

ஒரே நாடாக இருப்பதற்கு அனைவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டியது அவசியமில்லை என்பதை அது காட்டுகிறது. அதாவது ஒரு நாட்டினுள் உள்ள வெவ்வேறு சமூகங்கள் தங்கள் நம்பிக்கைகளைப் பொறுத்து மாறுபட்ட சட்டங்களையும் மரபுகளையும் கொண்டிருக்கலாம்.

இதற்கிடையில், அவை அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் ஒரு பிரதான விதி இருக்க வேண்டும். அதுவே ஒரு நாட்டின் அரசியலமைப்பாகும்.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் உதாரணங்களால் இதனை மேலும் விளக்கலாம். 51 மாநிலங்களைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த நாடு அமெரிக்கா. அமெரிக்காவிற்கு ஒரு நிறைவேற்று ஜனாதிபதி இருக்கின்றதுடன், அவர் தொகுதி மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை ஜோ பைடன் தோற்கடித்தார். எவ்வாறாயினும், தேர்தலைத் தொடர்ந்து, ட்ரம்ப், தேர்தலில் மோசடி செய்யப்பட்டதாகவும், தான் உண்மையில் வெற்றி பெற்றதாகவும் கூறினார். அவர் அதை நீதிமன்றங்களுக்கும் கொண்டு சென்றார். அந்தச் செயற்பாட்டின் போது உலகம் பார்த்த ஒரு விடயம் என்னவென்றால், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் சட்டங்கள் வேறுபட்டவை. அவை அனைத்தையும் பிணைக்கும் அடிப்படை சட்டம் அரசியலமைப்பு என்பதாகும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு சட்டமன்றம் மற்றும் முதலமைச்சரைக் கொண்டுள்ள இந்தியாவைப் பற்றி குறிப்பிடத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

சீனாவில் உள்ள ஹாங்காங் தீவு பிரிட்டனுக்கும் மக்காவ் தீவு போர்த்துக்கல்லுக்கும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியாளர்களால் குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை முடிந்ததும் 90 களில் அவை மீண்டும் பெறப்பட்டன. வெவ்வேறு பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகளைக் கொண்ட தீவுகள் சீனாவுக்குத் திரும்பக் கிடைத்த போது, சீனாவின் கோஷம்  “ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்” என்பதாகும்.

இவை அனைத்தும் “ஒரு நாடு, ஒரே சட்டம்” மூலம் ஒரு நாட்டை ஒன்றிணைக்க முடியாது என்பதைக் காட்டுகிறது. அரசியலமைப்பு என்ற ஒரு முதன்மைச் சட்டத்தின் கீழ் வெவ்வேறு சமூகங்கள் அல்லது மாகாணங்களுக்கு விசேட சட்டங்களைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே இதனை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.

One Country, Multiple Laws

එක රටක් නම් නීති රැසක් !

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts