சுற்றுச்சூழல்

எக்ஸ்பிரஸ் பேர்ல்: இன்னும் எரியும் இலங்கை

கமனி ஹெட்டியாராச்சி

முழு இலங்கையும் மூழ்கிய கப்பலைப் போல இருக்கும் கால கட்டத்தில், நாட்டு மக்களும், நாட்டினது  ஊடகங்களும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை மறந்து விடுவது சகஜமான நிகழ்வாகும். ஆனால் 2021 யூன் 02 ஆம் திகதி இலங்கைக்கு சொந்தமான கடற்கரையில் வெடித்து சிதறிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் பொருளாதாரத்திற்கும் கடலுக்கும் ஏற்பட்ட சேதம் பல தலைமுறைகள்  நட்டஈடு செலுத்த வேண்டிய ஒரு தீவிரமான சம்பவமாகும்.

சிங்கப்பூர் கொடியின் கீழ் இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிச் சென்ற எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பல், கொழும்பு துறைமுகத்தில் இருந்து 09 கடல் மைல் தொலைவில் இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையில் வெடித்து சிதறியதால் இந்நாட்டின் கடல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு கணக்கிட முடியாத சேதம் ஏற்பட்டது.

இலங்கைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், ஒரு வருடத்திற்கு மேலாகியும் அது தொடர்பான நட்டஈட்டைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என கடந்த ஓகஸ்ட் 23 ஆம் திகதி பத்தரமுல்லை செத்சிரிபாயவில் நடைபெற்ற கூட்டத்தில் தெரியவந்துள்ளது. இந்நாட்டின் கரையோரம் மற்றும் கரையோரத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு இழப்பீடு பெற்றுக்கொள்வதைத் துரிதப்படுத்துமாறும்  கப்பல் விபத்துக்களை கையாள்வதில் தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால் அதற்கான புதிய சட்டங்களை உருவாக்குமாறும் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பில்  சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி திருமதி தர்ஷனி லஹந்தபொல, எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வெடித்ததன் காரணமாக இலங்கை ஏற்கனவே செலுத்தி வரும் நட்டஈடு தொடர்பான பல தகவல்களை வெளிப்படுத்தினார். அவரது கூற்றுப்படி, எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகளால் மாசுபட்ட கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணி மே 20, 2021 முதல் தொடங்கியது. இது 746 கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. நீர்கொழும்பு தடாகத்தை சூழவுள்ள பகுதி மற்றும் பமுனுகம பாக்குகந்த கடற்கரை ஆகிய பகுதிகளில் கப்பலில் தீப்பிடித்த போது கடலுக்குள் சென்ற கழிவுகளால் அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளது. கப்பலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நைட்ரிக் அமிலத்தால் கப்பல் தீப்பிடித்து, அதன் 1486 கொள்கலன்களின் ஒரு பகுதி வெடித்து கடலில் வீசப்பட்டது. மன்னார் தொடக்கம் ஹம்பாந்தோட்டை கிரிந்த வரையிலான 746 கிலோமீற்றர் கடற்பரப்பு இரசாயனங்கள் மற்றும் கொள்கலன்களில் இருந்து சிதறிய மணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் முற்றாக மாசடைந்துள்ளது. கடலில் கண்டெடுக்கப்பட்ட 1600 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் மற்றும் இரசாயனப் பொருட்கள் மீட்கப்பட்டு பமுனுகம பிரதேசத்தில் வாடகைக் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை என்ன செய்வது? என்பது சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் தீர்மானிக்கப்படவுள்ளது.

மன்னார் தொடக்கம் அம்பாந்தோட்டை வரையான கடற் கரையை சுத்தப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட செலவு ஒன்பது கோடி முப்பத்தெட்டு இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து இருநூற்றுத் தொன்னூற்றெட்டு ரூபாவாகும். மேற்படி தகவலை வெளிப்படுத்திய கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தெரிவிக்கையில், இந்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள் நிறைவடைய இன்னும் சில வருடங்கள் ஆகும் என்றார். 

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வெடித்ததன் பின்னர், சுற்றாடலுக்கு ஏற்பட்ட சேதங்கள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது கட்புலனாகும் மற்றும் கட்புலனாகா சேதங்கள் என்ற அடிப்படையிலாகும். சுற்றுச்சூழல் பாதிப்புகளை கணக்கிடுவதற்காக 40 துறைசார் நிபுணர்கள் கொண்ட குழுவை அரசு நியமித்தது. பேராசிரியர் அஜித் டி அல்விஸ், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பீடத்தின் பீடாதிபதி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் பிரசாந்தி குணவர்தன ஆகியோர் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் உள்ளடங்கலான 14 நிறுவனங்களின் ஆதரவு இந்நிபுணர்கள் குழுவுக்குக் கிடைத்தது. அதுபோன்றே அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் பிரான்சில் உள்ள ஆய்வகங்களிலும் இதற்குரிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வெடிப்பினால் இலங்கையின் கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தை மதிப்பிடுவது கடினமான பணியாகத் தெரிவது இதை வெறும் கண்ணால் பார்க்க முடியாததனால் ஆகும். 

இந்தக் கப்பல் விபத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மீனவர்களாவர். அந்த நாட்களில் கடலுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. கடலுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் மீனவர்கள் கிளர்ந்தெழுந்தனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் வெடிப்பு சம்பவமும் அதன் பின்னர் அதிகாரிகள் செயற்பட்ட விதம் மற்றும் சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்தின் பதில் தொடர்பில் ஃப்ரெண்ட்ஸ் ஒஃப் த ஏர்த் சர்வதேச அமைப்பின் தலைவர் திரு.ஹேமந்த விதானகே இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். “தற்போது கப்பலை பதிவு செய்த நிறுவனமும், கப்பலின் போக்குவரத்தை கையாண்ட நிறுவனமும் கப்பலுக்கு ஏற்பட்ட விபத்தையடுத்து விலகியுள்ளன. ஐடொப் என்ற அமைப்பு மட்டுமே  பீ என்ட் ஐ எனப்படும் தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்கிறது. அவர்கள் இலங்கைக்கு வந்து அவர்கள் விரும்பியபடி வேலை செய்கிறார்கள். சருக்குவ கடற்கரையில் கலந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட மாசுக்களை சேகரிக்க இலங்கையர் ஒருவரால் உருவாக்கப்பட்டு இயக்கப்பட்ட இயந்திரம் மூலம் கப்பல் ஏற்படுத்திய உண்மையான அழிவுகள் வெளிவருகின்றன. இதன் காரணமாக, தொடர்புடைய நிறுவனத்தின் விருப்பத்தின்படி, தொடர்புடைய துப்புரவு நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கான உத்தரவை குறிப்பிட்ட நிறுவனம் பெற்றுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். எரியும் கப்பலால் ஏற்பட்ட உண்மையான அழிவை குறைத்து, இலங்கைக்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகையை குறைப்பதுதான் இதன் நோக்கமாகும்” என்றார். 

எக்ஸ்பிரஸ் பேர்ல் மூலம் மீனவர்கள், ஆமைகள், டொல்பின்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் சேதத்தை கணக்கிடுவது இறந்தவைகளின் எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகமாகும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் கருதுகின்றனர். இறந்த விலங்குகளில் 10 சதவீதம் கடற்கரையில் ஒதுங்குகின்றன. மேலும் கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் பாசி செடி வளர்ந்து, அவற்றை உண்ணும் கடல் விலங்குகள் அழிந்து வருவது தொடர்கிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அழிக்கப்பட இன்னும் 500 முதல் 1000 வருடங்கள் ஆகும் என சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்குவதற்கு சிறிது நேரம் மட்டுமே ஆனது. ஆனால் இந்த நாட்டிற்கு ஏற்பட்ட சேதத்தை ஈடுசெய்யும் காலம் பல நூறு வருடங்கள் ஆகும். எவ்வாறாயினும், கடற்கரையைச் சுத்தப்படுத்துவதற்காக கப்பலுக்குச் சொந்தமான காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து 1.3 பில்லியன் ரூபா பணம் திறைசேரிக்குக்  கிடைத்துள்ளதாக தெரிவிக்கும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி கடைற்கரைக்கு ஏற்பட்டுள்ள சேதத்தைக் கணக்கிட்டுத் தயாரிக்கப்பட்ட முதல் இடைக்கால அறிக்கை கப்பலுக்கான இழப்பீடு தொடர்பாகச் செயற்படும் அவுஸ்திரேலிய சட்ட நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts