Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி கிடையாதா?

கீர்த்திகா மகாலிங்கம்

அண்மையில் முல்லைத்தீவில் பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமானது இலங்கையின் ஊடக சுதந்திரத்தை மீண்டும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இச் சம்பவம் பிராந்திய மட்டத்தில் மாத்திரமன்றி தேசிய ரீதியாகவும் கண்டனத்தைத் தோற்றுவித்துள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வு, சட்டவிரோத மரக்கடத்தல் என்பன நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் அது தொடர்பில் புலனாய்வு செய்து அறிக்கையிடச் சென்ற போதே சுயாதீன ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன், கணபதிப்பிள்ளை குமணன்  ஆகியோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

முறிப்பு பகுதியில் காவற்துறை மற்றும் வனவளத்துறையின் ஒரு சில உயர்மட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புடன்  சிலர் சட்டவிரோதமாக தேக்கு மரங்களை வெட்டி அதன் மூலம் வீடொன்றை நிர்மாணித்துக் கொண்டிருப்பதாக தமக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அது பற்றி அறிக்கையிடுவதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி சென்ற வேளையிலே இத்தாக்குதல் இடம்பெற்றதாக தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

கடத்தல்காரர்களினால் தாக்கப்பட்டதோடு, ஊடகவியலாளர்களிடமிருந்த ஒளிப்பதிவு உபகரணங்களும் பறிக்கப்பட்டன. தாக்குதலுக்குள்ளான இருவரும்  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் வீடு திரும்பினர்.

இந்த சம்பவம் குறித்து தேசிய ஊடகங்கள், பிராந்திய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பல தரப்பினரும் வெவ்வேறு கோணங்களில் தமது கண்டனங்களையும், எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தனர்.

அத்தோடு தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒக்டோபர் 16ஆம் திகதி வடமாகாணத்தில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான அழுத்தங்களையடுத்து தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

“தாக்குதல் மேற்கொண்டவர்களில் ஒருவர் அக்டோபர் 12ஆம் திகதி கைது செய்யப்பட்டதோடு, மற்றொருவர் 13ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார். மேலும் இருவர் 20ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர். முல்லைத்தீவு  மாவட்டத்தைப் பொறுத்த வரையில் சாதாரண குடும்ப பிரச்சினைகளில்  கூட பொலிஸார் இராணுவத்தினர் அவதானமாகவே செயற்படும் நிலையில் இது போன்றதொரு தாக்குதலில் ஈடுபட்ட நால்வரை உடனடியாக கைதுசெய்ய முடியவில்லை என்பது பல சந்தேகங்களை தோற்றுவிப்பதோடு, காவற்துறை மீதான நம்பிக்கையையும் கேள்விக்குறியாக்குகிறது” என தாக்குதலுக்கிலக்கான ஊடகவியலாளர் தவசீலன் கூறினார்.

இந்த சம்பவம் குறித்த வழக்கானது கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் திகதி நீதிபதி எஸ். லெனின்குமார் தலைமையில் முதற்கட்ட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் சார்பில் சில சட்டத்தரணிகள் தாமாகவே முன்வந்து ஆஜராகி இந்த வழக்கில் வாதாடி வருகின்றனர்.

“வனவளம், இயற்கை வளங்கள் என்பன பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக குரல்கொடுக்கும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கில் நாங்கள் முன்வந்து வாதாடுகின்றோம்” என சட்டத்தரணி சின்னராசா தனஞ்சயன் தெரிவித்தார்.

ஒக்டோபர்  20ஆம்  திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் நவம்பர் 3 மற்றும் 17 ஆம் திகதிகளில் இடம்பெற்ற 3ஆம் 4ஆம் கட்ட விசாரணைகளில் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் ஊடகவியலாளர்கள் சார்பில் ஆஜராகியிருந்தார். சந்தேக நபர்கள் ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வழக்கு 2021.02.02 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

பாதிக்கப்பட்டவர்களின் ஆதங்கம் 

தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளரான குமணன் கடமையின்போது தாம் எதிர்நோக்கும் சவால்கள் கருத்து தெரிவிக்கையில் “சுமார் 5 வருடங்களாக சுயாதீன ஊடகவியலாளராக தொழில் புரிந்து வருவதோடு, பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருக்கிறேன். தற்போதைய தாக்குதல் தவிர்த்து கடந்த வருடம் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயப்பகுதியில் விகாரை அமைப்பது தொடர்பில் செய்தியறிக்கையிட சென்ற வேளையில் குக்குளாய் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் தாக்கப்பட்டு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்தையும் குறிப்பிட்டு சொல்ல முடியும். அதற்கெதிராக எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை” என்றார்.

தாக்குதலுக்குள்ளான மற்றொரு ஊடகவியலாளரான தவசீலன் குறிப்பிடுகையில், “ 6 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரியும் அதேவேளை,  பல்வேறு முரண்பாடுகளையும், எதிர்ப்புகளையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்திருக்கிறேன். கடந்த அக்டோபர் மாதம் கொக்காவில் கிறவல் அகழ்வு மற்றும் காடழிப்பு தொடர்பாக செய்தி சேகரிக்கச்சென்ற வேளையிலும் சிலர் தாக்க முயற்சித்தனர். 2017 ஆம் ஆண்டு முல்லைத்தீவு நகரத்திலிருந்து வட்டுவாள் பாலம் வரை காணாமல்போனவர்களுக்காக, அவர்களின் உறவினர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தில் கடற்படையைச்சேர்ந்த ஒருவரோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் முரண்பட்ட சம்பவத்தில் அவரை அடையாளம் காண முயற்சித்த வேளையில் ஏற்பட்ட வழக்கானது இன்றுவரை முற்றுப்பெறாமல் தொடர்கிறது.” என்று தெரிவித்தார்.

“இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி  தெற்கிலிருக்கக்கூடிய மற்றும்  தலைநகரிலிருக்கக்கூடிய ஊடகங்களும், மும்மொழி ஊடகவியலாளர்களும் கூட எந்தவித பேதமுமின்றி சகலரும் நீதிக்காக குரல் கொடுக்க முன்வந்தது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விடயமாக இருந்தபோதிலும், வழக்கின் தொடர்ச்சி குறித்து அல்லது இந்த சம்பவத்தின் பின்புலங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது தொடர்பான தொடர்ச்சியான மற்றும் அழுத்தமான பதிவுகளை தமிழ், ஆங்கில ஊடகங்களை போலவே  பிரதான சிங்கள ஊடகங்களும் முன்னெடுக்கும் பட்சத்தில் மாத்திரமே உரியவர்களின் செவிகளையடைந்து தீர்வுகள் செயல்வடிவம் பெறும்”  என குமணனும் தவசீலனும் தெரிவித்தனர்.

கண்டனக் குரல்கள் 

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் இவ்வாறிருக்கையில்,  ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என பல்வேறு தரப்புகளும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

இச் சம்பவம் தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்ட சுதந்திர ஊடக இயக்கம், தாக்கிய சந்தேக நபர்களை உடன் கைது செய்து நீதியை நிலைநாட்டுமாறு பொலிஸாரைக் கோரியிருந்தது. அத்துடன் இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்போர் தொடர்பில் அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கும் இவ்வாறான தாக்குதல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி மொனராகல பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு குறித்து அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் இந்துனில் விஜேநாயக்க தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் கோரியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றையும் அனுப்பியிருந்தார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சி ஊடகவியலாளர்கள்,  கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஊடகத்துறை அமைச்சரான கெஹெலிய ரம்புக்வெல்லவும் தெரிவித்திருந்தார். இருப்பினும் அதனையும் தாண்டி ஊடகத்துறை அமைச்சினால் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறுவதை தடுத்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

சுயாதீன ஊடகவியலாளர்களின் சவால்கள் 

“சுயாதீன ஊடகவியலாளர்கள் பல தசாப்தங்களாகவே தகவல்களை பெற்றுக்கொள்வதிலும், தகவல்களை வெளியிடுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வடக்கு கிழக்கில் மாத்திரம் 40இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, பலர் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கின்றனர். பலர் கடத்தப்பட்டுமிருக்கிறார்கள். எனவே சுயாதீன ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்பது இன்று நேற்றல்ல, பல தசாப்த காலமாகவே கேள்விக்குள்ளாகியே காணப்படுகிறது” என சிரேஷ்ட ஊடகவியலாளர் கிருஷ்னி இபாம் தெரிவித்தார். 

மேலும் “சுயாதீன ஊடகவியலாளர்கள் என்னும்பொழுது, பிரதானமாக அரசாங் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டையை (press card) பெறுவதிலிருந்து வங்கிக்கடன் பெறுவது வரை எல்லாமே பிரச்சினையாகவே காணப்படுகிறது. அவர்களது பாதுகாப்புக்கு பொறுப்புக்கூறும் எந்தவொரு நிறுவனமும் இல்லை, பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமில்லை, சரியான அல்லது முறையான சம்பள முறை இல்லை, ஊழியர் சேமலாபநிதி இல்லை, காப்புறுதியில்லை, நலன்புரி சேவைகள் இல்லை. அத்தோடு தொழில் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த நடைமுறையுமில்லை. இவை அனைத்தினையும் தெரிந்தும் இந்தத்துறையில் கால்பதிக்கும் ஒவ்வொருவரும் ஆத்மதிருப்திக்காக தொழில்புரிபவர்களே. அவ்வாறிருக்கையில் அவர்களுக்கு தொழில் பாதுகாப்பையும் நீதியையும்   வழங்க துரிதமாக செயற்படவேண்டியது ஊடகத்துறை அமைச்சினதும் நீதித்துறையினதும் கடப்பாடாகும்” எனவும் அவர் கருத்து தெரிவித்தார். 

வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா ஜனாதிபதி

கடந்த வருடம் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்றபின் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை சந்தித்து பேசிய ஜனாதிபதி, ஊடக சுதந்திரத்திற்கு தனது ஆட்சிக்காலத்தில் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படாது என உறுதியளித்திருந்தார். எனினும் ஜனாதிபதி தனது வாக்குறதியைக் காப்பாற்றுவதற்காக கடந்த ஒரு வருட காலத்தில் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விக்கு திருப்திகரமான பதில்களைக் காண முடியவில்லை.

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட உலகளாவிய ஊடக சுதந்திர சுட்டியில் 180 நாடுகளுக்குள் இலங்கைக்கு 127 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளமை   கூர்ந்து நோக்கத்தக்கதாகும். அந்த வகையில் இலங்கையானது ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில் மேலும் முன்னேற்றமடைய வேண்டியுள்ளது என்பதையே இது வலியுறுத்துகிறது.

யுத்த காலத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் ஊடக சுதந்திரம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைக் கண்டுள்ள போதிலும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தம்மைத்தாமே சுய தணிக்கைக்கு உட்படுத்திக் கொள்கின்ற போக்கினை சமகாலத்தில் அவதானிக்க முடிகிறது. அந்த வகையில் ஊடகவியலாளர்கள் கொண்டுள்ள அச்சத்தை நீக்கி சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சூழலை உறுதிப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும்.உலக ஊடக சுதந்திர தினத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் ‘அச்சமும் பக்கச்சார்பும் அற்ற ஊடகத்துறை’ என்பதாகும். அவ்வாறானதொரு ஊடகத்துறையை கட்டியெழுப்ப சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வர வேண்டும். அதன் மூலமே முல்லைத்தீவு போன்ற பிராந்தியங்களில் பல்வேறு சவால்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமது கடமையை மேற்கொள்ளும் குமணன், தவசீலன் போன்ற ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமாகவிருக்கும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts