தகவலறியும் உரிமை

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளும் குளியாபிட்டிய நகர சபையும்

சாமர சம்பத்

இலங்கை மக்களுக்கு மிக நெருக்கமானதும் பல சேவைகளையும் வழங்கி வரும்  340 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் மார்ச் 18ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இதன்படி, 29 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகளின் பதவிக்காலம் இவ்வாறு முடிவடைந்துள்ளது. 

பெப்ரவரி 18, 2018 அன்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பிறகு அந்த வருடத்தின் மார்ச் 20 ஆம் திகதி முதல் 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் ஆரம்பமாகியது. அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக் காலம் 04 வருடங்களின் பின்னர் அதாவது 2022 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முடிவடைய வேண்டும், ஆனால் விடயப் பொறுப்பு அமைச்சர் பதவிக் காலத்தை ஒரு வருடத்திற்கு நீடித்தார். அதன்படி, உள்ளூராட்சி நிறுவனங்கள் மார்ச் 2023 வரை செயல்பட்டன. உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்து ஏறக்குறைய ஒருமாத காலம் கடந்துள்ள போதிலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி இன்னும் அறிவிக்கப்படாததால், இந்த நிறுவனங்கள் ஆணையாளர்களின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன. ஆனால், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இன்னும் ஆணையாளர்கள் நியமிக்கப்படாததும் நெருக்கடிக்கு வழி வகுக்கும்.

உள்ளூராட்சி சட்டத்தின்படி, மாகாண சபை எனப்படுவது பொது சுகாதாரம், பொது பயன்பாட்டு சேவைகள் மற்றும் பொது சாலைகள் ஆகிய அனைத்து விஷயங்களையும் அதிகார வரம்பிற்குள் உட்பட்ட பகுதிக்குள் முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான பொறுப்புக்குரிய நிறுவனம் ஆகும்.

குளியாபிட்டிய நகர சபையின் பதவிக்காலமும் நிறைவடைந்துள்ளதுடன், 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலாண்டில் நகர சபை எவ்வாறு செயற்பட்டது என்பது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நாம் கோரிக்கை விடுத்தோம். நகர சபையின் செயற்திறன் தொடர்பில் தெரிந்துகொள்வதற்காக, குறித்த காலத்திற்கான நகர சபையின் வருமானம், வரவு செலவு திட்ட முன்மொழிவு அமுல்படுத்துதல், குழுக்களின் செயற்பாடுகள் என்பன ஆராயப்பட வேண்டும். 

வரவுசெலவு திட்டங்களைச் செயல்படுத்துதல்

நகரத்தை நிர்வகிப்பதில், ஒரு நகர சபைக்கு ஒதுக்கப்பட்ட முக்கிய பணிகளாக, குறிப்பிட்ட ஒரு வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிதல் என்பன பிரதான விடயங்களாகக் கருதப்படுகின்றன. மேலும் இவ்வாறு  தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் கடந்த  ஒரு வருடத்திற்குள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பதை பின்தொடர்வது மிக முக்கியமான விடயமாகும். உள்ளுராட்சி நிறுவனங்கள், மாகாண சபைகள் மட்டுமன்றி முழு நாட்டினதும் பிரதான வரவு செலவுத் திட்டமான பாராளுமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட அனைத்து வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அவற்றைச் செயல்படுத்தாதது குறித்து பின்தொடர்வதும் மந்த கதியிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. 

குளியாபிட்டிய நகரசபை 2018ஆம் ஆண்டுக்கான 26 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்துள்ளதுடன், 24 முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டமை சிறந்ததொரு போக்காகும். இரு வரவு செலவுத் திட்ட  முன்மொழிவுகள் மாத்திரமே இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் அப்போதைய செயலாளர் எச்.எம்.பி.கே.ஹேரத்திடம் வினவியபோது, ​​நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அந்த முன்மொழிவுகள் இரத்துச் செய்யப்பட்டு அதற்குப் பதிலாக வேறு பிரேரணைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். நகரின் வளர்ச்சிக்கான முன்வைக்கப்பட்ட  அனைத்து முன்மொழிவுகளும் அந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

2019ஆம் ஆண்டில்  28 முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டு 04 தீர்மானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 24 முன்மொழிவுகள்  நிறைவேற்றப்பட்டுள்ளன. திண்மக்கழிவு மையத்தின் மேம்பாடு மற்றும் களஞ்சியசாலைகள் நிர்மாணித்தல், வார நாள் சிற்றுண்டி சாலை அமைத்தல், புதிய சந்தை கட்டுதல் போன்றவை செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் அடங்கும். எரிபொருள் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு 12 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்ட முன்மொழிவு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில், நகர சபை 32 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்துள்ளதுடன் அவற்றில் 26 முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 06 முன்மொழிவுகள் இரத்து செய்யப்பட்டு அந்த முன்மொழிவுகளுக்குப் பதிலாகத் தற்காலிக கடைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக 44 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான 15 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இதில் முன்பள்ளி அபிவிருத்திக்கான முன்மொழிவு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 200 000 ரூபாய் ஆகும். நகர சபையின் கடனை அடைப்பதற்கும், பல்நோக்கு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் அதிகளவான தொகை அதாவது 169,341,621 ரூபா செலவிடப்பட்டுள்ளது.

குளியாபிட்டிய நகர சபையினால் 2022ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், இப்பிரதேசத்தில் காணப்படும் சமூக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று வளர்ச்சி துறைகளைக் கண்டறிந்து, சாலை பராமரிப்பு மற்றும் மேம்பாடு, புதிய கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு, சமூக மேம்பாடு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் போன்ற மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக 76 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் 2022 ஆம் ஆண்டில் 77 அபிவிருத்தி முன்மொழிவுகள் நகர சபையினால் முன்மொழியப்பட்டுள்ளன. வீதி பராமரிப்பு மற்றும் அபிவிருத்தியின் கீழ் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் 07 முன்மொழிவுகளை நகர சபையால் நடைமுறைப்படுத்த முடிந்துள்ளமை குறிப்பிடத்தகது. அதற்காக 36 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

மறந்துபோன நிலையான வளர்ச்சி திட்ட முன்மொழிவுகள்

குளியாபிட்டிய நகர சபையானது நிலையான அபிவிருத்தி  முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான திட்டம் மற்றும் செலவின ஆவணத்திற்கும் அங்கீகாரம் வழங்கியிருந்ததுடன், அதில் வறுமையை ஒழிப்பதற்கும் தரமான உணவை வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால், அந்தத் திட்டத்தில் பெரும்பாலானவைகள் செயல்படுத்தப்படவில்லை. சில திட்டங்களை மட்டுமே நகர சபையால் செயல்படுத்த முடிந்தது.

அதன்படி, அனைத்து வகையான வறுமையையும் ஒழித்தல், பட்டினியை ஒழித்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் சிறந்த ஊட்டச்சத்து நிலையை அடைதல், ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்தல் மற்றும் அனைத்து வயதினரின் நலனையும் மேம்படுத்துதல், பரந்த மற்றும் சமமான தரமான கல்வியை உறுதி செய்தல், பாலின சமத்துவத்தை அடைதல் மற்றும் அனைத்து பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் அதிகாரம் வழங்குதல். அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் வழங்குதல், மற்றும் நிலையான தொழில்மயமாக்கலை ஊக்குவித்தல் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவித்தல் முதலியன அடங்கியமை குறிப்பிடத்தக்கது.  இதில் பெரும்பான்மையானவற்றை செயல்படுத்த நகர சபை தவறிவிட்டது.

செயற் குழுக்களின் நடவடிக்கைகள்

உள்ளூராட்சி நிறுவனங்களில் செயற் குழுக்களின் நடவடிக்கைகள் கட்டளைச் சட்டங்களால் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, நிதி மற்றும் கொள்கை உருவாக்க செயற்குழு, வீட்டுவசதி மற்றும் சமூக மேம்பாட்டு செயற்குழு, தொழில்துறை சேவைகள் செயற்குழு, சுற்றுச்சூழல் மற்றும் வசதிகள் செயற்குழு எனக் கட்டாயம் நான்கு செயற்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும், அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப கவனத்தில் கொள்ள வேண்டிய மற்ற விடயங்கள் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவன அதிகாரிகளுக்கு அது தொடர்பான செயற்குழுக்களை நியமிக்கும் உரிமை காணப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைந்த குளியாபிட்டிய நகரசபையில், குறித்த வருடங்களில் 04 பிரதான செயற்குழுக்கள் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. அங்கு நிதிக்குழுவின் தலைவர் பதவி மாறாமல் தொடர்ந்து அதே பதவியில் இருந்ததுடன் நகர சபையின் தலைவர் ஏ.எம்.லக்ஷ்மன் அதிகாரி தொடர்ந்து அனைத்து வருடங்களிலும் அந்தச் செயற்குழுவில் தலைவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. மற்ற மூன்று செயற்குழுக்களின் தலைவர் பதவி ஒவ்வொரு ஆண்டும் மாற்றப்பட்டுள்ளதுடன் வருடத்தில் பலமுறை செயற்குழுவை நடைமுறைப்படுத்தி அங்கு காணப்படும் பல பிரச்சினைகள் தொடர்பில் பரிந்துரைகளைப் பொதுக்குழுவிற்கு முன்வைத்துள்ளமை பாராட்டப்படக் கூடிய விடயமாகும். செயற்குழுக்களில் குடிமக்கள் பங்கேற்பது என்பது கட்டாயம் காணப்படவேண்டிய விடயமாகக் காணப்படும் அதேவேளை, சுற்றாடல்  செயற்குழுவைத் தவிர, மற்ற செயற்குழுக்களுக்குக் குடிமக்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தந்த ஆண்டுகளில், செயற்குழுக்கள் பின்வருமாறு கூடின:

நிதி செயற்குழுவீடமைப்பு மற்றும் சமூகக் செயற்குழுதொழில்துறை சேவைகள் செயற்குழுசுற்றுச்சூழல் செயற்குழு
201807080705
201912120809
202012110711
202112100808
202212101206

தோல்வியுற்ற சந்தர்ப்பங்கள்

இந்தக் காலாண்டில் (2018-2023) நகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய திட்டமாகக்  “குளியாபிட்டிய நகரசபை புதிய பொதுச்சந்தை மற்றும் பல்நோக்கு கட்டிடம் நிர்மாணம்” கருதப்படுவதுடன் , இதற்காக இதுவரை 69 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் இதுவரை கட்டுமான பணிகளை முடிக்க இயலவில்லை. இந்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் இக்கட்டடத்தை திறக்க நகர சபை எதிர்பார்த்திருந்த நிலையில், நிர்மாணப் பணிகள் நிறைவடையாத காரணத்தினால் அடுத்த வருடம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

குளியாப்பிட்டியில் புதிய பொதுச் சந்தை மற்றும் பல்நோக்குக் கட்டடம் அமைப்பது தொடர்பாக கணக்காய்வு விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன் இந்தத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வை நகரசபை மேற்கொள்ளாமல், திட்ட அறிக்கையை மாத்திரம்  தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது. மேலும், இத்திட்டத்தின் பொறியியல் மதிப்பீடு விலை 996 மில்லியன் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், ஒப்பந்தம் கைச்சாத்திடும் உடன்படிக்கையில்  விலை 1089 மில்லியன் ரூபாவாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை கணக்காய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தில் விலை மாறுபாடுகள் மற்றும் பணம் செலுத்தும் நடைமுறைகள் பின்பற்றப்படாத பல சந்தர்ப்பங்கள் கணக்காய்வில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால், இதுவரை நகர சபையால் கட்டடப் பணிகளை முடிக்க இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நகர சபையின் வருமானம் மற்றும் செலவினம்

20182019202020212021
உண்மையான வருமானம் (ரூபாய்)167952777166554093182840984165799990183013458
உண்மையான செலவு (ரூ.)129183068209016541727518393949764556457785625

ஆட்சியாளர்களின் கருத்துக்கள்

நகர சபையின் செயற்பாடுகள் மற்றும் கடந்த காலம் குறித்து முன்னாள் தலைவர் லக்ஷ்மன் அதிகாரி என்பவரிடம் வினவியபோது,  ​​இம்முறை உள்ளூராட்சிக்கான காலப்பகுதி சவாலான காலகட்டமாக இருந்த போதிலும் அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முயற்சித்ததாக குறிப்பிட்டார். ஈஸ்டர் தாக்குதல், கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடி போன்றவற்றுக்கு முகங்கொடுத்ததன் காரணமாக நகர சபை திட்டமிட்ட இலக்குகளை அடைய முடியாத போதிலும், முடிந்த வரை நகர சபையை வெற்றிப்பாதையில் வழிநடத்தியதாக அவர் குறிப்பிட்டார். மேற்குறிப்பிட்ட காரணங்களால் திட்டமிட்டபடி பல்நோக்கு கட்டிடத்தைக் கட்டி முடிக்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

ஏனைய உள்ளூராட்சி சபைகளுடன் ஒப்பிடுகையில் குளியாபிட்டிய நகர சபை மிகவும் வெற்றிகரமாகச் செயற்பட்டதாக இந்தக் காலப்பகுதியில் நகர சபையின் செயலாளராகக் கடமையாற்றிய திரு.எச்.எம்.பி.கே.ஹேரத் குறிப்பிடுகின்றார். சவால்களுக்கு மத்தியில் அனைத்து வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளையும் அமுல்படுத்த நகர சபை முயற்சித்ததாக அவர் சுட்டிக்காட்டினார். நகர சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டதன் காரணமாகவே தேசிய உற்பத்தித்திறன் விருது, பசுமை விருது போன்றவற்றை நகர சபைக்குப் பெற முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நகர சபையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடம் இவ்வருட நகர சபையின் காலம்குறித்து வினவியபோது, ​​நகர சபை முடிந்தவரை சிறப்பாகச் செயற்பட்டதாகத் தெரிவித்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நகர சபை செயற்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

நகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் நகர சபை எல்லைக்குள் வாழும் பொது மக்கள் எவ்விதமான தீவிர  கண்டனத்தையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் நகர சபைக்குச் சாதகமாகக் கருத்து தெரிவிக்கின்றனர். நகர சபையின் செயற்குழுக்கள் தொடர்பில் அவர்களுக்கு எந்த விதமான கருத்தும் தற்போதைக்கு தெரியாது என்பதே நிதர்சனமாகும். எவ்வாறாயினும், அடுத்த நகர சபையைத் திறமையான நகர சபையாக மாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் காணப்படுகின்றது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts