உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை! #TruthNeverDies
நவம்பர் 2 அன்று, ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு எழுதப்பட்டது
மொஹமட் பைரூஸ்
“ஒவ்வொரு வருடமும் ஒரு ஊடகவியலாளர் புலிட்சர் விருது பெறுகிறார். ஆனால் நூறு ஊடகவியலாளர்கள் துப்பாக்கியால் சுடப்படுகிறார்கள்”
– ஜேம்ஸ் ரைட் ஃபோலி (James Wright Foley) அமெரிக்க புகைப்பட ஊடகவியலாளர். 2012 இல் சிரியாவில் பணியின்போது ஆயுததாரிகளால் பணயக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார். குரலற்றவர்களுக்காக குரல் கொடுப்பது தனது தார்மீகக் கடமை என்பதை நம்பிச் செயற்பட்டவர் ஃபோலி.
– மிரோஸ்லாவா ப்ரீச் (Miroslava Breach) மெக்சிகோ நாட்டு ஊடகவியலாளர். இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர், 2017 இல் காரினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். போதைப் பொருள் கடத்தல், குற்றச்செயல்கள், ஊழல் மோசடிகளை துணிச்சசோடு அறிக்கையிட்டவர் அவர்.
– கௌரி லங்கேஷ் (Gauri Lankesh) இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர். மத கடும்போக்குவாதிகளுக்கு எதிராக துணிச்சலாக எழுதி வந்தவர். 2017 இல் தனது வீட்டுக்கு முன்பாக வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
– மொஹமட் அல் அப்ஸி (Mohamed Al-Absi) யெமன் நாட்டு ஊடகவியலாளர். 2017 இல் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார்.
– சமிம் பராமாஸ் (Samim Faramarz) ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி ஊடகவியலாளராக பணியாற்றியவர். 2018 இல் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பவம் ஒன்றை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கையில் இடம்பெற்;ற இரண்டாவது குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தார்.
– டானிஷ் சித்தீக்கி (Danish Siddiqui) புலிட்சர் விருது வென்ற உலகின் மிகச் சிறந்த புகைப்பட ஊடகவியலாளர். இந்தியாவைச் சேர்ந்த இவர் 2021 ஜுலையில் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மோதலின் இடையில் சிக்கி உயிரிழந்தார்.
உலகில் நான்கு நாட்களுக்கு ஒரு தடவை ஒரு ஊடகவியலாளர் கொல்லப்படுவதாக யுனெஸ்கோ நிறுவனத்தின் ஆய்வொன்று கூறுகிறது. அவ்வாறு கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியல் மிக நீண்டது. மேலுள்ளவை அவர்களில் மிகச் சிலரது பெயர்களே.
யுனெஸ்கோ நிறுவனத்தின் தரவுகளுக்கமைய 2006 முதல் 2020 வரை உலகெங்கும் 1200க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். எனினும் இவ்வாறான கொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் 10 இல் 9 பேர் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர். இவ்வாறு குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க அனுமதிப்பதானது மென் மேலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் கொலைகளும் அதிகரிக்கவே வழிவகுக்கிறது.
இதுகுறித்து மக்களை அறிவூட்டும் நோக்கிலும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் வருடாந்தம் நவம்பர் 02 ஆம் திகதி “ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையிலிருந்து விலக்களிப்பதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினம்” (International Day to End Impunity for Crimes against Journalists) அனுஷ்டிக்கப்படுகிறது. இத்தினத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் “ஊடகவியலாளரைப் பாதுகாப்போம், உண்மையைப் பாதுகாப்போம்” என்பதாகும்.
‘உண்மை ஒரு போதும் உறங்குவதில்லை’ என்பார்கள். ஊடகவியலாளர்களைக் கொலை செய்வதன் மூலம் அவர்களோடு சேர்த்து உண்மையையும் குழிதோண்டிப் புதைக்க முடியும் என கொலையாளிகள் கருதுகிறார்கள். எனினும் அதற்கு நாம் இடமளிக்க கூடாது. கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நாம் அளிக்கும் மிகச் சிறந்த விருது அவர்கள் செய்த ‘அதிகாரத்துக்கு எதிராக உண்மையை உரத்துப் பேசுகின்ற’ பணியைக் கைவிடாது தொடர்ந்தும் முன்னெடுப்பதும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதியை நிலைநாட்டுவதுமாகும்.
மக்கள் நியாய சபை
படுகொலை செய்யப்பட்ட முன்னணி ஊடகவியலாளர்கள் சிலர் தொடர்பாக இன்று 2021 நவம்பர் 02 ஆம் திகதி நெதர்லாந்து ஹேக் நகரில் அமைந்துள்ள “ஊடகவியலாளர்களின் கொலை தொடர்பான மக்கள் நியாய சபை” (People’s Tribunal on the Murder of Journalists)விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. (இன்றைய அமர்வை https://ptmurderofjournalists.org/ இணைப்பில் நேரடியாக பார்வையிடலாம்)
இந்த மக்கள் நியாய சபையானது சர்வதேச சட்ட மீறல்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அரசாங்கங்களை பொறுப்புக் கூறும்படியாக அழுத்தம் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் முறையான சான்றுகள் பதிவை உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் அவர்களின் கதைகளைப் பதிவு செய்தல் ஆகியவற்றில் மக்கள் நியாய சபை முக்கிய பங்கு வகிக்கிறது.
சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர்; லசந்த விக்ரமதுங்க, மிகுவல் ஏஞ்சல் லோபஸ் வெலாஸ்கோ மற்றும் நபில் அல்-ஷர்பாஜி ஆகியோரின் கொலைகளுக்கு உரிய நீதி வழங்கத்தவறியமைக்காக இலங்கை, மெக்ஸிகோ மற்றும் சிரியாவின் அரசாங்கங்களுக்கு எதிராக மக்கள் நியாய சபை இதன்போது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃப்ரீ பிரஸ் லிமிடெட் (FPU), எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு (RSF) மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (CPJ) ஆகியவற்றின் வேண்டுகோளின் பேரில், மக்கள் நியாய சபை வழக்கை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்துள்ளது.
இலங்கை நிலைவரம்
எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் வருடாந்த ஊடக சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 178 நாடுகளில் 127 ஆவது இடத்தில் உள்ளது. இது உலகில் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் நெருக்கடிமிக்க நாடுகளில் இலங்கையும் ஒன்று என்ற செய்தியை உலகுக்குச் சொல்கிறது.
ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் (CPJ) புள்ளிவிபரங்களின் படி 1992 முதல் இலங்கையில் 19 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் ஜனநாயகத்திற்கான இலங்கை ஊடகவியலாளர்கள் (JDS) அமைப்பின் தரவுகளின் படி 2004 முதல் 2010 வரை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் உள்ளடங்கலாக கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆகும்.
அய்யாத்துரை நடேசன் (2004), தர்மரத்தினம் சிவராம் (2005), சுப்ரமணியம் சுகிர்தராஜன் (2006), சம்பத் லக்மால் டி சில்வா (2006), லசந்த விக்ரமதுங்க (2009) ஆகியோர் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுள் முக்கியமானவர்கள். 2008 இல் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார். 2009 இல் உபாலி தென்னகோன் தாக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டார்.
ஊடகவியலாளர்கள் மீதான தொடர் படுகொலைகள் மற்றும் தாக்குதல்கள் என்பன மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் அவரது சகோதரரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகவமு; பதவி வகித்த காலத்திலேயே பரவலாக இடம்பெற்றன. எனினும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான எந்தவித ஆக்கபூர்மவான முயற்சிகளும் ராஜபக்ஷ சகோதரர்களால் அப்போது முன்னெடுக்கப்படவில்லை. கண்துடைப்புக்காக ஒரு சில இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்ட போதிலும் பின்னர் அவர்கள் ஆதாரங்களில்லை என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கம், சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு நீதி பெற்றுத் தருவதை தனது பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக முன்னிறுத்தியிருந்தது. எனினும் அந்த அரசாங்கத்தின் 5 வருட ஆட்சிக் காலத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது போன்று காண்பிக்கப்பட்ட போதிலும் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. அன்று யாருடைய கைகளில் அதிகாரம் இருந்தபோது இப் படுகொலைகள் இடம்பெற்றனவோ இன்று அதே தரப்பினரே மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளனர். இந் நிலையில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கும் என்றிருந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளும் தவிடுபொடியாகியுள்ளன.
2010 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான கொலைச் சம்பவங்கள் இடம்பெறாவிடினும் அச்சுறுத்தல்களும் கண்காணிப்புகளும் தொடரவே செய்கின்றன. குறிப்பாக வடக்கு கிழக்கில் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்படுவதுடன் அவ்வப்போது விசாரணைகளுக்கும் அழைக்கப்படுகிறார்கள். 2021 செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் ஊடக சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலான 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கத்தின் ‘ஊடக சுதந்திர கண்காணிப்பு அறிக்கை’ கூறுகிறது. அம்பாறை மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் பொலிசாரால் தாக்கப்பட்டமை, மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸ் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டமை, சதொசவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து அறிக்கையிட்ட மூன்று தேசிய பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளுக்கு அழைத்தமை ஆகிய இவற்றுள் முக்கியமானவையாகும்.
“இலங்கையில் தற்போது ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதா அல்லது சுய தணிக்கையைக் கடைப்பிடிப்பதா என்ற நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளார்கள். ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.” என நீதிக்கும் பொறுப்புக் கூறலுக்குமான நிலையத்தின் சமீபத்தைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவேதான் இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான படுகொலைகள், தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து நீதியான முறையில் விசாரணைகளை நடாத்தி குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான பொறிமுறை ஒன்று வகுக்கப்பட வேண்டும். அதற்காக குரல்கள் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். இந்த நோக்கத்திற்கென்றே அனுஷ்டிக்கப்படுகின்ற இன்றைய “ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையிலிருந்து விலக்களிப்பதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினத்தில்’ மறைந்த நமது சக ஊடகவியலாளர்கள் உண்மையைப் பாதுகாக்க செய்த தியாகம் நினைவுகூரப்பட வேண்டும். அத்துடன் அவர்களுக்கு நீதி கிடைக்கவும் குரல் கொடுக்க வேண்டும்.
“தண்டனையிலிருந்து விலக்களிப்பதானது கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுப்பதுடன் உலகெங்கும் மோசமடைந்து வரும் மோதல்கள் மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் சிதைந்துள்ளமை ஆகியவற்றின் அறிகுறியும் ஆகும். கடுமையான மனித உரிமை மீறல்கள், ஊழல்கள் மற்றும் குற்றங்களை மூடிமறைப்பதன் மூலம் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து விலக்குப் பெறுவதானது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது” என யுனெஸ்கோ கவலை வெளியிட்டுள்ளது. அரசாங்கங்கள், சிவில் சமூகம், ஊடகங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் அக்கறையுள்ள அனைவரும் தண்டனையிலிருந்து விலக்களிப்பதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உலகளாவிய முயற்சிகளில் கைகோர்க்க வேண்டும் என்பதே இத்தினத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுவதாகும்.
இவ்வருட சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு, அதிகாரத்தை நோக்கி துணிச்சலாக உண்மையைப் பேசிய இரு ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டமை இவ்வாறான ஊடக உரிமை செயற்பாட்டாளர்களுக்கு கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரமாகும். பிலிப்பைன்ஸ் ஊடகவியலாளர் மரியா ரெஸ்ஸா (Maria Ressa), ரஷ்யாவின் டிமிட்ரி முரடோவ் (Dmitry Muratov) ஆகியோருக்கே இவ்விருது கிடைக்கப் பெற்றுள்ளது. மரியா ரெஸ்ஸா, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டவும் பாடுபட்டவர். டிமிட்ரி முரடோவ், ரஷ்ய அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துவதற்காக ஊடக கட்டமைப்புகளை ஸ்தாபித்து அவற்றை வெற்றிகரமாக முன்னெடுத்து வருபவர். இவ்விருது உலகெங்கும் உண்மைக்காக தம்மை அர்ப்பணித்துச் செயற்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கும் ஊடக உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் நிச்சயம் மிகுந்த உந்துசக்தியை கொடுத்திருக்கிறது எனலாம்.