உணர்திறன் – நேரத்தின் அவசியம்
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் உண்மையான பொருள் உணர்திறன் ஆகும். உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கான நினைவுச் சின்னமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் நினைவுத் தூபியொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லை அதன் துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா ஜனவரி 11ஆம் திகதி நாட்டிவைத்தார்.
அதற்கு முன்னதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு தடையாகக் காணப்பட்டதால் அதை அகற்றுவதற்கு ஜனவரி 8ஆம் திகதி பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா உத்தரவிட்டிருந்தார். 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்ட அந்த நினைவுச்சின்னத்தை அகற்றுவதற்காக பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா குறிப்பிட்ட காரணத்தை ஆதரிக்கும் வகையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க “அமைதியின் நினைவுச்சின்னங்களே எமக்குத் தேவை, போர் நினைவுச்சின்னங்கள் அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இச்சம்பவங்களைக் கண்டு மிகவும் வேதனையடைந்ததாக ஐக்கிய இராஜ்ஜியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான விம்பிள்டன் பிரபு அஹமட் கூறியுள்ளார். இலங்கையில் யுத்தத்தின்போது துன்பகரமாக இறந்தவர்களை நினைவுகூரும் இயலுமை இருப்பது அவசியம் என்றும் கடந்தகால வடுக்களை ஆற்றவும் நல்லிணக்கத்தை ஆதரிக்கவும் அது உதவும் என்றும் விம்பிள்டன் பிரபு மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான திட்டமொன்றை இலங்கை முன்னெடுத்துச் செல்லுமென எதிர்பார்க்கப்பட்டால், இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கை எதற்காக? வடக்கிலிருந்து தெற்கு வரை படையினர் மற்றும் அரசாங்கத்தால் நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டன. அவை தமிழ் நினைவுச்சின்னங்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை. அப்படியாயின், இனப்பிரச்சினையால் ஏற்பட்ட மோதலில் தமிழர்கள் உயிரிழக்கவில்லையா?
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நாட்டின் வடக்குப் பகுதியில் சுமார் 30 வருடங்களாக நீடித்த மோசமான உள்நாட்டு யுத்தத்தில் ஏறத்தாழ அனைத்து நினைவுச் சின்னங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இது தமிழ் சமூகத்தின் மனதில் அழியாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் சிலர் உள்நாட்டு யுத்தத்தில் தமது குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை இழந்துள்ளனர்.
ஒரு நினைவுச்சின்னத்தில் என்ன உள்ளதென மக்கள் வினவலாம். அது ஒரு உயிரற்ற பொருளாகும். உண்மை என்னவென்றால், மரணித்த தமது அன்புக்குரியவர்களை நினைவூட்டும் ஒரே நினைவுச்சின்னம் அதுவாகும்.
அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அமைதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கேள்வியை பெரிதாக கருத்திற்கொள்ளவில்லை. அவர்கள் சாக்கு போக்குகளை கூறுகின்றார்களே தவிர அதன் தீவிர தன்மையை நிவர்த்திக்காமல் உள்ளனர். சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைப் பற்றி பேசுவது எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் மோதலில் உயிர்நீத்த அன்புக்குரியவர்களை நினைவுகூருவது முக்கியமானது என்பதை மோதல் மற்றும் சமாதானம் பற்றி கற்கும் எந்தவொரு மாணவரும் ஏற்றுக்கொள்வார்கள்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீட்டுச் சட்டமூலம் என்பன காகிதத்தில் உள்ளதே தவிர இன்னும் செயற்படுத்தப்படவில்லை. கசப்பு மற்றும் வெறுப்பினால் எரியும் காயங்களை குணப்படுத்தும் தைலங்களாக உதவ இவை அவசியம்.
இந்நடவடிக்கைகளுடன், கோபம் மற்றும் வெறுப்புணர்வு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தியுள்ளார். கோபம் மற்றும் வெறுப்புணர்வு அதிகரித்திருந்தால் கடந்த பல தசாப்தங்களை நினைவூட்டும் வகையிலான வன்முறைக்கு வழிவகுத்திருக்கும்.