Uncategorized

இளைஞர்களை பலியெடுக்கும் போதைப்பொருள் பாவனை

 –    சேனத் ஸ்ரீமால்

நாட்டின் ஊடகங்களின் அறிக்கையிடல் குறித்து அவதானம் செலுத்தினால் போதைப்பொருள் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டு நாளாந்தம் இடம்பெறும் மனித படுகொலைகள்,  சமூக விரோத செயற்பாடுகளை அறிந்துக் கொள்ள முடியும். அதேபோல் முகப்பு புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் போதைப்பொருள் பாவனையுடனான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான அறிக்கையிடலை கணக்கிட்டால் அதன் எண்ணிக்கை அதிகளவில் காணப்படும். இந்த பாரதூரமான சமூக அழிவு மற்றும் அதற்கான தீர்வு குறித்து ஆராய்வது காலத்தின் கட்டாயமாகும்.

நவீன நூற்றாண்டில் இளம் தலைமுறையினர் முகங்கொடுக்க நேரிட்டுள்ள பல்வேறுப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் உளவியல்  பிரச்சினைகளுக்கு மத்தியில் போதைப்பொருள் பாவனை பாரிய சவாலாக காணப்படுகிறது. இலங்கையில் இளம் தலைமுறையினர் மத்தியில் போதைப்பொருள் பாவனை சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில், அதனால்  சமூக கட்டமைப்பிலும் பல  பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. இந்த நிலைமைக்கான பிரதான காரணிகளை அடையாளங்கண்டு தீர்வு காண்பது  கட்டாயமானது.

நீதிமன்ற அறிக்கைகளுக்கு அமைய, இலங்கையில் இளைஞர்களுக்கிடையில் போதைப்பொருள் பாவனை 10 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. அவற்றில் கொக்கைன், போதைப்பொருள் குழிசைகள் மற்றும் சட்டவிரோத புகைத்தல் பொருட்கள் பிரபல்யமடைந்துள்ளன. (ஜயவர்தன 2023),  இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் உளவியல் ஆரோக்கியத்துக்கு போதைப்பொருள் பாவனை கேடு விளைவிக்கிறது. அத்துடன் அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்படுகிறது.

இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுவதற்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. பலமான குடும்ப உறவு அதாவது பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கிடையில் தொடர்பின்மை,  குடும்ப நிலையற்றத்தன்மை (  தாய் அல்லது தந்தையின் பிரிவு,  வெளிநாட்டுக்கு செல்லல்,  சித்தி அல்லது சித்தப்பாவின் பாதுகாப்பில் இருத்தல், தாய் அல்லது தந்தையின் இறப்பு)  பொருளாதார ஏற்றத்தாழ்வு,  மற்றும் கல்வி பின்னடைவு உட்பட உளவியல் பாதிப்பு உள்ளிட்ட காரணிகளால் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்.(நிலனி ,2011),  வெளிவாரியாக செல்வாக்கு செலுத்தும் காரணிகளில் நண்பர்களின் அழுத்தம் மற்றும் வயதுக்கு அதிகமான நண்பர்களுடன் பழகுதல், வாழும் பிரதேசம் மற்றும் சூழல் உள்ளிட்ட இடைத் தொடர்புகளும் முக்கியமானதாக காணப்படுகின்றன.

போதைப்பொருளை பாவிக்கும் இளைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், சமூக வாழ்க்கைக்கும் பாரதூரமான பிரச்சினைகள் தோற்றம் பெறும். உடலியல் ரீதியிலான பாதிப்பு, உளவியல் பாதிப்பு, கல்வி சவால் மற்றும் தொழில் வாய்ப்புக்களை இழத்தல், மற்றும் குற்றங்கள் அதிகரித்தல் ஆகியன பிரதான பெறுபேறுகளாக அமையும். (பெரேரா 2022). இவ்வாறான தாக்கங்கள் சமூக நிலையேறான தன்மைக்கும், சமூக அபிவிருத்திக்கும் பாரியதொரு தடையாக காணப்படுகிறது.

போதைப்பொருள் ஒழிப்புக்கு அரசாங்கத்தின் மட்டத்திலும், அரச சார்பற்ற அமைப்புக்கள் மட்டத்திலும் பல்வேறுப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சமூக விழிப்புணர்வூட்டலை அதிகரித்தல், கல்வி செயற்திட்டங்கள் மற்றும் சட்டத்தின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்தல் அவற்றில்   பிரதானவையாக குறிப்பிட முடியும். (கொடுகொட 2023). பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் போதைப்பொருள் பாவனை  தொடர்பில் விரிவான தெளிவுப்படுத்தல் செயற்திட்டத்தை ஒழுங்கமைத்தல், குடும்ப உறவு நிலையை பலப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் இதன் நோக்கமாகும்.

அரச , குடும்ப மற்றும் நிறுவன மட்டங்களில் ஒன்றிணைந்து செயற்படுவது போதைப்பொருள் ஒழிப்பை வெற்றிக் கொள்வதற்கு அவசியமானதாக அமையும். சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் கடுமையாக அமுல்படுத்த வேண்டும். கல்வி மட்டத்தில் போதுமான ஆலோசனைகளை வழங்கல் மற்றும் சமூக சேவைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் ஊடாக வெற்றிகரமான பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும். (விக்கிரமசிங்க 2023), குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு போதைப்பொருள் பாவனையில் இருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதற்கு உதவும். பாடசாலை  மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் இந்த செயற்பாடுகளுக்கு பிரதான பங்கு வகிக்கின்றன. (ராத்து 2022)

போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அல்லது  இலங்கை பொலிஸூடன் ஒன்றிணைந்து 14 மாவட்டங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. மாவட்டம், பிரதேசம், கிராமம் என்ற அடிப்படையில் 15,000 இற்கும் அதிகமான போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் நாடளாவிய ரீதியில் சிறந்த முறையில் செயற்படுகின்றன. அத்துடன்  நாடளாவிய ரீதியில் 72,000 போதைப்பொருள் ஒழிப்பு தொழில்நுட்ப மையங்கள் இயங்குகின்றன. இவை போதைப்பொருள் ஒழிப்பு பணிகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றன.

 இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கைகளை வெற்றிப் பெறச் செய்யும் வகையில் புனர்வாழ்வு மத்திய நிலையங்கள் செயற்படுகின்றன. இந்த நிறுவனங்களின் செயற்திட்டங்களின் ஊடாக  சுதந்திரமான நாட்டை உருவாக்கும் அடித்தளமிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் ஊடாக  இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி, உளவியல் ஆலோசனைகள், மற்றும் புதிய  சிந்தனைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையை சிறந்த முறையில் மேம்படுத்துவதற்கான பங்களிப்பு வழங்கப்படுகின்றன.( செனவிய 2023)

போதைப்பொருள் ஒழிப்புக்கு மேலும் உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் வேண்டும். புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி இளைஞர்களுக்கான தொலைநோக்கு திட்ட வாய்ப்புக்கள் மற்றும் மாற்று வழிமுறைகள் வழங்குவதுடன் சமூக நிவாரண கட்டமைப்பை பலப்படுத்தி இந்த சிக்கல்களுக்கு சிறந்த முறையில் தீர்வு காண முடியும். (தமித் 2023)

இவ்வாறான முன்னேற்றம் காணப்பட்டாலும் கிராமிய புறங்களில் போதைப்பொருள் பாவனையில் மாற்றம் ஏற்படவில்லை. சன நெரிசல் அதிகமாக உள்ள  பிரதேசம் முதல் கிராமிய பிரதேசம் வரை, கிராமிய பிரதேசம் முதல் சன நெரிசல் பிரதேசம் வரை போதைப்பொருள் விநியோகம் மற்றும் வியாபாரம்  இன்றும் இடம்பெறுவதுடன், குறைந்தளவிலான தொகையே பாதுகாப்பு தரப்பினரிடம் அகப்படுகிறது.

ஒருசில சந்தர்ப்பங்களில் சமூகத்தில் உயரிய தரப்பினர் மற்றும் அரசியல் அதிகாரம் உள்ளவர்களின் ஒத்துழைப்புடன் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான காரணிகளால் சமூகத்தில் இரகசியமான முறையில் போதைப்பொருள் வியாபாரங்கள் இடம்பெறுகின்றன.

இக்காரணிகளால் குடும்பங்களில் முரண்பாடு, வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்முறை, முறைக்கேடு மற்றும் துஸ்பிரயோகம் உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளுக்கு பொது மக்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

அதேபோல் சிறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஏழ்மை  நிலையில் உள்ளவர்களின் வருமானத்தை திருடுதல், வீட்டு பாவனை பொருட்களை விற்றல்,  தாய் அல்லது சகோதரிகள் மீது தாக்குதல் நடத்தி  அவர்களின் பெறுமதியான பொருட்களை அபகரித்தல்,  பிற வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருட்கள் மற்றும் ஆபரணங்களை திருடி அவற்றை பிற தரப்பினருக்கு விற்றல் ஆகிய செயற்பாடுகளிலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் ஈடுபடுகிறார்கள்.  சில சந்தர்ப்பங்களில் தமது இலக்கு நிறைவேறாவிடின் மனித படுகொலைகளிலும் ஈடுபடுவார்கள்.

இந்த காரணிகளால் குடும்பங்களில் மாத்திரமல்ல கிராமம் மற்றும் சமூகத்தின் முன்னிலையில் அவர்கள் தொடர்பில் தவறான நிலைப்பாடு தோற்றம் பெறும். சமூகத்தின் அங்கீகாரமும் இல்லாதொழியும்.  சில சந்தர்ப்பங்களில் சமூகத்தில் இருந்து புறக்கணிக்கும் நிலையும் காணப்படும். இவ்வாறான தன்மைகளை கிராம புறங்களில் அதிகளவில் அவதானிக்க முடியும். நகர் புறங்களின் நிலைமை இதனை காட்டிலும் மாறுப்பட்டது. நகர் பகுதிகளில் சன நெரிசல் அதிகளவில் காணப்படுவதால் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள்  பொருட்களை திருடுதல், கொள்ளையடித்தல் ஆகிய செயற்பாடுகளில் சூட்சமமான முறையில் ஈடுபடுவர். பெரும்பாலான இளம் பெண்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதுடன் அவர்கள் பாலியல் தொழில்களிலும் ஈடுபடும் நிலை காணப்படுகிறது.

மேலும் அரச நிர்வாக இயந்திரத்தில் தலையீட்டை விரிவுப்படுத்தி, இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், சிறந்த பெறுபேற்றை அடைந்துக் கொள்ள முடியும்.

இளைஞர்கள், வயது முதிர்ந்தோர் அல்லது சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் கருத்திட்டங்களை முன்னெடுத்தல்.

பொருளாதாரம் மற்றும் சமூக செயற்பாடுகள் ஊடாக இளம் தலைமுறையினருக்கு அதிகளவில் வாய்ப்பளித்து  போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான ஈர்ப்பை குறைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை கௌரவமான நிலைக்கு மாற்றியமைத்தல் மற்றும் அதற்கான சமூக வசதிகளை ஏற்படுத்தல்.

பொருளாதாரத்தின் ஊடாக அவர்களை பலப்படுத்தல்.

இளம் தலைமுறையினர் மத்தியிலான போதைப்பொருள் பாவனை அவர்களின் சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை அபிவிருத்திக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இளம் தலைமுறையினர் சமூகத்தின் முக்கிய குழுவினராக கருதப்பட வேண்டும். அவர்களின் விருப்பு மற்றும் வெறுப்புக்களை கட்டுப்படுத்தல் அத்தியாவசியமானது. போதைப்பொருள் பாவனையில் இருந்து அவர்களை மீட்பதற்கு முறையான வழிநடத்தல்களை வழங்குவது கட்டாயமானது.

உசாத்துணை நூல்கள்

–    சிறிநாயக்க ,க (2022). இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை :சமூக மற்றும் தனிப்பட்ட அழுத்தம்.கொழும்பு : சமூக நிறுவக வெளியீடு

 –    ஜயவர்தன. ஏ. (2023). ‘ இலங்கையின் போதைப்பொருள் குற்றங்களின் போக்கு. ‘தேசிய பாதுகாப்பு நுர்ல் ,15 (2) -45-60

–    நிலனி , ச (2021). போதைப்பொருள் மற்றும் இளம் தலைமுறையினர். கண்டி கல்வி வெளியீடு

–    பெரேரா. ம (2022). ‘போதைப்பொருள் பாவனையால் இளைஞர்களின் மத மற்றும் உளவியல் ஆரோக்கியம்’. சமூக சுகாதார ஆராய்ச்சி ,8(1), 25- 40

–    கொடுகொட. ஆர். (2023) ‘போதைப்பொருள் ஒழிப்புக்கான புதிய திட்டம். காலி : முன்னேற்ற வெளியீடு

–    விக்கிரமசிங்க. ப (2023) ‘அரச போதைப்பொருள் ஒழிப்பு கொள்கை : நடைமுறை நிலைமை அல்லது எதிர்கால திட்டங்கள்.’ பொலிடிகா ஜனரல், 12(3), 78-92

–    ராத்து, ஹ (2022) .பாடசாலை அல்லது போதைப்பொருள் ஒழிப்பு.  கண்டி : கல்வி வெளியீடு

–    செனவிய, ல (2023) ‘ கொழும்பு மற்றும் காலி பகுதிகளி;ல் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டம். 

நிலைபேறு மற்றும் சவால்கள் ‘தேசிய சமூக  நூல்  , 10 (4), 50 -65

 –    தமித் ,க (2023) இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு : போதைப்பொருள் ஒழிப்புக்கான புதிய தொழில்நுட்பம். கொழும்பு வெளியீடு

 –    ஹெட்டியராட்சி, கே (2019). இளம் தலைமுறையினருக்கு தாக்கம் செலுத்தும் சமூக காரணிகள். 15(3),25 -33

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts