இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால்79 வழக்குகள் மீளப்பெறப்பட்டுள்ளன
க.பிரசன்னா
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்குகளை வாபஸ் பெறுதல், வழக்குகளை தாக்கல் செய்வதில் காணப்படும் தாமதம் போன்ற விடயங்கள் இவற்றில் முக்கியமாகும். இவற்றில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அரசியல்வாதிகள், அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக 2010 – 2021 காலப்பகுதிக்குள் 85 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் மேன்முறையீட்டு உத்தியோகத்தர், பிரதிப் பணிப்பாளர் நாயகம் திருமதி சுனேத்திரா ஜயசிங்ஹ வழங்கிய (BC/PR/06/அறிக்கை) தகவல்களிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
21.02.2022 ஆம் திகதி தகவல் அதிகாரிக்கு மின்னஞ்சல் ஊடாக முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு எவ்வித பதிலும் வழங்கப்படாத நிலையில் 04.05.2022 ஆம் திகதி குறித்தளிக்கப்பட்ட அதிகாரிக்கு மேன்முறையீடு செய்யப்பட்டது. எனினும் அவற்றுக்கும் பதில் வழங்கப்படாததால் 06.06.2022 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டது.
தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவினால் (RTIC/Appeal/864/2022) குறித்த மேன்முறையீடு 16.11.2022 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் 22.02.2023 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தகவல் கோரிக்கைக்கு உரிய தகவல்களை வழங்குமாறு ஆணைக்குழுவினால் உத்தரவிடப்பட்டது.
1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தும் சட்டத்தின் மூலம் குற்றங்கள் தொடர்பில் அதிகாரம் வழங்கும் வகையில் நிரந்தரமான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினை உருவாக்கும் பொருட்டு 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதலாவது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் 1994 ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமானது. புலனாய்தல், வழக்கிடுதல் மற்றும் தவிர்த்தலுக்காகச் செயற்படுதல் என்பன ஆணைக்குழுவின் செயற்பாடுகளாக இருக்கின்றன.
நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் 2010 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 767 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மேல் நீதிமன்றத்தில் 550 வழக்குகளும் நீதிவான் நீதிமன்றத்தில் 217 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 5 வருட ஆட்சிக்காலப்பகுதியில் 292 வழக்குகளும் (221 – மேல் நீதிமன்றம், 71 – நீதிவான் நீதிமன்றம்) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 5 வருட ஆட்சிக்காலப்பகுதியில் 363 வழக்குகளும் (230 – மேல் நீதிமன்றம், 133 – நீதிவான் நீதிமன்றம்) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 2 வருட ஆட்சிக்காலப்பகுதியில் 112 வழக்குகளும் (99 – மேல் நீதிமன்றம், 13 – நீதிவான் நீதிமன்றம்) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை 2010 – 2021 காலப்பகுதிக்குள் அரசியல்வாதிகள், அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக 85 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மேல் நீதிமன்றத்தில் 22 வழக்குகளும் நீதிவான் நீதிமன்றத்தில் 63 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள வழக்குகள்
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் 2010 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 79 வழக்குகள் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 35 வழக்குகளும் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 44 வழக்குகளும் இவ்வாறு மீளப்பெறப்பட்டுள்ளன. மீளப்பெறப்பட்ட வழக்குகளில் 2010 – 2014 காலப்பகுதியில் 17 வழக்குகளும் 2015 – 2019 காலப்பகுதியில் 13 வழக்குகளும் 2020 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 49 வழக்குகளும் மீளப்பெறப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக 2020 – 2021 காலப்பகுதியில் மேல் நீதிமன்றத்திலிருந்து 20 வழக்குகளும் நீதிவான் நீதிமன்றத்திலிருந்து 29 வழக்குகளும் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஏனைய ஆண்டுகளில் ஆறுக்கும் குறைவான வழக்குகளே மீளப்பெறப்பட்டுள்ளன.
மேல் நீதிமன்றத்தில் இருந்து மீளப்பெறப்பட்ட வழக்குகள் மீள வழக்கு தாக்கல் செய்யும் நோக்கத்துடனும் 01/2011 நீதிமன்ற தீர்ப்புக்கிணங்கவும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மீள வழக்கு தாக்கல் செய்யும் நோக்கத்துடனும் 01/2011 நீதிமன்ற தீர்ப்புக்கிணங்கவும் கு.ந.ப.கோவை பிரிவு 186 க்கு இணங்கவும் வேறு காரணங்களுக்காகவும் வழக்குகள் மீளப்பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குகளுக்காக குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டவர்கள்
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் 2010 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 317 பேர் குற்றமிழைத்தவர்களாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் மேல் நீதிமன்றத்தில் 240 பேரும் நீதிவான் நீதிமன்றத்தில் 77 பேரும் இவ்வாறு குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 5 வருட ஆட்சிக்காலப்பகுதியில் 90 பேரும் (71 – மேல் நீதிமன்றம், 19 – நீதிவான் நீதிமன்றம்) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 5 வருட ஆட்சிக்காலப்பகுதியில் 193 பேரும் (141 – மேல் நீதிமன்றம், 52 – நீதிவான் நீதிமன்றம்) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 2 வருட ஆட்சிக்காலப்பகுதியில் 34 பேரும் (28 – மேல் நீதிமன்றம், 06 – நீதிவான் நீதிமன்றம்) இவ்வாறு குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள்
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு 2010 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 35,698 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 2022 ஆம் ஆண்டு (டிசம்பர் 08) 2300 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக அறியக்கிடைத்தது. எனினும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவை மற்றும் நிவாரணங்களை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பான தகவல்களை ஆணைக்குழு வழங்கவில்லை.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 2010 – 2014 காலப்பகுதியில் 12,828 முறைப்பாடுகளும் 2015 – 2019 காலப்பகுதியில் 16,952 முறைப்பாடுகளும் 2020 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 5921 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற 35,698 முறைப்பாடுகளில் 767 குற்றங்களுக்கே நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 79 வழக்குகள் மீளப்பெறப்பட்டுள்ளதுடன் 317 பேர் குற்றமிழைத்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதுடன் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையே இலங்கையில் காணப்படுகின்றது. இவ்வாறு இடம்பெற்ற பாரிய ஊழல்கள் நாட்டின் பொருளாதார சரிவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.