தகவலறியும் உரிமை

இலங்கை சிறைச்சாலைகளில் பெண் கைதிகளின் நிலை

ப.பிறின்சியா டிக்சி

ஆணுக்கு நிகர் பெண் என்று கூறினாலும், வாய்ப்புகள் கிடைக்கும் போது ஆண்களையும் மிஞ்சி பெண்கள் சாதித்துவிடுகின்றனர். இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் விமானத்துறை, கப்பல்துறை மற்றும் நிர்வாகத்துறை உட்பட பல்வேறு துறைகளிலும் தம்மை நிலைநாட்ட பல பெண்கள் போராடி வருகின்றனர். 

எனினும், இதற்கு எதிர்மாறாக இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கணிசமான அளவு பெண் சிறைக் கைதிகளும் உள்ளனர் என்ற தரவுகள் நமக்கு ஆச்சரியமாகவுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டு தொடர்பில் தவறிழைத்தவர்களாகவே உள்ளனர் என்பது இன்னும் ஆச்சரியம் தருவதாகவுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சிறைச்சாலைகள் தலைமையகத்தின் அத்தியட்சகரும் தகவல் அதிகாரியுமான பி.டி.எம்.ஜி.பி திஸாநாயக்க வழங்கிய பதிலில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் 203 பெண் கைதிகள் உள்ளனர். குறிப்பாக, வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவிலேயே அதிக பெண் கைதிகள் உள்ளனர். கடந்த மே மாதமளவில் முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் அடிப்படையிலேயே இத்தகவல்களை அவர் வழங்கியுள்ளார்.  

அதேவேளை, கடந்த 5 வருட காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சிறைக் கைதிகளாக இருந்த 2,087 பெண்கள் பொது மன்னிப்பில் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 2017ஆம் ஆண்டு 440 பெண்களும், 2018 ஆம் ஆண்டு 497 பெண்களும், 2019ஆம் ஆண்டு 583 பெண்களும், 2020 ஆம் ஆண்டு 416 பெண்களும் மற்றும் 2021 ஆம் ஆண்டு 151 பெண்களும் இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  

நாட்டில் பெண் சிறைக் கைதிகளில் பெருங் குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்தவர்களின் எண்ணிக்கை 2023.02.28ஆம் திகதியன்று 29ஆக இருந்துள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 2023.04.26ஆம் திகதியளவில் பெண்ணொருவர் சிறைவைக்கப்பட்டுள்ளார். 

40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட வயதுப் பிரிவுப் பெண்களே இலங்கையில் அதிகளவில் சிறையில் உள்ளனர். 

துரதிர்ஷ்டவசமாக சிறைக் கைதிகளாக உள்ள கர்ப்பிணிகள் தொடர்பிலும், குழந்தைகளுடன் சிறைக்கைதிகளாக உள்ள தாய்மார்கள் தொடர்பிலும் தகவல்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 49 பெண்கள் இலங்கையில் சிறைக்கைதிகளாக உள்ள அதேவேளை, 24 பெண்கள் போதைப்பொருள் நுகர்வு குற்றச்சாட்டில் கைதிகளாக உள்ளனர். இவ்விடயத்தை மிகவும் பாரதூரமாகவே கருதவேண்டியுள்ளது. 

போதைப்பொருள் விற்பனை மற்றும் நுகர்வு என்பன இன்று மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன.  இதற்குள் பெண்களும் சிக்கித் தவிக்கின்றனர் என்பதையே இந்தத் தகவல் படம்பிடித்துக் காட்டுகின்றது.  

கொரோனாவுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவே போதைப்பொருள்  தொழிலுக்குள்  பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தங்கள் பிள்ளைகளுக்கு உணவு மற்றும் கல்வியை வழங்க அவர்கள் இந்த சட்டவிரோத செயலுக்கு உந்தப்படுகின்றனர் என்றும் பெண் சமூக செயற்பாட்டாளர் நளினி ரட்ணராஜா தெரிவித்தார்.   

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், “வறுமை காரணமாக நிறையப் பெண்கள் சிறிய அளவில் போதைப்பொருளை விற்கின்றனர். தொழில்வாய்ப்பு இன்மை மற்றும் கல்வி அறிவின்மையும் இதற்கு முக்கிய காரணங்களாகின்றன. 

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள், கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். போதைப்பொருள் கொடுத்தால் உனக்கு இவ்வளவு பணம் தருவேன் எனும் போது அவர்கள் தங்கள் பிள்ளைக்கு உணவு, கல்வியை வழங்க வேண்டும் என்றுதான் சிந்திப்பார்கள். எனினும், அதிலுள்ள ஆபத்தை அவர்கள் சிந்திக்கத் தவறுகிறார்கள்.  

“யாரேனும் ஒருவரிடம் இதைக் கொடுத்துவிட்டு வரும்படி கூறியதைக் கேட்டு, சிலர் விடயம் தெரியாமல் இதில் சிக்கியுள்ளனர். மேலும், போதைப்பொருள் விற்பதற்கு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வீட்டில் கணவன், சகோதரன் அல்லது தந்தை யாரேனும் ஒருவர் போதைப்பொருள் வர்த்தகம் செய்பவர்களாக இருந்தால், அவர்கள் இதைக் கொண்டு போய் நீ கொடுத்துவிட்டுத்தான் வர வேண்டுமெனக் கட்டாயப்படுத்தலாம்.  

அப்பாவிப் பெண்களைத் தான் கைது செய்கின்றார்கள். 100 மில்லி கிராம், 200 மில்லி கிராம் என சிறு தொகையில் போதைப்பொருளை விற்பனை செய்பவர்களையே கைதுசெய்கின்றனர். சில சேரிப்புறப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாது இந்தத் தொழிலுக்காகவே வைத்திருக்கின்றனர். எனினும், போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வருவது யார் என்பதை தேடிப் பிடிப்பதற்கு யாரும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, பெண்களின் இவ்வாறான கைதுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால், நாட்டுக்குள் தொகையாக போதைப்பொருளை கொண்டு வருபவர்களை முதலில் கைதுசெய்ய வேண்டும். 

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் சிறைவைக்கப்பட்டுள்ள அதிகமான பெண்கள் வறிய நிலையில் உள்ளவர்களே. யாரும் கொழும்பில் உள்ள மிகவும் வசதி படைத்த பெண்கள் இல்லை. நடுத்தர வசதியுள்ள பெண்களும் இல்லை. மிகவும் பின்தங்கிய, படிக்காத சூழலில் உள்ள பெண்களையே கைது செய்து, சிறைவைத்துள்ளனர். வசதிபடைத்த பெண்களும் போதைப்பொருள் நுகர்கின்றனர். அவர்கள் பிடிபட்டால் பணத்தைக் கொடுத்து, சிறைக்குச் செல்லாது தப்பித்துக்கொள்கின்றனர். பணம் இல்லாதவர்கள் சிறைக்குச் செல்கிறார்கள்” என்று சாடினார்.  

மேலும், “பெண்கள் சிறை செல்வதில் இருந்து விடுபட வேண்டும் என்றால், அவர்களுக்கு விழிப்புணர்வு தேவை. அரசு அல்லது தொண்டு நிறுவனங்கள் இதிலுள்ள ஆபத்து குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வை வழங்க வேண்டும். பெண்கள் சிறைக்குச் சென்றால் அவர்களின் பிள்ளைகளை யார் பார்ப்பது? பிள்ளைகளின் நிலை இன்னும் மோசமாகும். எனவே, அரசு முதல் கடமையாக இவர்களுக்கான விழிப்புணர்வை முன்னெடுக்க வேண்டும். பருப்பு, சீனி என மானிய அடிப்படையில் வறிய நிலைப் பெண்களுக்கு உலருணவுப் பொருட்களை அரசு வழங்க வேண்டும்.  பெண்களுக்கு தொழில்வாய்ப்புகளை, வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பொருளாதார ரீதியாக அவர்களை வளப்படுத்தாமல் இவ்வாறான நிலையிலிருந்து பெண்களை மீட்டொடுப்பது கடினம்” என்றார்.  

சிறைக் கைதிகளை சீர்படுத்தி, அவர்கள் விடுதலையான பின்னர், மீண்டும் சமுதாயத்துடன் இணைந்து மறுவாழ்வைத் தொடங்கவும், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாத வகையில் அவர்களை மாற்றி, சிறந்த பிரஜைகளாக சமூகமயப்படுத்தலே சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தூர நோக்காக உள்ளது. 

எனவே, நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் பெண்கள் பிரிவில் வைக்கப்பட்டுள்ள பெண் சிறைக்கைதிகளின் புனர்வாழ்வுக்காக, அரச மற்றும் தனியார் கொடையாளர்களை இணைத்துக்கொண்டு, இலங்கை சிறைச்சாலைகள் தலைமையகத்தின் புனர்வாழ்வு பிரிவினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதாவது, சமய மற்றும் ஆன்மிக வேலைத்திட்டங்கள், கலாசார வேலைத்திட்டங்கள், தொழிற்பயிற்சிகள், போதைப்பொருளில் இருந்து புனர்வாழ்வளித்தல், ஆலோசனை வழங்கல், கல்வி வேலைத்திட்டங்கள், மன வளர்ச்சி வேலைத்திட்டங்கள், சுகாதார வேலைத்திட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வருடத்தில் விசேட நாட்களை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் என பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

2018 மற்றும் 2019 ஆம் ஆணடுகளில் இந்த வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. எனினும், 2020, 2021 மற்றும் 2022 முதல் பாதி வரை நாட்டில் காணப்பட்ட கொவிட் தொற்றுக் காரணமாக இந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியவில்லை என சிறைச்சாலைகள் தலைமையகத்தின் புனர்வாழ்வு பிரிவின் உதவி அத்தியட்சகர் தெரிவித்தார். 

2022 ஆம் ஆண்டு ஜுலை முதல் மேலே குறிப்பிட்ட வேலைத்திட்டங்களில் சில மாத்திரம் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி குறைந்தளவானோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது, குறித்த வேலைத்திட்டங்கள் வழமைக்குத் திரும்பியுள்ளன. 

இந்த உலகத்தில் சம உரிமைக்காகவும், தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் இன்னமும் பெண்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார். இவ்வாறான நிலையில், தற்காலத்தில் சிறைக்குச் செல்லும் பெண்களின் தொகை அதிகரிப்பதானது குடும்ப, சமூக செயற்பாடுகளை சீர்குலைக்கும். 

ஒரு பெண் சிறைக்குச் சென்றால், அதனால் அவளது குடும்பம் மற்றும் பிள்ளைகள் கடுமையாக பாதிப்பினை எதிர்நோக்க நேரிடும். இது தொடர்பில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts