கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

இலங்கை சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறதா?

பாவ்னா மோகன்

புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, இலங்கையில் இராணுவமயமாக்கல் வேகமாக விரிவடைந்து செல்வதானது நெட்டிசன்களையும் சர்வதேச சமூகத்தினரையும் ஒரே விதமான கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அண்மைய நிகழ்வுகளில் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் அனைவருக்கும் இராணுவப் பயிற்சி வழங்க வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர முன்மொழிந்தார். இராணுவப் பயிற்சியின் மூலமே ஒருவர் “வலுவாக நிற்கவும், ஆளுமையை கட்டியெழுப்பவும், தலைமைத்துவ திறன்களை வளர்க்கவும் முடியும்” என அவர் நம்புகிறார்.

இலங்கையில் இராணுவமயமாக்கல் அதிகரிப்பதானது பெப்ரவரி – மார்ச் 2021 இல் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) அமர்வில் விவாதிக்கப்படவுள்ள ஒரு முக்கிய விடயமாக அமையக் கூடும். இலங்கையின் தமிழ் சமூகம் ஒன்றுபட்டு (UNHRC) க்கு எழுதிய கடிதத்தில், ஏனைய விவகாரங்களுடன் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியான “இராணுவமயமாக்கல் மற்றும் கண்காணிப்பு” பற்றிய கவலைகளையும் முன்வைத்துள்ளது. 

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் பின்னணியில் ஆபத்தான மற்றும் புதிய நகர்வாக, வடக்கு கிழக்கில் குட்டிகல, கந்தக்காடு, நாச்சிக்குடா, பலாலி மற்றும் வெள்ளாங்குளம் உட்பட ஏனைய பகுதிகளிலும் இராணுவத்தால் நடாத்தப்படும் பண்ணைகளின் முழு செயற்பாடுகளுக்கும் பொறுப்பாகவிருக்கும் விவசாய மற்றும் கால்நடைக்கான புதிய இயக்குனர் சபையை இலங்கை இராணுவம் அறிவித்தது.

அதிகாரத்தை குவிப்பதால் ஜனநாயகத்தின் மீதான தாக்கம்

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்ற பின்னர் தற்போதைய இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை குவிப்பதில் படிப்படியாக ஈடுபட்டு வருகிறது. 

மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) தலைவராக நியமிக்கப்பட்டமை, பிரிகேடியர் சுரேஷ் சாலே நாட்டின் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) தலைவராக நியமிக்கப்பட்டமை, பாரிய மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்காவினால் கறுப்புப் பட்டியலிடப்பட்ட, யுத்தக் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, கடந்த வருடம் பெருந்தொற்று பரவல் ஏற்பட்டதிலிருந்து நாட்டில் கொவிட் 19 பரவலை முகாமைத்துவம் செய்யும் பிரதான அதிகாரமிக்க நிறுவனமான தேசிய கொவிட் 19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் (NOCPCO) தலைவராக நியமிக்கப்பட்டமை உள்ளடங்கலாக பொது நிறுவனங்களுக்கு ஏராளமான இராணுவ நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பொலிஸ் ஊடகப் பிரிவு மூடப்பட்டதுடன் அதன் ஊடக மாநாடுகளும் தற்போது பாதுகாப்பு தரப்பினாலேயே முன்னெடுக்கப்படுகிறது. பாதுகாப்பான நாடு, கட்டுக்கோப்பான, நல்லொழுக்கமிக்க, ஜனாதிபதி ராஜபக்ஷ உருவாக்கியுள்ள ஜனாதிபதி செயலணியும் முழுமுழுக்க இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்டே நிறுவப்பட்டுள்ளது.

இராணுவமயமாக்கல் மற்றும் ஜனநாயகத்திற்குமிடையிலான உறவு குறித்த ஆய்வுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2019 இல் மிலான் ஸபிரோஸ்கி (Milan Zafirovski) மேற்கொண்ட ‘‘ஒப்பீட்டு சூழலில் இராணுவவாதம் மற்றும் ஜனநாயகத்தின் குறிகாட்டிகள்: OECD நாடுகளில் இராணுவவாத போக்குகள் ஜனநாயக செயல்முறைகளில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றன 2010-2016” எனும் தலைப்பிலான ஆய்வானது இராணுவவாதமும் ஜனநாயகமும் எவ்வாறு தொடர்புபடுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்வதையும் கணிப்பதையும் நோக்கமாகக் கொண்டது – குறிப்பாக முந்தையது எவ்வாறு பிந்தையதில் செல்வாக்குச் செலுத்துகிறது என்றும் “கண்டறிதல்கள் ஜனநாயகத்திற்கான இராணுவவாத அச்சுறுத்தல் பற்றிய எச்சரிக்கையை நிரூபிக்கின்றன” என்றும் ஊகிக்கின்றது. 

எதிர்க்கட்சியை அடக்குவது மட்டுமே “நிலுவையில் உள்ளது”

“ராஜபக்ஷ அரசாங்கம் பொலிஸ் உள்ளிட்ட 30 திணைக்களங்களை பாதுகாப்பு அமைச்சின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதுடன் ஓய்வு பெற்ற மற்றும் சேவையிலுள்ள இராணுவ அதிகாரிகள், முன்னர் சிவில் நிர்வாகிகள் வகித்த ஏராளமான முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என மனித உரிமைகள் கண்காணிப்பகம்  (HRW) சமீபத்தில் வெளியிட்ட உலகளாவிய அறிக்கை உறுதிப்படுத்துகிறது. 

‘‘அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம்… சிரேஷ்ட நீதிபதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் ஊழல் தடுப்பு நிறுவனங்கள் போன்ற பிற சுயாதீன நிறுவனங்களை நியமித்தல், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை நியமித்தல், பணிநீக்கம் செய்தல் மற்றும் தேர்தலின் பின்னர் குறைந்தது இரண்டரை ஆண்டுகளில் பாராளுமன்றத்தைக் கலைத்தல் உள்ளிட்ட புதிய அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்குகிறது. திருத்தத்திற்கான மீளாய்வுகள் சில விதிகளை நீர்த்துப்போகச் செய்த அதே நேரத்தில் திருத்தங்கள் ஒட்டுமொத்த மனித உரிமை பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலைக் கணிசமாகக் குறைக்கவில்லை’’ என்றும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு எவ்வாறு ஆளப்படுகிறது என்பதைப் பொறுத்தவரை இலங்கை செல்லும் பாதை – உதாரணமாக, தனி நபரை விடவும் இனத்தை மேன்மைப்படுத்துகின்ற, தேசத்தை உயர்த்திப்பிடிக்கின்ற ஒரு ஆட்சி, அதிகாரம் குவிக்கப்பட்ட எதேச்சதிகார அரசாங்கம், கடுமையான பொருளாதார மற்றும் சமூக ஒழுங்குமுறை, அதிகாரங்களை குவித்தல், கருத்து வேறுபாடுகளை அடக்குதல் மற்றும் சிறுபான்மையினர் மீதான பாகுபாடு –  என ஒரு பாசிச தேசத்தை வரையறுக்கும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய எதிர்க்கட்சியை வலுக்கட்டாயமாக அடக்குவதற்கான எல்லையை மட்டுமே கடக்க வேண்டும். 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts