வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

இலங்கை எதிர்கொள்ளும் புதிய அச்சுறுத்தல் ; போலிச் செய்திகள்!

உலகம் இன்று எதிர்நோக்குகின்ற மிகப் பாரிய அச்சுறுத்தல்களுள் ஒன்றாக ‘போலிச் செய்தி’ உருவெடுத்துள்ளது. போலிச் செய்திகள் ஒரு புதிய உலக ஒழுங்கின்மையை (New World Disorder) உருவாக்கியுள்ளதாக தவறான தகவல்கள் குறித்த அமெரிக்க ஆய்வாளர் கலாநிதி கிளைரே வார்ட்லே குறிப்பிடுகிறார்.

 

இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. We are social நிறுவனத்தின் 2020 ஆம் ஆண்டின் ஜனவரி மாத புள்ளிவிபரங்களின்படி இலங்கையில் 6.4 மில்லியன் சமூக வலைத்தள பாவனையாளர்கள் இருக்கிறார்கள். இலங்கையின் சனத்தொகையை விடவும்  10 மில்லியன் அதிகமான  சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இவ்வாறான கையடக்கத் தொலைபேசி மற்றும் சமூக ஊடக பாவனை அதிகரிப்பானது இலங்கையில் போலிச் செய்திகள் வேகமாக பரவலடையவும் குறுகிய நேரத்தில் பெருந்திரளான மக்களைச் சென்றடையவும் காரணமாக அமைந்துள்ளன.

 

போருக்குப் பின்னரான இலங்கையில் இன, மத ரீதியான முரண்பாடுகள் கூர்மையடைவதற்கும் அதனடியாக வன்முறைகள் தோற்றம் பெறுவதற்கும் சமூக ஊடகங்களும் அவற்றினூடான போலிச் செய்திகளும் காரணமாக அமைந்துள்ளன.

 

2018 மார்ச் மாதம் அம்பாறையில் முஸ்லிம் உணவகம் ஒன்றில் தயாரிக்கப்படும் உணவுகளில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட போலிச் செய்திகளால் அங்கு வன்முறைகள் வெடித்தன. அதனைத் தொடர்ந்து கண்டி, திகனவில் வெடித்த பாரிய வன்முறைகளால் உயிரிழப்புகளுடன் பாரிய சொத்திழப்புகளும் ஏற்பட்டன. இவ்வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஒரு வார காலத்திற்கு சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சமூக ஊடகங்கள் வாயிலான போலிச் செய்தி பரிமாற்றங்களும் வெறுப்புப் பேச்சுக்களும் திகன வன்முறைகளின்போது அதிக பங்களிப்புச் செய்ததையும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு தாம் போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவில்லை என்பதையும் Facebook நிறுவனம் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்தது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்னரும் இலங்கையில் வாழும் மத சிறுபான்மையினரை இலக்கு வைத்து திட்டமிட்ட போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கு டாக்டர் ஷாபி விவகாரம் நல்ல உதாரணமாகும்.

 

அரசியல் சார்ந்த போலிச் செய்திகள் ஏனைய போலிச் செய்திகளை விட 3 மடங்கு வேகமாகப் பரவுவதாக அமெரிக்காவின் கேம்பிரிட்ஜிலுள்ள MIT Digital பொருளாதார ஆய்வு நிலையம் நடாத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.  அந்த வகையில் 2019 ஜனாதிபதித் தேர்தல், கொவிட் 19 பரவல் மற்றும் 2020 பாராளுமன்றத் தேர்தல் ஆகியன இலங்கையில் போலிச் செய்திகள் அதிகம் தாக்கம் செலுத்திய காலப்பகுதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக 2019 ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2020 பொதுத் தேர்தல் பிரசாரங்களின்போது போலிச் செய்திகளானது ஓர் அரசியல் ஆயுதமாக ((Political weapon) பயன்படுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்தது. சமீபத்தில் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலின்போது யாருக்கு வாக்களிப்பதென மக்கள் தீர்மானம் எடுப்பதில் போலிச் செய்திகள் கூடுதல் தாக்கம் செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தேர்தலுக்கு முன்னரே எச்சரித்திருந்தமை இதனடிப்படையிலேயே ஆகும்.

 

கொவிட் 19 முடக்க காலத்திலும் உலக நாடுகளைப் போன்றே இலங்கையிலும் போலிச் செய்திகளின் பரவல் அதிகரித்திருந்தமை குறிப்பிட்டுக் கூறத்தக்கதாகும்.

 

“ எமது பொது எதிரி கொவிட் 19. ஆனால் அது பற்றி அதிகம் பகிரப்படும் போலியான தகவல்களும் எமது எதிரிதான் என்பதை மறந்துவிடக் கூடாது”  என ஐ.நா. பொதுச் செயலாளர்   அன்டோனியோ குட்ரஸ் தெரிவித்த கருத்தும் “ நாம் கொவிட் 19 வைரஸ் பரவலுடன் மாத்திரம் போராடவில்லை. போலியான தகவல் பரிமாற்றங்களுடனும் போராடிக் கொண்டிருக்கிறோம்” என உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தெட்ரொஸ் அதானொம் தெரிவித்த கருத்தும் இதன் பாரதூரத்தை உணர்த்துவதாகும்.

 

இலங்கையைப் பொறுத்தவரை சுகாதார, மருத்துவ ஆலோசனைகள் எனும் போர்வையில் பரப்பப்படும் போலிச் செய்திகளை நம்பிப் பின்பற்றும் போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த பெப்ரவரி மாதம் பேஸ்புக் மூலமாக பகிரப்பட்ட போலியான தகவலை நம்பி, Gaja Madara  எனப்படும் இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட குடிபானத்தை அருந்திய கம்பஹாவைச் சேர்ந்த 36 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையானது, இலங்கையில் போலிச் செய்திகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர்த்துவதாக உள்ளது.

 

இவ்வாறு போலியான தகவல்களைப் பரப்புவதானது இலங்கையின் பாதுகாப்பு, அரசியல், இன நல்லுறவு, சுகாதாரம், கல்வி என மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிக தாக்கத்தைச் செலுத்துகின்ற நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் போதுமானளவு இல்லை என்பது கவலைக்குரியதாகும். அந்த வகையில் இதன் ஒரு பகுதியாக, இலங்கையில் தவறான தகவல் பரவல் மற்றும் அது ஏற்படுத்துகின்ற தாக்கம் தொடர்பில் பொது மக்களை விழிப்புணர்வூட்ட வேண்டிய தேவை அதிகம் உணரப்படுகிறது.

 

தற்போது இலங்கையில் கொவிட் 19 மூன்றாவது அலை பரவ ஆரம்பித்துள்ள நிலையில் பல போலிச் செய்திகள் வலம்வர ஆரம்பித்துள்ளன. போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்திகளை மாத்திரமே பின்பற்றுமாறும் ஜனாதிபதி அடிக்கடி தனது அறிக்கைகளில் வலியுறுத்தி வருகிறார்.

 

இக் காலப்பகுதியில் போலியான செய்திகளை பரப்பிய குற்றத்திற்காக வெள்ளவத்தையில் வசிக்கும் 60 வயதான நபர் ஒருவரும் மிட்டியாகொடையில் வசிக்கும் 18 வயது இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவை, பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் கணினி குற்றங்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடகங்கள் வாயிலாக தமக்கு கிடைக்கப் பெறும் தவறான தகவல்களைப் பரப்புவோரில் பாமர மக்கள் மாத்திரமன்றி நன்கு படித்தவர்களும் உள்ளடங்குகின்றனர். அந்தவகையில் படித்தவர்கள், பாமரர்கள் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் இதன் பாரதூரம் தொடர்பிலும் தகவல்களை உறுதிப்படுத்திய பின்னரே பகிர வேண்டும் என்பது பற்றியும் அறிவூட்ட வேண்டியுள்ளது.

 

போலிச் செய்திகள் என்றால் என்ன?

 

பொருளாதார ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ நன்மை பெற, வாசகர்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டு வெளியிடப்படும் செய்திகள் ‘போலிச் செய்திகள்’ எனப்படுகின்றன.  அவை பெரும்பாலும் பரபரப்பான, மிகைப்படுத்தப்பட்ட அல்லது கவனத்தை ஈர்க்கும் தவறான தலைப்புகளைக் கொண்டிருக்கும். அந்த வகையில் இப் போலிச் செய்திகள் 3 வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

 

  1. தவறான தகவல்கள் (Mis Information) : இது ஒரு போலியான தகவல். ஆனால் இதனை பரப்புவர் உண்மை என நம்பி பரப்புகிறார்.

 

  1. பிழையான தகவல்கள் (Dis Information) : இதுவும் ஒரு போலியான தகவல். ஆனால் இதனை பரப்புவர் பொய்யானது என தெரிந்து கொண்டே பரப்புகிறார்.

 

  1. தீங்கான தகவல்கள் (Mal Information) : இதுவும் போலியானதுதான். ஆனால் பிறருக்கு தீங்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பகிரப்படும் தகவல்கள்.

 

போலித் தகவல்களை சரிபார்ப்பது எப்படி?

 

  1. தலைப்புகள் தொடர்பாக எச்சரிக்கையாக இருங்கள் : போலிச் செய்திகள் சுண்டியிழுக்கும் கவர்ச்சியான தலைப்புகளையும் அலங்காரங்களையும் கொண்டிருக்கும். நம்பமுடியாத ஆச்சரியமான தலைப்பாக இருந்தால் போலியாக இருக்க வாய்ப்புண்டு.

 

  1. தரப்பட்டுள்ள இணைப்புகள்(Link) தொடர்பில் அவதானமாக இருங்கள் : வழங்கப்பட்டுள்ள செய்திகளின் இணைப்புகளை அழுத்தி உரிய இடத்துக்குச் சென்று பாருங்கள். சில சமயங்களில் அவை சம்பந்தமற்ற இணையங்களுக்கு உங்களை இட்டுச் செல்லலாம். அது போலிச் செய்தி என்பதற்கான அடையாளமாகும்.

 

  1. செய்தியை எழுதிய நபர் பற்றி ஆராய்ந்து பாருங்கள் : செய்தியை எழுதிய நபர், அதனை வெளியிட்ட செய்தி நிறுவனம் பற்றி தேடிப் பாருங்கள். அவர்கள் ஏற்கனவே நன்கு அறியப்பட்டவர்களா? அவர்களது தொடர்பு விபரங்கள் கிடைக்கின்றனவா எனப் பாருங்கள்.

 

  1. எழுத்து, இலக்கண பிழைகளை அவதானியுங்கள் : அதிகமான போலிச் செய்திகள் எழுத்து, இலக்கணப் பிழைகளைக் கொண்டிருக்கும். இது பற்றி அவதானமாக இருங்கள்.

 

  1. புகைப்படங்களை ஆராய்ந்து பாருங்கள் : பல போலிச் செய்திகள் புகைப்படங்கள் மூலமே பகிரப்படுகின்றன. பெரும்பாலனாவை திரிபுபடுத்தப்பட்டவையாக இருக்கலாம். அவற்றை கூகுள் தேடு பொறி மூலம் தேடிப் பார்த்து உறுதிப்படுத்துங்கள்.

 

  1. திகதிகளை சரிபாருங்கள் : பழைய திகதிகளில் பிரசுரமான செய்திகள் மீளவும் பகிரப்படலாம். பதிவிடப்பட்ட மற்றும் பகிரப்பட்ட திகதிகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.

 

  1. ஆதாரங்களை சரிபாருங்கள் : ஒரு செய்திக்கு ஆதாரங்கள் அவசியம். குறித்த செய்தியில் ஆதாரமாக குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் குறித்து அவதானியுங்கள். ஆதாரமற்ற செய்திகள் போலியானவையாக இருக்க அதிகம் வாய்ப்புண்டு.

 

  1. ஏனைய செய்தி அறிக்கைகளுடன் ஒப்பிடுங்கள் : குறித்த செய்தியை ஏனைய அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளனவா என தேடிப் பாருங்கள்.

 

  1. செய்தி நகைச்சுவையாகவும் இருக்கலாம் : சிலர் வேடிக்கைக்காக செய்திகளை உருவாக்குகிறார்கள். அவ்வாறான ஒரு செய்தி உங்களை வந்தடைந்திருக்கலாம். அது பற்றி அவதானமாக இருங்கள்.

 

  1. திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் : பல போலிச் செய்திகள் உள்நோக்கங்களின் அடிப்படையில் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அவற்றின் உள்ளடக்கம் குறித்து தர்க்க ரீதியாக சிந்தித்துப் பாருங்கள்.

 

இலங்கையில் சரிபார்க்கும் நிறுவனங்கள்

 

போலிச் செய்திகள் இலங்கையில் தாக்கம் செலுத்துவதன் காரணமாக தற்போது சில நிறுவனங்கள், போலிச் செய்திகளை சரிபார்ப்பதற்கான சேவைகளை வழங்கி வருகின்றன. இவற்றைப் பின்தொடர்வதன் மூலம் போலியான தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க முடியும். பின்வரும் 3 நிறுவனங்கள் இப் பணியில் ஈடுபடுகின்றன.

 

  1. Sri Lanka Press Institute – FactSeeker
  2. Factcrescendo.com
  3. AFP Factcheck

 

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts