கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

இலங்கையில் வெளிநாடுகளால் புறக்கணிக்கப்படும் தேசிய மொழிகள்

பா.கிருபாகரன்

இறுதியாக எடுக்கப்பட்ட  சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 21.7 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில்  பெரும்பான்மையினராக 74.88 வீதம் பேர் சிங்களவர்களாகவும்  நாட்டின் அடுத்த பெரும்பான்மையினராக 24.6 வீதம் பேர்  தமிழர்களாகவும்  உள்ளனர். இவர்கள், இலங்கைத்  தமிழர் ,முஸ்லிம்கள்  மற்றும் இந்தியத் தமிழர் என மூன்று  பெரும் பிரிவினராகவுள்ளனர் இலங்கையின் இதர இனங்களாக, இலங்கை மலாயர் 0.2 வீதமும் பறங்கியர்  0.18 வீதமும் வேடுவர்கள்  மற்றும் ஏனையோர்  0.14 வீதமும் உள்ளனர். இவர்களில் 70.2 வீதம்பேர் பௌத்தர்களாகவும் 12.6 வீதம்பேர் இந்துக்களாகவும் 9.7வீதம்பேர்  முஸ்லிம்களாகவும் 6.01 வீதம்பேர் கத்தோலிக்கர்களாகவும் மிகுதி ஏனைய பிற மதத்தவர்களாவும் உள்ளனர்.

இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டுள்ள நிலையில் இலங்கையின் தேசிய மொழிகளாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் அரசியலமைப்பின்  ஊடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் அரசியலமைப்பின் நான்காவது அத்தியாயத்தின் 18 ஆவது சரத்தின் பிரிவு (1) இலங்கையின் அரச கரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும் எனக் கூறுகிறது. அதற்கடுத்தபடியான பிரிவு (2) இல் தமிழும் அரச கரும மொழி ஒன்றாதல் (3) ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் நான்காவது அத்தியாயத்தின் 19 ஆவது சரத்தின் பிரகாரம் இலங்கையின் தேசிய மொழிகள் சிங்களமும் தமிழும் அமைதல் வேண்டும். இரண்டு மொழிகளும் சமமானவையாகவே கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

 1956 ஆம் ஆண்டின் அரசமொழிகள் சட்ட இல 33 இன் பிரகாரம் 01.01.1956 ஆம் ஆண்டு அரசகரும மொழிகள் திணைக்களம் உருவாக்கப்பட்ட நிலையில்  1987 ஆம் ஆண்டு 13 ஆவது அரசியலமைப்பு  திருத்தத்தின்   பிரகாரமும் 1988 ஆம் ஆண்டு 16 ஆவது  அரசியலமைப்பு திருத்தத்தின்  பிரகாரமுமே இலங்கையில் சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகளாகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டன. இப்பொறுப்புக்கள் யாவும் அரசகரும மொழிகள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டன . 2010.11.25ஆம் திகதி 1681/3 வர்த்தமானி அறிவித்தலின் கீழ் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு உருவாக்கப்பட்டது. அரசகரும மொழிகள் திணைக்களம், அரச கரும மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் என்பன இந்த அமைச்சின் கீழ் செயற்பட்டன.

எனினும் அரசியலமைப்பில் சிங்களமும் தமிழும் தேசிய மொழிகள் என பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும்  நாட்டில் இந்த அரசியலமைப்பு விதிகள் உரிய முறையில் பேணப்படுவதாகத் தெரியவில்லை. அமைச்சுக்கள். திணைக்களங்களில் கூட சிங்களத்தில் மட்டுமே அலுவல்கள் இடம்பெறுகின்றன. சாதாரண தமிழ் மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றச்செல்லும் போது மொழிபெயர்ப்பாளர்களை கூட அழைத்துச் செல்ல வேண்டிய  நிலையே காணப்படுகின்றது. தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாகாண அமைச்சுக்கள். திணைக்களங்களில் தமிழில்  மட்டுமே அலுவல்கள் இடம்பெறுகின்றன. இதனால் இம்மாகாணங்களில் சிங்களவர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இது தொடர்பில்  அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மூத்த விரிவுரையாளருமான என்.பி.எம்.  சைப்டீன் கூறுகையில், ”அரசகரும மொழிக்கொள்கையை மீறும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்கின்ற அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருக்கின்ற போதிலும்,  இதுவரை வழக்குகள் எதுவும்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில்லை . இலங்கையில் அரசியல் ரீதியாக ‘செல்வாக்கு’ மிக்க அமைச்சுகளுக்கு, குறிப்பாக ஜனாதிபதிக்கு உட்பட்ட அமைச்சுகளின் அரச நிறுவனங்களுக்கு எதிராக இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பது  நடைமுறையில் கேள்விக்குறியாகவே உள்ளது.  

 மொழிப்பிரச்சினையில் கடந்த 50 ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும்  இல்லை. நாட்டில் மொழிப்பிரச்சினை என்பது 1956 ஆம் ஆண்டில் தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டபோது நிலவிய சூழ்நிலையிலிருந்து இன்றுவரை எந்தவிதத்திலும் முன்னேற்றம் அடையவில்லை. அரசியலமைப்பில் அரசகரும மொழி சிங்களம் மட்டுமல்ல, தமிழும் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தாலும் அதன் நியாயமான நடைமுறையை இன்னும் காணமுடியவில்லை. இலங்கையில் பல அரச நிறுவனங்களில் தமிழ் அதிகாரிகள் இல்லை, தமிழ் மொழிபெயர்ப்பு தெரிந்த அதிகாரிகள் இல்லாத நிறுவனங்கள் பல இருக்கின்றன. சில அரச நிறுவனங்களில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகளும் அரசகரும மொழிக் கொள்கை சரிவரக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினால்  தேவையற்ற ‘முத்திரைகள்’ தம்மீது குத்தப்படும் என்று அஞ்சுகின்றனர் என்கிறார்.  

அமைச்சுக்கள், திணைக்களங்கள், அறிவிப்புக்கள்,. சுற்றுநிருபங்களில் தான் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில்  2019 ஆம் ஆண்டு நவம்பரில் கோத்தபாய ராஜபக்ஷ  ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர்  இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாட தடைவிதிக்கப்பட்டது.  இந்த தடையை  நியாயப்படுத்திய பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன்  ”நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று .அதனை  இரண்டாக பிளவுபடுத்த முடியாது. தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால், இரண்டு இனங்கள் என்ற பொருளை அது வெளிப்படுத்தும். இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் ஒரே இனம் என்ற அடிப்படையிலேயே   இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கீதத்தை இரண்டு தடவைகள் பாடுவதிலேயே நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படும்” என்று கூறியிருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவ்வாறு நாட்டின் ஆட்சியாளர்களினாலேயே தேசிய மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுவந்த நிலையிலும் இலங்கையின் மொழிக் கொள்கையில்  முரண்பாடுகள் தொடர்ந்து வந்த நிலையிலும்  தமிழ்மொழி விவகாரத்தில் சீனாவினால் மற்றொரு சர்ச்சை அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பயன்படுத்தப்படாத சீனாவின் மண்டரின்  மொழியை இலங்கையில் தமிழ் மொழிக்குரிய இடத்தில்  நுழைக்கும்   முயற்சியினாலேயே இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  தலைநகரிலும், வெளியிடங்களிலும் காணப்படும்  பெயர்ப்பலகைகள், அறிவித்தல் பலகைகள், நினைவுப்படிகங்களிலேயே  நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சீனாவின் மண்டரின் மொழி புகுத்தப்படுகின்றது.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டளவில் முதலில் இந்த மண்டரின் மொழி ஆக்கிரமிப்பு தலைதூக்கிய போது அப்போது   தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சராகவிருந்த மனோ கணேசன் அப்போது சீனாவின் இலங்கைக்கான தூதுவராகவிருந்த  செங் யுவானை சந்தித்து  இலங்கையில் இடம்பெறும் சீன அபிவிருத்தி மற்றும் தொழிற்திட்டங்களின் பெயர் பலகைகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு சீன மொழி நுழைக்கப்படுவது தொடர்பில் தனதும் தமிழ் மக்களினதும் அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டிருந்தார்.

 இதற்கு  பதிலளித்திருந்த  சீன தூதுவர்  செங் யுவான், ”இலங்கை மக்களுடனான சீன நாட்டின் உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.  தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம். இந்நிலையில் இலங்கையில் இடம்பெறும் சீன அபிவிருத்தி மற்றும் தொழிற்திட்டங்களின் பெயர் பலகைகளில் உலகின் தொன்மையான ஒரு மொழியான தமிழ் மொழியை திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கம் சிறிதும்  எமக்கு கிடையாது.  இதுவரை அமைக்கப்பட்டுள்ள தொழிற்திட்டங்களின் பெயர் பலகைகளில் இருக்கின்ற எழுத்து பிழைகள் அல்லது மொழி புறக்கணிப்பு போன்றவை படிப்படியாக திருத்தப்படும். அவற்றுக்கு மொழிபெயர்ப்பு போன்ற விடயங்களுக்கு நாம் உங்களை நாடுகிறோம்.  இனிமேல் சீன நிறுவனங்களின் பெயர் பலகைகள் அமைக்கப்படும் போது உங்கள் அமைச்சுடன் கலந்து பேசி அவற்றை அமைக்க எங்கள் வர்த்தக பிரிவு அதிகாரியை நான் நியமிக்கிறேன். உண்மையில் எங்கள் தூதரக பணியாளர் மற்றும் இங்கு வரும் சீன பிரஜைகள் இனிமையான தமிழ் மொழியை கற்க ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு உதவிட நான் உங்களை கோருகிறேன். இலங்கையின் இனங்களுக்கு இடையிலான தேசிய சகவாழ்வுக்கு எம்மால் அளிக்கக்கூடிய உதவிகளை நீங்கள் கோரினால் வழங்க நாம் தயார் என்று கூறி இருந்தார்.

அப்போது சீன தூதுவர் கூறியதற்கு முரணான வகையிலேயே தற்போது வரை சீனாவினால் இலங்கையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சீனாவின் மண்டரின் மொழியின் ஆக்கிரமிப்பு இடம்பெற்று  வருகின்றது. சீனாவினால் முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்களில் பெரும்பாலான இடங்களில் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதேவேளை, சீன மொழிக்கும் அதே அளவிலான முன்னுரிமை வழங்கப்பட்டு, தமிழ் மொழி முழுமையாகவே புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக அரசுடன்  இணைந்து முன்னெடுக்கும் பணிகளில் சீன மொழி பிரதான மொழிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது, தமிழ் மொழி முழுமையாக அனைத்து இடங்களிலும் புறக்கணிக்கப்படுகிறது. சீனாவின்  கொழும்பு துறைமுக நகர் திட்டத்திலுள்ள பெயர் பலகைகளில் சிங்களம், ஆங்கிலம், சீன மொழிகளே  காணப்படுகின்றன.

இதேபோன்று  சட்டமா அதிபர் திணைக்களத்திற்குரிய புதிய கட்டிடத்தில் சீனாவின் நிதியுதவியுடன் இலத்திரனியல் நூலகமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுப்பலகை அண்மையில், சட்டமா அதிபராக இருந்த  தப்புல டி லிவேரா மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கியூ ஸென்ஹொங் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது. அந்த நினைவுப்பலகையில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீனமொழிகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததுடன்  அதில் இலங்கையில் தேசிய மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி இடம்பெறவில்லை. இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் அரசு அலுவல் மொழிகளாக காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் சட்டத்தை வழிநடத்தும் ஒரு பிரதான இடத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை  தோற்றுவித்தது.

இந்த நிலையில்  சட்டமா அதிபர் திணைக்களத்தில்  சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட டிஜிட்டல் நூலகத்துக்கு சீன மக்களின் நிதியே பயன்படுத்தப்பட்டுள்ளதால் அந்த  நினைவுப்பலகையில் சீன மொழி இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது என இலங்கையிலுள்ள சீன தூதரகம்  விளக்கமளித்திருந்தது. எனினும் தமிழ் தரப்புக்கள் குறிப்பாக இலங்கை தொழிலாளர்  காங்கிரஸ் உப தலைவரான செந்தில் தொண்டமான்,தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவர் மனோகணேஷன் போன்றவர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர் .இவ்வாறான நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், நீதி அமைச்சர் அலி சப்ரியுடன்  இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். தான் குறித்த இடத்தில் தமிழ் மொழியை காட்சிப்படுத்த உடனடியாக  நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்கு உறுதியளித்திருந்தார். இதனையடுத்து  அந்த அறிவித்தல்  பலகை அங்கிருந்து அகற்றப்பட்டது

இலங்கையில் உள்ள அறிவிப்புப் பலகைகளில் தமிழ்மொழி இடம்பெறாமல் அந்த இடத்தை சீன மொழி பிடித்துக்கொள்வது ஆச்சரியமல்ல. ஆனால், சிங்கள மொழி கூட சில இடங்களில் சீனாவினால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.  கல்கிஸை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும், தூர இடங்களுக்கான ரயில் சேவை நேரங்கள் குறித்த அறிவிப்பு பலகையிலேயே நாட்டின் தேசிய மொழிகளான சிங்களமும் தமிழும் காணாமல்போய் அந்த அறிவிப்புப் பலகையில் ஆங்கிலமும்  , சீனாவின்  மண்டரின் மொழியும் மட்டும் இடம்பிடித்துள்ளன . சமூக ஊடகங்களில் இந்தப் படம் பரவிய பின்னர் தான், ரயில்வே திணைக்களம் விழித்துக் கொண்டது.இந்த அறிவிப்புப் பலகை எப்போது, யாரால் வைக்கப்பட்டது என்று விசாரணைகளை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ கூறியிருக்கிறார். தாம் முகாமையாளராகப் பதவியேற்க முன்னர் தான், அந்தப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.  

இதுபோன்று தமிழர்களின் தாயகமான வடக்கு மாகாணத்தில் உள்ள இரண்டாவது பிரதான நகரமான சாவகச்சேரியில் கூட சீனாவின் அரச  கட்டுமான நிறுவனமான  China State Construction Engineering Corporation என்ற  நிறுவனத்தின் பெயர் பலகையில் இலங்கையின் தேசிய மொழிகளான சிங்களம்,தமிழ் மொழிகள் புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் சீன மொழிகள்  மட்டுமே மிகப்பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


இதேவேளை சீனா மட்டுமன்றி இந்தியாவும் இலங்கையின் தேசிய மொழிகளில் பிரதானமான சிங்கள மொழியை புறக்கணித்து ஹிந்தி மொழியை நுழைத்த விடயமும் உள்ளது, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் பெயர் பலகை ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மொழிகளில் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள மொழி இந்தியாவால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் அரசியலமைச் சட்டத்தின் படி ஒரு நாட்டின் தேசிய மொழியாக அல்லது  இணைப்பு மொழியாக ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு மொழியைக்கொண்ட இவ்வாறான பெயர்ப் பலகைகளை பொது இடங்களில், வைப்பதற்கு அனுமதி கிடையாது. இதனைக் காரணம் காட்டியே இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் அரபு மொழிகளை தமது பள்ளிவாசல்கள், கலாசார நிலையங்களில் பயன்படுத்த சிங்களவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அரச கரும ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் சிவப்பிரகாசம் மதிவாணன்  இந்த சீன மொழி ஆக்கிரமிப்பும் தமிழ்மொழி புறக்கணிப்பும் பற்றியும் கூறுகையில்,  ”சீன நிறுவனங்களின் செயற்திட்டப் பகுதிகளில் மண்டரின் மொழி அறிவிப்புகள் காணப்படும் அதேவேளை, இலங்கையின் அரச கரும மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன . இவ்வாறு அரச கரும மொழிகள் புறக்கணிக்கப்படுவதானது அரசியலமைப்பின் 4 ஆவது பிரிவை மீறுகின்ற செயல்  . இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் செயற்படும் அனைத்து உள்நாட்டு சர்வதேச நிறுவனங்களினதும்  பெயர்ப்பலகைகளில் அரசகரும மொழிகள் மாத்திரம் இடம்பெற வேண்டும் என சட்டங்களை முன்மொழிவது குறித்து கவனத்தில்  கொள்ளப்பட்டுள்ளது” என்கிறார்.

இது தொடர்பான சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ள இலங்கையின் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ”இலங்கையின் மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன அரச நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பதாக   தெரிவித்துள்ளார் துறைமுக நகர வேலைத்திட்டங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இதுதொடர்பாக உத்தியோக பூர்வமாக சீனா அரச நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம்   என்கிறார்.

இலங்கையர்களுக்கு சீன மொழி தெரியாத நிலையில் இலங்கையர்களுக்காக சீன மொழி  பயன்படுத்தப்படுகின்றது என்று கூற முடியாது .இலங்கையிலுள்ள சீனர்களுக்கு அல்லது  இலங்கையில் சீன நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் பணியாற்ற வந்த சீனர்களுக்காகவே மண்டரின் மொழி அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றால் அதற்காக தமிழ் மொழியை புறக்கணிக்க வேண்டிய எந்தத் தேவையும் கிடையாது. நான்காவது மொழியாக சீன மொழியை அறிவிப்புக்கள், விளம்பரங்களில் சீனா பயன்படுத்த முடியும்.

Lankan National Languages Ignored By Foreign Countries

ලංකාවේ ජාතික භාෂාවන් රට තුලම නොසලකා හැරීම

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts