இலங்கையில் மரக்கறி சந்தைப்படுத்தலின் நிலை
கீர்த்திகா மகாலிங்கம்
“மரக்கறிகளை எவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியில் கொண்டுவந்து விற்றாலும் அவற்றை வாங்குவதற்கு மக்களிடம் பணமில்லை. கண்ணுக்கு முன் அவை அழுகிப்போவதைப் பார்க்க முடியாமல் மொத்தமாக குறைந்த விலைக்கு கொடுத்துவிடுகிறோம்.” என சாகரிக்கா கூறுகிறார்.
சாகரிக்கா கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் சிறிய அளவில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் ஒருவர். அவரது கணவர் தம்புள்ளையிலிருந்து மரக்கறிகளை லொறி மூலம் கொழும்புக்கு கொண்டு வருபவர். “கொரோனாவின் முதலாவது அலையின் போது மக்கள் தம்மிடம் இருந்ததையெல்லாம் அடகுவைத்தும், வங்கிகளில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்தும் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்தார்கள். இம்முறை மக்களிடம் வாங்குவதற்கு பணம் இல்லை. நானும் மரக்கறிகள் விற்பனையின்றி அழுகிப்போவதை பார்க்க விருப்பமின்றி நாங்கள் கொள்வனவு செய்ததிலும் மிகக்குறைந்த விலைக்கே விற்பனை செய்கிறோம். அதிகளவில் பணம் இருப்பவர்கள் மரக்கறிகளை பல்பொருள் அங்காடிகளிலே கொள்வனவு செய்கிறார்கள். முன்னனர்போல் சந்தைகள் இப்பொழுது வாரஇறுதி நாட்களில் கூடுவதில்லை. அப்படியே சந்தை கூடினாலும் சன நெரிசலுக்கு மத்தியில் வந்து மரக்கறிகளை வாங்க யாரும் விரும்புவதில்லை. என்னைப்போன்றவர்களிடம் வாங்குபவர்கள் தினசரி உணவுக்காக தம்மிடம் இருக்கும் பணத்திலோ அல்லது கடனாகவோ வாங்கிக்கொள்கிறார்கள். மரக்கறி அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாக இருக்கின்றது. எங்களுக்கும் அதன் விற்பனைதான் வாழ்வாதாரமாக இருக்கிறது.” என அவர் கூறினார். இதே போல் நாட்டின் பல பாகங்களிலும் மரக்கறி சந்தைப்படுத்தல் பல தொடர் இடர்களை சந்தித்து வருகிறது.
சந்தைகள் கொரோனா வலயங்களாக உருவாதல்.
பெருமளவானோர் ஒன்று கூடக்கூடிய இடமாக மரக்கறி சந்தைகள் காணப்படுவதால் மக்களின் அதிக அவதானத்தை ஈர்த்த இடமாக இவை மாறின. நாட்டின் மொத்த மரக்கறி சந்தைப்படுத்தலின் பெருமளவான பங்கை வகிக்கும் 3 சந்தைகள் காணப்படுகின்றன. அவையாவன:-
- கொழும்பு மெனிங் சந்தை
- தம்புள்ளை வர்த்தக நிலையம்
- வெலிசரை மத்திய நிலையம்
இவற்றைத்தவிர ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்துவமான பல சந்தைகள் காணப்பட்டாலும் கொழும்பிலும், புறநகர்ப்பகுதிகளிலும் விற்பனை செய்யப்படும் மரக்கறிகள் இம்மூன்று பிரதான சந்தைகளிலிருந்தே விநியோகிக்கப்படுகின்றன. இம்மூன்று சந்தைகளிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட காலம் இதன் நடவடிக்கைகள் தடைப்பட்டன. இது ஒட்டுமொத்த நாட்டின் மரக்கறி சந்தைப்படுத்தலை கேள்விக்குள்ளாக்கியது. இவற்றைத்தவிர மருதனார்மடம் பொது சந்தை, அக்கரைப்பற்று சந்தை,கண்டி மத்திய சந்தை போன்ற நாட்டின் பல சந்தைகள் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட இடங்களகும். இதனால் மக்களின் பயம் அதிகரித்திருப்பதோடு, சந்தைகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்கிறார்கள்.
மெனிங் சந்தை விவகாரம்
மரக்கறி விற்பனையை பொருளாதார ரீதியில் வளப்படுத்தும் நோக்கில் கடந்த வருடம் நவம்பர் 20ஆம் திகதி கொழும்பு மெனிங் சந்தையானது பேலியகொடைக்கு இடம்மாற்றப்பட்டது. இந்த சந்தை வளாகத்தில் 1,192 விற்பனை நிலையங்கள், 600 வாகனங்கள் நிறுத்த கூடிய வகையிலான வாகன தரிப்பிட வசதி, ஊழியர்களுக்கான ஓய்வறை, வைத்திய முகாம், வங்கி, உணவகம், குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை, ஹோட்டல் உள்ளிட்ட பல வசதிகள் காணப்படுகின்றன என பிரதமர் திறப்பு விழாவில் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை கடந்த வருடம் டிசெம்பேர் மாதம் 7ஆம் திகதி பேலியகொட புதிய மெனிங் சந்தையில் போதிய இடவசதியில்லையென தெரிவித்து வர்த்தகர்கள் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு குலுக்கல் முறையில் வர்த்தகர்களைத் தெரிவு செய்து, பேலியகொடை மெனிங் வர்த்தக நிலையத்தின் கடைகள் வழங்கப்படும் என்று அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்தார். (https://tamil.news.lk/news/political-current-affairs/item/39307-2020-11-28-17-02-24 ) எனினும் வியாபாரிகளுக்கு சொந்தமான கடைத் தொகுதிகளை உரிய முறையில் வழங்குமாறு கோரி, கொழும்பு -கோட்டையில் இம்மாதம் 10ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் தமக்கான சந்தைகளை இழந்து நிற்கும் ஒரு நிலையை இது உண்டாக்கியுள்ளது.
மரக்கறிகளின் விலை
நாட்டில் நிலவுகின்ற மழையுடனான காலநிலையினால் 50 வீதத்தினால் மரக்கறிகளின்விலைகள் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் அறிக்கை வெளியிட்டிருப்பதாக நியூஸ் பெஸ்ட் வலைத்தளம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி செய்தி வெளியிட்டுள்ளது. இதேபோல் இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலை அறிக்கையின்படி தொடர்ச்சியான விலைத்தளம்பலொன்று காணப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. (https://www.cbsl.gov.lk/en/statistics/economic-indicators/price-report ) எனவே விற்பனையாளர்கள் சரியாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு விலையில் சந்தைப்படுத்த முடியாத நிலைக்கு தொடர்ந்தும் முகங்கொடுத்து வருகின்றனர்.
இணையவழி சந்தைப்படுத்தலும் பல்பொருள் அங்காடிகளுடனான போட்டியும்
இதுவரைக்காலமும் இணையத்திற்கு சற்றேனும் பழக்கப்படாத விற்பனையாளர்கள் இம்முறை கொரோனாவினால் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் இணையவழியாக பொருட்களை வீடுகளுக்கே பெற்றுக்கொள்ளும் வசதி பெருக்கமடைந்தது. அதிலிருக்கும் இலகுத்தன்மைக்கு மக்களும் பழக்கப்பட தொடங்கிவிட்டனர். இதன் மூலம் உற்பத்தியாளரே சந்தைப்படுத்துபவராக மாறிய புதியதொரு விற்பனையாளர்- நுகர்வோர் சமூகம் உருவாகத்தொடங்கியது. இவற்றுக்கு மேலதிகமாக ஏற்கனவே உள்ள பெயர்பெற்ற பல பல்பொருள் அங்காடிகளும் தமது நுகர்வோர்களை பெருக்கிக்கொள்வதில் மிகக்கவனமாக இணையத்தை பயன்படுத்தி முன்னேறத்தொடங்கின. “கீல்ஸ்- சில்லறை விற்பனையின் புதிய சகஜ நிலை” என்ற தலைப்பில் economynext வலைத்தளத்தில் வெளியாகிய கட்டுரையொன்று எவ்வாறு தமது பல்பொருளங்காடி, சில்லறை விற்பனைகளையும் இணையத்தின் வழியில் சாத்தியமாகியது என்பது குறித்து தெளிவுபடுத்துகிறது. (https://economynext.com/brand_voice/keells-influencing-retails-new-normal/ )
இவற்றைத்தவிர,
- சந்தைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு
- நவீனமயப்படுத்தப்பட்ட வசதிகள் இன்மை
- களஞ்சியப்படுத்தக்கூடிய பொறிமுறைகள் இன்மை
- தரமற்ற பொருட்களுக்கு மத்தியில் தரமான பொருட்களை சந்தைப்படுத்தலில் உள்ள சிக்கல்கள்
- காலநிலை பிரச்சினைகள்
- விற்பனைக்கான புதிய மரக்கறிகளை பெற்றுக்கொள்ளல்
போன்ற பல பிரச்சினைகளுக்கு தினமும் முகங்கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு விற்பனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சாகரிக்கா போன்று நிலையான வருமானமில்லாத பலர் நமது சமூகத்திலே இருக்கின்றனர். கொரோனா காலத்தில் மாத்திரமன்றி சாதாரணமாகவே ஒரு நிலையற்ற வணிகத்தை நம்பியே இவர்கள் இருக்கிறார்கள். உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பும் அங்கீகாரமும் சந்தைப்படுத்துபவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாத நிலை தொடர்ந்தால் அவர்களும் தங்களது தொழிலை மாற்றிக்கொண்டு செல்வது பற்றி சிந்திக்கும் காலம் வெகுதூரத்திலில்லை. அப்படியொரு நிலை வருமானால் எமது மொத்த நாட்டின் உணவு தேவையையும் பூர்ததி செய்யவது என்றுமே கேள்விக்குறியே.