Transparency

இலங்கையில் சுயாதீன ஆணைக்குழு கலாச்சாரம்

தனுஷ்க சில்வா

இலங்கையின் இரண்டாவது அரசியலமைப்பின்படி இக் குடியரசின் ஜனாதிபதியாகப் பதவிவகிப்பவரின் வகிபாகம் அரச அதிகாரத்திற்கு ஒரு முகவராகச் செயற்படுவதாகும். அச்சாணிபோல் முக்கிமானவர்களென நடந்துகொள்ளும் ஜனாதிபதிகளை நாங்கள் ஏன் வைத்திருக்க வேண்டும். உண்மையில் சட்டவாக்கம் மற்றும் நீதி பரிபாலனம் எனப்படும் ஏனைய இரு பிரிவுகளுக்கு நியமனங்களைச் செய்யும் அதிகாரம் அரசியலமைப்புரீதியாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு தசாப்தங்களாக, இரண்டு சந்தர்ப்பங்களைத் தவிர, எங்கள் அரசியலமைப்புக் கோலத்தில் என்றும் நிலையானதாகக் காணப்படும் அரசாளும் பாணி இதுவாகும். குறிப்பிட்ட இரண்டு சந்தர்ப்பங்களும் 2001-2004 காலப்பகுதியிலும் 2015 இன் நல்லாட்சி அரசாங்கத்தின்போதும் உறுதியற்ற அரசியல் சூழ்நிலைகள் காரணமாக ஏற்பட்டன.

அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது வேறு சில அமைப்புகளையும் சுயாதீனமாக இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய காரணம் குறிப்பிடக்கூடிய சில அரசாங்க நிறுவனங்கள் நாணயமானவையாக இருப்பதன்மூலம் அரசாட்சியும் விருத்தியடையும் என்ற கருதுகோளாகும். பிரதானமான அரசாங்க நிறுவனங்களையும் அவற்றின் செயற்பாடுகளையும் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் (விசேடமாக அதிகாரத்திலிருக்கும் அரசியல் கட்சி) வைத்திருத்தல், தாம் சம்பந்தப்பட்ட விடயங்களில் விசேடத்துவம் பெற்றவர்கள் அரசியல் அழுத்தம் பற்றிய கவலையின்றித் தங்கள் அரச கருமங்களைச் செய்ய வாய்ப்பளித்தல் மற்றும் அவ்வாறான நிறுவனங்கள் மீது மக்களுக்கிருக்கும் நம்பிக்கையை மிகைப்படுத்தல் போன்றவைகளைப் பற்றி பொதுவான வாதப் பிரதிவாதங்கள் பிரபலமாக இருக்கின்றன. சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டமையினால், உயர் பதவிகளுக்கு நியமனங்களைச் செய்யும் ஜனாதிபதியின் தற்துணிபு அதிகாரங்களுக்குக் கணிசமானளவு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. வாதப்பிரதி வாதங்களுக்கு இடமில்லாது உறுதிப்படுத்தப்பட்ட இரு நீண்டகால உதாரணங்களாவன: 1978 இல் ஸ்தாபிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் சட்ட உதவி ஆணைக்குழுவுமாகும்.

இலங்கையில் முதன்முதலாகப் பெண் ஜனாதிபதியாயிருந்த சந்திரிகா பண்டாரநாயக்கா 90 களின் முதற்பாதியில் பிரதானமான தலைமைத்துவங் கொடுத்ததால் வெளிக்கிழம்பிய ஜனநாயகத்தை நேசிக்கும் கலாச்சாரம் (வெண்தாமரை இயக்கமெனப் பெயரிடப்பட்டது) ஒரு சில அரசாங்கச் செயற்பாடுகளை வெளிப்படையானதாய் இருக்கச் செய்வதற்கு அதிகளவு சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டுமெனக் கோரியது. இக் காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இரு ஆணைக்குழுக்களாவன மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுமாகும்.

2001 ஆம் ஆண்டில் வரையப்பட்ட அரசியலமைப்பில் இச் சுயாதீன ஆணைக்குழுக்களை அரசியலமைப்புச் சபையின் கீழ் கொண்டுவருவதற்கு முன்மொழியப்பட்டது. அதன் மூலம் ஆணையாளர் நியமனங்களில் இவை ஒன்றிற்கொன்று பொறுப்பாக இருக்கும். அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செயன்முறை 2001 இல் முழுமையாகத் தோல்வி அடைந்ததுடன் அதன் விளைவாக அரசியலமைப்பு வரைபும் நிறைவேற்றப்படவில்லை. இருந்தபோதிலும் அரசியலமைப்பு வரைபின் முக்கிய தரப்பினராயிருந்த அரசியலமைப்புச் சபை நிலைபெற்றிருந்தது. அதன் பின்னர் வந்த 17 ஆவது திருத்தத்தில் ஏழு சுயாதீன ஆணைக்குழுக்கள் தாபிக்கப்பட்டன. அவையாவன: தேர்தல் ஆணைக்குழு, அரசாங்க சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு மற்றும் எல்லை மறுசீரமைப்பு ஆணைக்குழு. இந்தக் காலப்பகுதியில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அரச அதிகாரத்தை ஜனநாயகப்படுத்துவதில் ஆற்றல் மிக்க பாகம் வகித்தபோது ஏனைய ஆணைக்குழுக்கள் செயலற்றிருந்தன. பரீட்சார்த்தமான சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு எதிரான விமர்சனத்தில் அவை சுயதேவை அரசியலாக்கப்பட்ட அரசின் கீழ் இருந்தமையால் சுயாதீனத்திற்கு அடிப்படையாக இருக்க வேண்டிய தேவைகளை நிறைவேற்ற முடியாமற்போயின எனக் கூறப்பட்டது.  உதாரணத்திற்கு, மனித உரிமைகளின் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமென இருக்கும் தேசிய நிறுவனங்களின் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தினால் மனித உரிமை ஆணைக்குழுவினை தரக் குறைவாக்கியுள்ளது. விசேடமாக ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் மனித உரிமை ஆணைக்குழுவின் வகிபாகம் (மனித உரிமைகளை மேம்படுத்துதல்) பிரச்சனைக்கு உரியதாயிருந்தது.

சுயாதீன ஆணைக்குழு கலாசாரம் முந்திய 18 ஆம் திருத்தத்தின் கொடூரமான காலத்திற்குத் திரும்பிச் செல்கிறது. ஜனாதிபதி தனது தற்துணிவைப் பயன்படுத்தி நியமனங்கள் செய்யும் அதிகாரத்தைக் குறைக்கும் முந்திய கட்டுப்பாடுகளை இந்தத் திருத்தம் முற்றிலும் இல்லாமற் செய்து விட்டது. 19 ஆவது திருத்தம் மூலம் அரசியலமைப்பிற் செய்யப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களில் சுயாதீன ஆணைக்குழுக்களும் இலங்கை அரசமுறைமைக்குள் இடம்பெறுவதற்கு மீண்டும் வழியேற்பட்டது. மேலே குறிப்பிடப்பட்டது போல 17 ஆவது திருத்தம் எண்ணிக்கையளவில் 7 சுயாதீன ஆணைக்குழுக்களை அறிமுகப்படுத்தியது. 19 ஆவது திருத்தம் புதிதாக இரண்டு ஆணைக்குழுக்களை உருவாக்கி மொத்த எண்ணிக்கையை 9 ஆக்கியது. கணக்காய்வுச் சேவையையும் அரச கொள்வனவுச் செயல்முறையையும் ஒழுங்கமைப்பதற்காகக் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவும் தேசிய கொள்வனவு ஆணைக்குழுவும் கொண்டுவரப்பட்டன. 19 ஆவது திருத்தத்தின் கீழ் குறிப்பிடக்கூடிய ஒன்றாக 2016 ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இல. 12 இன் கீழ்; தகவல் அறியும் ஆணைக்குழு அறிமுகஞ் செய்யப்பட்டது. நிறுவனமயப்பட்ட ஆணைக்குழுக்களின் நன்நம்பிக்கையைக் குறிவைத்து அரசியலமைப்பு ரீதியாகச் சில முக்கிய கண்டுபிடிப்புகள் கொண்டுவரப்பட்டன. அரசாங்க அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவின் கட்டளைகளுக்கு எதிராக நடப்பது, அதுவும் குறிப்பாகத் தேர்தல் ஒன்று நடக்கும் வேளையில், தண்டனைக்குரிய குற்றமென அரசியலமைப்பு திருத்தத்தின் தேர்தல் ஆணைக்குழு உறுப்புரை 104 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழ்-நீதிமன்ற நியமனங்களுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாயிருந்த நீதிச் சேவை ஆணைக்குழுவிற்குப் பிரதம நீதியரசரும் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளும் தலைமை தாங்குகின்றனர். இப் புதிய நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவகையில் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை மட்டுமன்றி அவற்றின் நோக்கெல்லையையும் மிகைப்படுத்துகிறது. அதுமட்டுமன்றி, ஆணைக்குழுக்கள் சுயாதீனமானவையாக இருப்பதற்கு ஆணையாளரின் நியமனம் தகுதி அடிப்படையில் இருக்க வேண்டியமை  எப்போதும் முன் நிபந்தனையாயிருக்கும். அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றாலன்றி ஜனாதிபதியினால் ஆணைக்குழுக்களுக்கு நியமனங்கள் செய்ய இயலாது. நியமனஞ் செய்யும் ஜனாதிபதியின் அதிகாரத்திலும் பார்க்க அரசியமைப்பு சபையின் பரிந்துரைகளுக்கு இருக்கும் அதிகாரத்தை உயர்வாக வைப்பதற்கு இந்த மறுசீரமைப்பு முயல்கிறதென்று தெளிவாகத் தெரிகிறது.

18 ஆவது திருத்தத்தின் கீழ் இருந்த பாராளுமன்ற சபை 20 ஆவது திருத்தத்தில் மீண்டும் அறிமுகமாகியுள்ளது. அசியலமைப்புச் சபை போலப் பாராளுமன்ற சபை எதற்கேனும் உட்பட்ட அல்லது சுயாதீனமான ஒன்றல்ல.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நிமனங்களைச் செய்யும்போது ஜனாதிபதி இச் சபையின் கருத்துகளைக் கவனிக்க வேண்டியது கட்டாயமாகிறது. கருத்துகளுக்கு கட்டுப்படுத்தும் தன்மை இல்லையென்பது குறிப்பிட வேண்டியது. ஒரு நியமனம் செய்யும் பொழுது சபை தனது கருத்துகளை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். அப்படிச் செய்வதற்கு அவர்கள் தவறும்பொழுது ஜனாதிபதி தனது விருப்பம் போல் நியமனம் செய்யமுடியும். 20 ஆவது திருத்தத்தில் முன்மொழியப்பட்ட மற்றொரு திருத்தம் தேசிய கொள்வனவு ஆணைக்குழுவையும் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவையும் முற்றுமுழுதாக நீக்கியதாகும்.

 

 

 

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts