இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் எதிர்காலம்?
ஆர்.ராம்
“போரின் பின்னரான காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக ஆட்சியில் அமர்ந்திருந்த அரசாங்கங்கள் வைத்திருந்த ‘பிடி’யில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், உள்நாட்டு, நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களை தமது கட்டுக்குள் முழுமையாகவும் இறுக்கமாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்; எள்ளளவும் மாறுபாடுகள் இருந்திருக்கவில்லை.இந்த நிலையிலேயே புதிய சட்டமூலத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது”
இலங்கையில் சிங்கள மன்னர்களுடைய ஆட்சிக்காலத்திலேயே அரச சார்பற்ற நிறுவனங்கள் தோற்றம் பெற்றுள்ளன. ஆலய தர்ம கர்த்தா சங்கம், கிராமிய ஆலோசனை சபை, நீர்ப்பாசன ஆலோசனை சபை போன்றவற்றை அதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
பிரித்தானிய காலனித்துவத்தில், ஊழியர் இயக்கம், (1893) மது ஒழிப்பு இயக்கம் (1911) போன்ற பல நிறுவனங்கள் நகரமயமாக்கல், மரபுரீதியான விவசாய முறைகளிலிருந்து கைத்தொழிலை நோக்கிச் செல்லல் போன்ற பல சமூக பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபட்டன.
பிரித்தானிய அரசால் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகள் இலங்கையில் கிராமிய வறுமையைத் தீவிரமடையச் செய்தன. அதனை குறைப்பதை நோக்காகக் கொண்டு காலனித்துவ அரசு 1939 ஆம் ஆண்டு கிராமிய நலன்புரி நிலையங்களை நிறுவியது. இதனைத் தொடர்ந்து 1947 இல் கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள் தோற்றம் பெற்றன.
பின்னரான காலத்தில் 1980 இல் கிறிஸ்தவ இளைஞர் அமைப்பு கிறிஸ்தவ மதம் சார்ந்த அமைப்பாகவும் மகாபோதி சங்கம் (1891) பௌத்த பிரமஞான சங்கம் (1880) என்பவை பௌத்தமதம் சார்ந்தவையாகவும், விவேகானந்தசபை (1902) இராமகிருஸ்ணமிஷன் (1929) இந்துமதம் சார்ந்தவையாகவும், முஸ்லிம் கல்வியமைப்பு (1931) இஸ்லாமிய மதம் சார்ந்ததாகவும் செயற்பட்டது. இவை மதம் சார்ந்தவையாக செயற்பட்ட போதிலும் இவற்றின் பொதுவான பண்பு சமூகசேவை மற்றும் சமூகநலன் பேணலாகவே இருந்தது.
இந்நிலையில் 1977 இன் பின்னர் அரச சார்பற்ற நிறுவனங்கள் அதிகரித்தளவில் செயற்பட ஆரம்பித்தன. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் (INGOs), தேசிய அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGOs), உள்ளுர் சமுதாய அடிப்படையிலான நிறுவனங்கள் (CBOs) என்ற வகைப்படுத்தலில் ஆட்சியில் உள்ள அரசாங்கத்துடன் இணைந்தும், தனியாகவும் அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்பட்டு வரலாயின.
உள்நாட்டில் தொடரும் அரசியல் ஸ்திரமற்றநிலை, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமின்மை, போரின் பாதிப்புக்களுக்கு நிவாரணம் அளிக்கப்படாமை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பரிகாரம் வழங்கப்படாமை உள்ளிட்ட பல விடயங்கள் இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன.
இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசியலமைப்பில் உள்ள, அடிப்படை உரிமைகளுக்கான ஏற்பாடுகளின் கீழாகவே தமது செயற்பாடுகளுக்கான உரித்துக்களையும் எல்லைகளையும் கொண்டிருக்கின்றன. தற்போது நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் அத்தியாயம் மூன்றில் உள்ள அடிப்படை உரிமைகள் பற்றிய ஏற்பாடுகளை அடியொற்றியே அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுகின்றன.
குறிப்பாக கூறுவதானால் 14(1)ஆவது சரத்தின் குறிப்பிடப்பட்டுள்ள, பேச்சு சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், ஒருங்கிணைவதற்கான சுதந்திரம், தொழிற்சங்கத்தினை அமைத்தல், அதில் இணைந்து கொள்வதற்கான சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே செயற்பட்டு வருகின்றன.
இவ்வாறிருக்க, 2019 இல் நவம்பர் 18ஆம் திகதி ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ருவான் வெலிசாயவில் பதவி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னரான காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான கிடுக்கப்பிடிப்பு மெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது.
குறிப்பாக, உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த தலைவராக திகழும் மஹிந்த ராஜபக்ஷ, தான் 2014ஆம் ஆண்டு ஆட்சிப் பீடத்தினை விட்டு இறங்குவதற்கு ‘அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு’ கணிசமாக இருந்ததாக கருதுகின்றார். அதனை அவர் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியும் இருந்தார்.
அத்துடன், “அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட மீளாய்வு ஆரம்பிக்கப்படவுள்ளது. பெரும்பான்மையான அரச சார்பற்ற நிறுவனங்கள் கடந்த காலங்களில் வெளிநாட்டவர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் நிதிக்காக, அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன. எதிர்வரும் காலங்களில் அவ்விதமான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும்” என்று அவர் கடந்த ஆண்டு ஜுலை ஆறாம் திகதி குறிப்பிட்டிருந்தார்.
இதையொத்த கருத்தினை, இக்காலப்பகுதியிலேயே பொதுஜனபெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டிருந்தார். அவர் “நாடு நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அரச சார்பற்ற நிறுவனங்கள் எழுச்சி பெறுகின்றன. மீண்டும் அவை அரசுக்கு எதிராக அணிதிரண்டுள்ளன” என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனைவிடவும், தான் வேட்பாளராக களமிறங்குவதற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களே திரை மறைவில் தீவிரமாகச் செயற்பட்டு போர்க்கொடி தூக்கியிருந்தன என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்புகிறார். அதனை பகிரங்கமாக கூறியும் உள்ளார்.
அந்த அடிப்படையில் ஆட்சிப் பீடமேறிவுடன் அரசியலமைப்பின் 43(1)ஆவது பிரிவு மற்றும் 46(1)ஆவது பிரிவு ஆகியவற்றின் பிரகாரம் விடுக்கப்பட்ட அறிவிப்பில் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான செயலகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. இது அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான முதலாவது ‘சிவப்பு’ சமிக்ஞை.
அதன்பின்னர் “அரச சார்பற்ற நிறுவனங்களின் சந்தேகத்துக்குரிய நிதி மூலங்கள் மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பான விசாரணைகளை தேசிய அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகம் ஆரம்பித்துள்ளது” என்று அதன் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ராஜா குணரத்ன அறிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி, “அரச நிறுவனங்கள் வெளிநாடுகளை தளமாக கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளின் தூதரகங்களுடன் உடன்படிக்கைகளை செய்துகொள்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது” என்ற அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய விடுத்தார்.
இவ்விதமான தொடர்ச்சியான அறிவிப்புக்களால் அதிகளவான அரச சார்பற்ற நிறுவனங்கள் மிகுந்த அச்சமடைந்து தமது செயற்பாடுகளை சுயமாகவே குறைத்துக் கொண்டன. குறைந்த பட்சம் தமக்கு நெருக்கடிகள் இருக்கின்றன என்பதையே அவை தயங்கி நின்றன.
ஆனால் ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை வெளிப்படுத்தியிருந்தன. “கடந்த வாரம் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று தனது அலுவலகத்திற்கு வருகைதந்து தமது தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுள்ளது” என்று மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக தொடர்பில் செயற்பட்டு வரும், மனித அபிவிருத்திக்கான புரட்சிகர இருப்பு (RED) அமைப்பின் சந்திர தேவநாராயண 30ஆம் திகதி ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பகிரங்கமாகவே கூறினார்.
“அப்படியானால் எங்களுடைய பாதுகாப்பு எங்கே? அந்த பாதுகாப்பை நாம் எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்வது? இதுபோன்ற பல விடயங்கள் எம் மனதில் கேள்விகளாக உள்ளன” என்று குறிப்பிட்டிருந்த சந்திர தேவநாராயண, “மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவிற்கு அமையவே தகவல்களை சேகரிப்பதாக பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையின் போது கூறினார்கள்” என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனைவிடவும், “ஈஸ்டர் குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ள 38 அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது” என்று அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி ராஜா குணரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆட்சிக் காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளிப்படையாகவே கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை தொடர்பாக, தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா மற்றும், மாற்றுக் கொள்கைகள் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
கலாநிதி.ஜெஹான் பெரேரா கூறுகையில், “தற்போதைய அரசாங்கம் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி மூலங்களை தெரிந்து கொள்வதிலேயே அதிகளவில் அக்கறை கொண்டுள்ளது. ஆனால் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆற்றுகின்ற பணிகள் தொடர்பில் அக்கறைகளைக் கொண்டிருப்பதாக தெரியவில்லை. நிதிக் கையாளுகை தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளிப்படைத் தன்மையுடனேயே இயங்கி வருகின்றன. ஆனால், அரசாங்கத்திற்கு அது தொடர்பில் பலத்த சந்தேகங்கள் உள்ளன. அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகளை சரியாக அரசாங்கம் புரிந்துகொள்ளுமாயின் இவ்விதமான நிலைமைகள் ஏற்படாது தெளிவுபடுத்தமுடியும்.துரதிஷ்ட வசமாக அரசார்பற்ற நிறுவனங்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாரில்லாத நிலையிலேயே உள்ளது” என்றார்.
அதேநேரம், கலாநிதி.பாக்கியசோதி சரவணமுத்து, தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் முன்னதாக இரண்டு தடவைகள் பதவியில் இருந்த தரப்பாக உள்ளது. அக்காலத்தில் நடைபெற்ற விடயங்களின் அனுபவங்கள் தற்போது அரச சார்பற்ற நிறுவனங்களை இயல்பாகவே மௌனமாக்கியுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களை மௌனிக்கச் செய்வதன் ஊடாக அரசாங்கம் வினைத்திறனான ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்று ஒருபோதும் கருதமுடியாது. அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூகங்களை மேம்படுத்துதல் என்பதற்கு அப்பால் அரசாங்கத்தின் நேர்த்தியான ஆட்சிக்கும் துணையாக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதுவே உண்மையான ஜனநாயகத்தினையும் உறுதிப்படுத்துகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறிருக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டராநயக்க ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த கூட்டாட்சியின்போது 29 செப்டெம்பர் 2016 இல் ஆற்றிய உரையின்போது, “அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் சம்பந்தமாக கடந்த அரசாங்கங்களுக்கு சந்தேகங்கள் இருந்தன. இதன் காரணமாக கடந்த தசாப்த காலத்தில் சர்வதேச சமூகம் தொடர்பில் தவறான தோற்றம் அதிகரித்தது. எனினும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்களில் செயற்பாடுகள் சம்பந்தமான அந்தளவுக்கு அழுத்தங்கள் ஏற்படவில்லை” என்று கூறியிருந்தார்.
உண்மையில், ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சிக்காலங்களில் மட்டுமா அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்விதமான நெருக்கடிகளைச் சந்திக்கின்றன என்றில்லை. கடந்த கூட்டாட்சியின் போதும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தது. ஆனால் அதன் வடிவத்தில், அளவில் மாறுபாடுகள் இருந்தன என்பதே யதார்த்தமாகும்.
“அரச சார்பற்ற நிறுவன திருத்த வரைபினூடாக சிவில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைவதை, அணிதிரள்வதை, எதிர்ப்பதை பலவீனமடையச் செய்தல்” எனும் தலைப்பில் சட்டத்தரணி ஏர்மிஸா டெகால் வழங்கிய தகவல்கள் மற்றும் உள்ளீடுகளின் உதவியுடன் ருக்கி பெர்ணான்டோ எழுதிய ஆய்வுக் கட்டுரையில், 1980ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க வலிந்துதவு சமூக சேவைகள் சட்டத்தைத் திருத்துவதற்கு 2018 பெப்ரவரி 20ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் அவ்வாறு மேற்கொள்ளப்படும் திருத்தமானது சட்டபூர்வமான, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசியச் செயலகம் ஒன்றினூடாக குறித்துரைக்கப்படாத அமைச்சு ஒன்றின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்களை ஒழுங்குபடுத்தி, மேற்பார்வை செய்து, சோதனையிடுவதாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் உருவாக்கப்படும் செயலகத்துக்கு விசாரணை செய்வதற்கான அதிகாரங்கள் இருப்பதோடு, அது பொலிஸாரின் கருமங்களையும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இச்செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகூடிய அதிகாரங்கள், கூட்டம் கூடும் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சிந்தனை, மனச்சாட்சி மற்றும் நம்பிக்கை குறித்த சுதந்திரம் மற்றும் தனிநபரின் அந்தரங்கத்துக்கான உரிமை என்பவற்றை நேரடியாகவே குறுக்கீடு செய்ய பணிப்பாளர் நாயகத்துக்கு, பொறுப்பான அமைச்சருக்கு மற்றும் அமைச்சின் செயலாளருக்கு, அரச சார்பற்ற நிறுவனங்கள் என வரைவிலக்கணப்படுத்தப்படக்கூடிய எந்தக் குழு மீதும் முன்னெப்பொழுதும் இராத கட்டுப்பாட்டு அதிகாரத்தை வழங்குகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது மாவட்டங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளூர் அரச அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்தவையாக இருக்கவேண்டுமென்னும் ஒரு கலாசாரத்தையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கி, அரச சார்பற்ற நிறுவனங்களுக்குத் தற்போது நடைமுறையிலிருக்கும் அறிக்கையிடல் மற்றும் அங்கீகார நிபந்தனைத்தேவை சூழமைவில் வருகின்றது என்றும் முன்னெச்சரிக்கை செய்துள்ளார்.
ஆக, கடந்த ஆட்சியாளர்களின் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் மேற்கண்டவாறான தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவுகளும் ராஜபக்ஷ சகோதரர்களின் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிரான மனோநிலையும் கூட்டுக் கலவையாகியதால் ஏற்பட்டுள்ள பிரிதிபலிப்புக்களே தற்போது வெளிப்பட்ட வண்ணமிருக்கின்றன.
இந்தப் பிரதிபலிப்புக்களின் வீச்சு நாளுக்கு நாள் அதிகரிக்கின்றபோது உள்நாட்டு வெளிநாட்டு அரசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மட்டுப்படுகின்ற நிலைமைகளையே தோற்றுவிக்கும். அவ்விதமான நிலைமையானது, சமூக பொருளாதார அபிவிருத்தி, சுகாதார சமூக நலன் பேண் சேவைகள், சமூக கலாசார நடவடிக்கைகள், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்டவற்றில் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தும்.
அத்தாக்கம், ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் இலங்கை போன்ற வளர்முக நாட்டிற்கு நேர் எதிர்மறையான நிலைமைகளை தோற்றுவித்து பாரிய பின்னடைவுகளையே ஏற்படுத்தும் பேராபத்து உள்ளது. ஆகவே இந்தப் புரிதல் அரசாங்கத்திற்கு ஏற்படாத வரையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான அதன் அச்சமூட்டும் செயற்பாடுகள் நீட்சி பெற்றதாகவே இருக்கப் போகின்றது.
இந்தப் பின்னணியிலேயே அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டமூலமொன்று உருவாக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. இதற்கான பூர்வாக ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும் அதுபற்றி உத்தியோக பூர்வமான நடவடிக்கைகள் தொடர்பில் உறுதிப்படுத்த முடிந்திருக்கவில்லை.
ஆனால் அரசாங்கம் உருவாக்கவுள்ளதாக கூறும் புதிய சட்டமானது நிதி பரிமாற்றத்தினையே மையப்படுத்தியதாக அமையவுள்ளதாக அறியமுடிகின்றது என்றும் அது மிகவும் ஆபத்தானது என்பதோடு ஜனநாயக வெளியினை இல்லாதொழிக்கும் நடவடிக்கையாகவே இருக்கும் என்று அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலிருந்து உய்தறிந்து கொள்ள முடிகின்றது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் குறிப்பிடுகின்றார்.
The Future Of NGOs In Sri Lanka?