அரசியல்

இலங்கையின் புதிய ஜனாதிபதி: நல்லிணக்கம் ,அரசியல் தீர்வு செயற்பாடுகள் எப்படி இருக்கப்போகின்றன?

பாரதி ராஜநாயகம்
ஜனாதிபதி தமது பதவியேற்புக்காக தெரிவு செய்த இடமும் முக்கியமானதாகும். எல்லாளனைக்(தமிழ்மன்னன்) கொன்று யுத்தத்தை முடித்துவைத்ததாக கூறிய துட்டகைமுனு (சிங்கள மன்னன்) கட்டிய அநுராதபுர ‘ருவன்வெசேய’ வில்தான் கோட்டாபய தன்னுடைய பதவிப் பிரமாணத்தைச் செய்தார். இத்தெரிவு தற்செயல் அல்ல. துட்டகைமுனுவின் இடத்தில் இருந்து இதைச் செய்வதில் பெருமைகொள்வதாக பேச்சின் ஆரம்பத்தில் கோட்டா தெரிவித்திருந்தார்….

இராணுவப் பின்னணியைக் கொண்ட, ஒரு சிங்கள – பௌத்த கடும்போக்காளராக அடையாளம் காணப்பட்டும் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், நல்லிணக்கம், அரசியல் தீர்வு என்பன குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதுவும் தனிச் சிங்கள வாக்குகளால் அவர் ஜனாதிபதியாகியிருப்பதும், இந்தக் கேள்விக்கு மேலும் வலுவூட்டுகின்றது. தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசியப் பிரச்சினை குறித்து எதுவுமே சொல்லாமல், சிங்கள மக்களிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட அவர், தன்னுடைய பதவியேற்பில் கூட, தேசியப் பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை. இந்த நிலையில், தமது எதிர்காலம் குறித்து சிறுபான்மையினரிடம் அச்சம் ஏற்படுவது இயல்பானதுதான்.

தேர்தலில் தனக்குக் கிடைத்த வெற்றியை சிங்கள மக்கள் தனக்குக் கொடுத்துள்ள ஒரு ஆணையாகக் கருதி புதிய ஜனாதிபதி கோட்டாபய செயற்படுவரா? அல்லது, அனைத்து இன மக்களுக்குமான ஜனாதிபதியாகத் தன்னைக் கருதிச் செயற்படுவாரா? என்பதில்தான் இலங்கைத் தீவின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது. அநுராதபுரத்தில் இடம்பெற்ற பதவியேற்பில் உரையாற்றிய புதிய ஜனாதிபதி, தெரிவித்த செய்தி இந்த இடத்தில் முக்கியமானது. கவனிக்கப்பட வேண்டியது.

பதவியேற்பில் கூட, தேசியப் பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை.
“எனது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையப்போவது இந்த நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களே என்பதை நான் ஆரம்பம் முதலே அறிந்திருந்தேன். சிங்கள மக்களின் ஆதரவினால் மாத்திரம் ஜனாதிபதி தேர்தலை வெல்ல முடியும் என்பதை நான் அறிந்திருந்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் எனது வெற்றியின் பங்குதாரிகளாக என்னோடு இணைந்து கொள்ளுங்கள் என அவர்களுக்கு கோரிக்கை விடுத்தேன். ஆயினும் அவர்களது பதில் நான் எதிர்பார்த்த அளவில் அமையவில்லை. ஆயினும் உங்களது புதிய ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டின் எதிர்கால சுபீட்சத்திற்காக உண்மையான இலங்கையர்கள் என்ற வகையில் என்னோடு இணைந்து கொள்ளுமாறு மீண்டும் நான் அவர்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.” இவ்வாறு குறிப்பிட்டிருப்பதன் மூலம், சிறுபான்மையினரின் ஆதரவு தனக்குக் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தேர்தல் முடிவுகள் சொன்ன செய்திகள்நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் தெளிவான சில செய்திகளைச் சொல்லியிருக்கின்றது. இலங்கைத் தீவு இன அடிப்படையில் பிளவுபட்டிருப்பதை – துருவமயப்பட்டிருப்பதை இது மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. தேர்தல் முடிவுகளை வெளிப்படுத்தும் வரைபடம், விடுதலைப் புலிகள் காலத்தில் வரையப்பட்ட ஈழத்துக்கான வரைபடத்தை ஒத்ததாக இருக்கின்றது. அதற்கு ஒரு படி மேலே சென்று குறிப்பிட்டால், ஈழப் புரட்சி அமைப்பு (ஈரோஸ்) மலையகத்தையும் இணைத்தே ஈழம் என உரிமைகோரியிருந்தது. சஜித் பிரேமதாச அதிக வாக்குகளைப் பெற்றிருக்கும் பகுதிகளை பச்சை நிறத்தில் அடையாளம் காட்டும்போது, ‘ஈரோஸ்’ கோரிய ஈழத்தை அது நினைவுபடுத்தும். பிரிவினைக் கோரிக்கை இப்போது கைவிடப்பட்ட ஒன்றாக இருந்தாலும், இன அடிப்படையில் மக்களிடையே ஒரு பிளவு இருப்பதை இது தெளிவாகக் காட்டியிருக்கின்றது.

வடக்கு கிழக்கில் 80 வீதத்துக்கும் அதிகமானவர்கள் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களித்திருக்கின்றார்கள். சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியதாலோ அல்லது சஜித்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதாலோ அவர்கள் இவ்வாறு வாக்களிக்கவில்லை. கோட்டாபய ராஜபக்ஷவை ஏற்க முடியாது என்பதற்காக அளிக்கப்பட்ட வாக்குகள்தான் அவை. யாரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதைவிட, யாரை நிராகரிக்க வேண்டும் என்பதில் தமிழர்கள் தெளிவாக இருந்திருக்கின்றார்கள். 2009 க்குப் பிற்பட்ட ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழ் மக்களின் வாக்குகள் இவ்வாறுதான் அமைந்திருந்தன. ராஜபக்ஷக்களுக்கு எதிராகவே அவர்கள் வாக்களித்திருந்தார்கள். அதனால், தற்போதும் தமிழர்கள் இவ்வாறுதான் வாக்களிப்பார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால், எதிர்பார்க்கப்பட்டதைவிட மிக – மிகக் குறைந்த வாக்குகளையே கோட்டாபயவினால் வடக்கு, கிழக்கில் பெற்றுக்கொள்ள முடிந்தது கோட்டா தரப்பினருக்கும், அவருக்கு ஆதரவளித்த தமிழ்க் கட்சிகளுக்கும் கடும் அதிர்ச்சிதான்.


படம்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

அதேவேளையில் தென்பகுதியில் சிங்கள மக்களில் சுமார் 70 வீதமானவர்கள் கோட்டாபயவை ஆதரித்திருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை அமைக்கப்பட்ட பின்னர் அவர்கள் எதிர்கொண்ட இரண்டாவது தேர்தல் இது. கடந்த 2018 பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்தான் அவர்கள் எதிர்கொண்ட முதலாவது தேர்தல். அதில் பாரிய வெற்றி ஒன்றை அவர்களால் பெறக்கூடியதாக இருந்தது. அந்த வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொண்ட அவர்கள், ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவையும் பெற்றுக்கொண்டது அவர்களுடைய பலத்தை அதிகரித்தது. இதற்கும் மேலாக, ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், பலம்வாய்ந்த தலைமை ஒன்றின் அவசியம் சிங்கள மக்களால் உணரப்பட்டது. ‘ஐ.எஸ்’ போன்ற சர்வதேச தொடர்புகளைக் கொண்டுள்ள அமைப்புக்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு கோட்டாபய போன்ற ‘இரும்பு மனிதர்’ ஒருவர்தான் பொருத்தமானவர் என அவர்கள் கருதினார்கள்.

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்த நகர்வுகளை மூன்று வருடங்களுக்கு முன்னரே கோட்டாபய ஆரம்பித்திருந்தார். ‘வியத்மக’, ‘எலிய’ போன்ற அமைப்புக்களை உருவாக்கிய அவர், சிங்கள சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் ஊடுருவி, தன்னுடைய கருத்துக்களைக் கொண்டு சென்றார். கோட்டாவை ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயார்படுத்தும் பணியைத்தான் இவ்விரு அமைப்புக்களும், மிகவும் துல்லியமாக – திட்டமிட்ட முறையில் முன்னெடுத்தன. இவை அனைத்தும்தான் சிங்கள மக்கள் தமது வாக்குகளை கோட்டாவுக்கு அள்ளிக்கொடுப்பதற்குக் காரணமாகியது.

நல்லிணக்கம் குறித்த புதிய ஜனாதிபதியின் நிலை?
சிங்கள மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியாகியிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ, தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், நல்லிணக்க முயற்சிகள், இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களை அவர் எவ்வாறு கையாளப்போகின்றார் என்ற கேள்வி எழுகின்றது. இந்தியாவும், சர்வதேசமும் கூட இதனைத்தான் நுணுக்கமாக அவதானித்துக்கொண்டிருக்கின்றன. தேர்தலில் சிங்கள மக்கள் கொடுத்துள்ள ஆணை, கோட்டாபயவின் அணுகுமுறை, இந்தியா, மேற்கு நாடுகளின் கரிசனை என்பனதான் இவ்விடயத்தில் தாக்கம் செலுத்தப்போகும் காரணிகளாக இருக்கும்.

தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய இனப்பிரச்சினை குறித்தோ, நல்லிணக்க முயற்சிகள் குறித்தோ கோட்டாபய எதனையும் குறிப்பிட்டிருக்கவில்லை. தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி என்பனதான் அவரால் முன்னிலைப்படுத்தப்பட்ட விடயங்களாக இருந்தன. அதேபோல தன்னுடைய பதவியேற்பு வைபவத்திலும் தேசியப் பிரச்சினை குறித்து அவர் எதனையும் குறிப்பிடவில்லை. “ஜனாதிபதி என்ற வகையில் நாட்டின் சகல மக்களுக்கும் சேவையாற்றுவதே எனது பொறுப்பாகும். ஆகையால் எனக்கு வாக்களித்தவர்களினதும் வாக்களிக்காதவர்களினதும் சமூக உரிமைகளை நான் பாதுகாப்பேன்” என அவர் அநுராதபுர பதவியேற்பு வைபவத்தில் தெரிவித்தது மட்டும்தான் சிறுபான்மையினருக்கு சற்று நம்பிக்கையைக் கொடுக்கக்கூடியது.

“ஜனாதிபதித் தேர்தலொன்றில் வெற்றிபெற சிங்கள பௌத்த வாக்குகளே போதும். சிறுபான்மை இனங்களின் தயவில் தங்கியிருக்கத் தேவையில்லை” என்று கோட்டா தரப்பினர் தேர்தலுக்கு முன்னரே சொல்லியிருந்தார்கள். இது தொடர்பில் துல்லியமாக புள்ளிவிபரங்களைச் சேகரித்துக்கொண்டே அவர்கள் தேர்தல் களத்தில் குதித்தார்கள். அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே, “சிறுபான்மை இனங்களோடு பேரம் பேசத் தேவையில்லை, அவர்களின் அபிலைஷகளை நிறைவேற்றாவிட்டாலும் பாதகமில்லை” என்கிற செய்தியை இத்தேர்தல் முடிவுகள் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றது. இதனை அவர்கள் அவ்வாறே எடுத்துக்கொள்ளப்போகின்றார்களா? அல்லது சிறுபான்மையினரையும் அரவணைத்துச் செல்வார்களா? என்ற கேள்வி இப்போது எழுகின்றது.

இதற்கான பதிலை இரண்டு விடயங்களில் ஆராயலாம். பொதுஜன முன்னணியைப் பொறுத்தவரையில், 2009 போரில் வெற்றிபெற்ற பின்னர் காணப்பட்டது போன்ற மனநிலையில் அவர்கள் இருக்கின்றார்களா என்ற கேள்வி அக்கட்சியின் சிலருடைய செயற்பாடுகளால் எழுகின்றது. சமூக வலைத்தளங்களில் மிகவும் மோசமான முறையில் வெறுப்பூட்டும் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் கருத்துக்களாகவே அவை இருந்தன. அவற்றைப் பார்க்கும் போது, சிறுபான்மையினரின் அபிலாஷைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு செயற்பட வேண்டும் என்ற கருத்து உள்வாங்கப்படும் சாத்தியங்களைக் காணமுடியவில்லை.

சமூக வலைத்தளங்களில் மிகவும் மோசமான முறையில் வெறுப்பூட்டும் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் கருத்துக்களாகவே அவை இருந்தன.

“இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்கிற பேரில் புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் தேசத்துரோகிகள். அவர்களுக்கு மரணதண்டனை அளிக்கவேண்டும்” என புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன சில மாதங்களுக்கு முன்னர் பகிரங்கமாகவே சொல்லியிருந்தார். கோட்டாபயவை வெல்ல வைப்பதற்காக தொடங்கப்பட்டிருந்த ‘வியத்மக’ இயக்கத்தின் கூட்டத்தில்தான் அவர் இதனைக் கூறியிருந்தார். இறுதிப்போரில் பங்கேற்ற முக்கிய படை அணியான 53 ஆவது படை அணியின் தளபதியாக இருந்தவர் இவர். இந்தப் படையணி மீது மனித உரிமை மீறல், மனிதாபிமானத்துக்கு விரோதமான செயற்பாடுகள் என பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவர் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து சர்வதேச ரீதியாகவே அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ‘நந்திக் கடலுக்கான போர்ப்பாதை’ என்கிற நூல் உள்ளிட்ட சில நூல்களை எழுதியவர் இவர். அவற்றின் மூலம் கோட்டாபயவின் பெயர் மேலும் பிரபலப்படுத்தப்பட்டது. இவ்வாறான கருத்துக்களைக் கொண்டுள்ளவர்கள்தான் இப்போது கோட்டாபயவின் ஆலோசகர்களாக உள்ளார்கள். இந்த நிலையில், நல்லிணக்கம் அரசியல் தீர்வு என்பன கோட்டாபயவின் நிகழ்ச்சிநிரலில் இடம்பெறும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.

கோட்டாபய தமது பதவியேற்புக்காக தெரிவு செய்த இடமும் முக்கியமானதாகும். எல்லாளனைக்(தமிழ்மன்னன்) கொன்று யுத்தத்தை முடித்துவைத்ததாக கூறிய துட்டகைமுனு (சிங்கள மன்னன்) கட்டிய அநுராதபுர ‘ருவன்வெளிசேய’ வில்தான் கோட்டாபய தன்னுடைய பதவிப் பிரமாணத்தைச் செய்தார். இத்தெரிவு தற்செயல் அல்ல. துட்டகைமுனுவின் இடத்தில் இருந்து இதைச் செய்வதில் பெருமைகொள்வதாக பேச்சின் ஆரம்பத்தில் கோட்டா தெரிவித்திருந்தார். ஜனாதிபதி ஒருவர் கொழும்புக்கு வெளியே பதவிப் பிரமாணம் செய்திருப்பது இதுதான் முதல்முறையாகும். அதன் மூலம் சொல்லவரும் செய்தி முக்கியமானது. சிறுபான்மையின மக்களுக்கு அச்சுறுத்தலானது.

கோட்டாபயவின் இந்த அணுகுமுறையையும், அவருக்கு நெருக்கமாகவுள்ளவர்களிடமிருந்து வெளிவரும் கருத்துக்களைப் பார்க்கும் போது, நல்லிணக்க முயற்சிகளை அவர் எந்தளவுக்கு முன்னெடுப்பார், அரசியல் தீர்வுக்காக அவர் பற்றுதியுடன் செயற்படுவாரா என்ற கேள்விகள் எழுவது இயல்புதான். மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, ‘13 பிளஸ்’ என இந்தியாவுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், 13 இல் உள்ளவற்றைக்கூட முழுமையாக நடைமுறைப்படுத்த அவர் முயற்சிக்கவில்லை. கோட்டாபயவும் அந்த நிலைப்பாட்டில்தான் இருப்பார் என்றே எதிர்பார்க்கலாம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்றுகூட சொல்லவில்லை. காணி, பொலிஸ் அதிகாரங்களுக்கு அவர் பச்சைக்கொடி காட்டுவார் என எதிர்பார்க்க முடியாது. தேர்தலில் (தனிச் சிங்கள வாக்குகளால்) அவர் பெற்ற வெற்றி, அவரது வெற்றிக்காக உழைத்த வியத்மக, எலிய அமைப்புக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல் என்பன அதற்கு அவரை அனுமதிக்கப்போவதுமில்லை.

இந்தியாவின் அக்கறை மாற்றத்தை ஏற்படுத்துமா?

ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்கு முன்னதாகவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்துச் செய்தி ஒன்றை கோட்டாபயவுக்கு அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியில் இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு ஒன்றும் விடுக்கப்பட்டது. அந்த அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், தமது வெளிவிவகார அமைச்சர் எஸ்.செய்சங்கரை அவசரமாக கொழும்புக்கு அனுப்பிய மோடி, டில்லிக்கான அழைப்பை உத்தியோகபூர்வமாக நேரில் கையளித்திருக்கின்றார். இந்த அழைப்பையேற்று எதிர்வரும் 29 ஆம் திகதி கோட்டாபய டில்லி செல்கின்றார். இந்தியா அவசரமாக காய் நகர்த்துகின்றது என்பதை இது உணர்த்துகின்றது. அதற்குக் காரணம் என்ன?

ராஜபக்ஷக்கள் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பதால் முந்திக்கொள்ள வேண்டும் என்பது இதற்குக் காரணமாக இராஜதந்திர வட்டாரங்களால் சொல்லப்படுகின்றது. இரண்டு விடயங்களை கோட்டாபயவுக்கு புதுடில்லி உணர்த்தியிருப்பதாகத் தெரிகின்றது. சீனாவுடனான உறவுகள் பொருளாதார, நிதி உதவி போன்றவற்றுடனானதாக மட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது முதலாவது. இரண்டாவது, தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது. சிறுபன்மையினர் – குறிப்பாக தமிழர்கள் தனிமைப்படுத்தப்படுவதும், அவர்களுடைய உணர்வுகள் கவனத்திற்கொள்ளப்படாமல் விடப்படுவதும் ஆபத்தானது. அது அவர்களிடையே கிளர்ச்சி மனப்பான்மையை ஏற்படுத்தும். அது இந்தியாவையும் பாதிக்கக்கூடியது என்ற செய்திதான் டில்லியால் சொல்லப்பட்டிருக்கின்றது.

2015 தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மகிந்த ராஜபக்ஷ, இந்தியாவே தனது தோல்விக்குக் காரணம் என சுட்டுவிரலை நீட்டி குற்றஞ்சாட்டினார். மகிந்தவை தோற்கடிக்கும் வகையில் செயற்பட்டதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவருடைய பெயரும் அப்போது குறிப்பிடப்பட்டது. இலங்கை அரசியலில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தக்கூடிய சக்தி டில்லிக்கு இருப்பதை இது வெளிப்படுத்தியது. அதனால் என்னதான் சீன சார்பாக இருந்தாலும், புதுடில்லி தம்மீது கழுகுப் பார்வை ஒன்றை வைத்திருக்கும் என்பது ராஜபக்ஷக்களுக்குத் தெரியும். அதனால், புதுடில்லியின் கரிசனையை ஒரேயடியாகப் புறந்தள்ளி கோட்டாபய தரப்பினரால் செயற்படவும் முடியாது. ஜெனீவாவில் வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது. அதுவும் கோட்டாபயவின் தலைக்கு மேலாகத் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தியைப் போன்றது.

ஆக, நல்லிணக்கம், அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் என்னதான் தீவிர கடும்போக்கைக் கொண்டிருந்தாலும், சர்வதேசத்தையும் இந்தியாவையும் சமாளித்துப்போகவேண்டியது கோட்டாபயவுக்கு தவிர்க்க முடியாததாகவே இருக்கும். எது எப்படியிருந்தாலும், அடுத்ததாக வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல்கள் வரையில், முக்கியமான திருப்பம் எதனையும் எதிர்பார்க்க முடியாது. அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பொதுத் தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறலாம். அதன் மூலமாக அமைக்கப்படும் அரசாங்கமே அடுத்த கட்டங்களைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்பை வகிக்கும். இருந்த போதிலும், கோட்டாபய ஆளுமை மிக்க ஒரு ஜனாதிபதி என்ற முறையில், அவருடைய அணுகுமுறையையும் குறைத்த மதிப்பிட்டுவிட முடியாது.
This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts