Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

இலங்கையின் நிலையென்ன? – ஊழல் குறிகாட்டிகளில் நாம் எங்கே உள்ளோம்?

1994 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1954ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க, இலஞ்ச சட்டத்தின் 70 வது பிரிவின் பிரகாரம் ஊழல் குறித்த, இலங்கையின் சட்ட வரையறை பின்வருமாறு காணப்படுகின்றது:

எந்தவொரு அரச ஊழியரும் ஏதேனும் நோக்கத்துடன் அரசாங்கத்திற்கு தவறான அல்லது சட்டவிரோதமான முறையில் நட்டத்தை ஏற்படுத்தும், அல்லது தமக்கு அல்லது எவரேனும் நபருக்கு தவறான அல்லது சட்டவிரோதமான முறையில் நன்மையை, சாதகமான பயனை அல்லது அனுகூலத்தை அளிக்கின்ற எண்ணத்துடன், அல்லது தவறான அல்லது சட்டவிரோதமான முறையில் அரசாங்கத்திற்கு அல்லது எவரேனும் நபருக்கு நட்டம் ஏற்படுத்தும், அல்லது தவறான அல்லது சட்டவிரோதமான முறையில் எவரேனும் நபருக்கு நன்மை, சாதகமான பயன் அல்லது அனுகூலம் அளிக்கும் வகையில்- 

(அ)  அரச ஊழியராக தனது பதவியினைக் கொண்டு கடமைகளை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை செய்யாமல் தவிர்க்கின்றமை

(ஆ) அத்தகைய வேறு எவரேனும் அரச ஊழியரையும், அரச ஊழியராக அவர் கொண்டுள்ள  அதிகாரத்தை பயன்படுத்தி எந்தவொரு செயலையும் செய்யவோ அல்லது செய்வதைத் தவிர்க்கவோ தூண்டுவது

(இ) அரச ஊழியராக தனது பதவியின் அதிகாரத்தைக் கொண்டு அவரது அறிவுக்கு எட்டுகின்ற ஏதேனும் தகவலை பயன்படுத்துகின்றமை

(ஈ) ஒரு அரச ஊழியராக தனது பதவியின் அதிகாரத்தைக் கொண்டு ஏதேனும் முடிவை எடுப்பதில் பங்கேற்கின்றமை

(இ) அரச ஊழியராக, நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதேனும் செயலை செய்வதற்கு அல்லது செய்யாமல் தவிர்ப்பதற்கு அவரது பதவியை பயன்படுத்துமாறு எவரேனும் நபரை தூண்டுகின்றமை:

எனினும், ஊழல் தொடர்பான சட்ட பின்னணி பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. ஊழலின் அடிப்படையில் இலங்கையின் தரவரிசையை அளவிட பயன்படுத்தக்கூடிய ஒரு அளவுகோளாக ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் ஊழலைக் காட்டும் சுட்டெண் காணப்படுகின்றது. நாடுகளின் ஊழல் நிலைக்கேற்ப இச்சுட்டெண் அவற்றை தரப்படுத்துகின்றது. அதில் மிகக்குறைந்த அளவில் ஊழலைக் கொண்ட நாடுகள், தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திலும் அதிகளவான ஊழலைக் கொண்ட நாடுகள் கீழ் நிலையிலும் உள்ளன. இலங்கையை பொறுத்தளவில் கடந்த இரண்டு தசாப்தங்களிலிருந்து 50 வீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. ஊழல் அதிகமாக காணப்படும் நாடுகளின் வரிசையில் இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது. (வரைபு கீழே காட்டப்பட்டுள்ளது)

ஊழலைக் காட்டும் சுட்டெண்ணுக்கு அமைவாக இலங்கையின் ஊழல் அளவு (2010 – 2020)

image2

2019 ஆம் ஆண்டில், இலங்கை 100 இற்கு 38 புள்ளிகளை பெற்றது. அத்தோடு, மொத்தம் 180 நாடுகளில் 93 ஆவது இடத்தில் இருந்தது. மேலுள்ள வரைபடத்தின்படி, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் புள்ளிகளின் நிலை மாறாமல் காணப்படுகின்றது. நியூசிலாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் 87 புள்ளிகளுடன் ஊழலைக் காட்டும் சுட்டெண்ணில் முதலிடத்தில் உள்ளன. பின்லாந்து 86 புள்ளிகளைப் பெற்று குறியீட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 9 புள்ளிகளை மாத்திரம் பெற்ற சோமாலியா, உலகின் அதிக ஊழல் நிறைந்த நாடாக காணப்படுகின்றது.

ஊழல் தொடர்பாக சர்வதேச அங்கீகாரம் பெற்ற முடிவுகள்

ஒரு நாட்டின் குடிமக்களை ஊழல் எவ்வாறு பாதிக்கும்? ஊழலின் தாக்கம் குறித்து சுருக்கமாக கலந்துரையாடுவது அவசியம்.

image1.jpghgh

உதாரணமாக, கிராமமொன்றின் வீதியை அமைப்பதற்கு ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டத்தை ஒதுக்கீடு செய்ய உதவும் அரசியல்வாதிக்கு, ஒப்பந்தக்காரர் 200,000 ரூபாய் செலுத்தவேண்டி ஏற்படுகின்றது. இப்போது ஒப்பந்தக்காரர் தன்னிடம் 800,000 ரூபாயை மிகுதியாக வைத்திருக்கின்றார். அந்த ஒப்பந்தத்தில் அவர் இலாபம் பெற விரும்பினால், அதனை குறைந்த தரத்திற்கு வழங்க வேண்டும். அதற்கு அதிகாரிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக அவர் மேலும் 100,000 ரூபாய் வழங்கவேண்டி ஏற்படுகின்றது. இப்போது அந்த திட்டத்தை செய்துமுடிக்க ஒப்பந்தக்காரரிடம் 700,000 ரூபாய் மாத்திரமே உள்ளது. ஒப்பந்தக்காரர் 200,000 ரூபாய் இலாபத்தை பெற்றால், குறித்த ஒப்பந்தத்திற்கு செலவிடப்பட்ட உண்மையான தொகை 500,000 ரூபாய் மட்டுமேயாகும். இந்த திட்டத்தின் பெறுபேறு தரமற்றது என்பதை மேலும் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

இதனால், பொது உட்கட்டமைப்பின் தரத்தை ஊழல் பாதிக்கின்றது. காரணம், அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளில் பெரும்பாலானாவை அதன் உண்மையான நோக்கத்திற்கு பயன்படுத்தப்படவில்லை.

பாரியளவிலான ஊழல் என்பது ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்றது. இது அபிவிருத்தியை அழிக்கின்றது. வெளிநாட்டு மற்றும் உள்ளூர் முதலீட்டின் மீதான நம்பிக்கையை இழக்கச்செய்கின்றது. செலவுகள் அதிகரிக்கின்றன. அத்தோடு, சமூக மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பை சீர்குலைக்கின்றன. வறுமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளையும் ஊழல் அதிகரிக்கிறது. நைஜீரியாவில் உள்ள ஷெல் நிறுவனம் (நிதியை வைத்திருப்பதற்கும் மற்றொரு நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகளை நிர்வகிப்பதற்கும் உருவாக்கப்பட்ட வணிகம்) தொடர்பான இலஞ்ச வழக்கில், நைஜீரியாவில் ஊழல் நிறைந்த அதிகாரிகளுக்கு அந்த நிறுவனம் வழங்கிய இலஞ்சம், நாட்டின் தேசிய வரவுசெலவுத் திட்டத்தை விட அதிகமானதென அம்பலப்படுத்தப்பட்டது.

ஊழல் ஒரு நாட்டின் மனித உரிமையை மீறுகின்றது. ஊழல் காரணமாக தகுதியானவர்கள் வாய்ப்புகளை இழக்கின்றனர். ஊழல் அநீதிகளுக்கு வழிவகுக்கின்றது. இதனால், அதிக ஊழல் நிறைந்த நாட்டிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதில்லை.

ஊழலை முடிவுக்கு கொண்டுவருவது நாட்டு மக்களின் கடமையாகும். அந்த பொறுப்பை அரசாங்கத்திற்கு வழங்கிவிட்டு அவர்களே இவ்விடயத்தை கவனிக்க வேண்டுமென நாம் இருக்கமுடியாது. அவர்களுக்கும் பல முக்கியமான வேலைகள் உள்ளன. ஆகவே, ஊழல் குறித்து பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். “ஊழல் என்பது கழிவுகளுக்கு சமமான விடயமாகும். அதனை தினமும் அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் குறித்த கழிவுகள் எம்மை அவற்றிற்குள் புதைத்துவிடும்” என மெக்சிக்கோ ஆளுநர் இக்னாசியோ பஜேசா ஒரு தடவை குறிப்பிட்டார். 

வெளிப்படைத்தன்மை தொடர்பான விளக்கத்தை மற்றுமொரு கட்டுரையில் கலந்துரையாடுவோம்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts