Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

இலங்கையின் தகவல் சட்டத்தின் எதிர்காலம்

சுனிமல் ஹெட்டியாரச்சி

இலங்கையில் 2016 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப வழிமுறைகளை உள்ளடக்கியதாக அரசாங்க வர்த்தமாணி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருக்கின்றது.

சர்வதேச தகவல் தினத்தை முன்னிட்டு இவ்வாண்டு செப்டம்பர் 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இரண்டு கருத்தரங்குகளில்; தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தை (RTI) நடைமுறைப்படுத்துவதில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இந்த கலந்துரையாடல்களின் பிரதிபலனாக தற்போதைய நிலையில் இலங்கையில் தகவல் சட்டம் தொடர்பாக காணப்படுகின்ற நிலைமைகள் பற்றி இந்த கட்டுரை கவனம் செலுத்துவதாக அமைகின்றது.

இந்த கருத்தரங்குகளில் ஒரு கருத்தரங்கிற்கு முழுமையாக சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் ஊடக துறையின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்ததோடு இரண்டாவது கருத்தரங்கிற்கு ஊடக அமைச்சர் கெஹெலியர ரம்புக்வெல்ல, முன்னால் சபாநாயகர் கருஜயசூரிய உட்பட அரசியல் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் நடைபெற்ற முதலாவது கருத்தரங்கானது சுதந்திர ஊடக இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். தகவல் ஆணைக்குழுவின் வழிகாட்டலில் சட்டத்தரணி அஷ்வினி நடேசன், ஊடகவியலாளர் ராஹுல் சமந்த ஹெட்டியாரச்சி (சுயாதீன ஊடகவியலாளர்) எஸ். சிவகுமாரன் (வீரகேசரி) மற்றும் இதுனில் உஸ்கொட ஆரச்சி ஆகியோர் தகவல் சட்ட அமுலாக்கம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.

அரசியல் அமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட பின்னர் இன்று இந்த தகவல் சட்டம் தொடர்பான விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மீண்டும் ஆரம்பமாகி இருக்கின்றன. இந்த தகவல் சட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் என்பதை பல சந்தர்ப்பங்களில் புதிய அரசாங்கத்தின் தலைவர்கள் பலர் தெரிவித்துள்ளனர். தகவல் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரச் செய்வதற்காக இலங்கை ஊடக சமூகத்தினர் நீண்ட காலமாக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அதன் காரணமாகவேதான் அவர்கள் நாட்டில் தகவல் அறியும் ஒரு கலாச்சாரத்தை கட்டியெழுப்ப முயற்சி செய்து வருகின்றனர்.

ஜனநாயகத்தின் காவல் நாயாக செயற்படும் ஊடகம் தகவல் சட்டத்தை பயன்படுத்தி நாட்டின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு ஊழலை குறைப்பது, ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூறலை அதிகரித்து இறைமை தன்னாதிக்கம் என்பவற்றை பலப்படுத்தும் வகையில் ஜனநாயகத்தை பலமடையச் செய்வதற்காக இந்த தகவல் சட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதன் மூலம் பொதுமக்களது உரிமைகளை பாதுகாப்பதும் பிரதானமாகும்.

அரசியல் அமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு பதிலாக 20 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்தாலும் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்பதை ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஒக்டோபர் 28 ஆம் திகதி தெரிவித்திருந்தார். அரசாங்கத்தின் உத்தரவாதத்துடன் நீதிபதிகள் மற்றும்; அரசாங்க அதிகாரிகளை நியமனம் செய்வதற்கான அரசியல் அமைப்பு பேரவை நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பாராளுமன்ற குழு (கவுன்சில்) ஏற்படுத்தப்படும் என்பது உறுதியாகி இருக்கின்றது. இது விவாதத்திற்குரிய விடயமாகின்றது. இதில் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவது போன்று தீவிரவாத செயற்பாட்டாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் அரசியல் விருப்பு வெறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றி சந்தேகங்களை கிளப்புகின்றனர்.

எவ்வாறாயினும் தகவல் அறிவதற்கான சட்டத்தை தகவல் ஆணைக்குழ ஊடாக  அமுல்படுத்துவதன் மூலம் அதன் வெற்றி அல்லது தோல்விகளை மதிப்பிட முடியாது. 2017 ஆம் அண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டின் இறுதி வரையில் தகவல் ஆணைக்குழுவுக்கு செய்யப்பட்டுள்ள மேன்முறையீடுகளின் எண்ணிக்கை 2119 ஆகும். இவற்றுள் 2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட மேன்முறைப்பாடுகளின் எண்ணிக்கை 230 ஆகும். 2018 ஆம் ஆண்டு 800 மேன் முறைப்பாடுகளும் 2019 ஆம் ஆண்டு 1089 என்ற அடிப்படையிலும் முறைப்பாடுகள் இருந்துள்ளன. 2019 ஆம் அண்டிற்கான வருடாந்த அறிக்கையின்படி 1466 முறைப்பாடுகளுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு இறுதியளவில் தேங்கி கிடக்கும் தீர்வு காணப்படாத முறைப்பாடுகள் 653 ஆகும். நான்கு தரப்பினர் ஆணைக்குழுவின் தீர்ப்புக்கள் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை  எடுத்துள்ளனர் (பக்கம் 21 யை பார்க்க) என்பது வருடாந்த அறிக்கையின் 22 ஆவது பக்கத்தின்படி உறுதியாகின்றது. மேலதிக விபரங்களுக்கு http://www.rticommission.lk/web/images/pdf/annual_report/annual-report-2019-si.pdf)  இணையத்தாளத்தை பார்வையிடவும்.

வருடாந்த அறிக்கையின் 22 ஆவது பக்கத்தின்படி கடந்த 03 வருடங்களாக பெறப்பட்டுள்ள முறைப்பாடுகளில் ஆணைக்குழுவின் உத்தரவுக்கு இணங்காத 17 முறைப்பாடுகள் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருக்கின்றது. அதே நேரம் மேலும் சில முறைப்பாடுகள் தொடர்பாக மாஜிஸ்ரேட் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தகவல் சட்டத்தை பயன்படுத்தி நாட்டில் ஊழலை குறைப்பது மற்றும் அதிகார துறையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது தொடர்பாக எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது தொடர்பாக தகவல் ஆணைக்குழுவின் பங்களிப்பு எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை சட்டத்தரணி அஷ்வினி நடேசன் வீரபாஹு அவரது ஆய்வு மூலம் மேலும் வெளிப்படுத்தியுள்ளார்.

நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை தொடர்பாக ஆணைக்குழு அதிகளவிலான (571) முறைப்பாடுகளை பெற்றிருக்கின்றது. இரண்டாவதாக அதிகமான முறைப்பாடுகளாக (373) பதிவாகி இருப்பது தொழில்வாய்ப்பு மற்றும் தொழில் விடயங்கள் சம்பந்தப்பட்டதாகும். இந்த விடயங்கள் தொடர்பாக அரச நிறுவனங்கள் உரிய காலத்தில் தகவல்களை வழங்க மறுத்திருப்பதோடு தகவல் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில்கள் வழங்கப்படாததற்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளாகும் என்று அஷ்வினி குறிப்பிடுகின்றார்.

ஊடகத்தில் விடயங்களை புலனாய்வு செய்கின்ற போது தகவல்களை பெறுவதற்காக இலாக்காக்களுக்கு தகவல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கின்ற போது ஊடகவியலாளர்கள் பிரதான சவாலாக எதிர்நோக்குவது மொழி தொடர்பான பிரச்சினையாகும் என்றும் ஆணைக்குழுவிற்கான மேன்முறையீடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சில தகவல் கோரும் விண்ணப்பங்களுக்கு சிங்கள மொழி மூலமே தகவல்கள் பதிலாக வழங்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்களின் தேவை கருதியதாக மொழிப்பிரச்சினைக்கு தீர்வாக ஆணைக்குழு மேலதிகமான மொழிபெயர்ப்பு வசதியையும் ஏற்படுத்த வேண்டும். அதே நேரம் சிலவகையான அலுவலகங்களில் தகவல் விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் அவற்றை ஏற்பதற்கு தகவல் அதிகாரிகள் இல்லாத நிலையில் இன்னும் சில அலுவலகங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர்களால் விடயங்களை உரிய முறையில் புரிந்துகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. சில விடயங்களை நிராகரித்தல், தவறான முறையில் பிரதிநிதித்துவம் செய்தல் போன்ற தவறுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக ஆணைக்குழுவின் தாமதம், உதாசீனப் போக்குகளும் உரிய காலத்தில் தகவல் வழங்கத் தவறுதல் போன்ற விடயங்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன.

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தை அமுல்படுத்துவதில் காணப்படுகின்ற சிக்கல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட வினாக்கள் இச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான தொழில் நுட்பத்திலான தவறுகளாகவே கருத முடிகின்றது. செயற்பாடுகள் மேலும் வெற்றிகரமானதாக மாறுகின்ற போது தொழில்நுட்ப குறைபாடுகளை மேலும் வெற்றிகரமானதாக மாற்றியமைக்க முடிகின்றது. அதனால் இச்சட்டத்தை மேலும் வெற்றிகரமானதாகவும் செயல்திறன் உடையதாகவும் மாற்றியமைக்க குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு எவ்வாறு தொழில்நுட்பம் வீழ்ச்சி கண்டது என்றும் அவற்றை சரி செய்வதற்காக மேலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும்.

 

 

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts