சுற்றுச்சூழல்

இருபது வருடங்களுக்குப் பின்னர் திருத்தப்படும் தேசிய சுற்றாடல் சட்டம்

அருண லக்ஸ்மன் பெர்னாண்டோ

இலங்கையில் தற்போது இயற்கைச் சூழலின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு மற்றும் மனித சமூகத்தின் ஆரோக்கியம் ஆகியவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் எழுபதுக்கும் மேற்பட்ட சட்டங்கள் காணப்படுகின்றன. இந்தச் சட்டங்களில் பல, ஒரு குறிப்பிட்ட பிரிவில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்கின்றன. 

சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சட்ட அடிப்படையானது தேசிய சுற்றாடல் சட்டத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. 

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1980 ஆம் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகளைக் குறைப்பதற்கான அதிகாரத்தை உருவாக்கத் தேசிய சுற்றாடல் அதிகார சபையால் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாகப் புதுப்பிக்கப்படாத இந்தச் சட்டத்திற்கு வலுவான சட்ட அதிகாரத்தை வழங்குவதற்காக நாற்பத்தி இரண்டு புதிய சரத்து உறுப்புரைகள் சேர்க்கப்பட வேண்டும் என்று தேசிய சுற்றாடல் அதிகார சபை முன்மொழிந்துள்ளது.

தேசிய சுற்றாடல் அதிகார சபையானது சுற்றுச்சூழலில் அபிவிருத்தி நடவடிக்கைகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கும், குறைப்பதற்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கும் இரண்டு முக்கிய ஒழுங்கு விதிகளை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அவைகள் பின்வருமாறு:

  1. பிரதான வளர்ச்சித் திட்டங்களின் ஊடாகச் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக “சுற்றாடல் தாக்க மதிப்பீடு” (Environment Impact Assessment- EIA)
  2. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த “சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம்” (Environment Protection License- EPL).

கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட ஏற்பாடுகளில் குறைபாடுகளை அடையாளம் காணக்கூடியதாக உள்ளதுடன் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப சட்ட கட்டமைப்பில் புதிய ஏற்பாடுகளை உள்ளடக்குவது முக்கியமானது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர வார இதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். உத்தேச புதிய சரத்துக்களினூடாகப் புதிய சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலமும், தற்போதைய சட்ட கட்டமைப்பின் எல்லையை விரிவுபடுத்துவதன் மூலமும், தற்போதுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை வழங்க முடியும் என்பதே அவரின் கருத்தாகும். 

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, தேசிய சுற்றாடல் சட்டத்தில் அடிப்படையான மற்றும் முக்கியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதாவது நாற்பத்தி இரண்டு புதிய சட்ட ஏற்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன என்றும்  பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளதுடன் சட்ட சீர்திருத்தத்தின் மூலம் சிறந்ததொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

உதாரணமாக, தற்போதுள்ள சுற்றாடல் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கான  ஆரம்ப அபராத தொகையானது பத்தாயிரம் ரூபா என்ற சிறிய தொகை என கலாநிதி அனில் ஜாசிங்க கூறுகிறார். இந்த அபராத தொகை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அபராத தொகை சிறியளவில் காணப்படுவதால், அபராதம் செலுத்தி, மீண்டும் மீண்டும் அதே குற்றங்களில் ஈடுபடும் போக்கு அதிகளவில் காணப்படுகின்றது எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான முன்மொழியப்பட்ட புதிய ஏற்பாடாக “மூலோபாய சுற்றாடல் மதிப்பீடு” Strategic Environment Assessment (SEA) அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மூலோபாய மதிப்பீடு வளர்ச்சித் திட்டங்களில் சுற்றுச்சூழல் பரிசீலனைகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு பயனுள்ள கருவியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு  அனுமதி வழங்கும்போது பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், சுற்றாடல் பாதுகாப்பு அனுமதி பத்திரம் என்பது சுற்றுச்சூழலுக்கு கழிவுகள் மற்றும் உமிழ்வுகளை வெளியிடுவதைத் தடுக்க ஒரு முக்கிய ஒழுங்குமுறை கருவியாக அமையும். இது சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க ஊக்குவிக்கும் ஒரு சட்ட கருவியாகும்.

தொழிற்சாலைக் கழிவுகளைச் சுற்றுச்சூழலில் வெளியிடுவதைக் கருத்தில் கொண்டு, சுற்றாடல் அமைச்சு  “மாசுபடுத்துபவர் பணம் செலுத்தும் கொள்கை” (Polluter Pays Principle) என்ற கருத்தைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. கலாநிதி அனில் ஜாசிங்கவின் கூற்றுப்படி, சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனத்தால் செய்யப்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் அளவை அடிப்படையாகக் கொண்டு கொடுப்பனவுகள் தீர்மானிக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டால், அபராதம் விதிக்கவும் புதிய ஏற்பாடு முன்மொழிகிறது. இந்த முன்மொழிவுகள் தற்போதுள்ள தேசிய சூழல் சட்டத்தில் தாமதமின்றி சேர்க்கப்பட வேண்டும். முன்மொழிவுகள் ஏற்கனவே சட்ட வரைவு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த ஆலோசனைகளை விரைவில் நடைமுறைப்படுத்தி வெற்றிகொள்ள முடியும் எனத் தான் நம்புவதாகவும் கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள தேசிய சுற்றாடல் சட்டத்தினால் சதுப்பு நிலங்கள் பற்றிய கருத்தாக்கம் விளக்கப்படவில்லை என்பதை வலியுறுத்திய கலாநிதி அனில் ஜாசிங்க, புதிய உத்தேச திருத்தங்களில் சதுப்புநிலங்கள் பற்றிய கருத்தாக்கமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார்.

மேற்கூறியவாறு தொடர்ச்சியாகப் புதிய ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், தற்போது நிலவும் சில சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

சுற்றாடலியலாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான திரு. நயனக ரன்வெல்லவின் கூற்றுப்படி, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தற்போதுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டிருந்தாலும், அதிகாரங்களைக் கொண்ட நிறுவனங்கள்  நீண்ட கால தீர்வுகளுக்கான புதியதொரு  தூரநோக்கு பார்வையை உருவாக்க வேண்டும். அவரின் கருத்துப்படி, சுற்றுச்சூழல் அமைச்சின் எல்லைக்குள் வரும் நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். 

திரு.ரன்வெல்லவின் கருத்துக்களுடன் உடன்படும் வகையில், சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பான சட்டத்தரணி கலாநிதி ஜகத் குணவர்தன, சுற்றாடல் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு நிறுவனங்களுக்கிடையில் அதிகாரச் சமநிலையைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமானது என குறிப்பிட்டதுடன். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாகத் திருத்தப்படாமல் உள்ள தேசிய சுற்றாடல் சட்டம், அதன் செயற்திறனுக்காகப் புதிய ஏற்பாடுகளுடன் திருத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts