கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமூகம்

இன உரிமைகளை மீறும் இலங்கையின் பிறப்புச் சான்றிதழ்!

சஞ்ஜீவ விஜேவீர

“நாங்களும் ஏனையோரைப் போன்று சிவப்பு நிற இரத்தத்தைக் கொண்ட மனிதர்கள்தான். எனினும், அரசாங்கம் எம்மை ஒதுக்கி வைக்கின்றது. குறைந்தபட்சம் எமது பிறப்புச் சான்றிதழையேனும் சரியான முறையில் வழங்குவதில்லை. நாங்கள் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து இங்கு வந்த “அஹிகுண்டகா“ என்ற பழங்குடியின மக்கள் என கூறுகின்றனர். இன அடையாளமற்ற சமூகமாக இப்போது நாம் வாழ்கின்றோம். எமது பிள்ளைகளுக்கு பாடசாலைக்கு செல்ல முடியாமல் உள்ளது”

என்னிடம் உரையாடியவர் தெளிவான சிங்களத்தில் இதனை என்னிடம் குறிப்பிட்டார். உடல் ரீதியாக அவருக்கும் எனக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. நாங்கள் இருவரும் சிங்களத்தில் சரளமாக உரையாடினோம். அதற்கு மேலதிகமாக அவர் தெலுங்கு மொழியும் பேசுகின்றார். தாம் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த தெலுங்கு மொழி பேசும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என அவர்கள் நம்புகின்றனர். 

ஏ-9 நெடுஞ்சாலையில் வவுனியாவை அடைவதற்கு முன்பு பல கிலோமீட்டர் தூரம் கடந்த பின்னர் வரும் இரட்டைப்பெரியகுளம் சந்திக்கு அப்பாலுள்ள நொச்சிக்குளம் கிராமத்தில் இவர்களை நாம் சந்தித்தோம்.

ஏனைய கிராமத்தவர்கள் போல இவர்கள் வாழ்கின்றமை 

“தெலுங்கு தேசத்திலிருந்து இந்த நாட்டிற்கு இடம்பெயர்ந்த வம்சாவளியைச் சேர்ந்தவர்களே தாம் என எமது தாத்தா, பாட்டி எம்மிடம் கூறியுள்ளனர். அன்று தொடக்கம் இலங்கைதான் எமது நாடு. எமது சமூகத்தினர் தெலுங்கு மொழி பேசுவதால், எமக்கும் பேச முடிகின்றது” கடந்த காலத்தை நோக்கும்போது இச்சமூகத்தினர் எங்குமே நிரந்தரமாக குடியேறவில்லை. ஒவ்வொரு இடமாகச் சென்று வாழ்ந்தனர். தாம் தங்குவதற்கான இடத்தை தெரிவுசெய்து அங்கு தற்காலிக கூடாரங்களை அமைத்துக்கொள்கின்றனர். இவர்கள் இந்தியாவின் “குறவர்“ சமூகத்தை ஒத்தவர்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இம்மக்கள் இப்போது பல கிராமங்களில் நிரந்தர வீடுகளை அமைத்துள்ளனர். அவர்கள் பிரத்தியேக பெயர்கள் மற்றும் ஆடைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அவர்களது வாழ்வாதாரங்களும் மாறிவிட்டன. எனினும், ஏனையோர் இவர்கள் மீது வைத்துள்ள அபிப்பிராயம் இன்னும் மாறவில்லை. இதனால், இவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது. ‘வாடி’ என்று அழைக்கப்படும் பழைய பாணியிலான கூடாரங்களில் இவர்கள் இப்போது வசிப்பதில்லை. இவர்களில் பலர் ஏனைய சமூகங்களைப் போல நிரந்தர வீடுகளில் வசிக்கின்றனர். குறிப்பாக, வீட்டுத்தோட்டம், பூந்தோட்டம் மற்றும் வேலிகள் கொண்ட வீடுகளில் வசிக்கின்றனர். தெலுங்கு மொழி பேசும் சமூகங்கள் குடியேறிய கிராமங்களாக நொச்சிக்குளம், அக்கரைப்பற்று, குடாகம, கஞ்சனகுளம், கலாவேவ, அந்தரபெத்த மற்றும் மிஹிந்தலை ஆகியன காணப்படுகின்றன. கடந்த காலத்தில் இச்சமூகம் பாம்பு வித்தை, குரங்கு விளையாட்டு மற்றும் உள்ளங்கை ஜோசியம் ஆகியவற்றை தமது வாழ்வாதார தொழில்களாக முன்னெடுத்தனர்.

இப்போது அவர்களின் வாழ்வாதாரங்கள் மாறியுள்ளன. “நாம் இப்போது பாம்பு வித்தை மற்றும் குரங்கு விளையாட்டை மிகவும் அரிதாகவே செய்கின்றோம்” என வசந்த ஷெல்டன் (வயது-39) கூறினார். “எமது கிராமத்தின் முதியவர்கள் சிலர்  மட்டுமே இப்போது அவற்றைச் செய்கின்றனர். பெண்களில் சிலர் பொது இடங்களில் உள்ளங்கை ஜோசியம் கூறும் வேலையை தொடர்கின்றனர். சாதாரண கூலித்தொழில்கள், மீன்பிடித்தல் மற்றும் சிறு தொழில்களில் ஆண்கள் ஈடுபடுகிறார்கள்” என அவர் மேலும் கூறினார்.

தமக்கான தொழில்களைப் பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டதாக சின்ன எகதன்னலாகே ரஞ்ஜித் (வயது-41) என்பவர் குறிப்பிட்டார். “ஏதேனும் பொருட்களை விற்பதற்காக பேருந்துகளில் நாம் ஏறும்போது எம்மை “அஹிகுண்டகா“ என அழைப்பதோடு, பேருந்து சாரதியும் நடத்துனரும் எம்மை துரத்துகின்றனர். நான் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றினேன். அப்போது எனது பெயரை அறிந்துகொண்ட சக தொழிலாளர்கள் என்னை அவர்களுடன் சேர்த்துக்கொள்ளாமல் ஓரங்கட்டினர். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் அவர்கள் எம்மை ஒதுக்கிவைத்தனர். இதனால் மனவேதனையடைந்த நான் அந்த வேலையிலிருந்து விலகிவிட்டேன்” என்றார்.

சாதாரண மக்களைப் போன்று வாழமுடியாத காரணத்தால் அம்மக்கள் அதிருப்தி அடைகின்றனர். பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை போலவே எரன்னகே மதுஷங்க (வயது-23) என்பவர் தோற்றமளிக்கின்றார். இந்த கிராமத்தை தவிர்த்து வேறு எங்காவது அவரைக் கண்டால் எந்த வகையிலும் அவரிடம் வித்தியாசத்தை காணமுடியாது.

“பிறப்பிலிருந்தே பாகுபாடு ஆரம்பமாகின்றது” என மதுஷங்க குறிப்பிட்டார். “எனது பிறப்பு பதிவுசெய்யப்பட்டபோது எனது இனத்தை அஹிகுண்டகா என்று குறிப்பிட வேண்டாமென எனது தாய் கேட்டுக்கொண்டுள்ளார்.  எனினும், அவரை திட்டிய வைத்தியர் எனது இனத்தை “அஹிகுண்டகா” என குறிப்பிட வேண்டுமென வற்புறுத்தியுள்ளார். எனது மனைவி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தபோது அதன் இனத்தை “இலங்கையர்” என குறிப்பிடுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் “தெலுங்கு” என குறிப்பிடுமாறு வற்புறுத்தினர். ஏன் நாங்கள் இவ்வாறு நடத்தப்படுகின்றோம்?”

உலகில் எங்குமே அஹிகுண்டகா என்ற இனம் கிடையாது. ஒவ்வொரு இடமாகச் சென்று, தற்காலிக குடியிருப்புகளில், தற்காலிகமாக வாழும் நாடோடிச் சமூகங்களை அழைப்பதற்காகவே அஹிகுண்டகா என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. எனினும், அதனை ஒரு இனமாக அடையாளம் காட்டும் இலங்கை அரசாங்கம், பிறப்புப் பதிவேட்டில் அவ்வாறே குறிப்பிடுகின்றது. தெலுங்கு என்பது ஒரு மொழியே அன்றி அது ஒரு இனச் சமூகம் அல்ல. எனினும், தெலுங்கு என்பதை ஒரு இனமாக குறிப்பிட்டு, அவர்களுக்கான பிறப்புச் சான்றிதழை இலங்கை அரசாங்கம் வழங்குகின்றது.

என். சி. விதான, பதிவாளர் நாயகம்  

எவ்வாறாயினும், பதிவாளர் நாயகம் என்.சி விதானகே ஒரு வித்தியாசமான கருத்தை முன்வைத்தார் “அஹிகுண்டகா என்றழைக்கப்படும் ஒரு இனம் கிடையாது. அத்தோடு, தெலுங்கு என்பது ஒரு மொழி. அது ஒரு இனமல்ல. எமது திணைக்களத்தால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் அவற்றை இனமாக குறிப்பிட்டிருந்தால் அது பிழையாகும். இவ்வாறான பிரச்சினைகளை சீர்செய்ய, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக பிறப்புச் சான்றிதழ்களை மீள வடிவமைக்க ஆரம்பித்துள்ளோம். இவ்வாறான பிழைகள் எதிர்காலத்தில் ஏற்படாது. அத்தகைய பிறப்புச் சான்றிதழ்களை கொண்டிருப்பவர்கள் எம்மிடம் கோரிக்கை விடுத்தால் அவற்றை சீர்செய்துகொள்ள முடியுமென தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.

அஹிகுண்டகா இனம் என குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பிறப்புச்சான்றிதழ் 
தெலுங்கு இனம் என குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பிறப்புச்சான்றிதழ்

பிறப்புச் சான்றிதழில் அஹிகுண்டகா என தமது இனம் குறிப்பிடப்பட்டுள்ளதால், வேலை தேடுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக இச்சமூகத்தினர் தெரிவிக்கின்றனர். ஷெல்டனின் குழந்தைகள் ஆங்கில மொழிமூலம் கல்வி கற்கின்றனர். வைத்தியராக வேண்டும் என்ற இலட்சியத்துடன் அவரது மூத்த மகள், இலண்டன் உயர்தர பரீட்சைக்காக ஒன்லைன் ஊடாக கல்வி கற்கின்றார். இவர்தான் அவரது பெற்றோரின் நம்பிக்கை நட்சத்திரம்.  இலங்கையிலுள்ள இனத்தைப் பற்றி அறிந்துகொள்ள இந்த சமூகம் ஒரு சிறந்த உதாரணம் என வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் எம். எஸ். ஜனக தெரிவித்தார். “இவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இவர்களை நிரந்தர குடியிருப்புகளில் குடியேற நாம் உதவினோம்.

வசந்த ஷெல்டன்,சின்ன எகதன்னலாகே ரஞ்ஜித் , எரன்னகே மதுஷங்க 


குழந்தைகளை பாடசாலைகளில் சேர்ப்பதில் காணப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்தோம். சமூகத்தில் இவர்களும் ஒரு பகுதியினர் என சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிலர் இம்மக்களை இன்னும் ஓரங்கட்ட முனைகின்றனர். இவர்கள் ஒரே மாதிரியான இனச் சமூகம். இவர்களின் பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாக்கும் அதேவேளை பிரதான நீரோட்டத்துடன் இவர்களை ஒருங்கிணைக்க நாம் உதவ வேண்டும்” என்றார்.

எரன்னகே லெட்சுமி,எரன்னகே தரங்கனி

ජාතියකට ජාතියක් අහිමිකල ලංකාවේ උප්පැන්න සහතිකය

Sri Lankan Birth Certificates Violate Ethnic Rights

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts