சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இணையத்தில் வெறுப்புப் பேச்சினால் துன்புறுத்தல்: முறைப்பாடு செய்ய தயக்கமா?

அஹ்ஸன் அப்தர்

இணையவெளியில் தனிநபர்கள் வெறுப்புப் பேச்சினால் துன்புறுத்தப்படுவதும் முறைப்பாடு செய்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருப்பதும் வழமையான ஒன்றுதான். முகம், நிறம், உருவம் போன்றவற்றை கிண்டல் செய்யும் உருவக்கேலியும் தனிநபரின் இனம் அல்லது கலாசாரத்தை கொச்சை படுத்தும் வெறுப்புப் பேச்சுக்கள் பரவலாக இணையவெளியில் காண முடிகின்றது. இவற்றுக்கு மேலாக பால்நிலை அடிப்படையிலான பிரிவினையும் நடைபெறுகின்ற ஒன்றுதான்.

இணையத்தில் நடைபெறுகின்ற இவ்வாறான தனிநபர் மீதான துன்புறுத்தல்கள் இணையமொழியில்  ‘trolls’  என அழைப்பர். தமிழில் இதற்கு சரியான சொற்பிரயோகம் இல்லாத நிலையில் ‘இணையவெளி துன்புறுத்தல்’ அல்லது ‘தனிநபர் மீதான இணையவெளி துன்புறுத்தல்கள்’ என்ற பொருளில் இது வழங்கப்படுகின்றது.

மனதளவில் காயப்படுத்தும் இந்த செயற்பாடை உரிய இடத்தில் முறைப்பாடு செய்வது தொடர்பாக சமூக வலைதளம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் 92 வீதமான பாவனையாளர்கள் தாம் முறைப்பாடளிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தனர். அதேவேளை தமக்கு முறைப்பாடளிப்பது எவ்வாறு என்பது தெரியாதென 44 வீதமான பாவனையாளர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் 38 வீதமான பாவனையாளர்கள் இணைய வன்முறையினால் தாம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

முறைப்பாடு செய்ய தயக்கமா?

இணையத்தில் நாம் தனிப்பட்ட முறையில் துன்புறுத்தப்படும் போது அது பற்றி உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதே விரும்பத்தக்க செயல். இந்த செயல் சட்ட ரீதியாக குற்றம் என்பதை குற்றவாளிகளை உணர வைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக முறைப்பாடு செய்ய வேண்டும். முறைப்பாடு செய்ய கீழ்வரும் நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம்.

01. குற்றப்புலனாய்வு திணைக்களம்  (CID) 

இணைய துன்புறுத்தல்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (சி.ஐ.டி) கணினி குற்றச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் வருகிறது. துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் முறையான சட்டம் கிடைக்காததால் இந்த வகையான சட்டங்கள் செயற்படுவதில்லை. மேலும் தற்போதுள்ள சட்டங்களின் சரியான பகுப்பாய்வு சி.ஐ.டிக்கு ஏற்கனவே இருக்கும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

அறிக்கையிடல் முறை (reporting system) மிக நீளமானது. புகார் அளிக்க அவர்கள் எடுக்கும் நேரம் மற்றொரு தடையாக மாறியுள்ளது. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் முறைப்பாடு செய்ய கொழும்பில் உள்ள சைபர் குற்றப் பிரிவுக்குச் செல்வது சைபர் கொடுமைப்படுத்துதலால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கலை முன்வைக்கிறது.

02. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA)

நீங்கள் 18 வயதிற்கு குறைந்தவராக இருந்தால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி இலக்கமான 1929 ற்கு அழைத்து முறைப்பாடை வழங்க வேண்டும். கொரோனா அச்சத்தினால் நாடு முடக்கப்பட்டதை தொடர்ந்து சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் 30 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இதில் இணைய வன்முறை சம்பவங்களே அதிகம் என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் சிறுவர்களின் அதி சிறந்த நலனைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. இதன் கீழ் சிறுவர்களைப் பாதிக்கும் இணையத் துன்புறுத்தல்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாத்தல் சாத்தியமே. ஆபாசப்படங்களைப் பிரசுரித்தல் தொடர்பான கட்டளைச் சட்டமும் (Obscene Publication Ordinance No. 04 of 1927)  செயற்பாட்டிலுள்ளது. ஆபாசப்படங்களை பிரசுரித்தல், திருத்தியமைக்கப்பட்ட (edited) நெருக்கமான புகைப்படங்களைப் பிரசுரித்தல் முதலானவை இச் சட்டத்தின் பிரிவு இரண்டின் கீழ் தடுக்கப்பட்டுள்ளது.

உலகளவில் இன்டர்போல் மற்றும் சிறுவர் பாதுகாப்பு முகவர்கள் சிறுவர்களுக்கு இணையவெளியில் இடம்பெறும் பாலியல் சுரண்டலில் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். துஷ்பிரயோகம் செய்பவர்கள் இணையவெளியை பயன்படுத்தும்போது அவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதாக றுநுPசுழுவுநுஊவு என்ற சர்வதேச நிறுவனம் எச்சரிக்கிறது.

சட்டத்தின் மூலம் முறைப்பாடு செய்ய தயாராகுவோம்

ஒருவரை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவமதிப்பது தீங்கியல் பொறுப்புக்கூறல் என்பதன் அடிப்படையில் இணையவெளியில் தனிநபர் துன்புறுத்தல் மேற்கொள்ளப்படுவது தீங்கியல் பொறுப்பக்கூறல் என்ற முடிவுக்கு வரலாம். இந்த இணைய வெளி அவமதிப்புக்கு எதிராக தீங்கியல் பொறுப்புக் கூறல் சட்டத்தின் ஊடாக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பாதிக்கப்பட்டவர் நட்ட ஈடை பெறுவதற்கு வழி சமைக்க முடியும். இது முகநூலில் ரிப்போர்ட் செய்தல் மற்றும் குற்றவாளியின் கணக்கை முடக்குதல் என்பவற்றுக்கு மேலதிகமாக உள்ள தீர்வாகும்.

அவ்வாறே 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைத் தவிர்ப்புச் சட்டம் இணையவெளித் துன்புறுத்தல்கள் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நிகழ்த்தப்படும்போது பாதுகாப்புத் தரக்கூடிய சட்டமாகக் காணப்படுகிறது.

பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் ஏனைய வன்முறைகளைத் தடுக்கம் வகையில் உருவாக்கப்பட்ட 1998 ஆம் ஆண்டின் 20ஆம் இலக்கச் சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் இணையவழியில் நிகழ்த்தப்படும் பகிடிவதைகளும் உள்ளடக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிப்பதற்கு இடமுண்டு.

இலங்கையைப் பொறுத்தவரையில் குற்றங்களை இனங்கண்டு, வகைப்படுத்தி அடிப்படை மூலக்கூறுகளை விபரித்து தண்டனைக்கான ஏற்பாடுகளை விதந்துரைக்கிற சட்டமாகத் தண்டனைச் சட்டக்கோவை காணப்படுகிறது. இணையவெளி துன்புறுத்தல்களாக அடையாளங் காணப்படக்கூடிய மூன்று குற்றங்கள் தண்டனைச் சட்டக்கோவையில் காணப்படுகின்றன.

பிரிவு 345 ஆனது பாலியல் தொந்தரவு என்பதைத் தண்டனைக்குரிய குற்றமாகக் குறிப்பிடுகிறது. அவ்வாறே பிரிவு 372 ஆனது குற்றமுறையாகப் பணம்பறித்தல் (criminal extortion) என்பதைக் குற்றமொன்றாக வரையறுக்கிறது. அவ்வாறே பிரிவு 483 இல் குற்றவியல் மிரட்டல் (criminal intimidation)  என்பது அதாவது ஒருவர் சட்டரீதியாகச் செய்ய வேண்டிய செயல் அல்லாதவொன்றைச் செய்யும்படி தூண்டுதல், அச்சுறுத்தல் முதலானவை குற்றமொன்றாகச் சொல்லப்படுகிறது. இம்மூன்று குற்றங்களும் இணையவெளியில் நிகழ்த்தப்பட்டதென்பதை நிரூபிக்கக்கூடியதாக உள்ள பட்சத்தில் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றவியல் வழக்கொன்றைத் தாக்கல் செய்து குற்றம் புரிபவரைத் தண்டிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்த்தப்படும் குற்றங்கள் கையாளப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

(மேலே குறிப்பிடப்பட்ட சட்டம் தொடர்பிலான விடயங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கோசலை மதன் அவர்கள் எழுதிய கட்டுரையில் இருந்து தொகுக்கப்பட்டவையாகும்)

உள வள துணையாளர் என்ன சொல்கிறார்!?

இணையத்தில் தனிநபர் துன்புறுத்தலினை எதிர்கொள்கின்றவர்கள் வெறுப்பு, கோபம், கவலை, சோகம், சோர்வு, அழுகை மற்றும் குற்ற உணர்வு போன்ற மனவெழுச்சி கோளாறுகளை சந்திப்பதாக புனர்வாழ்வு உள வள துணையாளர் தாஹிர் நூருல் இஸ்ரா தெரிவிக்கின்றார். இணையத்தில் தன்னுடைய செயற்பாடொன்றிற்காக பிரிதொருவரால் வழங்கப்படும் எதிர்மறையான பின்னூட்டம் அல்லது பதிவு இவ்வாறான விளைவை எற்படுத்துவதாக அவர் தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “ஒருவருடைய கருத்துக்கள், விருப்பு மற்றும் வெறுப்புக்கள் போன்றவற்றை பதிவு செய்வதற்கு கருத்துச் சுதந்திரம் மிக்க ஒரு களமாக சமூக வலைதளம் இருக்கிறது. அதே நேரம் இவை மனித இருப்புக்கு சவாலாக இருக்கின்ற வினாவும் நமக்குள் எழுகிறது.

ஒருவருடைய பதிவு தனிநபரை தாக்கும்போது பாதிக்கப்பட்டவர் கருத்துப் பெட்டியில் அல்லது உள்பெட்டியில் அவருக்கு பதிலளிக்கும் நிலை அல்லது குறித்த நபரை நட்புப்பட்டியலில் இருந்து நீக்கும் நிலைமை இருக்கின்றது அவருக்கு பதிலளிக்கும் போது அதை அவர் எப்படி எடுத்துக்கொள்வார் என்பதை கணிப்பீடு செய்து பதிலளிப்பது பொருத்தமாக அமையும்.

பாதிக்கப்பட்ட நபர் குறித்த வன்முறையை எதிர்கொள்ளும் போது முடிந்தவரை தாக்கியவரை மரியாதையுடன் கையாளுவது அவையொழுக்கமாகும். வன்முறைய எதிர்கொள்வது தொடர்பாக சுயகற்றலை மேற்கொண்டு இந்த பிரச்சினைகளை தீர்க்க அனைவரும் முன்வர வேண்டும். 

இணையத்தில் ஒருவர் கல்வி மற்றும் அறிவு என்பவற்றை முன்னிலைபடுத்தும்போது அவர் வன்முறையில் இருந்து பாதுகாக்கப்படுவார். அல்லது அதை எதிர்கொள்ளும் பலத்தை பெறுவார். எனவே தமது சமூக வலைதள முகப்புகளை அறிவு சார்ந்ததாக ஆக்கிக்கொள்வது சிறப்பாக அமையும்” என்றார்.

இணையத்தில் தனிநபர்களை தாக்கும் நபர்கள் பற்றி இஸ்ரா குறிப்பிடுகையில் அவர்களுள் பெரும்பாலானோர் தாம் செய்வது தவறு என்ற கண்ணோட்டத்தில் செய்வதில்லை என்றும் மற்றவருடைய வேதனையில் இன்பம் காணும் நோக்கத்தில் ஒரு சிலரே செயற்படுவதாகவும் தெரிவிக்கிறார்.

புதியதோர் விதி செய்வோம்…

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு முன்னர் நாம் ஒவ்வொருவரும் இணையத்தில் தாக்கப்பட்டால் அதை தைரியமாக எதிர்கொள்ளும் மனநிலை உடையவர்களாக எம்மை பலப்படுத்திக் கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். 

எம்மை யாராவது ஒருவர் அல்லது ஒரு குழுவினர் இணையவெளியில் இன, மத, பாலின மற்றும் பாலியல் அடிப்படையில் துன்புறுத்தினால் சமூக வலைதளங்களில் இருந்து விலகிச்செல்வது ஆரோக்கியமான ஒரு விடயம் கிடையாது. அதற்கு எதிராக செயற்படுவதோடு முறைப்பாடு செய்யவும் தயக்கம் காட்டாமல் இருப்பதே சீரான சமூகத்திற்கான வழிகாட்டியாகும்.

C:\Users\Test PC\Downloads\eiIZB0N54672-300x225.jpg
C:\Users\Test PC\Downloads\7c209c24-33d08798-4659fa93-cid-edited-_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped-300x162.jpg
C:\Users\Test PC\Downloads\pg01-NCPA-300x169.jpg
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts