ஆணைக்குழுக்களை நியமித்தலின் நடப்பு வழக்கும் அர்த்தமும்
சம்பத் தேசப்பிரிய
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிசெல் பச்லெட்டின் சமீபத்திய அறிக்கையின் மூலம் இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இலங்கை அரசாங்கம் தற்போது தயாராகி வருகிறது. குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்கான முன் ஆயத்தமாக இலங்கை அரசாங்கம் ஜனவரி மாதம் தனது முதலாவது பிரதிபலிப்பை மேற்கொண்டது. ஜனவரி மாதம் இருபத்தோறம் திகதியன்று அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி பத்திரிகை மூலம் விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு அவ்வாணைக்குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் திரு. ஏ.எச்.எம்.டீ நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் திரு. சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் திரு. நிமல் அபேசிறி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆணைக்குழுவின் பணிகள் என்னவென்றால், இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் மூலம் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் மற்றும் இதுபோன்ற பிற குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா மற்றும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும், அவை தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் இணங்குகின்றனவா என்பதையும் விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதாகும்.
தற்போது இலங்கையில் ஒரு புதிய அரசாங்கம் உள்ளது. ஆகையால், அவர்களிடம் மனித உரிமைகள் தொடர்பான தனிப்பட்ட அணுகுமுறை மற்றும் ஒரு புதிய வெளியுறவுக் கொள்கை இருக்க முடியுமாகையால் புதிதாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மூலம் அவர்களின் சொந்த அரசியல் சிந்தாந்தங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் மீளாய்வு செய்வதற்கு அவர்களுக்குள்ள உரிமை ஜனநாயக உரிமையாகும். நாட்டின் பலம் வாய்ந்த மக்கள் ஆணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியும் புதிய உள்ளடக்கத்தைக் கொண்ட அரசாங்கமும் இலங்கையில் காணப்படுவதால், அவர்களது புதிய அணுகுமுறைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான மனித உரிமை அமைப்புக்கள் நேர்மறையான பிரதிபலிப்பினை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று எதிர்பார்க்க முடியும்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதித்து நாட்டிற்குள் ஒரு ஜனநாயக சூழலை நிலைநாட்ட ஒரு நேர்மையான முயற்சியை மேற்கொள்வதாக உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தோன்றினால் மட்டுமே மேற்கூறியவை அனைத்தும் யதார்த்தமாகும். ஆனால், இந்த நேரத்தில் ஒரு நாடென்றரீதியில் நமது இருப்புநிலை சர்வதேச சமூகத்தைப் புதிய சிந்தனைக்கு இட்டுச்செல்லும் ஒன்றல்ல என்பது தெளிவாகி வருவது கவலைக்குரிய நிலைமையாகும்.
ஆணைக்குழுக்களின் நியமனத்தை நடப்பு வழக்காக மாற்றிய ஒரு நாடு என்று இலங்கை சர்வதேச அளவில் நகைப்பிற்குள்ளாகி வருகின்றது என்பது தற்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சமீபத்திய ஆணைக்குழுக்களுக்குக் கிடைக்கப் பெற்றுவரும் பிரதிபலிப்புக்களிலிருந்து தெளிவாகிறது. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுறுத்திய பின்னர், நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நியமித்த அனைத்து ஆணைக்குழுக்களும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தங்களைத் தற்காலிகமாகத் தடுப்பதற்காக நியமிக்கப்பட்டவையாகத் தோன்றுகின்றன. இந்த வரலாற்றுரீதியான நிலைமை புதிய அரசாங்கத்தின் கீழ் எவ்வாறு மாறும் என்பது தொடர்பாக உலகிற்கு தெளிவான சமிக்ஞை அனுப்புவது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற நல்லாட்சி அரசாங்கத்தால் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30/1-40/1 பிரேரணைகளிலிருந்து தற்போதைய அரசாங்கம் விலகுவதாக என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன அண்மையில் ஜெனீவா அமர்வுக்கு அறிவித்திருந்தார். அதுபோன்றே, அவரது முடிவுக்கான காரணங்களையும் விளக்கினார். கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அத்தீர்மானமானது பாராளுமன்றம் அல்லது அமைச்சரவைக்குத் தெரியப்படுத்தாது எடுக்கப்பட்டதாகும் என அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தீர்மானமானது நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கு முரணானதும் இறையாண்மைக்கு எதிரானதுமாகுமென அவர் சுட்டிக்காட்டியதுடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் முகவராண்மைகளுடன் தொடர்ந்தும் எதிர்காலத்தில் பணியாற்றுவதாகவும்; அவர் குறிப்பிட்டார். விசாரணை ஆணைக்குழுக்களை மீளாய்வு செய்து அவற்றின் ஆரம்ப முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் புதிய ஆணைக்குழுவொன்றை நியமிப்பதாக அவர் உறுதியளித்தார். அதன்படி அரசாங்கம் இந்த ஆணைக்குழுவை நியமித்துள்ளது. புதிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும்போது, அரசாங்கம் தயாரித்த இருப்புநிலை என்னவென்பதை கண்டறிய வேண்டும்.
சர்வதேசரீதியான கவனத்தை ஈர்த்த சில குற்றச்சாட்டுகளை இங்கு சுருக்கமாகக் கூறலாம். அரசாங்க சிவில் விவகாரங்களை இராணுவமயமாக்கல், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தொடர்பாகச் செயற்படும் விதம், இருபதாவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் நீதித்துறை சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் சுதந்திரம் பலவீனமடையுமாறு நடவடிக்கை மேற்கொள்ளல், யுத்த கால குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர்கள் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்படுதல் மற்றும் சிறுபான்மையினர் மீதான அழுத்தங்களைத் தீவிரப்படுத்துதல் போன்றன குற்றச்சாட்டுக்களின் பட்டியல் அவ்வளவு இலேசாக எடுத்துக்கொள்ளக் கூடிய விடயங்களல்ல என்பது நிச்சயமானதாகும்.