சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

ஆக்கிரமிப்பா? பன்மைத்துவமா? வள்ளிக்குகை!

கலாவர்ஷ்னி கனகரட்ணம்

சகல இனங்களும் மத வேறுபாடின்றி ஒன்று கூடும் ஒரு பிரசித்திபெற்ற இடமே கதிர்காமம். பல்லின சமூகமும் ஒன்றாக நின்று வழிபடும் ஒரு வரலாற்று பிரசித்திபெற்ற இடமாக காணப்படும் கதிர்காமம் முருகன் ஆலயம், ஊவா மாகாணத்தின் மொனறாகலை மாவட்டத்தில் கதிர்காம பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ளது. மூவினத்தையும் சேர்ந்த சுமார் 26,000 மக்கள் தொகையினர் அங்கு வாழ்ந்துவருகின்றனர். அந்த முருகன் ஆலயத்திற்கு அருகில் இன்னுமொரு வழிபாட்டு இடம் உண்டு. வள்ளியை திருமணம் செய்வதற்காக ‘தமிழ்க் கடவுள்’ என்று பெயர் கொண்ட முருகன் இலங்கைக்கு வந்து, பிள்ளையாரின் உதவியுடன் வள்ளியை திருமணம் செய்ததாக ஐதீக கதைகள் உண்டு. அதன்படி அந்த இடத்தில் வள்ளிக்கென ஒரு பிரத்தியேகமான இடமொன்று உள்ளது என்ற விடத்தை இன்று சிங்கள மக்கள் கூறி தமிழ் மக்கள் அறிகிறார்கள்.

செல்லக்கதிர்காமம் மாணிக்கக் கங்கையிலிருந்து சில மைல் தொலைவில் காணப்படும் வள்ளிக் குகையே அது. அந்த வள்ளிக்குகை அங்கிருந்து ஏழுமலை வரை நீடிக்கின்றது. இரண்டுக்கும் இடையில் வெடிசிட்டி மலை என்ற இடத்தில் மற்றுமொரு கோயிலும் உண்டு. இவை வள்ளியை முருகன் திருமணம் செய்த கதையின் பின்னணியில் உள்ள இடங்கள் என தற்போது அந்தக் கோயிலில்  பூசகராக உள்ள குமார்சாமி குறிப்பிடுகிறார்.

அங்கு அதிகமாக வரும் சிங்கள மக்களிடம் வள்ளி பற்றி கேட்டபோது, முருகனின் இரண்டாவது மனைவி என்றும் அவர் வேடுவர் குல பெண் என்றும்( இலங்கையில் சிங்கள மூதாதையர்கள் வேடுவர் என்றே நம்பப்படுகிறது) தாம் அறிந்த கதைகளைக் கூறுகிறர்hகள். தமிழர்கள் இந்த இடத்திற்கு வருவது குறைவே. நாட்டு சூழலால் ஏற்பட்ட மாற்றம் என்பதற்கு அப்பால் தமிழர்களில் பலர் இதுபற்றி அறிந்திருக்கவில்லை என்றே தெரிகிறது.

அதேபோன்று தமிழ் “கடவுளாம் முருகன்” வள்ளியை திருமணம் செய்வதற்கு வந்தபோது அவருக்க உதவுவதற்காக அவருடன் பாபா என்பவர் வந்ததாகவும் பின்னர் அவர் முருகனுடன் திரும்பிச் செல்லாது இங்கேயே தங்கிவிட்டதாகவும் குறிப்பிடுகிறார் அங்குள்ள பள்ளிவாசலின் மௌலவி சஹார்டீன். அந்த பாபாவின் சமாதி இன்னும் அங்குள்ளதாகவும் அவர் கொண்டுவந்த சாம்புராணி மரம் தற்போது கருகிய நிலையில் அங்கு பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடுகிறார் அவர். இவ்வாறு ஒவ்வொரு இன மக்களும் தாமது நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட பல கதைகளின் அடிப்படையில் இந்த இடத்தை ஆராதிக்கின்றனர். 

அதே வேளை கடந்த 2016ஆம் ஆண்டுவரை வள்ளிக் குகையில் பௌத்த துறவி ஒருவரே பூசகராக இருந்திருக்கிறார். பின்னர், சில அரசியல் காரணங்களுக்காக குறித்த துறவி தாக்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அந்த குறித்த காணியை சுவீகரிப்பதற்காக தாம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அந்தத் துறவி வழக்கு தொடர்ந்துள்ளமை பற்றியும் தகவல் தெரிவித்தனர். 

தற்போது, அதன் பிரதான தலைவராக பௌத்த துறவி ஒருவர் உள்ளார். பூசகராக ஜயதுங்க கப்புமஹத்தயா என்பவர் உள்ளார். அவருக்கு துணையாக மற்றுமொரு துறவி அங்குள்ளார். அங்கு பூசைக்கு வருவோருக்கு வள்ளியின் பெருமைகளை அவர்கள் எடுத்துரைத்து வருவது விசேட அம்சமாக உள்ளது. வள்ளியின் பெயரில் எழுதப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்கின்றனர். காலை 4 மணிக்கெல்லாம் வள்ளிக்கு திருமஞ்சனம் செய்யப்படுகின்றது. இதனை பௌத்த துறவிகள் மற்றும் கப்புமஹத்தயா ஆகியோரே செய்கின்றனர். பின்னர் காலை 6.30 மணிக்கு, 10.30 மணிக்கு, மாலை 6.30 மணிக்கு என தினமும் தவறாமல் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலையில் இருந்து படிப்படியாக மக்கள் கூட்டம் அதிகரிப்பதையும் காண முடிகிறது.  பௌத்த மதத்தில் இல்லாத இந்து மதத்தில் இருக்கின்ற ஆகவிதிகளின்படி இந்த கோயில் நடவடிக்கைகள் தென்படுகின்றன. இதை மத இன அதிகாரப் போக்குகளாக விளங்கிக்கொள்ள போகிறோமா? பன்மைத்துவத்தின் அடையாளங்களாக விளங்கிக்கொள்ள போகிறோமா? தமக்கு தமக்கான வரலாற்றை கட்டமைப்பதில் ஒன்றுடன் ஒன்ற பின்பின் பிணைந்திருக்கும் இவ்வாறான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் மறந்துபோகிறோம். இந்தக் கதைகளும் வாழ்க்கை முறைகளும் பன்மத்துவ வாழ்க்கைக்கான உற்சாக பானங்களே. 

ஆரம்பத்தில் கற்பாறை வழியாக வள்ளி குகைக்கு மக்கள் சென்றபோதும், இப்போது புதிதாக பாதை வெட்டப்பட்டு போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்க் கடவுள் என்ற பெருமை முருகனுக்கு உண்டு. ஆனால், இங்கு வருவோரில் 10இற்கு ஒருவர் மாத்திரமே இந்து மதத்தைச் சேர்ந்தவர். சிங்கள மக்கள் பூஜை தட்டுகளுடன் வந்து வழிபடுவதும் மிகவும் சக்திவாய்ந்த இடம் என  நம்புவதும் அதிகமாக உள்ளது. 

இந்த இடத்திற்கு வந்து செல்பவர்களுக்கு தாகம் தீர்ப்பவராக குளிர்பானம் மற்றும் மூலிகைப் பானம் தயாரித்து விற்பனை செய்கிறார் கே. ஜி. ரஞ்ஜனி. இந்துக்களின் விசேட தினங்களில் மகா சிவராத்திரி  போன்ற முக்கிய விரத தினங்களின் போது விசேட பூசை இடம்பெறுவதாகவும் அதற்கு மக்கள் அதிகளவில் வருவதாகவும் அவர் கூறுகிறார்.

வள்ளிகுகை ஆலயத்தின் தற்போதைய தலைவரான பௌத்த மதகுரு, வேடுவ குலத்தில் பிறந்த வள்ளி, மான்களுடன் விளையாடி இடமே செல்லக்கதிர்காமம் வள்ளிக்குகை என்றும், இங்குதான் முருகன் வள்ளியை சந்தித்தார் என்றும் கூறிய அவர், இதனை காண இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் வருவதாகவும் குறிப்பிட்டார். 

கௌதம புத்தர் ஞானம் பெற்றதை நினைவுகூர்ந்து, போதி மரத்தின் கிளைகள் பல்வேறு இடங்களில் நாட்டப்பட்டன. அந்தவகையில், இற்றைக்கு 2300 வருடங்களுக்கு முன்னர் அநுராதபுரத்தில் போதி மர கன்று நடப்பட்ட நிகழ்வில் கதிர்காமத்தைச் சேர்ந்த சத்திரிய வம்சத்தின் வீரர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தியதாக இலங்கையின் வரலாற்று நூலான மஹாவம்சம் கூறுகின்றது. வள்ளிக் குகையில் சகல பெயர்ப்பலகைகளும் அறிவித்தல்களும் தனிச் சிங்களத்தில் இருப்பதையும் நாம் காண முடிந்தது. 

அத்தோடு, முருகப்பெருமான் வள்ளியை ஜூலை மாதம் திருமணம் செய்ததாகவும் அதனை நினைவுகூரும் வகையிலேயே கதிர்காமத்தில் ஜூலை மாதத்தில் எசல பெரஹரா நடைபெறுவதாகவும் கதிர்காமம் கம்பார தேவாலயத்தின் பிரதான கப்புறாளையான கே. டி. தேவப்பிரிய குறிப்பிடுகின்றார். 

தமிழ் கடவுள், இந்துக்கடவுள்,  பௌத்த சிங்களவர்களால் ஆட்கொள்ளப்பட்டது என கூறப்போகிறோமா? தமிழ் கடவுள், இந்துக் கடவுளை பௌத்த சிங்களவர்களும் ஆராதிக்கிறார்கள் என்று சொல்லப்போகிறோமா? இவை நிலம் சார்ந்த ஆதிக்கத்தை நிலைநாட்டும் சம்பவங்களாக பார்க்கப்படுமா? நம்பிக்கை சார்ந்து ஒன்றுக்கொன்று பிணைந்திருக்கின்ற சம்பவங்களாகப்பார்க்கப்படுமா? எல்லாம் நாம் பார்க்கும் பார்வைக் கோணத்தில் இருக்கிறது. அந்த பார்வைக்கோணங்களின் அடிப்படையில் வரலாற்றை எழுத முற்படுகின்றபோது சமாதானமான பன்மைத்துவ வாழ்க்கை வரலாறு அடுத் சந்ததிக்கு கிடைக்குமாயின் அது சிறப்பானதே. 

Aggression? Pluralism? The Cave Of Valli!

ආරවුලක්? බහුත්වවාදය? වල්ලිගුහාව!

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts