சுற்றுச்சூழல்

அழிவுகளில் ஆரம்பமாகப்போகும் ஆற்று நீர்த்திட்டம

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படுவதற்கு ஏற்பாடாகியுள்ள கிவுல் ஓயா திட்டத்தினால் ஏற்படப்போகும் சுற்றுச் சூழல் பாதிப்புக்கள் பற்றிய விரிவான பார்வை

ஆர்.ராம்

முல்லைத்தீவை மையப்படுத்தி திட்டமிட்டுள்ள சர்சைகளுக்குரிய மகாவலி ‘எல்’ வலயத்திற்கு தசாப்தங்கள் கடந்தும் நீரைக் கொண்டு செல்வது குதிரைக்கொம்பாகியுள்ள நிலையில், தற்போது அதன் துணைத்திட்டமாக ‘கிவுல் ஒயா’ திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.


வவுனியா மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உற்பத்தியாகி, முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்க்குச் செல்லும் ‘மா ஓயா’வின் பிரதான கிளை நதியே ‘கிவுல் ஓயா’. இந்தக் கிவுல் ஓயாவை மையப்படுத்தி அணையைக்கட்டுவதன் மூலமாக, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விவசாயத்துக்கான நீர் மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்த முடியும் என்று முன்மொழிந்து இந்த திட்டத்தினை வடிவமைத்துள்ளது மகாவலி அதிகாரசபை.


இத்திட்டத்தில், நீர்ப்பாசன உட்கட்மைப்பு அபிவிருத்திக்காக 6230 மில்லியன் ரூபாவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 832 மில்லியன் ரூபாவுமாக, மொத்தம் 7062 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. அத்துடன், குறித்த திட்டமானது, வலயம் ‘ஏ’ – கிவுல் ஓயா நீர்த்தேக்கம் அணைக்கட்டு மற்றும் வெள்ளப் பெருக்குப் பகுதி, வலயம் ‘பி’ – விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள், வலயம் ‘சி’ – கிவுல் ஓயா திட்டத்தின் கீழான குடியேற்ற பகுதிகள், வலயம் ‘டி’ -சிறு தாங்கிகள் மற்றும் அவற்றை அண்மித்த குடியிருப்புகள், வலயம் ‘ஈ’- முன்மொழியப்பட்ட யானை வழித்தடம் என்று ஐந்து கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளது.


இத்திட்டத்தினால், ஏற்கனவே குடியேற்றப்பட்டுள்ள 4,372 குடும்பங்கள், மற்றும் புதிதாக குடியேற்றப்படவுள்ள 1626 குடும்பங்களென மொத்தமாக 6000 விவசாயக் குடும்பங்கள் நேரடிப் பயனாளிகளாகவும், 50 ஆயிரம் பேர் குடிநீரைப் பெறும் பயனாளிகளாகவும் இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த அடிப்படையில் பார்க்கின்றபோது, கிவுல் ஓயா திட்டமானது, ஒரு சமூக முன்னேற்றத்தினை இலக்காகக் கொண்டதென வெளித்தோற்றத்தில் தெரியக் கூடும். ஆனால் இந்த திட்டத்தினால், ஆறறிவு கொண்ட மனிதன் முதல், இயற்கையின் கொடையாகவுள்ள வளங்களான குளங்கள், வனங்கள், வனஜீவராசிகள், பூச்சியினங்கள் என்று பல்லுயிர்களும் பலிக்கடாவாகவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதனைவிடவும், நாடளாவிய ரீதியில் பெரும் சவாலாகியுள்ள யானை, மனிதன் மோதல் இப்பகுதியில் தோற்றம் பெற்று உக்கிரமடைவதற்கான ஏதுநிலைகளும், வன ஜீவராசிகள் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான மோதல்களும் ஏற்படுவதற்கும் அதிகளவிலான சந்தர்ப்பங்கள் உள்ளன. இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 832 மில்லின் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு முன்மொழிவுகள் கூறப்பட்டாலும் குறித்த திட்டத்தினை முன்னெடுப்பதால் சுற்றாடலில் மீண்டும் பெறமுடியாத வளங்கள் அழிவடைவதையும், ஏற்படப்போகும் எதிர்மறையான விளைவுகளையும் அதீத கரிசனையுடன் அவதானிப்பதே சாலச்சிறந்ததாகும்.

வெள்ள அனர்த்தமும் குளங்களின் நிலையும்


கிவுல் ஓயா திட்டம் முற்றுப்பெறும் பட்சத்தில், காட்டுப் பூவரங்குளம், வெடிவைத்த கல்லு, மருதோடை, காஞ்சிரமோட்டை, கூழாங்குளம் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. குறிப்பாக, காட்டுப்பூவரங்குளத்தில் 430 ஏக்கர்களும், வெடிவைத்தகல்லில் 475 ஏக்கர்களும் வெள்ள அனர்த்த அபாயத்தில் உள்ளன.


இந்தக் கிராமங்களில் இன்னமும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் நிறைவேறாத நிலைமை நீடித்துக் கொண்டிருக்கையில் தான் இவ்வாறான வெள்ள அனர்த்த அபாய நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.


இக்கிராமங்களில் பூர்வீகமாக வாழ்ந்தவர்களுக்குச் சொந்தமான உறுதிக்காணிகள் மற்றும் வாழ்வாதார நிலங்கள் காணப்படுகின்றபோதும் அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் இன்னமும் தாமதங்கள் நிலவுகின்றன.


இதனைவிடவும், இராமன்குளம், வேலன்குளம் உள்ளிட்ட 75 இற்கு மேற்பட்ட சிறுகுளங்கள் மற்றும் நீரேந்துப் பகுதிகள் இத்திட்டத்தின் ஊடாக முழுமையாக காணாமல்போகும் நிலைமையே ஏற்படவுள்ளது. அவற்றில் 90 சதவீதமானவை வனப் பிரதேசதங்களுக்குள் காணப்படுபவையாக உள்ளன.


நீண்ட ஆற்றுப்படுக்கை வருகின்றபோது, சிறுகுளங்கள் அகற்றப்பட்டால் தீமையில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும், விவசாயிகளின் கால்நடைகளுக்கான நீர்வசதிகள் ஆற்றுப்படுக்கைகளில் கிடைப்பது மிகவும் சிக்கலானது. ஆகவே, மேய்ச்சல் தரைகளுக்கு வருகைதரும், கால்நடைகளுக்கான நீர் வசதிகள் முழுமையாக அழிக்கப்படப்போகின்றது என்பதே யதார்த்தமாகவுள்ளது.


ஒதுக்க காடுகள், வன ஜீவராசிகளின் பரிதாபமான நிலை


இதனைவிடவும், குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள பகுதியினை அண்மித்து காணப்படும் ஒதுக்க காடுகள் காணப்படும் பகுதியானது, 90சதவீதம் சமதரையாகவே காணப்படுவதோடு, வறண்ட வலயத்துக்கான தரைத்தோற்ற குணாம்சங்களையும் கொண்டிருக்கின்றது.


அதுமட்டுமன்றி, ஒதுக்க காடுகள் மற்றும் அவற்றை அண்மித்த சிறிய பாறைகள், மற்றும் குன்றுகளும் உள்ளன. குறித்த திட்டத்தினை அமுலாக்குகின்றபோது மூழ்குவதற்கான ஆபத்து நிலைமைகளும் அதிகமாகவே உள்ளன.


குறிப்பாக, வவுனியா பெரியகட்டிக்குளம் பகுதியில் காணப்பட்ட ஒதுக்கக்காடுகள் அழிக்கப்பட்டே ‘கிவுல் ஓயா’ திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன் கொக்குத்தொடுவாயில் உள்ள ‘கிரிபன் வௌ’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ள ஆமையன் குளத்திற்கு நீரை நகர்த்துகின்றபோது 2500 ஹெக்டெயர் காடுகள் முற்றாக அழிந்துவிடும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இத்திட்டத்தினை அண்மித்த புதிய குடியேற்றங்கள் காரணமாக, 1500 ஹெக்டெயர் அளவிலான வாழ்விடத்தினை வன ஜீவராசிகள் இழப்பதால் மனிதன்-யானை மற்றும் ஏனைய வன ஜீவராசிகளுக்கிடையிலான மோதல் தீவிரமடையும் என்று வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் கவலை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இதற்காக திட்டமுன்மொழிவில் மின்சாரவேலி மற்றும் வழித்தடங்கள் அமைத்தல் ஆகியன விடயங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.


எனினும், திட்டத்தின் பிரகாரம் மேம்படுத்தப்படவுள்ள விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்காக மின்சார வேலிகள் அமைக்கப்படுமாக இருந்தால் காட்டுயானைகள் மற்றும் ஏனைய வன ஜீவராசிகளின் நடமாட்டம் கேள்விகுறியாகும் சூழல் தோன்றுவதால் அவற்றின் உயிர்வாழ்வு சம்பந்தமான பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன.


காட்டுயானைகள் உள்ளிட்டவை, புதிய வழித்தடங்களை நாடினால் மின்சார வேலிகளை மேலும் 50 கிலோமீற்றருக்கு விஸ்தரிக்கும் நிலைமைகள் ஏற்படுவதோடு, அதற்காக, மேலதிக நிதி ஒதுக்கீடும் தேவைப்படும் என்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் கரிசனை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் சம்பந்தமாக திட்ட முன்மொழிவில் எவ்விதமான பதிலளிப்புக்களும் செய்யப்படவில்லை.


இதேவேளை, மனிதன்-யானை மற்றும் ஏனைய ஜீவராசிகளுக்கு இடையிலான மோதலைத் தடுப்பதற்காக நீர்ப்பாசனத் திட்டத்தின் அணைக்கு கீழே வழித்தடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சாரவேலி தடுப்புக்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை பூரணப்படுத்துவதற்கு முன்னதாக விவசாய நிலங்களுக்கு பிரவேசிக்கும் யானைகள் உள்ளிட்ட வன ஜீவராசிகளை தடுப்பதற்கான எவ்விதமான திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.


அத்துடன், குறித்த திட்டப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த 88 தாவர இனங்களில் இரண்டு தேசிய அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளானவை என்றும் முக்கியமான ஏழு தாவர இனங்கள் உள்ளன என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகள ஆய்வின் போதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அதுமட்டுமன்றி, இத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 214 விலங்கினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இனங்களில், 14 உள்ளுரைச் சேர்ந்தவையாக இருப்பதோடு நான்கு இனங்கள் உலக அளவில் ஆபத்துக்குள்ளானவையாகவும் எட்டு இனங்கள் தேசிய அளவில் அழிந்து வருபவையாகவும் உள்ளன. இவற்றைவிடவும், 43 வகையான பட்டாம் பூச்சிகள், 11 வகையான நன்னீர் மீன்பிடியினங்கள், 19 வகை பாலூட்டிகள், 15 வகையான ஊர்வன ஆகியனவும் ஆபத்துக்களை எதிர்நோக்கவுள்ளன.


அதேபோன்று, இந்தப் பகுதியில் பறவைகளின் வருகையும், அவற்றின் நிரந்தரமான இருப்பிடங்களும் வெகுவாகவே உள்ளன. குறிப்பாக, இத்திட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் 10 வகையான புலம்பெயர்ந்த பறவையினங்கள் வருகை தருவதும், நீண்டகாலமாக தங்குவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


மழைவீழ்ச்சியும் மண்ணின் தன்மையும் தரைக்கீழ் நீரும்


இந்த திட்டமானது, கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கும், இரணைமடு நீர்த்தேக்கத்திற்கும் இடையில் காணப்பட்டாலும், நீரின் ஆவியாதல் வேகமானது மாறுபட்டதாகவே காணப்படுகின்றது. இது, விவசாயிகளுக்கு காலவோட்டத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்த முடியும். அதேபோன்று அழிக்கப்படும் ஒதுக்கக் காடுகளுக்கு பதிலாக முன்னெடுக்கப்படவுள்ள மரநடுகை திட்டத்திற்கும் எதிர்மறையான சமிக்ஞையையே அளிப்பதாக உள்ளது.


இதனைவிடவும், காற்றின் வேகம் சராசரியாக காணப்படும் அதேவேளை, மழைவீழ்ச்சியானது, 1964 முதல் 1994 வரையிலான காலப்பகுதியில் பதவியா மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளை அடிப்படையாக வைத்து சராசரியாக 1486 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இப்பகுதியில், வடகீழ் மற்றும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காலங்களிலும் தொடர்ச்சியாக மழை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால், முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும், ஒதுக்ககாடுகள் அழிக்கப்பட்டதன் பின்னரும், எதிர்பார்த்த அளவிலான சராசரி மழைவீழ்ச்சி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.


இதனைவிடவும், செம்மஞ்சள் நிற வண்டல் தன்மையான மண் காணப்படுவதோடு, உலர் வலயங்களைப்போன்ற பிரதிபலிப்புக்களைச் செய்யக் கூடியதான தன்மைகளை அவை கொண்டிருக்கின்றன. இருப்பினும், அவை அனைத்தும், நீரை உள்வாங்குவதிலும், அல்லது கடத்துவதிலும் பயன்படுத்தப்படுவதால் நாளடைவில் அவற்றின் தன்மை மாறுபடும் என்பது கடந்த கால அனுபவமாக உள்ளது. இந்த மாற்றமானது, விவசாயத்துறையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தரைக்கீழ் நீரின் தன்மையையும் மாற்றியமைப்பதாகவே இருக்கும்.


இணக்கம் ஏற்பட்டது எந்த அடிப்படையில்?


அதேநேரம், குறித்த ஆற்றுத்திட்டத்தின்பிரகாரம், விவசாயத்தினை விரிவடையச் செய்வதில், வாழ்விடங்களை மேம்படுத்தல் உள்ளிட்டவையே பிரதான இலக்குகளாக இருக்கப்போகின்றது. இதனடிப்படையில், குடியேற்றங்களும் மேலும் அமைக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.


அவ்வாறான நிலையில், விவசாயத்தின்போது இரசாயனப் பொருட்களின் அதிகப்படியான பயன்பாடுகளும், மேலதிக மக்களின் வருகையும், நீர்வாழ் வாழ்விடங்களை அழித்தல், பெறுமதியான மரங்களை சட்டவிரோதமாக வெட்டுதல், வரையறையற்ற முறையில் வேட்டையாடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு அடித்தளமிடப்போகின்றன.


இவ்வாறான பின்னணியில் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டியதாக இருந்தால், தேசிய திட்டமிடல் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, தொல்பொருளியல் திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், வனப்பாதுகாப்பு திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை சுரங்கப்பணியகம் ஆகியவற்றின் அனுமதிகள் அவசியமாகின்றன.


ஆனால், ஒவ்வொரு துறையிலும் தாராளமான எதிர்மறையான விடயங்கள் காணப்படுகின்ற போதும், அவற்றைப் பாதுகாக்க வேண்டிய திணைக்களங்களும், துறைசார் வல்லுநர்களும், தங்களது அனுமதிகளை அளித்துள்ளனர். இதனை சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.


வெறுமனே, திட்டமொன்றில் முன்மொழியப்படும் நிதியை அடிப்படையாக கொண்டு தான் அனுமதிகள் அளிக்கப்படுவதாக இருந்தால், அரிதான வளங்களின் அழிவின் பின்னரோ, சுற்றுச்சூழல் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டதன் பின்னரோ எவ்வாறு குறித்த நிதியை வைத்து சுற்றுசூழலை பாதுகாக்க முடியும் என்ற வினாவுக்கு பதிலளிப்பதற்கு குறித்த திட்டத்திற்கு அனுமதி வழங்கி கையொப்பமிட்ட அத்தனை அரச அதிகாரிகளும் கடமைப்பட்டுள்ளனர்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts