அழிந்து வரும் பெருங்கடல்கள்
சஜீவ விஜேவீர
பூமியில் உயிர்களின் தோற்றம் கடல் தளத்திலிருந்து தொடங்குகிறது. பூமியின் மேற்பரப்பில் 70% க்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட பரந்த பெருங்கடல்கள் உலகின் 90% க்கும் அதிகமான உயிரிகளைக் கொண்டுள்ளன. இதன் விளைவாக, கடல் ஈடுசெய்ய முடியாத பாத்திரத்தை வகிப்பதுடன் மனிதகுலத்தின் இருப்பில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இலங்கையிலும் உலகெங்கிலும் காணப்படும் வரலாற்றுக்கு முற்பட்ட மனித காரணிகள், மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் தொடக்கத்திலிருந்து கடல் வளங்களைச் சார்ந்து வாழ்ந்தனர் என்ற உண்மையைப் பிரதிபலிக்கிறது. அன்று மட்டுமல்ல இன்றும் நாம் கடல் வளத்தையே நம்பியுள்ளோம். முழுக்க முழுக்க கடலால் சூழப்பட்ட நாட்டில் வாழும் நாம், கடலிலிருந்து பெற்றுக்கொள்ளும் வளங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். இந்தக் கடல் எப்படி அழிகிறது என்பது பற்றிய நமது ஆய்வுகள் போதுமானதாக இல்லை.
நம்மைச் சுற்றியுள்ள கடல்கள் மட்டுமல்ல, உலகின் ஒட்டுமொத்த கடல் சுற்றுச்சூழல் கட்டமைப்பும் இன்று அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் தீங்கான நிலையைத் தடுக்காவிட்டால் ஏற்படும் அழிவை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதே உண்மை. கடல் மாசுபாட்டை பாதிக்கும் பிரதான நடவடிக்கைகளை மனித குலமே செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடல் மாசுபாட்டால் ஏற்படும் நோய்கள் மற்றும் இறப்புகளால் உலகப் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பு சுமார் 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் மிகவும் பாரதூரமான நிலைமை என்னவென்றால், நாட்டைச் சூழவுள்ள கடல்களைக் கொண்ட தீவுவாசிகளாகிய நாம் இதுபற்றிக் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.
உலகின் மிக மோசமான கடல் மாசுபாடு
இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மாசுபாட்டின் மிக மோசமான சம்பவம் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் அழிவு ஆகும். இது உலகின் மிக மோசமான கடல் மாசுபாடு எனவும் அறியப்படுகிறது. இந்தக் கப்பலின் அழிவுடன் ஏற்பட்ட கடல் மாசுபாடு இதுவரை கணக்கிடப்படவில்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, அதை ஒருபோதும் சரியாகக் கணக்கிட முடியாது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் அழிவுடன், டன் கணக்கில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கடலுடன் கலந்தன, மேலும் ஆயிரக்கணக்கான டன் சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் கடல் நீரில் சேர்ந்தன. அவற்றில் சில கரை ஒதுங்கின, சிலவற்றை அகற்றி கடற்கரையைச் சுத்தம் செய்தாலும் கூட இன்னும் ஆங்காங்கே குப்பைகள் கடற்கரை முழுவதும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கப்பல் அழிவின் மூலம், தங்கள் உயிரை இழந்த கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாத அளவு விசாலமானதாகும். இன்னும் அவ்வப்போது இந்த அழிவின் காரணமாகக் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து போவது அவ்வப்போது கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது.
கடல் மாசுபாட்டு முறைகளில், எண்ணெய்மூலம் ஏற்படும் மாசுபாடு மிகவும் கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 மில்லியன் எண்ணெய் பீப்பாய்கள் கடல்நீருடன் இணைவதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலத்தல், கப்பல்களின் எரிபொருள் தாங்கிகளைச் சுத்தம் செய்தல், கப்பல் விபத்துக்கள், நெடுஞ்சாலைகள் வழியாக செல்லும் தண்ணீர் கடலில் கலத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் இது ஏற்படுகிறது.
இதேவேளை, கப்பல் விபத்துக்களினால் வருடாந்தம் சுமார் 600,000 எண்ணெய் பீப்பாய்கள் கடலில் சேர்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விபத்துகளின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை நாமும் அவ்வப்போது அனுபவிக்க வேண்டியுள்ளது.
குப்பைகளால் சீரழியும் வாழ்க்கை
கடல் மாசுபாட்டிற்கான மற்றொரு முக்கிய காரணம், மனிதர்கள் உபயோகித்து எஞ்சும் கழிவுகளின் அதிகமானவை கடலுடன் கலப்பதாகும். இவற்றில் இறந்த உயிரினங்கள் , குப்பைகள், பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. நிலத்திலிருந்து கடலுக்குச் செல்லும் இது போன்ற கழிவுகள் கடல் நீர் அலைகளுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைதூரங்களுக்கு செல்வதுடன் அந்தக் கழிவுகளின் அருகே மீன்கள் ஏராளமாகத் திரள்வதை மீனவர்கள் அறிவர். இதன்காரணமாக மீன்கள் அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சில சமயங்களில் இது போன்ற குப்பைகளை மீனவர்கள் தேடிச்செல்கின்றனர்.
மேலும், கடல்வாழ் உயிரினங்கள் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை உணவாக விழுங்குவதால் ஏராளமான விலங்குகள் உயிரிழப்பதாக அறிக்கையிடப்பட்டுள்ளன. இதனால் கடல் பறவைகள் மற்றும் ஆமைகள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. பிளாஸ்டிக்கினால் உயிரிழக்கும் கடல் பாலூட்டிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், பிளாஸ்டிக்கால் இறக்கும் மீன்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகும். மேலும் இந்த பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கடலின் மேற்பரப்பில் பல ஆண்டுகளாக மிதந்து, அனைத்து கடல்வாழ் உயிரினங்களின் உயிர்வாழ்வையும் அச்சுறுத்துகின்றன.
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரங்கள்கூட கடைசியில் கடலில் கலக்கிறது. அதிகப்படியான இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதால், கடல் வளம் குன்றிப்போகும் நிலை காணப்படுகின்றது. அதன்படி, பல்வேறு வகையான பாசிகளின் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால், அப்பகுதியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் இறக்கின்றன.
கடல் பொருளாதாரம் ஆபத்தில்
ஆழ் கடல்கள் இவ்வாறு மாசுபட்டாலும், உலகின் 95 சதவீத மீன் வளம் கடலோர நீரால் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. உலக மக்கள் தொகையில் சுமார் 3.5 பில்லியன் மக்கள் தங்கள் பிரதான உணவு ஆதாரமாகக் கடல்களிலிருந்து கிடைக்கும் உணவை நம்பியுள்ளனர்.
சுற்றுலாத்துறையின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்குக் கடல் மற்றும் கடற்கரைகளின் பங்களிப்பு அளப்பரியது. உலகின் மொத்த வேலைவாய்ப்பில் சுமார் 08% குறித்த தொழில்துறையின் மூலமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெற்றுக்கொள்கின்றமை கவனிக்கத்தக்கது. இது உலக மொத்த தேசிய உற்பத்தியில் 10% ஆகும்.
கடந்த காலங்களில், நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து சாதனமாக ஆழ் கடல்கள் பயன்படுத்தப்பட்டன, ஆனால் இன்று அது விமான வழி பயணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது, ஆனாலும்கூட கடல் போக்குவரத்து அதிக இலாபம் ஈட்டக்கூடியதாகக் காணப்படுவதால், நாடுகளுக்கு இடையிலான 90% வர்த்தகம் இன்னும் கடல் வழி பாதை மூலமாகவே நடைபெறுகிறது.
தற்போதைய உலக மக்கள்தொகையில் சுமார் 40% கடற்கரையிலிருந்து 60 கிலோமீட்டர்களுக்குள் வாழ்கின்றனர். மேலும் உலகின் முக்கிய நகரங்களில் 25% கடலுக்கு அருகில் அமைந்துள்ளன.
இப்படி கடல் மாசுபடும்போது, மீன்பிடி தொழில் பல கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை, பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் போன்றவை மேம்பட்டிருந்தாலும், மீன் உற்பத்தியில் காணக்கூடிய அதிகரிப்பு இல்லை. இதற்கு காரணமாக கடலில் மீன்கள் இல்லை என்பது மீனவர்கள் எழுப்பும் முக்கிய புகார் ஆகும் .
இதற்கு முதன்மையான காரணம் மீன் வளங்களைக் கண்மூடித்தனமாக அணுகுவதே ஆகும். மீன் பெருக்கத்தை பார்க்க அதிகமாக மீன்பிடிப்பதால் மீன்கள் அழிந்து வருகின்றன. தற்போது, மிகவும் பிரபலமான மீன் இனங்களான சூரை மீன், கீரை மீன், அறுக்குளா போன்ற பொருளாதார மதிப்புள்ள மீன்களின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்துள்ளது.
மீன்பிடி தொழில் காரணமாக மீன்கள் எதிர்கொள்ளும் ஆபத்தான சூழ்நிலைகளில் ஒன்று சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதாகும். பல்வேறு வெடிபொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தல் அவற்றில் முக்கியமானவையாகும். இந்தத் தீங்கான நடைமுறைகளால் இலட்சக்கணக்கான மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. மேலும், சிறு மீன்கள் அழிந்து வருவதே மீன்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைவதற்கு காரணமாகும்.
இதனால், கடலோர மீன்பிடி குறைவடைந்துள்ளதுடன், ஆழ்கடலுக்குச் சென்று மீன்களை பிடிப்பது அதிகரித்துள்ளது. அதன் காரணமாக ஆழ் கடல் மீன்களின் அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது. இந்தப் பகுதிகளில் நீண்ட காலமாக வாழும் உயிரினங்கள்மீது இது பெரும் பாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கடல் மாசுபடுவதுடன் மீன் வளமும் குறைந்து கொண்டே வருகிறது என்பது நாம் அறிந்த உண்மையாகும்.
இந்நிலை மாற, கடல் சூழல்குறித்து முறையான ஆய்வு மேற்கொண்டு, தேவையான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். இது தற்போதைய காலத்திற்கு அவசியமான அவசரத் தேவையாகவும் கருதப்படுகின்றது.