அழிந்துவரும் நன்னீர் மீன் வளம்
சஜீவ விஜேவீர
கற்களைத் தழுவிச் செல்லும் நீரோடையின் மென்மையான மெல்லிசை காதுகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் பார்வைக்கு இனிமையை அளிக்கின்றது. கரையை நோக்கி பயணிக்கும் தெளிவான நீரலைகள் கூழாங்கற்கள் மீது அழகாகச் சறுக்குகிறது, மற்றொரு இடத்தில், அது நுரை உமிழும் காட்சியுடன் அருவியாகப் பாய்கிறது.
விறுவிறுப்பாக நீந்தும் மீன்களின் கலகலப்பான துடிப்பி ஓடும் நீரலைகளுக்கு ஒரு கவர்ச்சியான அழகை சேர்க்கிறது. எங்கும் நீர்வழிப்பாதை காணப்படும் இலங்கையின் ஒவ்வொரு நீர்வழி மூலையிலும் சில வகையான மீன்களை நீங்கள் நிச்சயமாகக் காணலாம். இந்த மீன் இனங்களில் பெரும்பாலானவை இந்த அழகான நாட்டிற்கு சொந்தமானவை, மேலும் நன்னீர் மீனினம் நீர்வாழ் பன்முகத்தன்மைக்கு பாரிய பங்களிப்பை மேற்கொள்கின்றன.
பூர்வீக மீன்களின் உருவத்தால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு ரூபாய் பண நோட்டு இன்றைய சமூகம் புழக்கத்தில் இல்லை. இரண்டு ரூபாய் பண நோட்டில் சித்தரிக்கப்பட்ட மீன்கள் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களிலிருந்து பண நோட்டை போன்று மறைந்து வருகின்றன.
இலங்கையில் வாழும் முதுகெலும்பு காணப்படும் விலங்கினங்களின் நீர்- நிலம் வாழ் உயிரினங்களைத் தவிர, நன்னீர் மீன்கள் மிகவும் அச்சுறுத்தலான விலங்கினமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையில் அத்தனகலு ஆற்றிலிருந்து நில்வலா ஆறு வரையிலான பகுதி தென்மேற்கு மீன் உயிர்க்கோள காப்பகம் என அழைக்கப்படுவதுடன் அதன் எல்லை மத்திய மலைகளின் கீழ் பகுதிவரை விரிவடைந்துள்ளது. மத்திய மலைப்பகுதிகள் உட்பட மகாவலி கங்கைப் படுகை மகாவலி மீன் உயிர்க்கோளக் காப்பகம் என்றும் இவ்விரு வலயங்களுக்குச் சொந்தமில்லாத ஏனைய பகுதிகள் உலர் மீன் உயிர்க்கோளக் காப்பகம் என்றும் அழைக்கப்படுகின்றன.
பூர்வீக மீன் இனமான Api Rathavaeniya களனி, பெந்தர, களு, ஜின் மற்றும் நில்வலா ஆறுகளில் பரவலாகக் காணப்படுகின்றது. பசுமையான வெப்பமண்டல மழைக்காடுகள் முதல் சிறிய நீரோடைகள் மற்றும் நீர் பாயும் எந்த இடத்திலும், ஈரமான மண்டலத்தில் செழித்து வளரும் பல்வேறு வகையான மீன்களை நீங்கள் காணலாம்.
அவற்றில் பாதி சிவப்பு தரவு புத்தகத்தில் காணப்படுகின்றன
இந்த நாட்டில் 91 வகையான நன்னீர் மீன்கள் காணப்படுகின்றன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை, அதாவது 50 இனங்கள், விசேட இனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கையில் அழிந்து வரும் உயிரினங்கள்பற்றிய தகவல்களை உள்ளடக்கிய சிவப்பு தரவு புத்தகத்தின்படி, 45 இனங்கள் அழியும் அபாயத்தில் காணப்படுகின்றன. அழிந்து வரும் இனங்களில் 39 இனங்கள் நம்நாட்டில் மட்டுமே காணப்படுகின்றன.
இவ்வாறு அழியும் நிலையில் உள்ள மீன் இனங்கள் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அபாயகரமான அழியும் நிலை, அதிகம் பாதிக்கப்பட்ட நிலை, அழியும் அச்சுறுத்தல் காணப்படும் நிலையென வகைப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் நன்னீர் மீன்களைப் பொறுத்த வரையில் 21 இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. அவற்றில் 18 மீன் இனங்கள் இந்நாட்டுக்கே உரியனவையாகும். அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் உயிரினங்களின் எண்ணிக்கை 19 ஆகும். இதில் 17 இனங்கள் இந்நாட்டில் மட்டுமே காணப்படுகின்றன. அழியும் அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் உள்ள 05 இனங்களில் 04 இனங்கள் இந்நாட்டில் மட்டுமே காணப்படுகின்றன. மேலும் 05 மீன் இனங்கள் அழிவு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் மிக நெருக்கமான நிலையை எட்டியுள்ளன. அவற்றுள் மூன்று இனங்கள் இந்நாட்டுக்கே உரியவை.
இதற்கு மேலதிகமாக, சிவப்பு தரவுப் பதிவேட்டில் 09 மீன் இனங்கள் அழிந்துவரும் மீன் இனங்களாக அடையாளம் காணப்பட்ட போதிலும் போதுமான தரவுகள் இல்லாத காரணத்தினால் மேற்கண்ட வகைகளில் வகைப்படுத்த முடியாதவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் 05 இனங்கள் இலங்கைக்கே உரித்தானவையாகும்.
30 – 40 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் பல பகுதிகளில் காணப்பட்ட நன்னீர் மீன்கள் இன்று காணக்கிடைப்பதில்லையென இலங்கையில் நீண்டகாலமாக நன்னீர் மீன்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுவரும் ரொஹான் பெத்தியகொட கூறுகிறார். சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு அமைய அந்த இனங்கள் அதீத உணர்திறன் அடைவதன் காரணமாக நம்மைச்சுற்றியுள்ள சூழலிலிருந்து அந்த மீன் இனங்கள் விடைபெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனால், இலங்கையில் நன்னீர் மீன் இனங்கள் எதிர்கொள்ளும் அபாயம் மிகவும் நன்றாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. சிவப்பு தரவுப் பட்டியலின் தகவல்களின் உதவியுடன் இந்த மீன் இனங்களைப் பாதுகாப்பதற்கு எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்பதே நிதர்சனம்.
ஆபத்துக்கான காரணங்கள் என்ன?
இலங்கையில் இயற்கையான ஏரிகள் காணப்படாததால், காணப்படும் அனைத்து நன்னீர் மீன் இனங்களும் ஆறுகள் அல்லது சதுப்பு நிலங்களுக்கு அருகில் வாழும் இனங்கள் ஆகும். பூர்வீக மீன்கள் நதியோர வாழ்விடங்களில் தங்கள் வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக்கொள்வதால் வெள்ளப்பெருக்கு முறைகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. குறிப்பாக உணவு, வசிப்பிடம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்புகள் விசேடமானவை. இந்தத் தொடர்பு வலையமைப்பின் மனித ஊடுருவல் மூலம் ஏற்படும் தாக்கம் காரணமாக மற்றும் மண் அரிப்பு, சூழல் மாசடைதல் அல்லது காலநிலை காரணிகள் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகள் ஊடாக நாம் நினையா மாற்றங்கள் ஏற்படலாம்.
நன்னீர் மீன்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுப்பதற்கு தற்போதைய சட்ட முறைமை பலப்படுத்தப்பட வேண்டும் எனச் சுற்றாடல் சட்டத்தரணி கலாநிதி ஜகத் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யாவிட்டால் மிக விரைவில் இந்த மீன்கள் பூமியிலிருந்து மறைந்துவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
17 வகையான நன்னீர் மீன்கள் 1937 ஆம் ஆண்டின் வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் இலக்கம். 2 இன் படி பாதுகாக்கப்பட்ட விசேட இனங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன, கடைசியாக 2009 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டத்தால் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. இதில் 14 இனங்கள் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன. 2012 சிவப்பு தரவு பதிவேட்டின்படி, அவற்றில் 13 இனங்கள் அபாயகரமான அழியும் நிலையிலும் , 3 இனங்கள் அழியும் நிலையிலும் மற்றும் ஒரு இனம் அச்சுறுத்தல் நிலையிலும் காணப்படுகின்றன.
சட்டப் பாதுகாப்பு போதுமானதா?
“இந்தக் கட்டளைச்சட்டத்தில் 31(a) பிரிவின் கீழ், பாதுகாக்கப்பட மீன் இனத்திற்கு காயப்படுத்துதல், சேதப்படுத்துதல், பிடித்தல் அல்லது கொல்லுதல், மேற்கண்ட நோக்கத்திற்காக உபகரணங்களைப் பயன்படுத்துதல், கொல்லப்பட்ட விலங்கு அல்லது அதன் ஒரு பகுதியை வைத்திருப்பது, குறித்த மீன் இனத்தை எடுத்துச்செல்வது அல்லது விற்பது, காட்சிப்படுத்துதல், உலர்த்துதல் அல்லது பதப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் முன் இது போன்ற குற்றத்திற்காக ஒரு நபருக்கு ரூ.15,000-25,000 வரை அபராதம் அல்லது 2-5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கலாம் அல்லது இந்த இரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கலாம். இது தவிர, இந்தக் கட்டளைச்சட்டத்தின் 41வது பிரிவின்படி, உள்ளூர் மீன் ஏற்றுமதிக்கு அனுமதிப்பத்திரம் பெற வேண்டும். உரிய அனுமதிபத்திரத்தை பெற்றுக்கொள்ளாமல் இறந்த அல்லது உயிருள்ள மீன்களை ஏற்றுமதி செய்யக் கூடாது. முறையான அனுமதிப்பத்திரம் பெறாமல் தேசிய மீன் இனம் அல்லது அதன் ஒரு பகுதியை ஏற்றுமதி செய்பவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிருபிக்கப்பட்டால் 25,000 முதல் 75,000 ரூபாய் வரை அபராதம் அல்லது 05 ஆண்டுகளுக்குக் குறையாத மற்றும் 10 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை வழங்கப்பட முடியும் அல்லது மேல்குறிப்பிட்ட இரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும்.” எனக் கலாநிதி ஜகத் குணவர்தன மேலும் தெரிவித்தார்.
1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 1036/13 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் படி, 13 உள்ளூர் நன்னீர் மீன் இனங்கள் (அவற்றில் 11 இலங்கைக்கே உரியவை) ஏற்றுமதி தடைசெய்யப்பட்டுள்ளதுடன் இன்னும் 8 இனங்கள் (அந்த 8 இனங்களும் இலங்கையைச் சேர்ந்தவை) ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சிவப்பு தரவுப் பட்டியலின்படி ஏற்றுமதிக்கு தடைசெய்யப்பட்ட மீன் வகைகளில் 09 மிகவும் அபாயகரமான அழியும் நிலையில் உள்ள உயிரினங்களாகும். மேலும், ஏற்றுமதி தடைசெய்யப்பட்ட மீன்களில் 03இனம் அழியும் நிலையிலும் ஒரு இனம் அச்சுறுத்தல் நிலையிலும் காணப்படும் இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அழிந்து வரும் நன்னீர் மீன்களின் பட்டியல் புத்தகத்திற்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். இங்குப் பெயரிடப்பட்டுள்ள இனங்களின் எண்ணிக்கை 23 ஆகும். அந்த இனங்களுக்கு வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அல்லது கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் கீழ் நேரடி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், இலங்கையில் உள்ள இந்த 23 வகை மீன்கள் அத்தகைய பாதுகாப்பை பெறுவதாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அது அப்படி இருக்க இலங்கையின் நன்னீர் மீன்களின் வாழ்விடங்கள் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகிறது
ஈர மண்டலத்தின் எதிர்மறை விளைவுகள்
இந்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மீன் இனங்கள் காணப்படும் ஈர வலயத்தில் மனித செயற்பாடுகள் காரணமாக மீன்களின் இருப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
- கடந்த காலங்களில் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்ட உயிரியல் கட்டுப்பாட்டு நுட்பங்களைப் போலல்லாமல், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் இப்போது இரசாயன பதார்த்தங்கள் ஓடைகள் மற்றும் ஆறுகளில் கலக்கின்றன. இது மீன்களின் உயிர்வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
- ஈர மண்டலத்தில் தேயிலை மற்றும் இரப்பர் சாகுபடியும் மீன்களின் இருப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
- ஈர மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் இந்த மீன்களின் உயிர்வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
- வளர்ச்சித் திட்டங்களால் காடழிப்பு, நிலம் வெட்டப்படுவதால் மண் அரிப்பு, குளங்கள் மற்றும் நீர் ஆதாரங்களை அழிப்பது, சிறு நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்கள் பிளவுபடுத்துவது ஆகியவை மீன்களின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
- தீங்கு விளைவிக்கும் வகையில் இரத்தினக்கல் அகழ்தல் மற்றும் மணல் அள்ளுதல் ஆகியவை மீன்களின் உயிர்வாழ்வை பாதிக்கும்.
- நாட்டின் நன்னீர் தேக்கங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மீன் இனங்கள் மற்றும் அலங்கார மீன் வளர்ப்பாளர்களால் நீர்த்தேக்கங்களில் சேர்க்கப்படும் கண்ணாடி மீன்கள் உள்ளிட்ட மீன் இனங்கள் வேகமாகப் பரவி வருவதால், உள்ளூர் மீன்களின் இருப்பு அபாயத்தில் உள்ளது.
- பல்வேறு மனித நடவடிக்கைகளுக்குப் பெரும் வளமாக ஈர மண்டலம் முழுவதும் பரவியுள்ள சதுப்பு நிலங்களின் அழிவும் நன்னீர் மீன் இனத்தின் அழிவுக்கு ஒரு காரணமாகும்.
- ஈர மண்டலத்தில் அதிக நீர் தேவைப்படும் தாவரங்களின் பெருக்கம் காரணமாக நீருற்றுகள் வற்றிப்போகின்றன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் நச்சு இரசாயனங்கள் தண்ணீரில் கலந்து ஆல்கா அல்லது பாசி வளர்ச்சியடைந்து பாதக விளைவுகளை ஏற்படுத்துகின்றன. சால்வினியா மற்றும் ஜப்பான் ஜபர போன்ற தாவரங்களின் பரவல் மீன் வளங்களின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
- இந்த நாட்டில் நன்னீர் மீன்களின் இருப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருந்த மற்றொரு காரணம் மொத்த இனத்தையும் பிடித்து ஏற்றுமதி செய்வது. ஏற்றுமதி செய்யக்கூடிய பல வகையான மீன்கள் காணப்படுகின்றன. ஏற்றுமதியைப் பொறுத்தமட்டில், வளர்க்கப்படும் மீன்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதுதான் நடக்க வேண்டும், ஆனால் நடப்பது நன்னீர்களில் இயற்கையாக வாழும் மீன்களைப் பிடித்து வெளிநாட்டுக்கு அனுப்புவதுதான். இதன் காரணமாக இயற்கை சூழலில் வாழும் மீன்கள் படிப்படியாக அழிந்து வருகின்றன. சட்டத்தின் பார்வையில் இது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும், அதுவே தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.
இந்நிலைமையால் எமது நாடு தனது நன்னீர் மீன் வளத்தை வேகமாக இழந்து வருகின்றது. உயர் பன்முகத்தன்மை கொண்ட நன்னீர் மீன் வளங்கள் நமது பல்லுயிர் மதிப்பை அதிகரிக்கும் வலிமையான காரணிகளில் ஒன்றாகும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், இந்த விலைமதிப்பற்ற விலங்கு வளம் உலகிலிருந்து முற்றாக அழிந்துவிடும்.