அரசியலில் அதிக பெண்களா அல்லது அரசியலில் அதிக பெண் உரிமைவாதிகளா?
ஹரிணி பெர்ணான்டோ
இலங்கையிற் கடந்த சில வாரங்களாக சுகாதாரக் குறுந்துணிமீது விதிக்கப்படும் வரிகள் சம்பந்தமான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. குறித்த வரிக் குறைப்புச் சம்பந்தமாக நடைபெற்ற விவாதத்தின்போது முன்னாள் நடிகையும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமாக இருப்பவர் இந்த நாட்டின் பிரஜைகள் எல்லோரும், பெண்கள் அடங்களாக, நாட்டில் சிறந்த தேசிய பாதுகாப்பை விரும்புகின்றனரே யன்றிச் சுகாதார உற்பத்திகளின் வரிக் குறைப்பையல்ல எனத் தெரிவித்தார். சுகாதாரக் குறுந்துணிகள் உண்மையில் அத்தியாவசியப் பொருள் என்பது பற்றி மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் அப்பாவித்தனம் மற்றும் உணர்வுகள் இல்லாமை பற்றிய விடயத்தில் நாம் ஈடுபட வேண்டாம். சனத் தொகையில் 50% இற்கு அதிகமாகப் பெண்கள் இருக்கும் ஒரு நாட்டின் பாராளுமன்றத்தில் 6% மட்டுமே பெண் உறுப்பினர்களாக இருப்பதனால் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்த அளவிலேயே உள்ளது. இவர்களிடையே மேற் கூறியது போன்ற அறிக்கைகளைப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறும் போது நாட்டிலுள்ள பெண் சனத்தொகையினரின் உண்மையான கரிசனையாக இருக்கும் பிரச்சனைகள் பற்றி உணருந்திறன் அற்ற இவர்கள் விவேகமுள்ள மக்கள் முன்னால்; நகைப்புக்கு இடமாகிறார்கள்.
பெண்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் பால்நிலை உணர்வுகள் சம்பந்தமான சட்டங்களைக் கொண்டு வருவதற்கும் பாராளுமன்றத்தில் கூடுதலான பெண்கள் இருக்க வேண்டிய தேவை பற்றி நாங்கள் கருத்துக்களங்களை உருவாக்குவதுடன் சட்டசபைப் பிரதிநிதித்துவத்தில் கூடுதலான பெண்களைக் கொண்டுவருவதற்காக ஒரு பங்கீட்டு அளவு முறைமைக்கும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். இருந்தபோதிலும், பெண்கள் பிரச்சனைகளுக்குச் சில பெண் பா.உ களின் பிரதி பலிப்புகள் காரணமாக இப்பிச்சனைகள் பற்றிய அடிப்படைப் புரிந்துணர்வு இல்லாதவர்களாக இவர்கள் இருக்கும்பொழுது அரசியலில் அதிகளவு பெண்கள் இருத்தல் வேண்டுமெனக் குரல்கொடுப்பது ஒரு நல்ல யோசனையா என ஒருவரைச் சிந்திக்க வைக்கிறது.
நிச்சயமாய், இதற்கான ஒரு காரணம் இலங்கையில் அரசியலிற் பிரவேசிக்கும் பெண்களில் பெரும்பான்மையானவர்கள் முன்னாள் அல்லது தற்போதைய ஆண் அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ளவர்களாய் இருக்கின்றனர். ஆகவே, இவர்கள் தங்கள் தந்தை அல்லது கணவர் விட்டுச்சென்றவற்றை முற்கொண்டு செல்ல அல்லது தங்கள் குடும்பத்திற்கு இருக்கும் அரசியல் பலத்தை மேலும் அதிகரிப்பதற்காக அரசியலுக்கு வருகிறார்கள். இதன் விளைவாக, இவர்களின் ஆண் உறவினர்கள் ஆதரித்த கருத்துகளுக்குச் சார்பானவர்களாகச் செயற்பட வேண்டிவாகளாய் இருக்கின்றனர். எனவே, இவர்கள் தாம் விரும்பும் வழியில் தங்கள் அரசியற் பலத்தை உபயோகிக்கும் பொழுது இடையூறுகள் ஏற்படக்கூடும்.
உலகின் முதற் பிரதம மந்திரியின் நாடு எனப் பெருமை பேசும் இந்த நாட்டில், பெண் பாராளுமன்ற உறுப்பினரின் தொகையிலும்; பெண்களின் பிரச்சனைகளத் தீர்த்து வைக்கும் வீதத்திலும் குறிப்பிடக்கூடிய முன்னேற்றத்தையும் காணவில்லை என்பது சங்டமாயிருக்கிறது. பின்தங்கிய ஆண் ஆதிக்க மனநிலையிலும் கலாசார பாரம்பரியங்களிலும் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு நாடாகவே நாம் இப்பொழுதும் இருக்கின்றோம். இலங்கையில் கருக்கலைப்புத் தொடர்பாக முறையானசட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமலிருப்பதற்கும் மணவாழ்க்கையில் வன்புணர்வை ஒரு குற்றச் செயலென இன்னமும் கருதாமலிருப்பதற்கும் இதுவே காரணம். ஆணாதிக்கமுள்ள பாராளுமன்றத்தில் இப்பிரச்சனைகளைக் கையிலெடுக்கும்பொழுது, இவைகள் பெண்கள் கவலைப்பட வேண்டிய விடயங்கள் அல்ல என்று காட்டுவதற்காக அநேகமான ஆண்கள் மதக் கோட்பாடுகளையும் கலாசார விழுமியங்களையும் கொண்டுவருகிறார்கள். இந்த மனநிலைகளை மாற்றுவதற்கு பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகளோ எடுக்கக்கூடும் ஆனால் குடிமக்களின் மனங்களில் ஆழப்பதிந்த இந்தச் சிந்தனைகளை மாற்றுதற்குக் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
கனேடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூறுடொ மற்றும் முந்நாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா போன்ற உலகத் தலைவர்களை நோக்குவோமானால் அவர்கள் தங்களைப் பெண் உரிமைவாதிகளென அடையாளப்படுத்தியதுடன் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காகக் குரல் கொடுப்பவர்களாகவுமிருந்தனர். ஆகவே, எமது நாடு போன்ற நாடுகளிலும், குடிமக்கள் எல்லோரும் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை, அவை ஆண்கள் பெண்கள் பிள்ளைகள் மற்றும் இருபாலுமற்றவர்கள் என எவரைப் பாதிப்பவையானாலும், அவற்றைப் புரிந்துகொள்ளும் அதிகளவு பெண்உரிமைவாத தலைவர்களே எமது தேவையாக உள்ளது.
எந்தப் பாலினத்தவராய் இருந்தாலும், ஒரு அரசியல்வாதி நாட்டு மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு அவைகளுக்கு ஏற்ற வகையில் நிலைபேறுடைய தீர்வுகளை வழங்கக்கூடியவராக இருத்தல் வேண்டும். ஆகவே, இதனைப் பெண் அரசியல்வாதிகளிடமிருந்து மட்டுமே எதிர்பார்ப்பது நியாயமில்லை. ஆனால், மாதவிடாய் வறுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சனைகள் பெரும்பாலும் பெண்கள் எல்லோராலும் எதிர்கொள்ளப்படுபவையாகும்;. ஆகவே, இவைகளைப் பற்றி எடுத்துரைப்பதும் இவற்றைப் புரிந்து கொள்வதும் ஆண்களைவிடக் கூடுதலாகப் பெண்களுக்கே இயலும். இருந்தபோதிலும், பெண்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் ஆண்கள் சளைத்தவர்கள் என்ற கருத்துடையதில்லை.
ஆகையால், எங்கள் நாடு என்ற வகையில் எதிர்காலப் பாராளுமன்றத் தேர்தல்களில் அதிக எண்ணிக்கையான பெண்கள் போட்டியிடுவதிலும் பார்க்க அதிக எண்ணிக்கையான பெண் உரிமைவாதிகள் போட்டியிடுவதை உறுதிப்படுத்தல் வேண்டும். நாட்டின் சனத்தொகையில் பாதியாக இருக்கும் பெண்களைப் பிரதிநிதிப்படுத்துவதற்கு அதிக எண்ணிக்கையான பெண்கள் இருக்க வேண்டியதுடன் பெண்களின் பிரச்சனைகள் முழுமையாக தீர்க்கப்பட வேண்டுமெனில் எங்கள் நிர்வாக மற்றும் சட்டவாக்கத் துறைகளிலும் அதிக எண்ணிக்கையான பெண் உரிமைவாதிகள் இருத்தல் வேண்டும்.