சமூகம்

அம்மாவுக்குத் தடுப்பூசி

சுதர்ஷினி முத்துலிங்கம்

புத்தகமொன்றில் பக்கங்களைப் புரட்டிக் கொண்டே போகின்றோம், எப்பக்கத்திலேனும் விடை கிடைக்காதா என்று…ஆனால் காலம் சொல்கிறது அது விடையில்லாப் புத்தகமென்று.

கொரோனாவின் கோரத்தாண்டவத்தை சுமார் ஒன்றரை வருடங்களிற்கு மேலாய் அனுபவித்து இன்னல்களைக் கடந்து இன்று வரை போராடிப் போராடி பயணமாகிக் கொண்டிருக்கின்றோம். இதிலிருந்து மீள எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து கொரோனாவை அண்டச் செய்யாது விடுவதற்காக “கொரோனா தடுப்பூசியை” கண்டறிந்துள்ளனர். அந்தவகையில் இலங்கையர் எமக்கும் அது எட்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உடுவில் மகளிர் கல்லூரியில் 05.07.2021 அன்று அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கல் ஆரம்பமாயிருந்தது. அம்மாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டேன். சென்று பார்த்தால், வளைந்து வளைந்து போகும் நீண்ட வரிசையில் வயதானவர்கள் காத்திருக்கின்றனர் தடுப்பூசிக்காய். பாடசாலையில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்டடத்தில் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. “என்ன பிள்ள லைன் இப்பிடி நிக்கிது, வீட்ட போக ஒரு மணி ஆகப்போகுதென்ன” அம்மா சலித்துக் கொண்டார். வெயில் அது தன் வேலையைச் சரியாகப் பார்த்துக் கொண்டது. வரிசையில் இணைந்து கொண்டார் அம்மா, பக்கத்தில் நானும். வரிசை நகர நகர பக்கத்தால் கூடவே நானும் நகர்கிறேன்.

அங்கு நிற்பது எனக்கொன்றும் புதிதல்ல. பதின்மூன்று ஆண்டுகள் நான் வாழ்ந்த இடமது… அது என் பாடசாலை. சிறு சிறு மாற்றங்களோடு அப்படியே இருக்கின்றது. அதோ அந்த மைதானத்தில் பலமுறை விளையாடியாடியதும், இந்த மாமர நிழலில் அமர்ந்து கதைபேசியதும், தோழிகளோடு பள்ளி வளாகம் முழுவதும் ஓடியாடியதும் நேற்று நடந்தது போலவே என் கண்முன்னே வருகின்றன.

“உவங்கள் ஒவ்வொரு பிரிவா கூப்பிட்டு ஊசிய போட்டிருக்கலாம் தானே” சொல்லிக் கொண்டே நெற்றியில் படிந்த வியர்வையை கையால் துடைத்துக் கொள்கிறார் அந்த முதியவர். முதுமையின் இயலாமை விளங்கிற்று அப்போது. முதுமை யாராலும் தவிர்க்கப்பட முடியாத ஒன்று. ஆனால் எத்தனை எத்தனை மனிதர்கள், அதில் எத்தனை எத்தனை விதங்கள்.

சாதாரணமாக இளையோர் கூட்டம் வரிசையில் காத்திருக்கின்றார்கள் என்றால் இடையிலேயே யாரேனும் புகுந்து விட்டால், ஐயோ! சொல்லவே தேவையில்லை. ஆனால் இங்கோ பலர் இடையிடையே புகுந்து கொள்கிறார்கள், மறுத்துப் பேசவோ, புண்படும்படி பேசவோ யாரிற்கும் தோன்றவில்லைப் போலும். அந்த ஒற்றுமையை நான் இங்கு பார்த்தேன்.

வரிசை எவ்வளவு தூரமாய்ப் போகின்றதோ அதுவரையிலும் நிழல் பார்த்து கதிரைகளை வழங்குவதும், வயதானவர்களை பிடித்துக் கொண்டு அவர்கள் வந்த வாகனங்களில் ஏற்றி விடுவதும், ஒழுங்கைச் சரியாகப் பின்பற்றுவதுமென இராணுவத்தினர் அவர்தம் கடமையைச் செம்மையாகச் செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆயிரமாயிரம் நினைவுகள் என்னுள் இழையோடி, நினைவுகளை மீட்டிப் பார்த்து இடையிடையே அதனோடு பயணமாகிக் கொண்டிருந்தேன். பள்ளி போன முதல் நாள் இன்றும் நெஞ்சை விட்டகலவில்லை. புதுச் சீருடை, புதுச் சப்பாத்து போட்ட மகிழ்ச்சியில் நான் அழவேயில்லை. அம்மாவும், அப்பாவும் என் கைபிடித்துச் சென்று விட்ட, என் முதலாமாண்டு வகுப்பறையிலும் இன்று தடுப்பூசி போடுகிறார்கள்.

“நான் ஊசி போடப் பயத்தில நிண்டன், உது ஒத்துக் கொள்ளுதோ இல்ல ஆள ஒரேடியா முடிக்குமோ எண்டு, என்ர மூத்த பிள்ள பிரான்ஸில நிக்கிறாள், அவள் சொன்னாள், ‘அப்பா, இஞ்ச எங்களுக்கும் போட்டவ, உது ஒண்டும் பயப்பிடத் தேவையில்ல, எதிர்ப்பு சக்திக்காக போடுறது தான், நீங்கள் பயப்பிடாமப் போடுங்கோ’ எண்டாள், அதால தான் துணிஞ்சு போட வந்திட்டன்” பொக்கை வாய் தெரிய தன் பின்னால் நின்றவரிற்குச் சொல்லி புன்சிரிப்பை உதிர்க்கின்றார். ஆளாளிற்கு அறிமுகம் இல்லை என்றாலும் பொதுவான ஒரு விடயத்தில் தொடங்கி சொந்தக்கதை சோகக்கதை வரை பேசி முடித்து நட்பை ஆழப்படுத்த தெரிந்தவர்கள் வயதானவர்கள் போல் யாருமில்லை போலும்.

வாய்களிற்குள் வார்த்தை நுழையாமல் அவர்கள் உச்சரிக்கும் பல சொற்கள் ஒரு தனி அழகு தான். சைனோபார்ஃம் அவர்கள் வாய்களில் நுழைந்து சீனா ஊசியாய் உருமாறிப் போயிருந்தது. எனக்குள் ஏதோ சிரிப்பு. காவோலைகளைப் பார்த்து குருத்தோலைகள் சிரிக்கின்றோம், நாளைய காவோலைகள் நாம் என்பதை மறந்து. கிராம உத்தியோகத்தரும் சமுர்த்தி அலுவலகர்களும் அவர்களிற்குப் புரியும் வகையில் விளக்கம் தந்து கொண்டிருந்தனர். மக்கள் சேவகர்கள் தானே, அதனால் தான் அவர்தம் கடமைகளில் கரிசனையாயிருந்தனர்.

“பிள்ள கன நேரமா நிக்கிறியள், அந்தக் கட்டில போய் இருங்கோவன்” நீண்ட நேரமாய் எனையே பார்த்திருந்த பாட்டியின் வார்த்தைகளவை. அம்மாவும் பல தடவைகள் சொல்லி விட்டார். அமர வேண்டும் போல் தோன்றியும் போகாமல் அங்கேயே நின்றிருந்தேன். அவரின் வார்த்தைக்காக திறந்த மண்டபத்தின் படிக்கட்டில் போய் அமர்ந்து கொண்டேன். இந்த மண்டபத்தில் செவ்வாய்க்கிழமைகளில் பிரார்த்தனைக்காக நாங்கள் ஒன்று கூடியிருக்கின்றோம். நிலத்தைக் கையால் தடவிப் பார்க்கின்றேன். நினைவுகள் துளிர் விடுகின்றன என்னுள்.

மனிதன் ஒரு சமூகப் பிராணி தானே அதனால் தான் சுற்றி நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருக்கிறோம்.

எனது காத்திருப்பு நிறைவு கண்டது. வரிசை முன்னேறி அம்மா தடுப்பூசியைப் பெற்று விட்டு வந்து “எனக்கு நோகவே இல்ல” என்றார். ஊசி என்றாலே தலைதெறித்தோடும் அம்மா வலி இல்லை என்றதும் கண்கள் சிறிதாக ஆச்சரியத்தோடு அம்மாவைப் பார்த்துச் சிரித்துக் கொள்கின்றேன்.

இங்கே தடுப்பூசி பெறும் வரையில் அம்மாவின் காத்திருப்பும், படித்து வெளியேறும் வரையில் என் காத்திருப்பும் நிலைத்திருந்தது. அங்கு இனி காத்திருப்பிற்கு அவசியமிருக்கவில்லை. ஆனால் கடந்து போன அழகிய நினைவலைகளிற்காய் மனம் காத்துக் கிடக்கத்தான் செய்கிறது. மாறுதல்களுக்கிணங்க மாற்றங்களை ஏற்று பயணிக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம் தானே!.

Vaccine For Mother

කොරෝනා එන්නත මම සහ අම්මා

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts