சமூகம்

அப்போது…இரண்டு தரப்பை நான் இழக்கவேண்டியிருந்தது!

சரத் மனுல விக்கிரம

“நான் முதலாவதாக நகர சபைக்கு போட்டியிட்ட போது அதன் உறுப்பினராக வருவதற்கு 28 வாக்குகள் குறைவாக இருந்தது. இரண்டாவது முறை போட்டியிட்டு மிகவும் கூடுதலான வாக்குகளுடன் வெற்றிபெற்றேன். எனக்கு வாக்களித்தவர்களில் 80வீதமானவர்கள் சிங்களவர்களாவர். பெண்கள் அமைப்புக்களும் குறிப்பாக தாய்மார்களும் எனக்கு அதிகமாக வாக்களித்தனர்…..

அந்தப் பெரிய நகரத்தில் அமைந்துள்ள அவரது கடையின் முன்னால் அந்த முஸ்லிம் நபர் ஒரு சிங்கள பத்திரிகையை கையில் ஏந்தியவாறு நின்றிருந்தார். 50 வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த கடிகாரக் கோபுரத்தில் உள்ள கடிகாரம் அப்போது காலை மணி 10.00 ஐ தாண்டி இருப்பதை காட்டிக் கொண்டிருந்தது. அந்த நகரத்து நடைபாதையில் மெதுவாக நடந்தவாறு அவரை நோக்கி புன்னகைத்தேன். அவர் ஒரு சமாதான நீதவான் என்பதால் நற்சாட்சி சான்றிதழ் ஒன்றை வாங்கிப் போக எப்போதாவது யாராவது ஒன்றுரெண்டு பேர் வந்தாலும் வருவார்களேயொழிய கடையில் விற்பனைக்காக உள்ள ஆடைகள், இலத்திரனியல் மற்றும் அலங்காரப் பொருட்களை வாங்க வருவதில்லை. என்று கூறுகிறார் அந்த சமாதான நீதவான்

“என்ன நடந்தது?”

“மக்களிடம் பணம் இல்லை. அவர்கள் பல நாட்களாக கடைக்கு வரவில்லை. அந்த நிலைக்கு காரணம் அப்போது நிலவிய நெருக்கடி நிலையாக இருந்தாலும் இப்போது மக்கள் இனவாதத்தில் தொங்கிக் கொண்டும் இல்லை” என்பது பதிலாக இருந்தது.

எம்.பி.எம். அன்சார் அநுராதபுரம் நகரசபையின் ஒரு உறுப்பினராவார். அத்துடன் அவர் ஒரு பணக்காரரும் மூன்று தசாப்தங்களாக அரசியல் மற்றும் வியாபாரத்துறையில் அனுபவம் பெற்ற ஒருவருமாவார். அவர் தெரிவிக்கையில் : – ‘இரண்டு தரப்பு மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தவிர்க்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு விட்டது. ஒரு தரப்பு வியாபாரத்துடன் சம்பந்தப்பட்ட சிங்கள மக்களான பாவனையாளர்கள். மற்ற தரப்பினர் அதே சிங்கள மக்களாகிய வாக்காளர்கள்’ என்றார்.

“எனக்கு வாக்களித்தவர்களில் 80சத வீதமானவர்கள் சிங்களவர்களாவர். எனது அரசியல் ஆசானும் ஒரு சிங்கள தலைவராவார். எனது ஆதரவாளர்களில் அதிகமானவர்கள் சிங்கள தாய்மார்கள்தான். இங்கே எனக்கு சிங்களமோ முஸ்லிமோ என்ற இனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. மனித நேயமும் நம்பிக்கையுமே முக்கியமான விடயங்களாகும்” என்பது அன்சாருடனான உரையாடலின் ஆரம்ப கருத்தாகும்.

அநுராதபுரம் புதிய நகரை நிர்மாணிப்பதற்கு 40 வருடங்களுக்கு முன்னர் இதே இடத்தில் சிங்களவர்கள், முஸ்லிம்கள் தமிழர்கள் ஆகிய மூவினத்தவர்களும் ஒன்றாக வாழ்ந்தனர். அனைவரும் மத நிகழ்வுகளிலும் ஒன்றாக பங்குபற்றினர். பாடசாலை, விளையாட்டு மைதானம் என்று எல்லா இடங்களிலும் அனைவரும் ஒன்றாக கூடினர். அன்சாரும் இந்த அழகான குழந்தைப் பருவத்தை அனுபவித்த ஒருவராவார். பெருமளவிலான சிங்கள மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையான புனித யோசொப் கல்லூரியிலே அன்சாரும் கல்வி பயின்றுள்ளார். இன்றும் கூட அன்சார் புனித யோசொப் கல்லூரியின் பழைய மாணவர் என்பதை பெருமையுடன் கூறுகின்றார்.

பாடசாலையை விட்டு மாலை நேரங்களில் அவர் அவரது குடும்ப வியாபார நடவடிக்கைகளில் ஒத்துழைக்கக் கூடிய ஒருவராக இருந்ததோடு பின்னர் அநுராதபுரம் புதிய நகரத்தில் இவருக்குச் சொந்தமான வியாபார ஸ்தலத்தை நடத்தி வருகின்றார்.

சமூக சேவைகளில் அன்சாருக்கு என்று ஒரு தனியான போக்கு காணப்பட்டது. அவர் நகரத்தில் பலவிதமான சமூகப் பணிகளில் ஈடுபட்டதோடு எல்லா சந்தர்பப்ங்களிலும் சிங்கள மக்களை அரவணைத்தவராக நட்புடனும் பழகிய ஒருவரே அன்சார். முன்னாள் ரஜரட்டையின் அரசியல் தலைவர்களுள் ஒருவராக இருந்த கே.பி. ரத்நாயக்காவுடன் இணைந்து அரசியலில் பிரவேசித்த ஒருவருமாவார்.

“1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கருப்பு ஜூலை நிகழ்வுகளை நான் எனது சொந்தக் கண்களால் பார்த்தேன். அது மிகவும் துக்கரமானதும் கொடூரமானதுமான நிகழ்வாகும். குண்டர்கள் கூட்டம் தாக்குவதற்கு துரத்தி வந்தபோது ஒரு தமிழ் முதலாளியின் உயிரைக் காப்பாற்ற நானும் ஒரு சிங்கள நண்பரும் இணைந்து அவரை ஒரு நீர்தாங்கிக்குள் மறைத்து வைத்தோம். அவரது உயிரைக் காப்பாற்ற பெரும்பாடு பட்டோம்;. எனக்கு அந்த நிகழ்வு இன்னும் நினைவு இருக்கின்றது. புனித நகரத்தில் இருந்து நாங்கள் புதிய நகரத்திற்கு நகர்ந்தாலும் எங்களுக்கிடையிலான நட்பு இன்றும் அகலாமல் இருந்து வருகின்றது” என்று அன்சார் கூறுகின்றார்.

“அநுராதபுரம் புத்தகயா மாவத்தையில் அலுத்வத்தையை நான் சந்தித்தேன். நான் அரசியலுக்கு வந்தபோது கட்சி அரசியலை தெரிவு செய்யவில்லை. எனது மனச்சாட்சிக்கு அமைவாக நான் சிறந்த அரசியல் கட்சியையும் நல்ல தலைவர் ஒருவரையும் தேர்ந் தெடுத்தேன். மைத்திரிபால சிரிசேனாவின் நிழலில் அரசியல்வாதியாக இருந்த கே. பி. ரத்நாயக்காவை நான் எனது அரசியல் தலைவராக தேர்ந்தெடுத்தேன். அவர் நான் முஸ்லிமா சிங்களவரா என்பதை பார்க்கவில்லை. எப்போதும் அவர் என்னை நல்ல முறையில் கவனித்து வந்தார்” என்றும் அவர் கூறுகின்றார்.

“நான் முதலாவதாக நகர சபைக்கு போட்டியிட்ட போது அதன் உறுப்பினராக வருவதற்கு 28 வாக்குகள் குறைவாக இருந்தது. இரண்டாவது முறை போட்டியிட்டு மிகவும் கூடுதலான வாக்குகளுடன் வெற்றிபெற்றேன். எனக்கு வாக்களித்தவர்களில் 80வீதமானவர்கள் சிங்களவர்களாவர். பெண்கள் அமைப்புக்களும் குறிப்பாக தாய்மார்களும் எனக்கு அதிகமாக வாக்களித்தனர். தேர்தல் காலங்களில் சிங்களத் தாய்மார்கள் எனக்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதோடு பதாதைகளையும் ஒட்டினார்கள்” என்பதை அவர் மிகவும் பெருமையுடன் தெரிவிக்கின்றார்.

“நகர சபையிலும் நான் ஒருபோதும் முஸ்லிம்களுக்காக மாத்திரம் எழுந்திருக்கவில்லை. நான் எல்லா இனங்களுக்குமான பிரதிநிதி என்பதை புரிந்துகொண்டவனாக எல்லா சமூகத்தவர் களுக்காகவும் குரல் கொடுத்தேன். இது எனது பாதை” என்பதாகவும் கூறுகின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அதிகமான கடைகள் காலியாக உள்ளன. சிங்களவர்களுள் சிலர் முஸ்லிம் வியாபார ஸ்தலங்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்று பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். எவ்வாறாயினும் அந்த காலப்பகுதிக்குள் முஸ்லிம் கடைகளுக்கு மட்டுமல்லாமல் எல்லா கடைகளுக்கும் வியாபாரம் மந்தமானதாகவே இருந்தது.

“ஒருநாள் ஒரு சிங்கள பெண் ஒருவர் எனது கடைக்கு வந்து இது முஸ்லிம் கடையா என்று கேட்டுவிட்டு இங்கு பொருட்களை வாங்குவதையிட்டு கவலைப்படுவதாக கூறினாள். பின்னர் நான் அவருக்கு நிலைமையை புரிய வைத்தேன். நாங்கள் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். சிங்களவர்களோ முஸ்லிம்களோ என்ற பேதம் இல்லாமல் நான் அனைவருக்குமாக சேவை செய்த ஒருவனாவேன். நான் ஒரு இனவாதியாக இல்லாததால் 80 வீதமான சிங்களவர்கள் எனக்கு வாக்களித்தனர். எனது இந்த விளக்கத்தை செவியுற்ற அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு எனது கடையில் பொருட்களை வாங்கினார்” என்பதாக அன்சார் கூறுகின்றார்.

சிங்களவர்கள் இல்லாமல் எங்களால் வியாபாரம் செய்ய முடியும் என்று நினைப்பதாக இருந்தால் அது வெறும் கனவாகும். அவ்வாறே சிங்களவர்களும் முஸ்லிம் கடைகளை ஒதுக்க நினைப்பதாயின் அதுவும் வெறும் கனவாகும். நாங்கள் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். நான் புனித யோசொப் கல்லூரியில் கல்வி கற்றேன். எனது குழந்தைகள் சாஹிரா மகா வித்தியாலயத்திற்கு போனார்கள். ஆனால் எனது மகளின் குழந்தைகள் சுவர்ணமாலி கல்லூரியில் படிக்கின்றார்கள். அது ஒரு சிங்களப் பாடசாலை. நாங்கள் மதத்தால் அல்லது மொழியால் வேறுபடவில்லை. அவ்வாறு நாம் நினைத்தால் அது எங்கள் ஒவ்வொருவரையும் பிரித்து தூரமாக்கிவிடும் என்பதாக அன்வார் மேலும் கூறுகின்றார்.

அன்சார் அவரின் நண்பர்களுடன்…

அன்சாரின் கதைக்கு சிறந்த உதாரணம் அவரது கடையே ஆகும். அந்த கடை ஒரு ஆதராமாகின்றது. அவரது வியாபார உதவியாளர் சாமர என்பவர் ஒரு சிங்களவராவார். அன்சார் சிறுவயதில் இருந்தே அவரை தெரிந்து வைத்துள்ளார். கடைச் சிப்பந்தியாக அந்த சாமர என்ற சிங்கள இளைஞனே வேலை பார்க்கின்றார். சிறுவயதில் இருந்தே அவரும் அன்சாருடன் நெருக்கமாக இருந்து வருகின்றார். அவரின் அனுபவத்தை அடிப்படையாக வைத்து அன்சார் கடையின் முக்கியமான பொறுப்புக்களை சாமரவிடம் ஒப்படைத்திருப்பதோடு அவரில் தங்கி இருக்கின்ற ஒருவராவார்.

“அண்மைய அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் மக்களுக்கு பிரிந்து வேறுபட்டவர்களாக வாழ வேண்டும் என்ற தேவை இல்லை என்பதாகும். எமது குழந்தைகளுக்கு ஒரு நாடு வேண்டும். ஒரு எதிர்காலம் வேண்டும். ஒவ்வொருவரும் இதைப்பற்றி சிந்திக்க வெண்டும்” என்பதாக அன்சார் கேட்டுக் கொள்கின்றார்.

This article was originally published on the catamaran.com

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts