சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பாலினமும் அடையாளமும்

வெளியில் சவால்களை கடந்த எனக்கு அலுவலகத்துள் அதிர்ச்சி காத்திருந்தது!

கிருஷ்ணி கந்தசாமி இஃபாம்

“உலகின் எந்த பகுதியிலும் ஒரு பத்திரிகையாளராக பணிபுரிவது அதுவும் ஓரு பெண்ணாக இருந்தால் கூடுதலான பல சவால்களைக் கொண்டிருக்கலாம், ஏனெனில் அங்கு அதிகார அடுக்குகளில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இலங்கையில் கொடூர யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கையிலேயே நான் இலங்கையின் பிரதான தமிழ்ப் பத்திரிகையில்  இணைந்து எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன்;. பத்திரிகையில் பாதுகாப்புத்துறை சார்ந்த செய்திகளைத் திரட்டும்  முழுநேர அலுவலக நிருபராக  1993 இல் இருந்து 14 வருடங்கள் பணியாற்றி வந்தேன். அத்துடன் யுத்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் களத்திற்குச் சென்று செய்தி சேகரித்த முதல் பெண் பத்திரிகையாளர் என்ற சிறப்புப்பெயரை தட்டிக்கொண்டதில்  பெருமையடைகின்றேன். ஒரு செய்திக் கட்டுரைக்காக எந்த வகையான சவால்களையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நான் தயாராய் நின்றேன். கடத்தல் மற்றும் மிரட்டகளையும்  சந்தித்திருக்கின்றேன். யுத்த பகுதியில் பாதிக்கப்பட்ட மறுக்கப்பட்ட பலரின் குரல்கள் என் ஊடாக ஒலித்திருக்கின்றன.

ஒரு பெண் ஊடகவியலாளராக இருபதுக்கு அதிகமான வருடங்களை ஊடகத்துறையில் கழித்துள்ளேன். ஆனாலும் ஆரம்பத்தில் எனக்கு ஊடகத்துறையில் இணைய வேண்டும் என்ற ஆர்வம் முற்று முழுதாக இருக்கவில்லை. எனது தந்தையார் பொலிஸ் அதிகாரியாக இருந்ததால்,சிறு வயதிலிருந்தே பொலிஸ் அதிகாரியாக வர வேண்டும் என்பதே எனது ஆசை! அதன்படி என்னுடைய அந்த ஆசை நிறைவேறியது.

யாழ் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுவதற்கான பெண் ‘சப் இன்ஸ்பெக்டர்க்கான’ நியமனம் கிடைத்தது. கொடூர உள்நாட்டு யுத்தம்; காரணமாக யாழ் பொலிஸ் நிலையம்  அப்போது வவுனியாவில் தான் இயங்கியது. அந்த காலக்கட்டத்தில் (1992-1993) இத் தொழிலில் நான் காட்டிய ஆர்வத்தினையும் ஈடுபாட்டினையும் உணர்ந்து இந்த நியமனத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்காக உறுதியாகவும் ஆர்வமாகவும் இருந்தவர்கள் வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ஆனந்த ராஜா (முன்னாள் பொலிஸ் மா அதிபர்) அவர்களும் மற்றும் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மறைந்த ஜெயராஜன் அவர்களும் ஆவர்.   

அன்று ஞாயிற்றுக்கிழமை…. அடுத்த நாள் திங்கட்கிழமை பொலீஸ் நியமனத்தை பொறுப்பேற்க ஆயத்தமாக வேண்டிய நாள். ஆனால் இறுதி நேரத்தில் மோதல் சூழலைக் காரணம் காட்டி குடும்பத்தினர் இந்த தொழிலை விரும்பவில்லை. அதனை கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானேன். எல்லாமே சுக்குநூறாகிவிட்டது. என்ன செய்வது? ஒன்றுமே புரியவில்லையே! அழுதபடியே சண்டே ஒப்சோவர் பத்திரிகையைப் புரட்டி பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது பெரிய எழுத்தில் கண்ணுக்கு புலப்பட்டது ஒரு விளம்பரம் “Diploma in journalism” at Aquinas College of Higher Studies in English Medium 1992-1993

பத்திரிகை உலகமே என்னவென்று எனக்கு தெரியாது! அதில் ஈடுபாடும் கிடையாது! ஆனால்  இந்த விளம்பரம்  இத்துறை என்னவென்று  படிக்க தூண்டியது. அழுத கண்ணீருடன் உடனடியாக விண்ணப்பித்தேன். வெற்றிகரமாக படித்தும் முடித்தேன். 

1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீரகேசரியில் பயிற்சி ஊடகவியலாளர்கள் தேவை என விளம்பரம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. போட்டி பரீட்சை மற்றும் நேர்முக பரீட்சை மூலம் ஒரேதடவையில் 10 பேரை பயிற்சி ஊடகவியலாளராக தெரிவு செய்தனர். இத்தெரிவில் முதல் தடவையாக 6 பெண்கள் தெரிவாகினர். இந்த 10 பேருக்கும் அலுவலகத்திலேயே 3 மாத காலம் சிறந்த பயிற்சி வழங்கப்பட்டது. இந்த 10 பேரில் தற்போது அமீர் ஹூசேயின் உட்பட மூன்று பெண் ஊடகவியலாளர்கள் மட்டுமே (மீரா கணேசமூர்த்தி,தேவகௌரி, நான்) இதுவரை ஊடகத்துறையில் உலாவி வருகின்றோம்.

இலங்கை ஊடக நிறுவனங்கள் பெண்ணைகளை தமது நிறுவனத்தில் இணைத்துக்கொள்ளும் போது அவர்களைத் தமது ஆசிரியர் பீடத்தில் ஓரு ஊடகவியலாளராகவோ அல்லது ஒரு செம்மைப்படுத்துநராகவோ அல்லது பிரதி ஒப்புநோக்குநராகவோ இணைத்துக்கொண்டு அவர்களுக்கு அந்த நியமனத்தை வழங்குவார்கள். ஆனால் வீரகேசரி நிறுவனம் முதல் முறையாக “அலுவலக பத்திரிகை நிருபர்” என்ற நியமன கடிதத்தினை ஒரு பெண்ணுக்கு வழங்கி இலங்கைத் தமிழ் ஊடகதுறையில் வரலாற்று சாதனையை ஏற்படுத்தியது. இதனை ஏற்படுத்திக் கொடுத்தவர் வீரகேகரி முன்னாள் பிரதம ஆசிரியர் சிவனேசச்செல்வன் அவர்கள். எனக்கு முதலில் “CRIME  REPORTER” பதவி வழங்கப்பட்டு பின்பு “DEFENCE REPORTER”  பதவி வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி இலங்கையில் முதல் தமிழ் பெண் நிருபருராகவும் நான் இருந்தேன்.

நான் நிறுவனத்தில் இணையும் போது மறைந்த முன்னாள் பிரதம ஆசிரியர் நடாராஜா அவர்கள் நடா ஐயா என எல்லோரலும் அழைக்கப்பட்டு வந்தவர் அவர்தான் செய்தி ஆசிரியராக இருந்தார். ஊடகத்துறையில் எனது குருவும் அவரே. ஊடகத்துறை தொடர்பிலும் அதன் நுணுக்கங்கள் தொடர்பிலும் தினமும் போதிப்பார். ஆலோசனைகள் வழங்குவார். 12 வருடங்கள் அவரின் கீழ் தொடச்சியாக பணியாற்றினேன். தினமும் அவருடைய அறையில் அவருடைய மேசையில் உள்ள தொலைபேசியில் வடக்கில் நடைபெற்று வரும் யுத்த செய்திகளைத் திரட்டுவேன். நான் தொலைபேசி மூலம் தகவல்களைப் பெற்றுக்கொண்டிருக்கும் போதே அவர் அந்த செய்தியை எழுத ஆரம்பித்துவிடுவார். அவரே தலைப்புச்செய்தியை எழுதிவிடுவார். இலங்கைப் பத்திரிகைத் துறையின் ஒரு ஜாம்பவான் என்று இவரை அவரை வர்ணிக்கின்றனர். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். 

பணயக்கைதிகள் பாதிக்கப்பட்டவர்களின் கதைகள், அரசியல் அமைதியின்மை, அரசியல்வாதிகளின் பொறுப்புக்கூறல், பொதுத் தேர்தல்கள் மற்றும் நாட்டில் அரசியல் மாற்றங்கள் குறித்த செய்திகளில் அதிக கவனம் செலுத்தினேன். குண்டு வெடிப்பு சம்பவங்களை செய்தியாக்கும் போது எனது முதல் அனுபவம் கொழும்பு மத்தியவங்கி குண்டுவெடிப்பு. சிரேஷ்ட செய்தியாளர்களுடன் சென்று பார்த்து வரும்படி என்னையும் அனுப்பினர். இரத்த வெள்ளத்தில் அங்காங்கே சிதறி கிடந்த மனித உடல்ளும் வழிந்தோடும் இரத்தமும் கண்டு மயங்கி விளாதகுறையாக வெளியில் ஓடிவந்தேன். இரத்தமும் சதைகளும் என்னை ஏதோ செய்தன. என்னுடன் வந்தவர்கள் இதை வைத்து என்னை கலாய்தார்கள். ஆனால் அடுத்த அடுத்த குண்டுவெடிப்புகளில் நான் தான் முதல் ஆளாக சென்றுசெய்து சேகரிக்கும் அளவிற்கு என்னைத் தயாராக்கியிருந்தேன்.நான் சைவ உணவுகளை மாத்திரம் உண்பவள். இரத்தமும் சதைகளையும் கண்டதும் இல்லை. இந்த இலட்சணத்தில் சிதறி இருக்கும் மனித தசைகளின்மத்தியில் நின்று தகவல் சேகரிப்பது என்றாலேயே நினைத்துபார்க்க முடியாது. எனது தொழிலில் யாருக்கும் நான் சளைத்தவளில்லை என்பதில் உறுதியாக நின்றேன்.அதனால் எல்லாவற்றையும் சகித்து தைரியமாகதுணிச்சலுடன் எனது பணியை தொடர்ந்தேன். 

குற்றச்செயல்கள் தொடபான செய்திகளை வெளியிட்டு வந்தபோது  பாதாள உலக கோஷ்டியின்ர் தொடர்பிலும் செய்திகளைத் தொகுத்து வழங்கினேன். ‘கிருஷ்ணி கந்தசாமி’ என்று எனது சொந்தப் பெயரிலேயே எனது செய்திகள் வெளிவந்த போதிலும் வாசகர் மத்தியில் நான் ஒரு ஆண் ஊடகவியலாளர் என்ற நினைப்பே இருந்து வந்துள்ளது. ஒருமுறை மறைந்த பிரதம ஆசிரியர்  நடா ஐயா இருந்த வேளை பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் பத்திரிகையில் வெளிவந்த செய்தி தொடர்பில் நடா ஐயாவை சந்தித்து என்னை பற்றி விசாரிக்க வந்திருந்தனர். அப்போது நானும் நடா ஐயா அறையில் தான் இருந்தேன். வந்தவர்கள் அந்த செய்தியை எழுதியது ஒரு ஆண் என்ற எண்ணத்திலேயே கதைத்துக்கொண்டிருந்தனர். உடனடியாக அவர் யார் என இனம்காட்டும்படி கேட்டனர். எனது  முன்னிலையிலேயே நடா ஐயா ‘அவர் ஒரு சுதந்திர ஊடகவியலாளர் செய்திகளை பஃக்ஸ் மூலம் தான் அனுப்புவார்” என்று கூறி அவர்களை அவ்விடத்தில் இருந்து   அனுப்பிவிட்டார். அவ்வாறு பாதுகாப்பும் பக்கபலமுமாக மேலதிகாரிகள் இருந்தால் வேலை செய்வதில் சிரமம் இருக்காது.

இவ்வாறு வாழ்க்கையில் ஒரு துளியேனும் நினைத்து பார்க்க முடியாத ஆண் ஆதிக்கம் கொண்ட இத்துறையில் நுழைந்து ஆண்களுக்கு சமமாகவும் அவர்களுக்கு  மேலகவும் செயற்பட்டுவந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

யுத்த செய்திகள் மற்றும் பாதுகாப்பு செய்திகள் தொடர்பில் பொலிஸார், முப்படையினர் மற்றும் புலிகள் என எத்தரப்பும் எனது செய்திகள் தொடர்பில் எவ்வித குற்றங்களோ விசாரணைகளோ சுமத்தவில்லை. ஒரு இனத்தையோ மதத்தையோ அல்லது சமூதாயத்தையோ புண்படுத்தும் நோக்கில் நான் எழுதும் செய்தி அறிக்கைகளோ அல்லது கட்டுரைகளோ அமையவில்லை. எந்தவொரு சக்திக்கும் அடிமைப்படாமல் பக்கச்சார்பின்றி துணிச்சலாக நின்று என்ன நடந்தது என்பதை அப்படியே எழுதினேன். மோதல்களின்போது பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படை தளபதிகள், புலிகளின் அறிக்கைகள் என இரு சாரரும் என்ன கூறுகின்றார்கள்? அவர்களின் நடவடிக்கை, கோரிக்கை   எதிர்பார்ப்புக்கள் என்ன? என்பவை மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும். அதை செய்திகளினூடாக முன்வைத்தேன்.  என்ன நடக்கப்போகின்றது? விளைவுகள் என்ன? என்பது பற்றி தீமானிப்பவர்கள் மக்களே! அதை நான் சிறப்பாக செய்ய முடிந்தது.

ஆண்களுடன் சரிக்கு சமமாக நின்று செய்திசேகரிக்கும் பணி என்னுடையது. அத்தகைய பல சந்தர்ப்பங்களில் ஒன்றைப் பகிர்ந்துகொள்கிறேன். 2004 ஆம் ஆண்டு புலிகளுக்கும் அரசுக்கும் மோதல் அதிகரிக்க ஆரம்பித்த காலம், ஜுலை 25 ஆம் திகதி கருணாவின் முக்கிய சகாக்கள் எட்டு பேர்  கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விடிந்தும் விடியாததுமாக வெளிநாட்டு இணையத்தளம் ஒன்றில் செய்தி கசிந்தது. ஆனால் இடம் குறிப்பிடப்படவில்லை. பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவ தளபதியிடம் தொலைபேசி ஊடாக சரியான இடத்தினை கேட்டறிய முனைந்த போது அவர்கள் தமக்கும் சம்பவம் நடந்த இடம் குறித்து சரியான தகவல் வந்து சேரவில்லை என்று கூறிவிட்டார்கள். சம்பவம் நடந்த இடத்தினை கண்டுப்பிடிப்பதற்கு பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் பல மணிநேரம் எடுத்தது. தடுமாறினர். எனினும்  மோப்ப நாய்களின் உதவியுடன் ஹோமாகம-கொட்டாவ பகுதியை அண்டிய காட்டை நோக்கி படையெடுத்தனர். அதேபோல அலுவலகத்தில் இருந்து நானும் புகைப்படப்பிடிப்பாளரும்  அலுவலக வாகனத்தில் சம்பவம்  நடந்த இடத்தினை தேடிச் செல்ல ஆரம்பித்தோம்;. ஒருவாறு நாம் கஷ்டப்பட்டு  இடத்தினை கண்டுப்பிடித்து விட்டோம். மஜிஸ்டிரேட் நீதிவான் வரும்வரை மறைவிடத்தில் அமைந்திருந்த ஆடம்பரவீட்டிற்குள் அங்கும் இங்குமாக இரத்த வெள்ளத்தில சிதறிக்கிடந்த சடலங்களை பார்வையிட ஊடகவிலாளர்கள் எவரையும் உள்ளே செல்ல அனுமதிக்காமல் பாதுகாப்பு படையினர் தடை வேலிகளைப் போட்டிருந்தனர். காலையில் இருந்து நீண்ட நேரம் வெளியில் காத்துக் கொண்டிருந்த எங்களை மாலை 4 மணிக்குதான் உள்ளே செல்ல அனுமதித்தனர். உடல் உபாதைகளுடன் காத்திருக்கவேண்டியிருந்தது .ஐந்து ஐந்து பேராக உள்ளே அனுப்பினர்.அதில் எல்லோரும் ஊடகவியலாளர்கள் என பொலீஸ் நோக்கவில்லை.

பெரும்பான்மை இன சகோதரர்கள்  முதல் அனுப்பட்டனர்.சிறுபான்மை இன மக்களின் பிரதிநிதிகளாக எங்களை பாதுகாப்பு படையினர்  சந்தேகக் கண்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள். சந்தேகம் கொண்டு சிலருடைய அடையாள அட்டைகளையும் சோதனை செய்தார்கள். பொதுவாக நாட்டில் இடம்பெற்று வந்த தற்கொலைத் தாக்குதல்கள்,குண்டுவெடிப்புக்கள்,கொலைச்சம்பவங்கள் உட்பட பல பயங்கர சம்பவங்களை நேரடியாக  பார்வையிடுவதற்கு ஸ்தலத்திற்கு   செல்லும் தமிழ் பத்திரிகை ஊடகவிலாளர்களை இவ்வாறு சந்தேகப்படுவது வழமை. அப்போது பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் அங்கே வந்தார்.அவர் எனக்கு அறிமுகமானவராக இருந்தார். என்னை அடையாளம் கண்டுகொண்டார். பல ஆண்களிடையே பெண்ணாக இருப்பது இந்த சந்தர்ப்பத்தில் சாதகமாகவே இருந்தது. தொடந்து பல மணிநேரம் வெளியில் காத்துக்கிடந்த எங்கள் அனைவரையும் உடனடியாக செய்திகளை சேகரிப்பதற்காக உள்ள செல்வதற்கு அனுமதியளிதார். பெண்ணாக இருப்பது எந்நேரமும் எதிர் விளைவுகளையே தரும் என நாம் யோசிக்கத்தேவையில்லை. ஒரு செய்தி சேகரிப்பாளராக பல சந்தர்ப்பங்களில் எனக்கு சார்பான விளைவுளையே அது தந்துள்ளது. இந்த சந்தர்ப்பங்களில் மிக துணிச்சலாகவும் தைரியமாகவும் செய்திகளை திரட்டும் ஒரேயொரு பெண்மணியென்றால் அது கிருஷ்ணி தான் என்று சொல்லும் அளவுக்கு எனது திறமைகளையும் வளத்துக்கொண்டேன். ஆண்களுக்கு ஈடாகவும் சிலவேளைகளில் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது போகும் தகவல்களைக் கூட என்னால் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. அதற்கு என்னிடம் இருந்த சிங்களம் மற்றும் ஆங்கில மொழித் தேர்ச்சியும் துணிச்சலுமே காரணமாகும். தொலைபேசியூடாக ஆண்களுக்கு கிடைக்காத செய்திகள் பலவற்றை பெண்ணாக நான் பெற்றுக்கொண்டுள்ளேன். ‘பெண்களுக்கென்றால் அவர்கள் உடனே செய்திகளைக் கொடுப்பார்கள்’ என்ற ஒரு பலவீனமான எண்ணக்கருத்தை நான் பலமாக மாற்றினேன். 

இலங்கையின் இறுதியுத்தம்  கிட்டத்தட்ட 3 இலட்சம் (3,00,000)ஈழத் தமிழர்களை மேனிக்பாம் என்ற முகாமிற்கு இடம்பெயர வைத்த காலகட்டத்தில் இலங்கை அரசாங்கம் அந்த காலப்பகுதியில் பாதுபாப்பு நிமித்தம் இம்முகாமினை பார்வையிட பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. எவரும் நுழையாத வண்ணம் மிகவும் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட காலகட்டத்திலும் தகவல் சேகரிப்பதற்காக மறைமுகமாக சென்ற பத்திரிகையாளர்களில் நானும் ஒருவர். 

எமக்கு எதிரான பிரச்சினைகள் வரும்போது தனியாக எதிர்கொண்ட சந்தர்ப்பம் இது. 1995 ஆம் ஆண்டு மாவனல்லவில் பௌத்தபிக்கு ஒருவர் நான் எழுதிய செய்திக்கு எதிராக எமது நிறுவனத்திடம் ரூபா 50 லட்சம்  நஷ்டஈடு கோரி சட்டதரணியூடாக மனுப்பத்திரம் ஒன்றை பதிவு தபால் மூலம் அனுப்பியிருந்தார். இது குறித்து என்னையும் பிரதம ஆசிரியரையும் நிறுவனத்தின் மேலதிகாரி அழைத்து எங்கள் மீது கடுமையாக குற்றம் சுமத்தினார். அப்போது நான் மேலதிகாரியை நோக்கி “சேர் நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை நான் உண்மையைத்தான் எழுதியிருக்கின்றேன. மாவனல்லை குற்றப்புலனாய்வு பொலிஸார் என்ன கூறினார்களோ  அதனை அப்படியே வெளிப்படுத்தியுள்ளேன். எனக்கு நிறுவனத்தின் வாகானத்தினை ஒழுங்குப்படுத்தி தாருங்கள் அங்கு சென்று தீர்த்து வருகிறேன் என்ற கூறி நேரடியாக எனது தந்தையுடன் சென்று பொலீஸ் அதிகாரிகளைச் சந்தித்து அதை தீர்த்துவைத்தேன். 

இந்த ஊடகத்துறை பாரிய வெற்றியாகவும் சாதனை சேர்த்ததாகவும் அமைந்துவிட்டதை நினைக்கும் போது சந்தோசமாக இருக்கின்றது. இவையெல்லாம் சிறப்பான காலப்பகுதியென நினைக்கிறேன். கடுமையான உழைப்புடனும் நேர்மையாகவும்; தொழிலை நேசித்ததாலேயே   விருதுகள வெற்றிகள், சாதனைகள் மற்றும் பெருமளவான வெளிநாட்டு பயணங்கள் என அடுக்கடுகாக வந்து சேர்ந்தன. இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும்பத்திரிகை ஆசிரியர் சங்கமும் வருடாவருடம் நாட்டின் சிறந்த ஊடகவியலாளர்களை கௌரவித்து வழங்கி வரும் விருதில் இலங்கை ஊடக துறையில் இதுவரை எவரும் பெற்றிருக்காத வகையில் ‘சிறந்த தமிழ் ஊடகவியலாளர்’ என்ற ஊடக விருதினை தொடர்ச்சியாக மூன்றுமுறை  பெற்றிருக்கிறேன்.

இவ்வாறு எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் நின்று நிலைப்பதற்கு எமக்கு மேல் உள்ளவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை பிற்காலம் எனக்கு எனக்கு உணர்த்தியது. ஊடகத்தில் தசாப்தத்திற்கு மேலாக குற்ற செய்திகள், போர், முரண்பாடு என பல்வேறு சவால் மிகுந்த பரப்பில் திறமையாக கவால்களைக் கடந்து, செய்தி சேகரித்து கொடுத்த எனது பணி ஆசிரியர் பீட நிர்வாகம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆட்டம் கண்டது. ஆசிரியர் பீடத்தில் சில ஆண்களால் பெரிய விடயம் இல்லை என்ற பார்க்கப்படும் தொடுதலுக்கும் தடவுதலுக்கும் பல பெண்கள் முகம் கொடுத்திருந்தனர். நான் ஒரு பெண்ணாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்கி நடக்க மறுத்ததாலும் மேலிடத்திற்கு அடிக்கடி முறைப்பாடு செய்து வந்ததாலும்  நான் ஓரங்கட்டப்பட்டேன். வேலையின்றி ஒரு சில மாதங்கள் சும்மா இருத்தி வைக்கப்பட்டேன். இதைப்பற்றி மேலிடத்திற்கு முறைப்பாடு செய்தபோது நடவடிக்கை எடுக்கபோவதாக உறுதியளிக்கபட்டது. ஆனால் ஆண் ஆதிக்கம் விட்டுவைக்கவில்லை.  இதன் பின்பும் அங்கு நீடிக்க விரும்பாததாலும்  வேலையில் திருப்தி இன்மை காணபட்ட நிலையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றில் நல்ல வாய்ப்பு கிடைத்ததாலும் அங்கிருந்து விலகினேன். இதில் முக்கிய விடயம் என்னவென்றால், இதுவரை பெண்களுக்கு எதிரான சில்மிசங்கள் மற்றும் வெறுப்பூட்டும் பாலியல் செயல்களில் ஈடுபடுபவர்களை எந்த நிறுவனங்களும் அந்தக் காரணத்திற்காக வெளியேற்றியதில்லை. ஆனால் பாதிப்புக்குள்ளான  பெண்கள்தான் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதுதான் எங்கும் நிதர்சனமாக உள்ளது.

பின்னர் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களுடன் பணியாற்றும் வேளையில் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய நெருக்குதலான காலச் சூழலில் நான் பல தடவைகள் அச்சுறுத்தப்பட்டேன். 2009 ஆம் ஆண்டு இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு விசாரணையின் பின்பு விடுவிக்கப்பட்டேன்.  ஆனாலும் இன்றும் தொடர்ந்து ஒரு சுதந்திர ஊடகவியலாளராக பத்திரிகையில் எழுதி வருகின்றேன். 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts