வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுப்புப் பேச்சும் ருவாண்டா படுகொலைகளும்

எம்.எஸ்.எம். ஐயூப்

இரண்டரை தசாப்தங்களுக்கு முன்னர், அதாவது 1994 ஆம் ஆண்டு நூறு நாட்களில் எட்டு லட்சம் மக்களின் உயிரை குடித்து, பல கோடி டாலர் பெறுமதியான சொத்துக்களை அழித்த ருவாண்டா இன அழிப்புக்காக தேடப்பட்டு வந்தவர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் கடந்த வருடம் மே மாதம் பிரான்ஸில் பாரிஸ் தலைநகர் அருகே அமைந்துள்ள விடுதியொன்றில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். பிலிஸியன் கபூகா என்ற இந்த நபர் அக் காலத்தில் ருவாண்டாவில் வாழ்ந்த பிரபல வர்த்தகரும் ஆர்.டி.எல்.எம். என்ற வானொலியின் உரிமையாளருமாக இருந்தார். 

இந்த வானொலியே இவ்வினப் படுகொலையின் போது முக்கிய பங்காற்றியது. படுகொலைகளை அடுத்து தலைமறைவான கபூகா 26 ஆண்டுகளாக உலகில் பல நாடுகளின் புலனாய்வாளர்களின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பி வாழ்ந்தார். 

ருவாண்டாவின் தலைநகர் கிகாலி அருகே இடம்பெற்ற விமான விபத்தொன்றில் பெரும்பான்மை ஹட்டு இனத்தைச் சேர்ந்த அந்நாட்டு ஜனாதிபதி ஜூவனல் ஹப்யரிமானா கொல்லப்பட்டமையே இந்த மிலேச்சத்தனமான படுகொலைகளுக்கான உடனடிக் காரணமாக கருதப்பட்டது. ஆயினும் சிறுபான்மை டுட்சி இனத்தவர்களுக்கு எதிராக ஆர்.டி.எல்.எம். வானொலியினால் பெரும்பான்மை ஹட்டு இனத்தவரின் மனங்களில் அந்தக் கொலைகளுக்குத் தேவையான குரோதம் அதற்கு முன்னரே ஊட்டப்பட்டு இருந்தது. 

எந்தவொரு சமூகத்திலும் வெறுப்புப் பேச்சானது அப்பட்டமான பொய்ச் செய்திகளோடு கைகோர்த்த வண்ணமே செயற்படுகிறது. பெரும்பான்மை ஹட்டு இனத்தவர்களுக்கு எதிரான “சதிகளை” பற்றிய பொய்யான செய்திகளால் ஆர்.டி.எல்.எம். வானொலி நிகழ்ச்சிகள் நிரம்பியிருந்தன. “அவர்களது சனத்தொகை வேகமாக அதிகரிக்கின்றது, மிக விரைவில் அவர்கள் நாட்டில் பெரும்பான்மையாக மாறிவிடுவார்கள், அவர்கள் எமது கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள், அவர்களது கலாச்சாரம் எமது மக்கள் மீது திணிக்கப்படுகிறது” போன்றவையே ஆர்.டி.எல்.எம். வானொலி நிகழ்சிகளின் கருப்பொருட்களாக இருந்தன. 

நாட்டில் ஏனைய வானொலிச் சேவைகள் நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தமையும் இந்த கருப்பொருட்களின் கவர்ச்சியும் ஆர்.டி.எல்.எம்மின் கொலைவெறி நிகழ்ச்சிகளை ருவாண்டாவில் ஒவ்வொரு வீட்டையும் சென்றடையச் செய்தது. எனவே 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் ருவாண்டாவின் பல்லாயிரக் கணக்கான டுட்சி இனத்தவர்களின் வீடுகளை எரித்துச் சாம்பலாக்க ஒரு சமூகத்தின் திசையிலிருந்து மற்றைய சமூகத்தின் திசைக்கு ஒரு சிறிய கல்லை எறிந்தாலே போதும் என்ற நிலை உருவாகியிருந்தது. 1994 ஆம் ஆண்டு ஏப்ரல 6 ஆம் திகதி ஜனாதிபதி ஹப்யரிமானாவின் விமானம் விபத்துக்குள்ளானமை ஒரு சிறிய கல்லாகவன்றி மாபெரும் இடியாகவே அமைந்தது. 

விமானத்தை டுட்சிக்களே சுட்டு வீழ்த்தியதாக ஆர்.டி.எல்.எம். வானொலி உள்ளிட்ட பல ஹட்டு ஊடகங்கள் கூறின. அத்தோடு அது வரை காலமும் பெரும்பான்மை ஹட்டு இனத்தவர் மத்தியில் வளர்க்கப்பட்ட இனவாதப் பேய் குமுறிக் கொண்டு எழுந்தது. டுட்சிக்கள் கண்ட இடமெல்லாம் வெட்டிக் கொல்லப்பட்டனர். அண்டைய நாடான புருண்டியில் இருந்த டுட்சி போராளிகள் ருவாண்டாவை ஆக்கிரமித்து கைப்பற்றும் வரை சுமார் 100 நாட்களாக இந்தப் படுகொலைகள் தொடர்ந்தன. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 800,000க்கும் 1,000,000க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என கருதப்படுகிறது. 

ஊடகங்களின் வெறுப்புப் பேச்சும் பொய்யான செய்திகளும் எவ்வளவு ஆபத்தானவை, எவ்வளவு பயங்கரமானவை என்பதற்கு அண்மைய வரலாற்றில் காணப்படும் மிகச் சிறந்த உதாரணம் ருவாண்டா இன அழிப்பாகும். மிக உண்ணிப்பாக பார்த்தால் ருவாண்டாவில் மட்டுமன்றி உலகில் எங்கும் இனக் கலவரங்களுக்கு முன்னர் ஒரு சமூகத்திற்கு எதிராக மற்றைய சமூகத்தின் மனதில் வெறுப்பை ஊட்டும் ஊடகச் செயற்பாட்டை காண முடிகிறது. 

இலங்கையிலும் 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களுக்கு முன்னரும் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களுக்கு முன்னரும் இதே போன்று ஊடகங்கள் கலவரங்களுக்கான சூழலை உருவாக்கியமையை காணலாம். 

1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் அரச கரும மொழியாகியமையும் அதனை அடுத்த “ஸ்ரீ எதிர்ப்பும்” உருவாக்கிய விவாதமே 1958 ஆம் ஆண்டு கலவரத்துக்கான மனோ நிலையை உருவாக்கி செப்பனிட்டது. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் சூடு தணியும் முன் 1977 ஆண்டு பொதுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டது. எனவே தேர்தலுக்கு பின்னாலான கலவரங்களை மிக இலகுவாகவே இனக்கலவரமாக திசை திருப்ப அரசியவல்வாதிகளால் முடிந்தது. 

2014 ஆம் ஆண்டு அளுத்கம, பேருவளை, வெளிபென்ன ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்கள் தற்செயலானவையல்ல. அவை 2012 ஆம் ஆண்டு முதல் ஹலால் எதிர்ப்பிலிருந்து ஆரம்பித்து அபாயா, மத்ரஸா, மாடறுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மிக மோசமான இனத்துவேச பிரசாரத்தின் நேரடி விளைவாகும். அந்த வெறுப்புப் பிரசாரத்தின் தொடர்ச்சியே ஒரு சிற்றுண்டிச்சாலையில் இடம்பெற்ற சிறு சம்பவத்தையும் ஒரு வீதி விபத்தையும் பாவித்து 2018 ஆம் ஆண்டில் அம்பாறை மற்றும் திகன பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களாக மாற்றப்பட்டன. 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து இந்த வெறுப்புப் பிரசாரத்தை சில தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடர்ந்தன. அது மினுவாங்கொடை பிரதேசத்தில் கலவரமாக வெடித்தது. 

இவ்வனைத்து சம்பவங்களின் போதும் ஒழுக்க நெறியற்ற ஊடகமே உயிர்களினதும் சொத்துக்களினதும் அழிவுக்குக் காரணமாக அமைந்தது. எனவே ஊடகத்துறையில் ஒழுக்க நெறிகளை வளர்ப்பதே இதற்கு பரிகாரமாகவும் அமையும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts