வாக்குகளைத் திரட்ட : இனத்திற்காக செயற்படலாம். இனவாதமாக செயற்பட முடியாது.
குறிஞ்சிப்பார்த்தன்
பௌத்த மதவாதிகள் சிலர் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை இல்லாதொழிப்பதற்கான சதியில் ஈடுபடுவதை உணர முடிகின்றது. ஆகவே அதில் இருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்கும், அதன் ஊடாக வரக்கூடிய ஆபத்துக்களை தடுப்பதற்கும், இந்த நாடு தொடர்பில் உலகளாவிய ரீதியில் ஏற்படும் அவப்பெயரை இல்லாது செய்வதற்கும், நாங்கள் பதவிகளை இராஜிநாமா செய்தோம்.
ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் மக்கள் மீதான வெறுப்புணர்வுகள் அதிகரித்துள்ளன. இதன் ஒரு கட்டமாக முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது தீவிரவாத செயற்பாடுகளுக்கு உதவியதாக குற்றச்சாட்டுகள் அரசியல்வாதிளாலும், சில அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் (பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடங்களாக) தமது பதவிகளை இராஜிநாமா செய்தனர்.
இந்நிலையில், பதவியை இராஜிநாமா செய்த, அமைச்சர்களில் ஒருவரும், குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளவருமான, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கட்டுமரனுக்கு அளித்த விசேட செவ்வி.
த கட்டுமரன் : உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப்பின் இன்று இஸ்லாமிய சமூகமும் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழலை எப்படி விளக்குவீர்கள்?
ரிஷாட் பதியுதீன் : உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முஸ்லிம் பெயர் தாங்கிய சிலர் தொடர்புபட்டுள்ளமையால் முழு முஸ்லிம் சமூகமும் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. ஒரு சில இனவாத சக்திகள் முழு முஸ்லிம் சமூகத்தையும் இந்த தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி பழி வாங்கும் செயல்களை முன்னெடுத்துள்ளனர். அதனால் முழு முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வியாபார நடவடிக்கைள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களது ஆடை தொடர்பிலான விடயங்களில் அவர்கள் துன்புறுத்தலுக்குள்ளாகின்றனர். கூலித் தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மத மக்களுக்கும் அவர்களது மதத்தினை பின்பற்ற பூரண சுதந்திரம் காணப்படுகின்றது. எனினும் முஸ்லிம்களுக்கான தனித்துவமான சட்டங்களில் கூட இப்பொழுது கைவைக்கின்றனர். ஒருசில பேரினவாத சக்திகள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்த முனைகின்றனர். முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். வடமேல் மாகாணத்தில் முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. 29 பள்ளிவாசல்களை சேதமாக்கினர். ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பலர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு தொடர்ச்சியாக பல இன்னல்களுக்கு முஸ்லிம்கள் இன்று முகங்கொடுத்துள்ளனர்.
த கட்டுமரன் : பொதுவாக இன முரண்பாடுகள் தோன்றுவதற்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
ரிஷாட் பதியுதீன் : முதலில் நாட்டு மக்கள் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும். அவரவர் அவர்களது மதத்தை, மொழியை பின்பற்றலாம். எனினும் ஏனைய மக்களை அவமதிக்கும் செயல்கள் தொடர்கின்றன. ஆகவே அதனை நிறுத்திக்கொண்டு, அனைவரையும் சமமாக மதிக்கும் நிலைமை உருவாக வேண்டும். அதனைவிட இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையின சிங்கள பௌத்த மக்களும், இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு, அரசியல்வாதிகள் வாய்ப்பளிக்க வேண்டும். அவர்கள் தமது அரசியல் நோக்கங்களை கருத்திற்கொண்டு செயற்படுவதை தவிர்க்க வேண்டும். மதத் தலைவர்கள் அரசியல் ரீதியாக செயற்படுவதை தவிர்க்க வேண்டும்.
த கட்டுமரன் : பல்லின மக்களைக் கொண்ட இலங்கைபோன்ற நாடுகளில் இன மத முரண்பாடுகளுக்கு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளே காரணமென்பதும் பொதுவான குற்றச்சாட்டு. குறிப்பாக அவர்கள் வாக்குகளைப் பெறுவதற்காக பிரித்தாழும் உபாயத்தை கையாள்வதாக குறிப்பிடப்படுகின்றது.?
ரிஷாட் பதியுதீன் : தான் சார்ந்த அல்லது தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சமூகத்திடம் வாக்குகளை பெற முயல்வது பிழையல்ல. எனினும் மதவாதத்தை, இனவாதத்தை பரப்பி வாக்குகளை பெற்றுக்கொள்வது தவறான விடயம். இலங்கையின் இரு பிரதான கட்சிகளைத் தாண்டி ஏனைய கட்சிகள், இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாகவே காணப்படுகின்றன. தமிழ்ச் சமூகமும் உரிமைக்காக 30 வருட ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த வரலாற்றை நாம் கண்டிருக்கின்றோம்.
யுத்தத்தின் பின்னராக காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதிகளாக காட்டும் நிலைமையும்; உருவாகியுள்ளது. இவ்வாறான ஒரு சூழலில் இன ரீதியாக, அரசியலில் ஒன்றிணைவதில் பிழையில்லை. இதுவொரு ஜனநாயக நாடு. ஆகவே யாரும், எந்தவொரு மக்கள் சார்பாகவும் முன்னின்று செயற்பட முடியும். வாக்குகளைப் பெறுவதற்கு இனத்திற்காக செயற்படலாம். இனவாதமாக செயற்பட முடியாது. அதற்கென ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். ஒரு சட்டம் கொண்டுவரப்படும் பட்சத்தில், இனவாத அரசியல்வாதிகளுக்கும், மதவாதிகளுக்கும் அவர்களது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத சூழல் உருவாகும்.
த கட்டுமரன் : நாட்டில் இனங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளை தடை செய்ய வேண்டுமென்ற ஒரு கருத்து உருவாகியுள்ளதே..?
ரிஷாட் பதியுதீன் : இதுவொரு சிறுபிள்ளைத்தனமாக கருத்துகள். இந்த நாட்டில் வாழும் ஒரு இனம், தமக்கென ஒரு கட்சியை உருவாக்குவதற்கான உரிமை இருக்க வேண்டும். இவ்வாறான கட்சிகளால் தீவிரவாதத்தை தடுக்க முடியுமென கருதினால் அது சிறுபிள்ளைத்தனமான விடயமாகவே இருக்கும். தாக்குதல் நடத்திய எவரும், ஒரு கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வரவில்லை. மேற்கத்தேய பாணியிலேயே அவர்கள் வந்திருந்தார்கள். ஆகவே இந்தத் தாக்குதல்களை வைத்துக்கொண்டு இவ்வாறு கருத்து வெளியிடுவது இன, மத முரண்பாட்டை மேலும் அதிகரிக்கும் என்பதே எனது கருத்து.
த கட்டுமரன் : உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் உங்கள் பெயரையும் இணைத்து தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றனவே. இதுத் தொடர்பில் உங்கள் கருத்து?
ரிஷாட் பதியுதீன் : என் மீது நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார். கடந்த காலத்தில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் (ஒக்டோபர் 26, 2018) போது எங்களது ஆதரவை எதிர்ப்பார்த்தனர். எனினும் அது சாத்தியப்படவில்லை. அந்த கோபத்தில்தான் அவர்கள் எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். எமது கட்சி குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சியை கண்டுள்ளதை அவர்களால்; ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மீது பொலிஸாரோ, இராணுவமோ குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் ஏற்க முடியும். எனினும் ஒரு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அடிப்படைவாத அமைப்புக்களான, ராவணா பலய, பொதுபல சேனா போன்ற கட்சிகளே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இவைகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களே இவை. 3,000ற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பலர் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். எனினும் இதுவரை என்னிடம ஒரு விசாரணைக்கூட இடம்பெறவில்லை.
த கட்டுமரன் :இனவாத முரண்பாடுகளை முடிவுக்குகொண்டுவர அரசாங்கமும் சிவில் சமூக பிரதிநிதிகளும் முயற்சித்தாலும். அவை செயற்பாட்டு ரீதியில் வெற்றியளிக்கவில்லையே. இதற்குக் காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
ரிஷாட் பதியுதீன் : பிளவுபட்டுள்ள மக்களை ஒன்றுசேர்ப்பது ஒரு கடினமான பணி. எனினும் தற்போதைய சூழ்நிலையில் அமைச்சர் மனோ கணேசன் சில விடயங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளார். அது வெற்றியளிக்கவில்லை எனக் கூற முடியாது. அது போதுமானதாக இல்லை என்றே கூற வேண்டும். இனவாத, மதவாத சக்திகள் இந்த நாட்டை அழித்தொழிக்கும் பணிகளை முன்னெடுக்கின்றன. ஆகவே அவற்றை கண்டறிந்து அந்த சக்திகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கின்ற சக்திகளை கண்டறியவேண்டும்.
உண்மையில் அந்த விடயத்தில் பல வருடங்களாக அரசாங்கங்கள்
தோல்வியடைந்துள்ளன எனக் கூற முடியாது. வெற்றியடைந்தது பேதாது எனக் கூறுவது சரியாக இருக்கும்.
த கட்டுமரன் : ஏற்கனவே நாட்டு மக்கள் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும். என்று கூறினீர்கள், ஆனால் இங்குள்ள இஸ்லாமிய மக்கள் இலங்கை மக்களைவிட இஸ்லாமிய கலாசார நாடுகளில் உள்ள மக்களுடன்தான் ஒன்றித்து வாழ்கின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகிறது. அது பற்றி…?
ரிஷாட் பதியுதீன் : உலகலாவிய ரீதியில் பல்வேறு கலாசாரங்கள் காணப்படுகின்றன.
வளர்ந்துவிட்ட தொழில்நுட்பம் உலகலாவிய ரீதியில் தொடர்புகளை
அதிகரிக்கச் செய்துள்ளது. ஆகவே இலங்கையில் மாத்திரம் அரபு கலாசாரம் புகுந்துவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது. அரபு நாடுகளுக்குச் சென்று வந்ததால் அவர்களுக்கு விருப்பமான ஆடையை அவர்கள் அணிகின்றார்கள். மேலைத்தேய நாடுகளுக்கு செல்பவர்கள் அந்த நாட்டு ஆடைகளை அணிவதைப்போல்தான். இதுவொரு மாற்றமே தவிர, பெரிதுபடுத்த ஒன்றுமில்லை.
த கட்டுமரன் : கிழக்கு மாகாணத்தின் பல இடங்களில் அரபு மொழிப் பாவனையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
ரிஷாட் பதியுதீன் : இலங்கையில் 3,000 பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. பல கிராமங்கள் இருக்கின்றன. ஒருசில கிராமங்களில் இவ்வாறு அரபு மொழியில் பெயர்ப்பலகைகளை நிறுவியிருப்பதாக அறியமுடிகின்றது. அதற்காக எல்லா இடங்களிலும் அவ்வாறு காணப்படுவதாக குறிப்பிட முடியாது. அரபு எனப்படுவது ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்து உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்று. முஸ்லிம்களின் குர்-ஆன் அரபு மொழியிலேயெ காணப்படுகின்றது. இலங்கையில் அரபு மொழி தடை செய்யப்பட்ட ஒன்றும் அல்ல. அரபு நாடுகள் ஏதாவது நன்கொடைகள் கொடுத்தால் அவர்களது பெயர்கள் சில சமயங்களில் அவ்வாறு அரபு மொழியில் வைக்கப்படும். அரபு பள்ளிவாசல்களில், சில அறிவிப்புகள் அரபு மொழியில் வைக்கப்பட்டுள்ளன. அவ்வளவுதான் பாரிய அளவில் அரபு மொழி பாவனை இலங்கையில் இல்லை. ஆகவே இதனை பாரிய பிரச்சினையாக பார்ப்பது நியாயமல்ல. இது சிறு பிள்ளைத் தனமான விடயம். உலக பயங்கரவாத்தை முஸ்லிம்கள் மீது சுமத்துவது சரியாக அமையாது.
த கட்டுமரன் : முஸ்லிம் மக்கள் மீதான வெறுப்புணர்வை குறைப்பதற்கு அல்லது இல்லாமல் செய்வதற்கு மக்கள் பிரதிநிதி என்றவகையில் நீங்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள்? அல்லது ஆலோசனைகள்?
ரிஷாட் பதியுதீன் : முஸ்லிம் மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒருசில பேரினவாத சக்திகள் முயற்சிக்கின்றனர். எனினும் அதனை தடுப்பது என்பது என்னால் மாத்திரம் இயலுமான விடயமல்ல. அனைத்து இன மக்களுடனும் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதம் இஸ்லாமிய மதத்துடன் தொடர்புடையது அல்ல என்ற விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும். அதற்கென நீண்டகால செயற்றிட்டம் அவசியம். முஸ்லிம்களையும், இஸ்லாமிய மதத்தினையும் தவறாக சித்தரிக்கும் நடவடிக்கைகளை கடந்த காலத்தில் அடிப்படைவாத சக்திகள் மேற்கொண்டு வந்திருக்கின்றன. அதனை மாற்றியமைக்க சில விடயங்களை செய்ய வேண்டியிருக்கின்றது.
த கட்டுமரன் : அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் ஒன்றாக பதவிகளை இராஜிநாமா செய்த விடயமானது, முஸ்லிம் மக்களை ஏனைய சமூகத்தினரிடமிருந்து பிரித்து வைக்கும் நிலைமையை உருவாக்கியுள்ளது என ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றதே?
ரிஷாட் பதியுதீன் : பௌத்த மதவாதிகள் சிலர் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை இல்லாதொழிப்பதற்கான சதியில் ஈடுபடுவதை உணர முடிகின்றது. ஆகவே அதில் இருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்கும், அதன் ஊடாக வரக்கூடிய ஆபத்துக்களை தடுப்பதற்கும், இந்த நாடு தொடர்பில் உலகளாவிய ரீதியில் ஏற்படும் அவப்பெயரை இல்லாது செய்வதற்கும், நாங்கள் பதவிகளை இராஜிநாமா செய்தோம். மாறாக மதவாதிகளுக்காகவோ, இனவாதிகளுக்காகவோ நாம் இராஜிநாமா செய்யவில்லை. இனவாதிகளின் வார்த்தைப்பிரயோகங்கள், செயற்பாடுகள் அப்பாவி சிங்கள மக்களையும் பாதிக்கும் வகையில் அமைந்திருந்தன. அதனை தடுப்பதே எமது நோக்கம். 21ஆம் திகதி தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்தொழித்து உயிர் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தினார்கள். அதனை தடுக்கவே நாம் இராஜிநாமா செய்தோம். நாட்டுக்காகவும், சமுதாயத்தின் பாதுகாப்பிற்காகவும் பதவி விலகினோம்.
This article was originally published on the catamaran.com