சமூகம்

வடக்கு கிழக்கு மாகாணங்களில்… தமிழ் மக்கள் சிங்களம் கற்பதில் ஆர்வம்!

மங்களநாத் லியானார்ச்சி
எனது வீட்டுக்கு முன்னால் வசிக்கும் ஒரு தமிழ் மாணவர் மொரட்டுவை பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அவர் பல்கலைக்கழகம் போவதற்கு முன்னர் சிங்களம் படிப்பிக்குமாறு அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டனர். எங்களது சிங்கள பேச்சுமொழி வகுப்பு இவ்வாறுதான் ஆரம்பித்தது….

இன்றைய நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் சிங்கள மொழியில் பேசுவதற்கான திறனை விருத்திசெய்யவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதனால் சிங்கள வகுப்புகளுக்கான தேவை அதிகளவில் உணரப்படுகின்றது. நாட்டின் மொத்த சனத் தொகையில் 70 சத வீதமானவர்கள் சிங்களவர்களாக உள்ள நிலையில் அதிகமான மாணவர்கள் சிங்கள மொழிமூலம் கற்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வாறே சிங்கள மொழியை பேசுவதற்கான வகுப்புகளில் பங்குபற்றுவதிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கு அருகாமையில் சிங்கள வகுப்புக்களை நடத்தி வரும் ஸ்ரீரஞ்சன் என்ற சிங்கள பாட ஆசிரியர் அங்கு மிகவும் பிரபல்யம் பெற்றவராக இருக்கின்றார். உள்நாட்டு போர்க்காலத்தில் எரிக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயம் என்ற பாடசாலையின் பழைய மாணவர்களுள் அவரும் ஒருவராவார். யாழ்ப்பாணத்தில் ஏராளமான தமிழ் பாடசாலைகள் இருந்த நிலையில் அவரை அவரது பெற்றோர் ஒரு சிங்களப் பாடசாலையில் சேர்த்தமை பற்றி இப்போது அவர் மிகவும் பெருமைப்படுகின்றார். அவர் அன்று கற்றுக் கொண்ட சிங்கள மொழியிலான கல்வி அவர் வாழுகின்ற பிரதேசமான யாழ்ப்பாணத்தில் சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கு கை கொடுப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.
தெற்கில் எந்தளவிற்கு ஆங்கிலப் பேச்சுமொழிக்கான வகுப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றதோ அதே அளவிற்கு பிரச்சாரம் அல்லது விளம்பரங்கள் இல்லாமல் அவரது சிங்கள மொழி வகுப்புகளுக்கு அதிக கிராக்கி இருந்து வருகின்றது. அதிகமான அரசாங்க அதிகாரிகள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்கலாக பலதரப் பட்டவர்களுக்கும் ஸ்ரீரஞ்சன் சிங்களம் கற்பிப்பதையிட்டு பெருமை யடைகின்றார். ஸ்ரீரஞ்சன் அவரது கல்வியை முடித்துக்கொண்ட பின்னர் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கணக்காளராக வேலை செய்துள்ளார். சீமெந்து தொழிற்சாலை மூடப்பட்டதால் 04 அல்லது 05 மாணவர்களுடன் அவர் யாழ்ப்பாணத்தில் போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் சிங்கள பாட வகுப்புகளை ஆரம்பித்துள்ளார். இப்போது பெருமளவிலான மாணவர்கள் சிங்களம் கற்பதோடு அவரது இந்த சேவை நல்லிணக்க செய்பாடுகளுக்கு உதவியாகவும் அமைந்து வருகின்றது.


சிங்கள வகுப்புக்களை நடத்தி வரும் ஸ்ரீரஞ்சன்

“எனது முழு நேர தொழில் யாழ்ப்பாணத்தில் சிங்கள மொழியை கற்பிப்பதாகும். எப்போதும் எனது வகுப்புகளில் 30 மாணவர்கள் அளவில் இருப்பார்கள். ஆங்கில மொழியை விட சிங்கள மொழி கற்பிப்பது ஓரளவிற்கு கஷ்டமான பணியாகும். எவ்வாறாயினும் யாழ்ப்பாணத்தில் தமிழ் பிள்ளைகள் சிங்களம் கற்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இது எங்களுக்கிடையிலான பதற்ற சூழலை தணிப்பதற்கு உதவியாக அமைகின்றது” என்று அவர் கூறுகின்றார். இவர் 50 வயதை கடந்த நிலையிலும் இந்த வகுப்புகளை நடத்தி வருகின்றார். ஸ்ரீரஞ்சன் அவரது மாணவர்கள் பற்றி குறிப்பிடுகையில் “யாழ்ப்பாண தமிழர்கள் கற்றுக் கொள்வதற்காகவே பிறந்திருப்பதையிட்டும்
கற்பதில் மிகவும் ஆர்வமாக இருந்துவருவது குறித்தும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும். வகுப்புகளுக்கு வரும் சிலருக்கு 50 வயது தாண்டி இருந்தாலும் இறப்பதற்கு முன்னர் சிங்களம் கற்று சிங்களத்தில் பேச வேண்டும் என்ற இலட்சியத்துடன் வருகின்றமையும் பெருமையாக இருக்கின்றது” என்றும் தெரிவிக்கின்றார்.

திருகோணமலையில் சிங்களம்
திருகோணமலையில் டய்க் வீதியில் வசிக்கும் மொஹமட் ஹிலால் மற்றும் அவரது மனைவியான சமில வஜிரபாணி ஆகியோர் இதுவரையில் நடைமுறையில் இருந்து வருகின்ற மரபுரீதியான கற்பித்தல் முறைக்கு மாற்றமாக நவீன முறையில் சிங்கள பேச்சு பயிற்சி வகுப்புகளை ஒரு சவாலாக ஆரம்பித்துள்ளனர். மொஹமட் ஹிலால் தொழில் ரீதியாக ஒரு கணித ஆசிரியராக இருந்தாலும் அவரது தொழிலுக்கு மேலதிகமாக இப்போது அவரது மனைவியின் சிங்கள பேச்சு வகுப்புகள் தொடர்பாக விஷேட கவனம் செலுத்துவதில் ஈடுபட்டுள்ளார்.


சமில வஜிரபாணி- முஹம்மத் ஹிலால்

“எனது மனைவி சிங்கள மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புகளை ஆரம்பித்தார். அதே நேரம் எனது வீட்டுக்கு முன்னால் வசிக்கும் ஒரு தமிழ் மாணவர் மொரட்டுவை பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அவர் பல்கலைக்கழகம் போவதற்கு முன்னர் கொஞ்சம் சிங்களம் படிப்பிக்குமாறு அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டனர். எங்களது சிங்கள பேச்சுமொழிப் பயிற்சி வகுப்பு இவ்வாறுதான் ஆரம்பித்தது” என்று அவர் தெரிவிக்கின்றார். இந்த வகுப்பு குறுகிய காலப்பகுதிக்குள் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியளவிற்கு வளர்ச்சியடைந்துவிட்டது. இப்போது அவரால் மட்டும் இந்த வகுப்புகளை சமாளிக்க முடியாததால் கணித ஆசிரியரான அவரது கணவரும் இணைந்து அந்த வகுப்புகளை நடத்தி வருகின்றார். சிங்கள மொழி மூலம் படித்து வருகின்ற அவரது இரண்டு மகள்மார்களது உதவியையும் பெற்றே இந்த வகுப்புகளை அவர் நடத்துகின்றார்.
“நான் மொஹமட் ஹிலாலை திருமணம் முடித்தபோது எனக்கு தமிழ் தெரியாது. எனது கணவர் தமிழை கற்க எனக்கு வலியுறுத்தினார். நன் தமிழை பயன்படுத்த வேண்டும் என்றார். எனது கணவரின் தந்தை ஒரு சட்டத்தரணி ஆவார். ஆனாலும் அவரால் கொஞ்சமும் சிங்களம் பேச முடியவில்லை. நான் எனது மாமாவுக்கு முதலில் சிங்களத்தில் பேச கற்றுக் கொடுத்தேன். அதன் பிறகு நான் தமிழில் பேசக் கற்றுக் கொண்டேன். நான் முதலாவது சிங்களம் கற்பித்த மாணவர் ஒரு பொறியியலாளர் ஆவதோடு அவர் இப்போது சாரளமாக சிங்களத்தில் பேசக்கூடியவராக இருக்கின்றார். அது எனக்கு மிகவும் திருப்தியானதாக இருந்து வருகின்றது” என்று அவரது கடந்தகால அனுபவத்தை மீட்டுப் பார்க்கின்ற போது வஜிரபாணி தெரிவிக்கின்றார்.
“அறிவு ரீதியாக சிந்திக்கும் விவேகமுள்ள பெற்றோர் தமிழ் மொழிக்கு மேலதிகமாக அவர்களது குழந்தைகளுக்கு சிங்கள மொழியையும் படிப்பிக்கின்றார்கள். முஸ்லிம் பெற்றோர்களும் அவர்களது குழந்தைகள் பரீட்சைகளில் சிங்கள மொழி மற்றும் பௌத்த மத பாடத்தில் சித்தியடைகின்ற போது மிகவும் திருப்தியடையடைகின்றனர். எனது வகுப்புகளுக்கு வரும் ஒரு மாணவன்தானும் பரீட்சையில் சித்தியடையத் தவறுவதில்லை. ஏnனில் தமிழ் மாணவர்கள் சிங்களத்தை படிப்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றனர்” என மொஹமட் ஹிலால் கூறுகின்றார்.
“இப்போது எந்த அளவிற்கென்றால் ஆளுனரின் செயலாளர் மற்றும் வைத்தியர்கள் உட்பட அரசாங்க அதிகாரிகள் பலரும் எங்களது சிங்கள பேச்சமொழிப் பாட வகுப்புகளுக்கு வருகின்றனர். நாம் அவர்களை எங்கு கண்டாலும் எங்களை மிகவும் நல்ல முறையில் கௌரவிக்கின்றனர். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. பணத்தால் ஒரு போதும் அந்த மகிழ்ச்சியை வாங்க முடியாது” என்பதாக அவர் தொடர்ந்தார்.
யாழ்ப்பாணத்தில் ஸ்ரீரஞ்சன் திருகோணமலையில் மொஹமட் ஹிலாலி மற்றும் வஜிரபாணி ஆகியோர் தமிழ் பேசக்கூடிய மக்களுக்கு சிங்களம் கற்பிக்கும் பணியை செய்வது மாத்திர மல்லாமல் இதன்மூலம் அவர்கள் நாடு நீண்டகாலமாக எதிர் நோக்குகின்ற நல்லிணக்க செயற்பாட்டு தேவைக்கும் மிக உயர்வான பங்களிப்பை செய்து வருகின்றனர் என்ற விடயம் மிகவும் முக்கியமானதாகும்.

This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts